கடந்த அக் - 2 அன்று தஞ்சை சாலியமங்கலம் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (20) கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலைசெய்த குற்றவாளிகளான பரோட்டா மாஸ்டர் இராஜா, (28), (வெள்ளாளர்), குமார் (24), (ஆசாரி), ஆகியோரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. குற்றவாளிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டும், அக்குடும்பத்திற்கு கழிப்பிட வசதி, ஒருவருக்கு வேலை போன்ற கோரிக்கைகள் பல்வேறு இயக்கங்களால் முன்வைக்கப்பட்டன. இதுபோன்று தமிழகம் முழுவதுமே பல்வேறு காரணங்களால் பெண்கள் தொடர்ந்து கொலைசெய்யப்படுவது அதிகரித்துவருகிறது. தமிழக அரசோ தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலையோ, கொலைகளோ நடக்கவில்லை என்று மூடிமறைப்பதன்மூலம் கொலைகள் பெருகுவதற்கு துணைசெய்கிறது. அன்று திருக்கோயிலூரில் 5 இருளர் பெண்கள், விமலாதேவி, சங்கீதா, ரமணி, உமாமகேஸ்வரி, இன்று சுவாதி, வினுப்பிரியா, நவீனா கலைச்செல்வி, பிரான்சினா இன்னும் வெளிவராத பல கொலைகள் எனக் கொலைப்பட்டியல் நீளுகின்ற நிலையில், சாலியமங்கலத்தில் ஆதிக்கச் சாதியினரால் ஒரு வருடத்தில் மட்டுமே 15-20 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரமும், கொலையும் செய்யப்பட்டுள்ளனர் என்கிற கூடுதல் செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில்தான் கலைச்செல்வியின் குடும்பத்தை நேரில் பார்க்கவும், அக்கிராமத்தின் உண்மை நிலவரங்களை அறியவும் கடந்த 14.08.2016 அன்று சாதி ஒழிப்பு முன்னணித் தோழர்கள் ரமணி, இளங்கோ, திராவிடன் ஆகியோர் சி.பி.எம்.எல். மக்கள் விடுதலையின் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர் அருணாச்சலம் அவர்களோடு சாலியமங்கலம் கிராமத்திற்குச் சென்றோம். சாலியமங்கலம் கிராமத்தில் அதிகளவு கள்ளர், அடுத்து வேளாளர், நாயுடு, ஆசாரி, கோணார், நாவிதர், பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகிய சமூக (மொத்தம் 2000 ஓட்டுகள்) மக்கள் வசிக்கிறார்கள். 8 குடும்பங்கள் மட்டுமே அருந்ததியர் சமூகம். அம்மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி வாழ்கிறார்கள். சாலியமங்கலம் பஞ்சாயத்துத் தலைவராக கோணார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் தொடர்ந்து 35 ஆண்டுகளாக அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுவருகிறார்களாம். அவர் திராவிடர் கழகப் பின்னணியைக் கொண்டவர் என்பதை மக்கள் தெரிவித்தனர்.
