சுயமரியாதை - தாலி மறுப்பு - சாதி மறுப்பு போன்ற புரட்சிகர திருமணங்களை நடத்தி இந்தியாவுக்கே வழிகாட்டும் பெருமையை உருவாக்கியது பெரியார் இயக்கம். தாலி கட்டாமல் - புரோகிதர் இல்லாமல் - மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டாலே அத்திருமணம் சட்டப்படி செல்லத்தக்கதே என்று சுயமரியாதைத் திருமணச் சட்டத்தைக் கொண்டுவந்தார் முதல்வர் அண்ணா. அண்ணாவின் நூற்றாண்டு காலத்தில் இத்தகைய திருமணங்களையே நடத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி கும்பல் மிரட்டும் அவலங்கள் நிகழத் தொடங்கிவிட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புதிய ஜனநாயக கட்டிட தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சாதி மறுப்பு திருமணம் ஒன்றை மக்கள் மன்றத்தை முன் நடத்தி, அதன் வழியாக பெண்ணுரிமை - சாதி ஒழிப்பு பிரச்சாரத்தை செய்திட திட்டமிட்டனர். திருமணம் என்பது தனிப்பட்ட விழா என்றாலும், உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். - விசுவ இந்து பரிஷத் அமைப்புகள் குடியிருப்பு பகுதியில் இத்தகைய சாதி, தாலி மறுப்பு திருமணங்களை நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். காவல்துறை மதவெறி சக்திகளின் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்காமல், திருமணத்துக்கு ஏற்பாடு செய்த தோழர்கள் பரசுராமன், அவரது துணைவியார் தமிழ்ச்செல்வி மற்றும் ராணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

ஆளும் கட்சி ஆதரவு ஏடான ‘தினகரனே’ இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. சாதி - மத - மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை மக்களிடம் மேலும் தீவிரமாகக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.

Pin It