சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி என்கிற கிராமத்தின் சுந்தரபுரத்தை சேர்ந்தவர்கள் சாமிவேல்-சின்னப்பொண்ணு தம்பதியர். இவர்களின் கடைசி மகள் 13 வயதான ராஜலட்சுமி. சாமிவேல் குடும்பம் தண்ணீர் பிடிப்பதற்காக அருகில் உள்ள தினேஷ் குமாரின் வீட்டைத்தான் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் அங்கு தண்ணீர் பிடிக்கச் சென்ற ராஜலட்சுமிக்கு தினேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான சிறுமி பள்ளி செல்லாமலும், சரிவர பேசாமலும் இருந்துள்ளார். தாய் திரும்ப திரும்ப கேட்டதற்குப் பிறகு நடந்த விபரங்களை தனது தாயான சின்னப்பொண்ணுவிடம் கூறியுள்ளார் ராஜலட்சுமி. இதை அறிந்துகொண்ட தினேஷ்குமார் மின்சாரம் இல்லாத நேரம் பார்த்து ராஜலட்சுமியின் வீட்டிற்கு வந்து தாய் சின்னப்பொண்ணுவைத் தாக்கி அவர் கண் முன்னாலேயே ராஜலட்சுமியின் தலையை துண்டித்துவிட்டு, அவர்களின் சாதியைப் பற்றி கடுமையாகப் பேசிவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான்.
தினேஷ்குமார் ராஜலட்சுமியை வெட்டும்போது சாதியைக் குறித்த திட்டிவிட்டு, அதன்பிறகு தலையை வெட்டி தனியாக எடுத்துச் சென்றதையும், தினேஷ்குமாரின் மனைவி 'தலையை இங்கு ஏன் எடுத்து வருகிறாய் அங்கேயே போட்டுவிட்டுவா' எனக் கூறியதையும், ராஜலட்சுமியின் தாய் சின்னப்பொண்ணு காவல்துறையிடம் வாக்குமூலம் தந்திருக்கிறார்.
இந்த சம்பவம் எந்த அளவிற்கு சாதி ஆதிக்க வெறி இடைநிலை சாதி மக்களிடம் குடிகொண்டுள்ளது என்பதற்கு சரியான உதாரணமாகும். ஆரம்பத்தில் தினேஷ்குமாரைக் கண்டுகொள்ளாமல், கைது செய்யாமல் இருந்த காவல்துறை பிறகு பிரச்சனை பெரிதான உடன் அவனைக் கைது செய்தது. அழுத்தம் அதிகரிக்க எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆரம்பம்தொட்டே காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டிருக்கின்றனர். "சம்பவம் நிகழ்ந்து இரண்டு மணிநேரம் கழித்தே போலீஸ் வருகின்றனர். விசாரணையில் தினேஷ்குமார் தனக்கு மனநலம் பாதிப்படைந்தது போன்று நடிக்கிறார். கொலை நிகழ்ந்து, அவருடைய மனைவியும், தம்பியும் தினேஷ்குமாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ராஜலட்சுமியின் வீட்டில் பாதுகாப்புக்காக பெயரளவிற்கு இரண்டு போலீஸ் மட்டுமே உள்ளனர். எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டும். ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தவில்லை" என்று எவிடன்ஸ் கதிர் குறிப்பிடுகிறார்.
காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் பிரச்சனையை மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது. ஆதிக்க சக்திகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு நிலை எடுக்கிறது காவல்துறை. பொதுவாகவே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டால் அரசு பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு நிதி உதவி செய்யும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும். ஆனால் ராஜலட்சுமியின் குடும்பத்திற்கு இதுபோல் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. தமிழக அரசு உடனே இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் பெண்களின் நிலை மிக மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதிலும் சமூக அடுக்கில் கீழுள்ள தலித் பெண்களின் நிலை படுமோசமாக இருந்து வருகிறது. 'சிறுமி ராஜலட்சுமி கொலை சமூக அவலத்தின் அடுத்த பரிமாணம். இதை தொடக்கத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டால் நாடு அமைதியை இழந்துவிடும்' என்று எச்சரிக்கை செய்கிறார் கவுசல்யா சங்கர். அந்த எச்சரிக்கையை புறந்தள்ளிவிட முடியாது.
