சர்வதேச அளவில் விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஒரு நிறுவனமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ‘பீட்டா’ நிறுவனம், 1980ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள வர்ஜினியாவில் தொடங்கப்பட்டது. செல்லப் பிராணி வளர்ப்போர், அவற்றின் மீது செலுத்தும் அன்பு மட்டுமே இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய மூலதனம். அந்த மூலதனத்தை, முதலீடாக மாற்றியதால் கடந்த 35 ஆண்டுகளில் 30 இலட்சம் பேர் பீட்டாவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இலாப நோக்கு இல்லாத நிறுவனமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்த ‘பீட்டா’ ஆண்டொன்றுக்கு சுமார் 43 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகிறது. அதாவது கிட்டத்தட்ட இந்தியப் பணம் 300 கோடி ரூபாய்.
அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமாக செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. அங்கு அனாதையாக மீட்கப்படும் செல்லப் பிராணிகளை, உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் மீட்டுச் செல்லவில்லையென்றால், அதனைக் கருணை கொலை செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்படி கருணைக் கொலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான நாய்கள், பூனைகளை பீட்டா நிறுவனம் கொன்று குவித்திருப்பதாக புள்ளி விவரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி தற்போது ஆவணப் படங்களுடன் ஆதாரப் பூர்வமாக வெளியாகியுள்ளது. ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறவர் ‘நேதன் இனொக்ராட்’ என்ற சமூக ஆர்வலர்.
1998 முதல் 2015ஆம் ஆண்டு வரை மொத்தமாக 34,970 நாய்கள் மற்றும் பூனைகளை ‘பீட்டா’ கொலை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பீட்டா மொத்தமாக தத்தெடுத்த நாய், பூனைகளின் எண்ணிக்கை 40,438. அதில் உயிரோடு உள்ளதாக பீட்டா அளித்த விலங்குகளின் எண்ணிக்கை 5,468. ஆக 34,970 விலங்குகளைக் கொன்றுவிட்டு, மீதி விலங்குகளை மட்டுமே வைத்துள்ளனர். இந்த 5 ஆயிரம் விலங்குகளைப் பாதுகாக்கத்தான் வருடத்திற்கு 300 கோடி ரூபாய் வருமானம். பீட்டா அமைப்பு வீட்டு விலங்குகளைக் கொலை செய்வதற்கான காரணம் இறைச்சிக்காகவோ, தோலுக்காகவோ அல்ல. அவற்றைப் பராமரிக்க ஏற்படும் செலவைக் குறைப்பதற்காகவும், பல்வேறு இடத்திலிருந்து கிடைக்கும் நிதியை அதிகமாகக் கையாள்வதற்காகவும் கொலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், பல தகவல்கள் பெறப்பட்டன. அதில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள்தான் இந்த புள்ளி விவரங்கள். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் இவ்வாறு கருணைக் கொலை செய்யப்பட்ட விலங்குகள் பீட்டா கையில் கிடைத்த 24 மணி நேரத்தில் கொலை செய்யப்பட்டதுதான்.
15 நாட்கள் வரை அந்த விலங்குகளின் உரிமையாளர் வருகின்றாரா இல்லையா என்று காத்திருக்க வேண்டும்; 15 நாட்களுக்குப் பிறகும் வராவிட்டால்தான் அந்த விலங்குகளைக் கொல்ல வேண்டும் என அமெரிக்கச் சட்டம் கூறுகின்றது; அந்த 15 நாட்கள்கூட காத்திருக்காமல் இவர்கள் விலங்குகளைக் கொலை செய்துள்ளார்கள்.
• பீட்டா நிறுவனத்தின் வண்டிகளிலேயே விலங்குகளைக் கொல்வதற்கான விஷ ஊசிகளைக் கொண்ட பைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றன.
• கொல்லப்பட்ட சில வகை விலங்குகளின் உடல்களைப் பதப்படுத்தி வைக்க, 9000 டாலர்கள் செலவில், ஒரு பெரிய குளிர் பதன இயந்திரத்தையே பீட்டா நிறுவனம் இயக்கி வருகிறது.
• 2011ஆம் ஆண்டு மட்டும் சுமார் 96 சதவீதம் வீட்டு விலங்குகளைக் கொன்றிருக்கிறது ‘பீட்டா’. அதேபோல் 2012இல் 602 நாய்கள், 1,045 பூனைகளைக் கொன்று குவிந்திருக்கிறது.
• மொத்தத்தில் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும், சுமார் 30 ஆயிரம் விலங்குகளைக் கொன்றிருக்கிறது ‘பீட்டா’.
• கருணைக் கொலை என்ற பெயரில் அமைதி யாகக் கொல்லப்படும் இந்த விலங்குகள், சத்தமன்றி அப்புறப்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் குப்பைகளைக் கட்டுவதுபோல, பிளாஸ்டிக் பைகளில் மூடடை கட்டப்பட்டுத் தூக்கியெறியப்பட்டிருக்கின்றன.
• இது குறித்து குரலெழுப்பிய சில ஆர்வலர்களிடம், சட்டரீதியாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாகப் பதிலளித்திருக்கிறது பீட்டா.
காவிகளும், பீட்டாவும்
பீட்டாவைப் போலவே பசு மாடுகளைப் பாதுகாக்கின்றோம் என்று இங்கேயும் காவிக் கூட்டம் கூறுகிறது. காவிகளும் பீட்டாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
பசுக்கள் எங்களது கோமாதா என்று சொல்லும் காவிகள் பசுக்களை கோசாலையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் அதை அடிமாட்டுக்கு விற்றுவிடக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். கோசாலைகளில் இவர்கள் பசுக்களை பாதுகாக்கின்றார்கள் என்று கருதும் இந்து மத நம்பிக்கையாளர்கள் நிதிகளை இவர்களுக்கு வாரி வழங்குகின்றனர். தமிழகத்தில் உள்ள கோசலைகளில் இருந்த 6000 பசுமாடுகள் மாயமாக மறைந்த இரகசியம் கண்டுபிடிக்கப் பட்டது; பிறகு ஆய்வு செய்ததில் அங்குள்ள பசுக்களை அவர்களே அடிமாட்டிற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது; இதே வேலையைத்தான் பீட்டா வேறு பெயர்களில் செய்து வருகிறது.