சாலியமங்கலம் நெடுஞ்சாலையிலே அமைந்திருக்கிறது கலைச்செல்வியின் வீடு. கலைச்செல்வியின் அண்ணன் முருகன், அப்பா ராஜேந்திரன், சின்னம்மா, பாட்டி உள்ளிட்டோரை சந்தித்தோம். அக்குடும்பத்தினர் கொலையின் கொடூரத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டதுடன், கொலைக் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதை நம்பிக்கையோடு வெளிப்படுத்தினர். “எந்த சிக்கல் என்று போலிசிடம் போனாலும் வழக்குப் பதிவு செய்வதில்லை. ”என் மகள் கொல்லப்பட்ட விசயத்திலும் எங்களைக் காவல்துறை அடக்கிவிடுவார்கள் என்பதால் நாங்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தோம். உறுதியாக நாங்க இருந்ததாலதான் காவல்துறை மோப்ப நாய்களை வரவழைத்து குற்றவாளிகளைக் கைதுசெய்தது. அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வந்துவிடக்கூடாது“ என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கதான் உடன் இருந்தார்கள். நாங்க தைரியமாக சண்டைபோட அவர்களே காரணம்“ என்று அழுத்தமான வார்த்தைகளைப் பதிவுசெய்தனர். இன்று அக்குடும்பம் துப்புரவு பணியாளர் சங்கத்தில் சங்கமமாகியிருக்கிறது. அதனால் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து மிரட்டல் வந்துகொண்டிருப்பதாகக் கூறினர். கலைச்செல்வியின் அண்ணன் முருகனுக்கு துப்புரவு பணி (அன்றாட கூலி தொழிலாளியாக வேலை தருவதாக உத்தரவு தந்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர். ஆனால் அதற்கான ஆணையோ, நியமனமோ இதுவரை நடக்கவில்லை. வீடு கட்டுவதற்கு நிலம் தருவதாக உறுதியளித்துள்ளனர். கலைச்செல்வி மரணத்திற்கு நஷ்டஈடாக 8 லட்சம் அறிவிக்கப்பட்டதில், 4 லட்சம் மட்டுமே அக்குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. எப்பொழுதும்போல் பரபரப்பு அடங்கிவிட்டது. நிர்வாகத்தின் நடவடிக்கைகளும் தேங்கிவிட்டன. கலைச்செல்வியின் வீட்டிற்கு தற்பொழுது இரண்டு கழிவறைகள் கட்டித்தரப்பட்டுள்ளது. அக்கிராமத்திலுள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த கலைச்செல்வியின் ஆசிரியரை நாம் பார்த்தோம். அவர், “அருந்ததியர் சமூகத்தில் பிள்ளைகளைப் படிக்க வைக்க அக்கறை செலுத்துவதில்லை. 8ம் வகுப்பு வரை படித்த கலைச்செல்வியைப் பலமுறை அறிவுரை சொல்லி மேற்கொண்டு படிக்க வலியுறுத்தினேன். ஆர்வம் இல்லாமல் போயிற்று. அவளுக்கான உதவித்தொகை படிவம் எழுதி தருவதிலிருந்து, அவளுக்கான பண உதவி வரை நான் செய்திருக்கிறேன். படித்திருந்தால் நல்ல இடத்திற்கு முன்னேறிவந்திருப்பாள். இப்படி ஆயிற்று. பெற்றோர் கவனிக்காமல் விட்டுவிட்டால் இப்படியான சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது. இன்றைய தலைமுறை அப்படி“ என கலைச்செல்வியின் மீதான அக்கறையை வருத்தத்துடன் தெரிவித்தார்.
சாலியமங்கலம் பகுதியில் இதுவரை 15-20க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் ஆதிக்கச் சாதியினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் என்கிற செய்தியைக் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது இதுவரை 4 கொலைகள் நடந்துள்ளதாகவும், அவற்றில் இஸ்லாமியர், அகமுடையர், அருந்ததியர் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அவற்றிலும் எதனால் நடந்தது? என்பதை முழுமையாக உறுதிசெய்ய முடியவில்லை. எல்லா கிராமங்களிலும் நடக்கும் சண்டை ஆண்,பெண் பழக்க சிக்கல் போன்றவையே இங்கு நடந்த கொலைக்கும் காரணமாக இருக்கிறது என்று அப்பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கூறினர். அருந்ததியர் பெண் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பது தவறுதான் என்றனர். சாலியமங்கலம் தி.க செல்வாக்குக்கு உட்பட்ட பகுதியாக இருந்திருக்கிறது. அப்பகுதி கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் தோழர் ஒருவர்தான் கலைச்செல்விக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்ததாகத் தோழர்கள் குறிப்பிட்டனர். இதுபோன்று இரண்டு பண்புகளுமே அப்பகுதி மக்களிடம் நிலவுகிறது.
