தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் ஊரடங்கு 30.04.2020 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது எனவும், இந்தச் சட்டங்களின் கீழ் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடரும் எனவும், 13.04.2020 தேதியிட்ட முதல்வரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையும் இதனை நடைமுறைப்படுத்த அரசாணை (G.O.Ms.No.190) வெளியிட்டுள்ளது. இன்று, நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர், இந்தியா முழுக்க ஊரடங்கு மே-3 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

tn police punished corona lockdown violatersதமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, 25.03.2020 மற்றும் 28.03.2020 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அரசாணைகள் (G.O.Ms. No.172 & G.O.Ms. No.174) தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவாகப் பேசுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 51 முதல் 60 வரையிலுள்ள பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188 மற்றும் பிற தகுந்த பிரிவுகளின் கீழும் தண்டிக்கப்படுவார்கள் என்று அந்த அரசாணைகள் தெரிவிக்கின்றன.

 குற்றம் நிரூபிக்கப்பட்டால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், குற்றத்தின் தன்மையைப் பொருத்து, தண்டத்தொகையுடனோ, அது இல்லாமலோ குறைந்தது ஓராண்டு முதல் அதிக அளவு 2 வருடங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188 இன் கீழ், குற்றத்தின் தன்மையைப் பொருத்து, தண்டத் தொகையுடனோ அல்லது அது இல்லாமலோ குறைந்தது 1 மாதம் முதல் அதிகபட்சம் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 269 (Negligent act likely to spread infection of disease dangerous to life) இன் கீழ் தண்டத்தொகையுடனோ அது இல்லாமலோ 6 மாத சிறைத் தண்டனையுண்டு. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஐ மீறும் பொதுமக்களுக்கு மேற்கண்ட பிரிவு 188-க்கான தண்டனை பொருந்தும். மேலும், குற்றத்தின் தன்மையைப் பொருத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பகுதி VIII இன் கீழ், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பொது அமைதிக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகளும் பொருந்தும்.

 பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட செயல் நீதிபதிகளின் (மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்) ஆணைக்கிணங்க சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உதவுவதும், மற்ற சட்ட மீறல்களின் போது குற்றம் செய்தவர்களின் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுப்பதுமே காவல்துறையின் பணி.

 ஆனால், இது வரையிலான முதற்கட்ட ஊரடங்கில் காவல்துறையினர், பொதுமக்களின் மீது சட்டத்திற்குப் புறம்பான அத்துமீறல்களில் ஈடுபட்டதை ஊடகங்களும், சமூக ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆரம்பத்தில் பொதுமக்களைத் தாக்கிய லத்திகள், விமர்சனங்களால் பின்னர் தாழ்ந்தன. இருப்பினும், மருத்துவர், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் உள்ளிட்டப் பலர் காவல்துறையினரால் கண்ணியமற்ற முறையில் நடத்தப்பட்டனர். தோப்புக் கரணம் போட வைத்தல், பாகற்காய், பச்சை மிளகாய் சாப்பிட வைத்தல், பிடிபட்டவர்களைச் சுற்றி சங்கு ஊத வைத்தல் போன்ற விநோதமான தண்டனைகளைப் பிடிபட்டவர்களுக்கு காவல் துறையினர் வழங்கியதாக ஊடகங்கள் பதிவு செய்தன. இவை மனித உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமானச் சட்ட மீறல்கள். இந்தச் சூழலில்தான், பொதுமக்கள் மீதான காவல்துறையின் அத்துமீறல்களுக்கு விளக்கம் கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில காவல்துறைத் தலைவருக்கு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.

 அரசு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றாத, உரிய காரணங்களின்றி வெளிவரும் பொதுமக்கள் மீது, காவல்துறை சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதே சரி. அதை விடுத்து, சட்டத்தை கையில் எடுத்து, அத்துமீறல்களில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது; சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. எனவே, பியூசிஎல் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1. ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து காவலர்கள் உரிய பாதுகாப்பின்றியும், தொடர்ந்தும் பணியாற்றுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழக அரசு, காவலர்களின் மன அழுத்தத்தை நீக்குவது உள்ளிட்ட அவர்களின் நலனைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என பியூசிஎல் கோருகிறது.

2. அதே நேரத்தில், இன்னும் இரு வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், காவல்துறை மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும், மாநில காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள், அரசுடன் கலந்தாலோசித்து, காவலர்கள் செயல்படும் விதம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அவற்றை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், அந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டுமெனவும், அவற்றை மீறும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பியூசிஎல் கோருகிறது.

3. வெவ்வேறு காரணங்களுக்காக, மாநிலம் முழுக்கப் பறிமுதல் செய்யப்பட்ட பொதுமக்களின் வாகனங்கள் தற்காலிகமாவது உரியவர்களிடம் ஒப்படைக்கப் படவேண்டுமென பியூசிஎல் கோருகிறது.

4. வரலாற்றின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டு, பொதுமக்களும் சட்டத்தைக் கடைபிடித்து அரசுக்கும், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) கோருகிறது.

- கண.குறிஞ்சி, மாநிலத் தலைவர் & க.சரவணன், மாநிலப் பொதுச் செயலர், பியூசிஎல்

Pin It