‘வன்னி வதை முகாம் தமிழர் விடுதலை இயக்கம்’ என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் முகாமுக்குள் வதைபடுவதோடு விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை சித்திரவதை செய்து சுட்டுக் கொல்லும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உடடினயாக தமிழர்களைக் காப்பாற்ற இந்தப் பிரச்சினைக்காக சர்வதேச மட்டத்தில் அழுத்தம் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்டு 31 அன்று மாலை 4 மணியளவில் சென்னையில் கூடியது.

‘மக்கள் கண்காணிப்பகம்’ ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் பழ. நெடுமாறன் (தமிழர் தேசிய இயக்கம்), விடுதலை இராசேந்திரன் (பெரியார் திராவிடர் கழகம்), தியாகு (தமிழ்த் தேச விடுதலை இயக்கம்), மணியரசன் (த.தே. பொ.க.), ஹென்றி டிபேன் (மக்கள் கண் காணிப்பகம்), பேராசிரியர் கல்விமணி (பழங்குடி இருளர் இயக்கம்), சூரிய தீபன் (படைப்பாளிகள் இயக்கம்), வழக்கறிஞர் பிரிட்டோ (‘வான்முகில்’ அமைப்பு) மற்றும் அமலதாஸ், தேவ சகாயம், அய்.ஏ.எஸ்., பத்திரிகையாளர் அய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வதைபடும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான முயற்சிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கு இப்பிரச்சினைகளை கொண்டு செல்வது எனவும், தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கங்களின் மூலம் உண்மையான மக்கள் கருத்தை உருவாக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

‘விடுதலை’யே இதுவா, உன் கதி?

ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு சுதந்திரம் என்று அறிவித்த போது, அது ‘துக்க நாள்’ என்று சிம்மமென முழங்கியது ‘விடுதலை’. பெரியார் உயிருடன் இருக்கும் வரை ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை முகப்பில் கம்பீரமாக ஏந்தி வந்தது ‘விடுதலை’.

ஈரோட்டில் தி.க. நடத்திய ‘விடுதலை’ பவளவிழா மேடையில் ‘விடுதலை’க்காக இந்தியாவின் அஞ்சல்துறை-அஞ்சல் உறை ஒன்றை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தபோது, ‘தேசிய கீதம்’ இசைக்க எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்களாம்.

வீரம் செறிந்த ‘விடுதலை’ யே! உன்னையே இந்திய தேசியத்துக்கு அடிமையாக்கி விட்டார்களே! அய்யகோ!

சிங்கள கைக்கூலி பத்திரிகையாளர் நீக்கம்

சென்னையில் இலங்கை தூதரக அதிகாரியாக இருந்த அம்சா என்பவர், தமிழக பத்திரிகையாளர்கள் பலரை கவனிக்க வேண்டிய வழிகளில் கவனித்து, தமது வலைக்குள் சிக்க வைத்திருந்தார். அவர்களில் முதன்மையானவர் ‘ஜூனியர் விகடன்’ வார ஏட்டில் இணை ஆசிரியராக இருந்த விகாஷ் என்பவர், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், சிங்கள ராணுவத்தை நியாயப்படுத்தியும் செய்திகளை உருவாக்கி வெளியிடுவதே இவர்களின் தொழில்.

ஈழத்து கருணாவின் துரோக பேட்டியை வெளியிடுவதில் இவர்கள் முனைப்புக் காட்டினார்கள். இப்போது ‘ஜூனியர் விகடன்’ வார ஏடு - கையூட்டு பெற்றதற்காக அந்த நபரை தமது நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்துள்ளது. நக்கீரன், தினத்தந்தி, மாலை முரசு, ராணி போன்ற வெகு சில ஏடுகளே தன்மானத்துடன் அம்சாக்கள் பக்கம் தலைவைத்துப் பாராமல் புறக்கணித்தன என்பதைக் குறிப்பிட வேண்டும்.

Pin It