தலித் பெண்கள் தொடர்ந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர காவல்துறை முயலாததுதான். தலித் பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போது அவை தொடர்பான புகார்களில் 5% க்கும் குறைவாகவே எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுகிறது. இதுவே குற்றவாளிகளுக்கு துணிச்சலைத் தருகிறது. தலித் பெண்களின் மீது எத்தகைய வன்முறைகளையும் செய்யலாம். கேட்க நாதியில்லை. சட்டமும் ஒன்றும் செய்யாது என்று நினைக்கும் நிலைக்கு ஆதிக்க சக்திகள் செல்கின்றன.
ராஜலட்சுமியின் கொலைக்குக் காரணமான தினேஷ்குமார் இதேபோல் தப்பிவிடக்கூடாது. சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும். அதை கடுமையான மக்கள் திரள் போராட்டங்களே சாத்தியமாக்கும். என்றோ நடந்த நிகழ்வுகளை இன்று பல பெண்கள் 'மீடூ' மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அது ஊடகத்திலும், மக்கள் மன்றத்திலும் பெரும் கவனமும் பெறுகிறது. ஆனால் ராஜலட்சுமிக்கு நடைபெற்ற அநீதி மக்கள் கவனத்தைப் பெறவில்லை, ஊடகங்களும் முன்னிலைப்படுத்தவில்லை. பலரும் மவுனமாக கடந்து செல்கின்றார்கள். இது ராஜலட்சுமியை இரண்டாவதாக படுகொலை செய்வது போன்றது; பெரும் ஆபத்தானதும் கூட. ராஜலட்சுமியை தினேஷ்குமார் ஆயுதத்தால் கொன்றான். இங்கு பலர் மவுனத்தால் கொல்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சுவாதி கொலையை ஊரே பேசியது. ஊடகங்கள் தொடர்ந்து விவாதித்தன. ஆனால் ராஜலட்சுமியின் படுகொலையைப் பேச யாரும் இல்லை. எந்த கொலையைப் பற்றி பேச வேண்டும், எந்த கொலையைப் பற்றி பேசக்கூடாது என்பதைக்கூட இங்கு சாதிதான் தீர்மானிக்கிறது என்பது வேதனையானது மட்டுமல்ல, வெட்கக்கேடானதாகும்.
'பெண்கள் கட்டாயம் ஒன்றிணைவார்கள் என்று நான் நம்புகிறேன். அது, சமூக அநீதிகளை களையும் போராட்டத்தில் முக்கிய பங்காற்றும்' என்றார் அண்ணல் அம்பேத்கர். ராஜலட்சுமிகளுக்காக, ஆசிபாக்களுக்காக பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். குறிப்பாக தலித் பெண்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். இந்த சம்பவத்தை கண்டிக்கக்கூட பல அரசியல் கட்சிகள் தயங்குகின்றன. அதற்கு காரணம் இடைநிலை சாதிகளின் அரசியல் வலிமை. அதுபோன்ற வலிமை தலித் மக்களிடம் தற்போது இல்லை. தங்களுடைய உள்முரண்களை மறந்து ஒரே சக்தியாக அரசியல் ரீதியாக வலிமையடைய வேண்டியது அவசியமாகும். அதற்கு ஆண்களும், சமூகமும், அரசியல் இயக்கங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். சமூக அநீதிகளைக் களையவும், ராஜலட்சுமிகளைக் காக்கவும் அதுவே துணை நிற்கும்.
- வி.களத்தூர் எம்.பாரூக்