ஒரு பிரதமர் கொல்லப்பட்டார், ஓரிரு ஆண்டுகளில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். இன்னொரு பிரதமர் கொல்லப்பட்டார், குற்றவாளிகள் 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். ஆனால் 7 ஆயிரம் சீக்கியர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். கடந்த 25 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பீர்களா? ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லுங்கள்.

– ஹர்சிம்ரத் கவுர் சிரோமணி, அகாலிதள் நாடாளு மன்ற உறுப்பினர், 2.12.2009 அன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி

*****

இந்தியாவில் உள்ள 605 மாவட்டங்களில் 378 மாவட்டங்களில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கடத்திச் செல்வது மிக அதிகளவில் நடைபெறுகிறது என "தேசிய பெண்கள் ஆணையம்' அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்பொழுது 15 முதல் 30 வயதுள்ள 30 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 43 சதவிகிதப் பெண்கள், இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட நேர்ந்த தருணத்தில் சிறுமிகளாக இருந்திருக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பாதிக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள், வேலை வாங்கித் தருவதாகவே ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்; 51 சதவிகித பெண்களும் குழந்தைகளும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களாலேயே கடத்தப்படுகின்றனர்; 22 சதவிகித கடத்தல் குற்றங்கள்தான் அரசியல் பின்னணியுடன் நடைபெறுவதாக பெண்கள் ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

*****

பெத்த அப்பாக்களே ஜாதி பாக்குறாங்க!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் சிறீபிரியா. 21 வயதான இவர் கள்ளர் சாதி குடும்பத்தில் பிறந்தவர். அதே ஊரைச் சேர்ந்த அ. பத்ரகாளி என்ற தலித் இளைஞரை இவர் காதலித்தார். இவ்விருவரும் செப்டம்பர் 29 அன்று சேலத்தில் திருமணம் செய்து கொண்டனர். பத்ரகாளியின் சகோதரி வீட்டில் சிறீபிரியா தங்கியிருந்ததை அவருடைய தந்தை சீனிவாசன் பார்த்து விட்டõர். இதனைத் தொடர்ந்து பத்ரகாளிக்கும், சிறீபிரியாவுக்கும் கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் இருவரும் அக்டோபர் 5 அன்று பழனியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சிறீபிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை விசாரித்த காவல் துறையினர், இரு தரப்பிலும் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் சிறீபிரியா, தனது கணவரைப் பிரிந்து வர முடியாது என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்.

அதன் பிறகு நடந்தவற்றை பத்ரகாளியின் மைத்துனர் சந்திரசேகர் சொல்கிறார் : “சில நாட்கள் கழித்து, சிறீபிரியாவின் இரண்டு உறவினர்கள் எங்கள் ஊருக்கு வந்தனர். என்னுடைய மனைவி அவர்களிடம் ஏன் வந்தீர்கள் என்று கேட்டவுடன், அவரை கத்தியை காட்டி மிரட்டினர். அதில் ஒருவர், சிறீபிரியாவின் கழுத்து, மார்பு மற்றும் அடிவயிற்றில் குத்தி கொலையே செய்து விட்டார்.'' சிறீபிரியாவின் தந்தை சீனிவாசன் (65), அவருடைய உறவினர்கள் ஆசைத்தம்பி (27) மற்றும் பண்ணாடி (30) ஆகியோரை காவல் துறை கைது செய்துள்ளது ("டைம்ஸ் ஆப் இந்தியா', 6.11.2009). “யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க'' என்று சமூகம் சொல்கிறது. ஆனால் சொந்த அப்பாக்களே ஜாதி பாக்குறாங்க என்பதை மட்டும் வசதியாக மறந்து விடுகிறது! 

*****

ஜாதி அதிகாரத்தை நிலவுடைமை என்ன செய்யும்?

தனக்குச் சொந்தமான ஒரு சிறு நிலத்தை விற்க மறுத்ததற்காக மகாலிங்கம் என்ற தலித், சாதி இந்துக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் தெளிக்கோட்டையைச் சேர்ந்த மகாலிங்கத்தை (57) நவம்பர் 17 அன்று ஒரு மரத்தில் கட்டி வைத்து, ஆயுதங்கள் மற்றும் செருப்பால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். மகாலிங்கத்திற்கு தெளிக்கோட்டை கிராமத்தில் 30 சென்ட் நிலம் உள்ளது. அவருடைய நிலத்திற்குப் பக்கத்தில் தங்கதுரை (45) என்ற தேவர் சாதியை சேர்ந்தவரின் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தைக் கேட்டு தகராறு தொடங்கியிருக்கிறது. தற்பொழுது மகாலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கிராமத்தில் உள்ள 30 தலித் குடும்பத்தினரும், சாதி இந்துக்களுக்கு பயந்து வெளியேறி விட்டனர். சாதிக் குற்றவாளிகள் சென்னைக்கு தப்பித்து விட்டதால், அவர்களை சென்னையில் போலிஸ் தேடிக் கொண்டிருக்கிறது ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 23.11.09).

