சாதிய வன்கொடுமைகள் நடைபெறுவதற்கு காரணமாக இருக்கும் குற்றவாளிகளை விடவும் கொடுமையானவர்கள், அக்கொடுமைகளை வாய்மூடி மவுனமாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். ஆம், வேலூர் ஊரிஸ் கல்லூரி நிர்வாகமும் மவுனமாக வன்கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அக்கல்லூரியின் விடுதியில் 29.8.09 அன்று ஒரு தலித் மாணவியை, தமிழ்த்துறை விரிவுரையாளரும் விடுதிக் காப்பாளராகவும் இருந்த மணிவண்ண பாண்டியன் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்த முயன்றார். இக்கொடுமை நடந்து 2 மாதங்கள் கடந்த பிறகும் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து குற்றவாளிக்கு எதிராக உறுதியான எந்த நடவடிக்கையும் இல்லை.
அந்நிர்வாகம் வேலூரில் இருக்கும் சில தலித் அரசியல் கைக்கூலிகளை விலைக்கு வாங்கி, சி.எஸ்.அய். பேராயத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு, அம்மாணவிக்கு ‘விபச்சாரி' பட்டம் கட்டி, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு வகை தேடிய நிர்வாகம், மிகவும் தந்திரமாக அமைச்சர் துரைமுருகனை அழைத்து, அண்ணா நூற்றாண்டு விழாவை அவசர அவசரமாக கொண்டாடி இருக்கிறது. அக்கல்லூரி நிர்வாகத்திற்கும் குற்றமிழைத்தவருக்கும் உதவி செய்யும் கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தவும் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரை 4.10.09 அன்று பேராசிரியர் அய். இளங்கோவன் தலைமையில் ஒரு குழு சந்தித்தது.
‘கட்சித் தலைமையே இவ்விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும். தலைவரின் கவனத்திற்கு இவ்விஷயம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது' என்று ரவிக்குமார் கூறிவிட்டார். ஆனால், அக்கட்சியின் பொறுப்பாளர்கள் சிலர் தன்னிச்சையாக குற்றமிழைத்த மணிவண்ண பாண்டியனோடு இணைந்து கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகவும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதை நிறுத்தவில்லை. இச்சிக்கலில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் பிற அமைப்புகள் முனைப்போடு ஆதரவு செயல்பாட்டில் இறங்கவில்லை. சி.பி.எம்.இன் வேலூர் மாவட்டத் தலைமை, ‘பாதிக்கப்பட்ட மாணவி நடத்தைக் கெட்டவள்' என்று எதிராளிகள் சொன்னதை நம்பி, தன்னுடைய ஆதரவு செயல்பாட்டினை நிறுத்திக் கொண்டது.
இச்சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அரசியல் இயக்கங்களும் ‘ஜேக்டோ' அரசு ஊழியர் ஆசிரியர் அய்க்கியப் பேரவை, ராணிப்பேட்டை ‘பெல்' எஸ்.சி./எஸ்.டி. நலச்சங்கம், வேலூர் மாவட்ட எஸ்.சி./எஸ்.டி. அரசு ஊழியர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக செயல்படுவதை மேலும் துரிதப்படுத்தியுள்ளனர். வேலூர் மாவட்ட ‘ஜேக்டோ' அமைப்பின் சார்பில் 11.10.2009 அன்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தியிருக்கிறது. வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘ஜேக்டோ' பொறுப்பாளர்கள் எல். மணி, செ. சரவணன், அய். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். க. ராமஜெயம், பழ. ராஜேந்திர பிரசாத், பி. லோகநாதன், அழகிய பெரியவன், சி.பி. தேசி, கார்த்திக் விக்ரமன், வ. சின்னதுரை, முகமதுஷா நவாஸ், செ.நா. ஜனார்த்தனன், ம. தினகரன், எஸ். ராமன், மு. பரந்தாமன், ஜெ. துளசிராமன், இல. பிரதாபன், ஆர். பெருமாள்சாமி, வ. ராமமூர்த்தி, டி. குபேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆசிரியர் ஒருவரால் பாதிக்கப்பட்ட இம்மாணவியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவரின் கல்லூரி படிப்பு தொடர வேண்டும். குற்றமிழைத்த ஆசிரியர், விடுதிக் காப்பாளர், என்.சி.சி. அலுவலர் ஆகிய பதவிகளில் இருந்து கல்லூரி நிர்வாகத்தால் நீக்கப்பட வேண்டும். அந்த ஆசிரியருக்கு பாதுகாப்பு வழங்கும் ஊரிஸ் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட நடப்பு நிர்வாகக் குழு மாற்றப்பட வேண்டும். அந்த ஆசிரியர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பறை முழக்கத்தின் எழுச்சியோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையே மணிவண்ணனின் அண்ணன் உள்ளிட்ட சிலர், ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான துண்டறிக்கைகளை விநியோகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் அடுத்து, காவல் துறை அவர்களை அப்புறப்படுத்தியது. இந்த சம்பவத்தின் மீது உறுதியான நடவடிக்கையை போராட்டக் குழு எதிர்நோக்குகிறது. மாவட்டம் தோறும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பாதுகாப்பையும் சட்டப்பூர்வ உதவிகளையும் வழங்குவதற்கு, சமூக நலத்துறையுடன் இணைந்த ஒரு தனிப்பிரிவை உருவாக்கிடவும் போராட்டக் குழு வலியுறுத்துகிறது. இக்குற்றங்களை இழைப்பவர்கள் தலித்துகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதையும் போரட்டக் குழு வலியுறுத்துகிறது.