கலைச்செல்வி கொலையும் சாதிய முரண்பாடும்
தமிழகம் முழுவதுமே கிராமப்புறப் பகுதிகளில் பெரும்பாலும் எந்த பிற்படுத்தப்பட்ட சாதி அதிக எண்ணிக்கை பலத்துடன் இருக்கிறதோ அந்த சாதியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும். சில இடங்களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள உயர் சாதியினர் வன்முறையினை செய்ய முடியாது. சில இடங்களில் தாழ்த்தப்பட்ட சமூகம் அதிகளவில் இருந்தால் அங்கு திருப்பி அடிக்கும் பண்பும் நிறைந்திருக்கும் என்பதை நாம் பார்க்கலாம். அதுபோல் எந்த ஒரு பகுதியாக இருந்தாலும் அங்கு நிலவும் சாதிய முரண்பாட்டின் தன்மை, அதன் வீரியம், தொடர் நிகழ்வுகள் எதற்காகக் கட்டமைக்கப்படுகிறது? சாதி ஆதிக்கத்தால் மட்டுமே செய்யப்படுகிறதா? அரசியல் ஆதாயம், சமூக, பண்பாட்டு சூழலும் காரணமாக இருக்கிறதா? என்கிற பகுப்பாய்வு நமக்கு மிகவும் அவசியம். அத்தகைய அணுகுமுறைதான் எதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் அச்சிக்கலைத் தீர்ப்பதற்கும் மக்களோடு நின்று நியாயத்தை நிலைநாட்டுவதற்கு உதவும்.
கலைச்செல்வி மீதான பாலியல் படுகொலைக்கு சாதி ஆதிக்கம் மட்டுமே காரணமா? என்றால் இல்லை. சாதி ஆதிக்கம், பண்பாட்டு சீரழிவு, ஆணாதிக்கப் பாலியல் வன்மத்தால் நிகழ்த்தப்பட்ட படுகொலை. இக்கொலையைத் துணிந்துசெய்ய சாதி ஆதிக்க உளவியல் பங்காற்றியிருக்கிறது. ஒரு தலித் பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்கிற தைரியத்திற்கு அச்சாதி இடம் கொடுத்திருக்கிறது என்றே பார்க்க முடியும். ஒரு உயர்சாதிப் பெண்ணை தலித் ஆண் அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியாது. உயர்சாதி ஆண் தலித் பெண்ணை எளிதில் நெருங்க முடியும் என்கிற அம்சத்தையே இது காட்டுகிறது. பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் வன்முறையும் இதுபோன்ற பல கொலைகளும் பல சாதிகளில் வெவ்வேறு சூழலில் நடந்திருக்கிறது.
சேலம் சிறுமி பூங்கொடி பாலியல் படுகொலை
குறிப்பாக சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த பூங்கொடி என்கிற 8 வயது சிறுமி அதே சாதியைச் சேர்ந்தவர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவமே சான்று. உண்மையிலே இச்சம்பவம் வேறு ஒரு முகத்தை வெளிப்படுத்தியது. சேலம் சென்னியம்பாளையம் வன்னியர் கிராமம். பூங்கொடி குடும்பத்தினர் நெசவுதொழில் செய்யும் ஏழை வன்னியர். கஞ்சா அடித்துவிட்டு சுற்றித்திரிந்த அதே சாதியைச் சேர்ந்த, பா.ம.க.கவுன்சிலர் உட்பட 5பேர் அடங்கிய கும்பல் அச்சிறுமியை இரவோடு இரவாக கடத்திச்சென்று கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டது. கொடுமை என்னவென்றால் அச்சிறுமியின் பெற்றோர் குற்றவாளிகளை அடையாளம் காண்பித்து கைதுசெய்ய உதவியதற்காக அக்கிராமத்தினர் அக்குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர். அரசின் உதவியும் ஏதும் கிடைக்காத நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பூங்கொடியின் பெற்றோர் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகினர். கிட்டத்தட்ட 6 மாதம் தாக்குபிடித்து இருந்துவிட்டு பின் அக்கிராமத்தைவிட்டே காலிசெய்து எங்கோ போய்விட்டனர். இவற்றில் சாதிக் குழுவிற்குள் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் பாகுபாடும் இணைந்தே வினையாற்றியிருக்கிறது. அச்சிறுமி சிதைக்கப்பட்ட மனிதநேயமற்ற அச்செயல் சாதி கௌரவத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எத்தகையக் கொடூர செயலையும் விழுங்கி துப்பிவிடுகிறது சாதி. சாதி ஆதிக்க உளவியலின் அபாயத்திற்கு சென்னியம்பாளையம் நிகழ்வே சாட்சி. விழுப்புரம் நவீனாவைக் கொலைசெய்த செந்திலின் செயல் கண்டிக்கப்பட வேண்டியதே. செந்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இப்பொழுது நடந்துள்ள நான்கு கொலைகளில் தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினாவைக் கொலை செய்த நபர் அதே உயர் சாதியைச் சேர்ந்தவர்தான். இதுபோன்று சாதி, மதம், ஆணாதிக்கம், பண்பாட்டு சீரழிவு ரீதியிலான ஒடுக்குமுறைகள் பெண்கள்மீது நிகழ்த்தப்படுகின்றன. இதுபோன்ற பல கோணங்களில் இச்சிக்கலை நாம் சீர்தூக்கி அணுகவேண்டியிருக்கிறது.