நிலம் தலித்துகளை அதிகாரப்படுத்தும் என்கிறார்கள் இடதுசாரிகள். ஒருவனை கீழ் ஜாதியாகவே வைத்துக் கொண்டு, அவனுடைய சமூக அடையாளத்தை மாற்றாமல் – அவனுக்கு கல்வி, நிலம், வேலைவாய்ப்பு, அரசியல் பதவி என எதைக் கொடுத்து அதிகாரப்படுத்தினாலும் – ஜாதி அதிகாரத்திற்கு முன்னால் அந்த அதிகாரங்கள் செல்லாக் காசாகி விடுகின்றன! கிராமங்களில் இவர்களைப் போலவே பொருளாதாரத்தில் ஏழைகளாக உள்ள சாதி இந்துக்கள் தாக்கப்படாததற்கு அவர்களுடைய சமூக அதிகாரமே அரணாக இருக்கிறது. எனவே, முதலில் தாழ்த்தப்பட்டவனுக்கு சமூக (அடையாளம்) அதிகாரத்தை கொடுக்க வேண்டும். இந்து மதத்தில் அவன் நிறுத்தப்பட்டிருக்கின்றவரை, அதற்குத் துளியும் வாய்ப்பில்லை. தீண்டத்தகாதவனை எது தீண்டத்தக்கவனாக்கும்? இதே "மகாலிங்கம்' என்ற அடையாளம் "மகபூப் பாட்சா'வாக இருந்தால் நிலைமையே வேறு! இதே கள்ளர் நிலத்திற்கு அருகில் ஒரு முஸ்லிமுடைய/கிறித்துவருடைய நிலம் இருந்திருந்தால், அவர்கள் தாக்கப்பட்டிருப்பார்களா? அப்படியே தாக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? அதுதான் தலித் தாக்கப்படும்போதும் நடக்க வேண்டும். 

******

கீழ் ஜாதி தண்ணீர் துளி

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (தலித்). இவர் இங்குள்ள கடை ஒன்றில் தண்ணீர் பாக்கெட் ஒன்றை வாங்கி குடித்துவிட்டு, சாலையில் போட்டு விட்டார். அந்த பாக்கெட் மீது லாரி ஏறியதும் – சாலையில் சென்ற ஒருவர் (சாதி இந்து) மீது பாக்கெட்டில் இருந்த தண்ணீர் துளிகள் தெறித்துள்ளன. ஒரு தலித் இளைஞர் குடித்துப் போட்ட பாக்கெட்டிலிருந்து தன் மீது தண்ணீர் தெறிப்பதா என்று ஆத்திரமடைந்த அவர், நான்கு பேருடன் சரவணன் வசிக்கும் சேரிக்குச் சென்று அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். ஆனால் 8 தலித்துகள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைக் கண்டித்து பந்தல்குடியில் சி.பி.எம். சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ("தீக்கதிர்', 4.11.09).

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் வேப்பங்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார், "ஏர்டெல்' நிறுவனத்தின் மெக்கானிக்கல் பிரிவில் வேலை செய்கிறார். இவர், திருவோணம் ஒன்றியத்தில் உள்ள நம்பிவயல் என்ற கிராமத்தில் புகழேந்தி என்பவரது இடத்தில் இருக்கும் டவரில் பேட்டரி மாற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது நடந்ததை படுக்கையில் இருந்த விஜயகுமாரே விளக்குகிறார் : “புகழேந்தியின் இருப்பிடத்தில் உள்ள டவருக்கு ஏழெட்டு முறை போயிருப்பேன். ஆனால் அவரை ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் என்னை அழைத்து "எந்த ஊர்?' "என்ன ஜாதி?' என்று விசாரித்தார். நான் பதில் சொன்னேன். "பறையனா நீ?' நான் உங்க ஆளுங்கள உள்ளே விடறதில்ல. ஏர்டெல்ல வேலை செய்யறதால உள்ளே விடுறேன். நீ வரும்போது நான் இருந்தால் கும்பிடு போடணும். இல்லேன்னா கட்டி வச்சு தோலை உரிச்சிடுவேன் என்றார்.

