நேரில் பார்வையிட்டு திரும்பிய ஜெர்மன் ஆய்வாளர் விளக்குகிறார்

ஈழத் தமிழர் பிரச்சனையில் சர்வதேச ஆங்கில ஊடகங்களின் போக்குகள், தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாகப் பகுதி மற்றும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு பகுதி மக்களின் வாழ்க்கை, சிறிலங்கா மற்றும் தமிழீழத்தின் ஊடக செயற்பாடுகள் ஆகியவை பற்றி சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் ஜெர்மன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் தெற்காசிய நிலைமைகள் தொடர்பிலான ஆய்வாளருமான டக்மர் எல்மன் விளக்கமளித்தார்.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று “கண்டனமும் இரங்கலும் தேசத்துரோகமா?” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துரிமை மீட்பு மாநாட்டில் டக்மர் எல்மன் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் வடிவம்:

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு, நானும் எனது கணவரும் தொடர்ந்து வன்னிப் பகுதிக்கு சென்று வருவது வழக்கம்.

2005ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பயணம் இலகுவாகவே இருந்தது. ஆனால் 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் நாங்கள் சென்றபோது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கடுமையான சோதனைகள், கெடுபிடிகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஓமந்தையில் கடுமையான சோதனைகளைக் கடந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசதத்துக்குள் நாங்கள் நுழைய இருந்தபோது, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒரு பெண், எங்களது கடவுச் சீட்டை வாங்கிப் பரிசோதித்துவிட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெற்றால்தான், தமிழர் பகுதிக்குள் நுழைய முடியும் என்று கூறிவிட்டார்.

பல மைல்தூரம் திரும்பி வந்து, பாதுகாப்புத்துறை அலுவலகங்களில் அதிகாரிகளைச் சந்தித்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் உள்ளே நுழையும் அனுமதி கிடைத்தது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிளிநொச்சிக்கு எங்களுக்கு பழக்கமான தொண்டு நிறுவன உதவியுடன் நுழைந்தோம். கிளிநொச்சியில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

அதே ஒற்றை நெடுஞ்சாலை-தோட்டத்தில் குடியிருப்புகள்-கிராமத்து கடைகள்- குண்டு குழியுமான சாலைகள்-2006இல் ஒரு சிலர் இரு சக்கர வாகனங்களில் பயணித்தனர்.

இப்போது எல்லோருமே சைக்கிளில் பயணம்- பெரும்பாலானோர் நடைபயணம்.கடுமையான எரிபொருள் பற்றாக்குறை- ஆனால் புலிகள் கட்டுப் பாட்டுப் பகுதியில் அரிசி தாராளமாக கிடைக்கிறது- பருப்பு கிடைப்பதில்லை. மக்கள் பட்டினி கிடக்க வில்லை. கடுமையாக தொடர்ந்தும் உழைக்கிறார்கள்.

தொண்டு நிறுவனங்கள் மக்களோடு இணைந்து பல்வேறு தொழில்வாய்ப்புத் திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றன.

தையல், கோழிவளர்ப்பு போன்ற குடிசைத் தொழில்களுக்கான பயிற்சிகள் தரப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தால் “தமிழர் புனர்வாழ்வுக் கழகம்” தடை செய்யப்பட்டுவிட்டதால், தொண்டு நிறுவனங்களின் சேவை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்கா கூட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதியை முடக்கிவிட்டது. நாங்கள் கிளிநொச்சியில்- கடந்த செப்டம்பரில் பயணம் செய்த போது நல்லவேளையாக பெரிய அளவில் தாக்குதல் எதுவும் நிகழவில்லை. இரவு நேரங்களில் வானத்தில் சிறிலங்காவின் ‘கிபீர்’ வானூர்திகள் பலத்த சப்தத்துடன் பறந்து கொண்டிருந்தன.

மன்னாரில் ஒரு குடும்பத்தினர் சென்று கொண ;டிருந்த வாகனம் ஒன்று, கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளாகி 9 பேர் இறந்ததாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன், எங்களிடம் கூறினார். வன்னிப் பகுதிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பெரிய வேறுபாடுகள் நிலவுவதை நாங்கள் பார்க்க முடிந்தது.

யாழ்ப்பாண நிலைமை

யாழ்ப்பாணம் முழுமையாக சிறிலங்கா இராணுவத் தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மக்கள் அச்சத்துட னும் விரக்தியுடனும் அல்லல்படுகின்றனர். உறவினர்கள் சிலரை நாங்கள் சந்தித்தோம்.

தங்களுடைய குழந்தைகளின் படிப்புக்காகவே உயிர் வாழ்கிறோம் என்று கூறினார்கள். ஊரடங்கு சட்டத்தினால் பெரும்பாலான நேரங்களில் வீடுகளிலே முடங்கிக் கிடக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே செல்வதற்கான “உரிமைச் சீட்டு” -சிறிலங்கா இராணுவத்திடமிருந்து பெற வேண்டும். அதைப் பெறுவது மிக மிகக் கடினம்.

யாழ்ப்பாணத்திலிருந்து, வானூர்தி சேவை ஒவ்வொரு நாளும் இயங்கினாலும் விமான பயணச் சீட்டு வாங்கியவர்களுக்குக் கூட, யாழ்ப்பாணத்தை விட்டு செல்லும் “உரிமைச் சீட்டு” மறுக்கப்படுவதாக கல்லூரி முதல்வர் ஒருவர் எங்களிடம் கூறினார்.

நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்தபோது, உணவுப் பொருள் பற்றாக்குறை, அவ்வளவு மோசமாக இல்லை என்றாலும் விலைவாசி கடுமையாக உயர்ந்திருந்தது.

எரிபொருள் பற்றாக்குறை கடுமையாகவே இருந்தது. வழிநெடுக, சிறிலங்கா இராணுவத்தினரின் திடீர் சோதனைகள், முன்னறிவிப்பின்றி சாலைகளில் வழியைத் தடுத்தல் என்பன வழக்கமாயிருந்தன. மிகவும் கவலைப்படக் கூடிய விடயம், ஒவ்வொரு நாளும் இளைஞர்கள் கடத்தப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் தான்.

“உதயன்” நாளேட்டின் ஆசிரியர் இத்தகவல்களை எம்மிடம் தெரிவித்தார்.

இந்தக் கடத்தல்- படுகொலைகள் ஆகிய குற்றங்களைச் செய்வோர் யார் என்பது சிறிலங்கா இராணுவத்துக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்கள் மீது வழக்கோ, கைது நடவடிக்கையோ எதுவும் கிடையாது. யாழ்ப்பாணத்தில் நடக்கும் இந்தக் கொடூர நிகழ்வுகள்- கொழும்பு நகரத்தில் வாழும் தமிழர்களை அச்சத்தில் உறையச் செய்கின்றன.

எந்த முறையான காரணமும் இல்லாமல்- யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒருவரை இராணுவம் அண்மையில் கைது செய்தது. பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர்- இராணுவத்திடம் அந்த மாணவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த மாணவர் விடுதலை செய்யப்பட்டாலும் அவர் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

புலிகளின் பிரதேசத்துக்கு வெளியே....

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக கொழும்பில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஓரளவு வசதி படைத்த தமிழர்கள் கடத்தப்பட்டு, அவர்களிடம் பெரும்தொகை கேட்டு மிரட்டுகின்றனர். இல்லையேல் கொலை செய்யப்படுகின்றனர்.

கடந்த சில மாதங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகள வில் நடந்துள்ளன. பெரும்தொகை கப்பமாகப் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள், கொழும்பில் தொடர்ந்து வாழ முடியாமல் வேறு நாடுகளை நோக்கிப் போய்விடுகின்றனர்.

கிழக்கு பிரதேசமாகிய மட்டக்களப்பில் கருணா குழுவினரின் அடையாளமாக வெள்ளை நிற வான்கள் ஊருக்குள் நுழைந்து தமிழ் இளைஞர்களையும் பள்ளிக் குழந்தைகளையும் கடத்திப் போய்விடுகிறது. ஆனால், இதில் பெரும் வேதனை என்னவெனில், இப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவுமே நடக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து மறுத்துவருவதுதான்.

நன்கு படித்து பேராசிரியர்களாக- மருத்துவர்களாக- பொறியியலாளர்களாக உள்ள எங்களின் தமிழ்நண்பர்கள்- கொழும்பில் மாலை நேரத்துக்குப் பிறகு வெளியே சென்றால் அவர்கள் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு, சோதனைகளுக் குள்ளாக்கப்பட்டு பல நேரங்களில் சிறிலங்கா காவல்துறை யினரால் கைதும் செய்யப்படுகின்றனர். கொழும்பில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்று வோருக்கும் இதே நிலைதான்.

எனக்கு கீழே, ஜெர்மன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு நடத்தும் தமிழ் மாணவி, ஜெர்மனிக்கு பயணமாகும்போது சிறிலங்காவின் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்குக் காரணம் அந்த ஆய்வு மாணவி தமிழ்ப் பெண் என்பது மட்டுமே.

திடீரென்று ஒரு நாள் கொழும்பில் நூற்றுக்கணக்கான தமிழர்களை அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியேற்றி கொழும்புக்கு வெளியே கொண்டுவிடப்பட்டது உங்களுக்குத் தெரியும். முறையான அடையாள அட்டைகளைக் காட்டியும் பயனில்லை. சர்வதேச நாடுகளிலிருந்து கடும் எதிர்ப்பு வந்த காரணத்தால் அவர்களை மீண்டும் கொழும்புக்கு வர அரசாங்கம் அனுமதித்தது.

அண்மையில் கொழும்பில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களை எந்தக் காரணமும் இன்றி கைது செய்தனர். அவர்கள் சிங்களவர்கள் அல்ல என்பதற்காகவே கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியே, இயக்கங்களுடன் தொடர்பின்றி தங்களது வாழ்க்கையை மட்டும் நடத்திக் கொண்டிருப்பவர்களை அவர்கள் தமிழர்கள் என்ற் ஒரே காரணத்துக்காக இப்படி சொல்லொண்ணா அவலங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவை அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும்.

யுத்தத்தில் வெற்றி பெற இராணுவத் தாக்குதல்களை நடத்துவது பற்றியோ அப்படி இராணுவத் தாக்குதல்களை நடத்திக் கொண்டே அரசியல் தீர்வை அரசு விரும்புகிறது என்று பொய்யுரைப்பது பற்றியோகூட நாம் குறிப்பிடவில்லை.

Pin It