கலைச்செல்வியின் படுகொலையையொட்டி அப்பகுதியிலுள்ள ஆதிக்கச் சாதியினர் தொடர்ந்து தலித் பெண்கள் மீது வன்முறையை நிகழ்த்துகின்றனர் கொல்லப்படுகின்றனர் சாதி ஆதிக்கம்தான் காரணம் என்கிற கருத்தாக்கம் நியாயத்தின் பக்கம் நிற்கும் பொது மக்களையும் எதிராக்கும் ஆபத்து கொண்டது. சனநாயகப் போராட்டத்திற்கு இது உதவாது. உண்மையிலேயே அப்பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்ட அக்கொடூரத்திற்கு எதிராக அப்பகுதியிலுள்ள அனைத்து பெண்களையும் நியாய உணர்வுள்ள பொது மக்களையும் அணிதிரட்டிப் போராட வேண்டும். இவை ஆணாதிக்கத்துடன் இணைந்த சாதிய சமூக அமைப்புக்கும் பெண்ணுக்கும் இடையிலான முரண்பாடு. ஆண், பெண் சமத்துவத்திற்கு இடையிலான முரண்பாடு. அவ்வாறு இச்சம்பவத்தைப் பார்க்காமல் வெறும் சாதிய கண்ணோட்டத்திலிருந்து மட்டும் தட்டையாகப் பேசுவதால் யாருக்கு பயன்? உண்மையிலேயே சாதி மட்டுமே முதன்மைப் பங்கு வகிக்கும் கொலைகள் நிறைய நடக்கின்றன. கௌரவம் எனும் பெயரில் நடக்கும் சாதிவெறி ஆணவக்கொலைகளைக் (பெண்,ஆண்) குறிப்பிடலாம்.
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறதே!
பூங்கொடிக்கு நேர்ந்தது போன்று சொந்த சாதியில் நடக்கும் அநீதிக்கு குரல் கொடுக்காத, தன் மகன் பதவிக்கு வருவதற்காக திவ்யா, கவுசல்யா போன்று இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய இராமதாசுக்கு பெண் பாதுகாப்பு குறித்தும் பெண்ணுரிமைப் பற்றியும் பேச என்ன தகுதி இருக்கிறது? ஒருபக்கம் பெண் காதலித்த ஆணை வெட்டுவது கொல்வது, பிரித்துவைப்பது, அப்பெண்ணின் காதலை மறுப்பது ஆகியவற்றை நியாயப்படுத்திக் கொண்டும், மறுபுறம் ஒரு பெண் தான் விரும்பாதவரை நிராகரிக்க உரிமை இருக்கிறது என்றும் அறிக்கைவிடுகிறார். இராமதாசின் இரட்டைவேடத்தில் ஒளிந்திருப்பது சாதியக்குரலா? பெண்ணுரிமைக்குரலா? இவர்தான் சுவாதிக்கும், நவீனாவிற்கும் காவலனாகக் குரல் கொடுக்கிறாராம்!. தமிழினப் போராளியாக வலம் வந்தவர்தான் தமிழ்ச்சாதிக்குள் எந்த சாதி என்று பார்த்தப்பின்தான் தனது நீதிக்குரலை நீட்டுகிறார். 