சம்பவம் நடந்த அன்று இரவு அவர் வீட்டு வழியாக சென்ற என்னை யும் என்னுடன் வந்தவரையும் அழைத்து, மீண்டும் என் சாதியை கேட்டார். நான் காலனியை சேர்ந்தவன் என்றேன். "துரை, பறையன்னு சொல்ல மாட்டீங்களோ?' என்றவர், "பறையன்னு சொல்லுடா' என்றார். நான் தயங்கினேன். என்னடா மரியாதையில்லாம நிக்கற என்று சொல்லி பிறப்புறுப்பில் கடுமையாகத் தாக்கத் தொடங்கி விட்டார்'' ("குமுதம் ரிப்போர்ட்டர்', 22.11.09). இது குறித்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, விஜயகுமாருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன. விசாரணை முடிவில் நடவடிக்கை எடுப்பதாக செந்தில் வேலன், எஸ்.பி. கூறியிருக்கிறார்.

அதிகாரம் / நக்சலைட்டுகள் = வர்ணாஸ்ரமம்

"தெகல்கா' ஆங்கில வார இதழில் (21.11.09) உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் விரிவான பேட்டி வெளிவந்திருக்கிறது. அதில் அவர் தான் பொறுப்பேற்ற பிறகு, "மோதல் கொலைகளே' நடைபெறவில்லை என்பது உள்ளிட்ட பல பொய்களை துணிந்து சொல்லியிருக்கிறார். அதே இதழில் சி.பி.அய். (மாவோயிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினர் கிஷன்ஜி (53) பேட்டியும் இடம் பெற்றிருக்கிறது. இவர், இந்தியாவில் தீவிரமாகத் தேடப்படும் மாவோயிஸ்டுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பவர். அரசுக்கு மிகுந்த சவாலாகத் திகழ்பவர். தற்பொழுது மேற்கு வங்கத்தில் நடைபெறும் நக்சல்கள் போராட்டத்தின் முன்னணி வீரர். அவரிடம் இவ்வியக்கத்தில் சேர்வதற்கு எது காரணமாக இருந்தது என்று செய்தியாளர் கேட்கிறார். அதற்கு பதிலளித்த கிஷன்ஜி, தான் ஆந்திராவில் பிறந்தது, வளர்ந்தது, பிற புரட்சிகர இயக்கத்தில் இணைந்தது, தன்னுடைய தந்தை சுதந்திரப் போரில் பங்கேற்றது, நெருக்கடி காலத்தில் தன்னுடைய பங்களிப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டே வந்து திடீரென்று இப்படிச் சொல்கிறார் : “நாங்கள் பிராமணர்கள்; ஆனால் எங்கள் குடும்பத்திற்கு ஜாதியில் நம்பிக்கை கிடையாது.''

மக்களுக்கான உண்மையான அதிகாரத்தையும், ஜனநாயகத்தையும் கொண்டுவர வேண்டும் என்று போராடும் மாவோயிஸ்டுகளின் லட்சியம் சரிதான். ஆனால் அது ஜாதியொழிந்த அதிகாரமாக/ஜனநாயகமாக இருக்க வேண்டாமா? இவர்கள் கட்டியெழுப்பும் பாட்டாளி அரசிலும் பார்ப்பனர்களே அதிகாரத்தில் இருப்பார்கள் எனில், அன்னியர்களான வெள்ளையர்கள் போய் தேசியம் பேசும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஆள்வது போல்தானே ஆகிவிடும்! “நான்தான் உண்மையான தேசபக்தன்'' என்றும் கிஷன்ஜி கூறியிருக்கிறார். லவுகீகப் பார்ப்பனர்களிடமிருந்து சோசலிச பார்ப்பனர்கள் கைக்கு ஆட்சி மாறுவதற்குப் பெயர் புரட்சி அல்ல; அது, பார்ப்பன நரித்தனத்தின் புரட்சிகர வேடம்! தமக்கு ஜாதி மீது நம்பிக்கை இல்லை என்கிறார் கிஷன்ஜி. ஆனால், தான் பிராமணன் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அதாவது அவருக்கு பிராமணன் என்ற சதுர் வர்ணத்தின் மீது (பிராமணன் என்பது சாதி அல்ல) நம்பிக்கை இருக்கிறது; ஜாதி மீது மட்டும் நம்பிக்கை இல்லையாம் (நியாயம் தானே!) ஆயுதமேந்திய நக்சலைட்டுகளும் பூணூலிஸ்டுகளாகத்தான் இருக்கிறார்கள் என்றால், நம்மீது பாய்ந்து பிராண்ட எண்ணும் ஆயுதமேந்தாத அதிதீவிர கம்யூனிஸ்டுகள் சிந்திப்பார்களா?