20 தமிழர் பிணங்களில் சாதி பார்த்து ஆதரிக்கிற இராமதாசு, வன்னிய சாதி இளைஞர்களால் கொல்லப்பட்ட பூங்கொடிக்கும், ஆசிட்வீச்சில் இறந்துபோன சென்னை வித்யாவிற்கும் ஏன் குரல் கொடுக்கவில்லை? குற்றமிழைத்தவர்கள் சொந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலா? தலித் இளைஞர்கள் உயர்சாதியில் உள்ள பெண்களை இழுத்துச் செல்கிறார்கள். காதல் நாடகம் நடத்துகிறார்கள் என்று பேசுவதும் கொல்வதும் எதற்காக? ஏழை வன்னிய மக்களை ஏமாற்றுவதற்கா? இத்தகைய அரசியல் ஆதாயம் தேடும் அதிகார கும்பல்தான் மக்களிடையே நிலவும் மனோபாவத்தை, பலவீனத்தைக் கூர்தீட்டி மோதவிட்டு அதில் பயன்பெற துடிக்கிறது. இதற்கு அந்தந்த சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் பலியாகிறார்கள். மக்களிடையே பணிபுரியும் நாம் சாதியச் சிக்கலை கையாள்வதில் தீர்ப்பதில் இன்னும் நுட்பமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம்.
சாதியும் குடும்பமும்
இந்தியச் சமூக, குடும்ப அமைப்பில் பெண்ணை சொத்தாகக் கருதுவதும் பெண் அடிமைத்தனமும் குடும்ப வன்முறையும் அனைத்து சாதிகளுக்கும் பொருந்தும். பெண் சிசுக்கொலை முதல் பெண்ணுக்கான படிப்பு, வேலை, திருமணம் சொத்து என்று வரும்போது ஆணாதிக்க மனோபாவம் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது. பெரும்பாலும் அனைத்து சாதியிலும் பெண் குறித்த கற்பிதம் ஒன்றாகத்தான் இருக்கிறது. கூடுதலாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தலித் என்பதாலும், பெண் என்பதாலும் சேர்ந்து இரண்டு ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். சாதி, வர்க்க குணாம்சத்திற்கு ஏற்றாற்போல் அதன் வீரியம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும் என்பதுதான் உண்மை. பெண்கள்மீதான வன்முறைகளில் 70 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலும், பழக்கப்பட்டவராலுமே குடிபோதையிலுள்ளவர்களாலுமே நடக்கின்றன என்பதை 2012 தேசிய புள்ளிவிவர ஆவணம் தெரிவிக்கின்றன. பெண்கள் மீதான கொடுமைகளும், கொலைகளும் அதிகரித்திருப்பதற்கு என்னக் காரணம்? உடைதான் காரணம் என்று பேசும் பிற்போக்கு சிந்தனைதானே இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் பொதுப்புத்தியில் மேலோங்கியிருக்கிறது. 3 வயது சிறுமி சிறுமியர் சிதைக்கப்பட்டு கொல்லப்படுகிற வன்மம் வளர்கிறதே. இதற்கு நுகர்வுப்பண்பாடு காரணமில்லையா? இவற்றில் காவல்துறையின், அரசின், முதலாளிகளின் பங்கு இல்லையா? 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத கொலை, கொள்ளை, வக்கிரச் செயல், சாதியக்கொலைகள் தற்பொழுது அதிகரித்திருக்கிறதே ஏன் என்கிற சமூகக் காரணியை நாம் அறிய வேண்டும். எந்தப் புள்ளியிலிருந்து எதைத் தொட்டு ஆராயப் போகிறோம் என்பதே அடிப்படை.
முதலாளித்துவ நுகர்வுப்பண்பாடும் பாலியல் வன்மமும்
இன்றைய உலகமய காலகட்டத்தில் பெருகிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, கிராமம்விட்டு நகரம் நோக்கி இடம் பெயர்வு, நுகர்வுப் பண்பாட்டின் வேகம் ஆகிய கூறுகள் இன்றைய இளைய தலைமுறையினரையும், ஒட்டுமொத்த மனித வாழ்வியலையும் சிதைத்திருக்கிறது. உதிரியான உத்தரவாதமற்ற வாழ்க்கை முறையினையும் மக்களிடையே உருவாக்கியிருக்கிறது. வானளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளும் மாற்றங்களும் பெண்ணைப் பொதுவெளிக்கு கொண்டுவந்திருந்தாலும் சம உரிமை, பாலின பாகுபாடு மற்றும் பொருளாதார, அரசியல் தளங்களில் பெண் குறித்த கற்பிதத்தைப் பழைய பிற்போக்கான பாகுபாட்டைத்தான் நடைமுறைப்படுத்திவருகிறது. தனிமனிதருக்குள் இருக்கும் சின்ன ஆசைகள்கூட தூண்டப்பட்டு வியாபாரமாக்கப்படும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்,பெண் உறவுகள் உட்பட அனைத்து தனிமனித உறவுகளும் நலன்சார்ந்ததாகவும் பண உறவாகவும் மாற்றியிருக்கிறது. குறிப்பாக பெண் உடல், உணர்வுகளை வியாபாரமாக்கி அதன் மூலம் மூலதனத்தைப் பெருக்கிவருகிறது. இத்தகைய சூழலில் பெண் என்பவள் அனுபவிக்கவும் ஆணின் இச்சையைத்தீர்க்கும் பொருளாகவுமே பார்க்கும் பார்வை வலுவாக்கப்படுகிறது. இதனால் பெண்கள் பொதுவெளிகளில் பல சவால்களையும் சேர்த்தே சந்திக்கின்றனர். ஆக, நடக்கும் சிக்கலுக்கான காரணிகளை நாம் தீர்ப்பதற்கான அக்கறையோடு அணுகவேண்டியிருக்கிறது.
சாதியில் உள்ள ஒருவரோ, குழுவோ செய்யும் குற்றத்திற்கு ஒட்டுமொத்த சாதியையே குற்றவாளியாக்கும் பார்வை பிரச்சனையைத் தீர்க்குமா? திசைதிருப்புமா?
உழைக்கும் மக்களிடம் சாதி ஒழிப்பை, சமத்துவத்தை, ஆதிக்க எதிர்ப்பு சனநாயக உணர்வை வளர்த்தெடுப்பதே நாம் காட்டும் மாற்றுப் பாதை. உண்மையிலேயே ஒழிந்திருக்கும் குற்றவாளிகளை விட்டுவிட்டு மக்களை எதிராக்கும் முழக்கமும், அணுகுமுறையும் கருத்துருவாக்கமும் யாருக்குப் பயன்பட போகிறது? தலித் மக்களுக்கு என்று நினைத்தால் அது தவறு? அந்த இடத்திலிருந்து சிக்கலை எதிர்கொள்ளும் அவர்களுக்கு அது ஆபத்துதான். சாதி எதிர்ப்புப் போராட்டத்தை, சாதி ஒழிப்பு முன்னெடுப்பை தலித் மக்கள் முன்னெடுத்தாலும், போராடினாலும் அவற்றை முழுமையடையச் செய்வது என்பது சாதி ஆதிக்கத்திற்கு எதிரான சனநாயகப் போராட்டமாக அவற்றை மாற்றுவதில்தான் அடங்கியிருக்கிறது. தலித் மக்களின் சமூக நீதிக்கான போராட்டம் என்பது பொது நீரோட்டத்தில் கலப்பதற்கான போராட்டமே. அதுபோல் பெண்களும் சாதி, மத, ஆணாதிக்க, பண்பாட்டு, சமத்துவமின்மை ஆகிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கிறது. ஆக, கலைச்செல்விக்கான நீதிக்கும் தமிழகம் முழுவதும் தொடர்ந்திடும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை ஆணாதிக்க வன்மச் செயலைத் தடுத்திடவும் அரசு அதற்கான தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தைத் முன்னெடுப்பதே நமது பணி. அதற்கு அடக்கப்பட்டும் உரிமை மறுக்கப்பட்டுமிருக்கும் இலட்சக்கணக்கானப் பெண்களை வீதிக்கு இழுத்துவர வேண்டிய வரலாற்றுக் கடமை நம்முன் இருக்கிறது.
- ரமணி, சாதி ஒழிப்பு முன்னணி