இந்தியாவின் வட எல்லையான ஜம்மு-காஷ்மீரில் வன்முறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஒரு பத்திரிகை ‘ரைசிங் காஷ்மீர்.’ அதன் ஆசிரியர் சுஜாத் புகாரி கடந்த ஜூன் 14 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற சோகச் செய்தி நாடெங்கும் பரிதாப அலையை எழுப்பியுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட அவர் எடுத்துக் கொண்ட முயற்சியே அவர்தம் சாவுக்குக் காரணமாயிற்று. கடந்த ஜூன் 14 வியாழக்கிழமை மாலை தமது அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அவர், காரில் ஏறத் தயாரானார். அப்போது அங்கே வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சுஜாத் புகாரியும், அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
இதற்கு முன்பு மூன்று முறை இவர்மீது நடந்த தாக்குதல்களிலிருந்து தப்பியுள்ளார். ஆனால் இம்முறை மிக நெருக்கத்திலிருந்து 16 குண்டுகள் அவர்மீது பாய்ச்சப் பட்டுள்ளது. இறந்த நிலையில் தான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளார்.
புகாரியின் சொந்த ஊர் ஸ்ரீ நகரிலிருந்து 41 கி.மீ. தொலைவிலுள்ள மாரமுல்லா மாவட்டம் கரீரி நகரம். அவரது உடல் அங்கேயே கொண்டு செல்லப் பட்டது. இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குறிப்பாக மாநிலத்தை ஆளும் பிடிபி-பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
மறைந்த பத்திரிகையாசிரியரைச் சிறப்பிக்கும் வகையில் அவரது படத்தை கருப்பு வெள்ளையில் முழுப்பக்க அளவில் ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகை வெளியிட்டது. அத்துடன் இரங்கற் செய்தியும் பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது.
“நீங்கள் திடீரென எங்களை விட்டுச் சென்று விட்டீர்கள். தங்களது தொழில்முறை உறுதி, அதீத துணிச்சலுடன் எங்களை வழி நடத்தும் ஒளியாய் எப்போதும் இருப்பீர்கள். எங்களிடமிருந்து உங்களைப் பறித்துவிட்ட கோழைகளுக்கு நாங்கள் பணிந்துவிட மாட்டோம். உண்மையை உரைக்கும் தங்களின் கொள்கையை உயர்த்திப் பிடிப்போம் - அது எத்தனை இனிமையற்றதாக இருந்தாலும்.”
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் கொல்லப்பட்ட நான்காவது பத்திரிகையாளர் புகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதான புகாரிக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
காஷ்மீர் இளைஞர்களை அமைதிப்பாதைக்குத் திரும்பும் கொள்கைக்காக அவர் தொடர்ந்து போராடி வந்துள்ளார். ஜம்மு-லடாக் பகுதி களிடையே மட்டும் அல்லாமல் எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுக்கு வெளியில் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய இந்தியா, பாகி°தானுக்கு இடையில் உறவுப் பாலத்தை அமைக்க அவர் விரும்பினார். அதனைத் தீவிரவாதிகள் விரும்பவில்லை என்பதை அவரது கொலை எடுத்துக் காட்டுகிறது.
பத்திரிகையாளர்கள் எப்போதும், எங்கேயும் அமைதியை நாடுபவராகவே இருப்பர். அவர்கள் அரசாங்கத்தையோ அல்லது தீவிரவாதிகளையோ சார்ந்து இருப்பதில்லை. மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்படுகின்றனர். அதற்கு ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையாசிரியர் புகாரியின் நடுநிலையான செயல்பாட்டையும் குறிப்பிடலாம்.
இந்தப் படுகொலையைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் காட்டி பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் கூட்டணி ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது அங்கு ஆளுநர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியென்றும், முதல்வர் மெகபூபா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இல்லையென்றும், தீவிரவாதமும், பிரிவினைவாதமும் அச்சுறுத்தலாக உள்ளனவென்றும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் கேள்விக்குறியாகி வருகின்றன என்றும், ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரி மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும் பா.ஜ.க. ஆதரவை விலக்கிக் கொண்டமைக் கான காரணங்களை அடுக்கியுள்ளது.
எனவே இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆளுநரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி பதவியை விட்டு உடனடியாக விலகினார். ஜம்மு-காஷ்மீர் எதிரி நாடு கிடையாது. இங்கு கடுமையான கொள்கைகளை அமல்படுத்திட விரும்பவில்லை. ரம்ஜானை முன்னிட்டு இராணுவ நடவடிக்கை நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனை நீட்டிக்க விரும்பினோம். 11 ஆயிரம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப் பட்டன. எதிர்காலத்திலும் எங்கள் அமைதி முயற்சிகள் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாக ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சுஜாத் புகாரியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட பாதுகாவலரின் கைத்துப்பாக்கியைத் திருடும் காட்சி, வீடியோ பதிவாகக் கிடைத்துள்ளது.
முன்னதாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்ததில் கொலையாளிகள் மூன்றுபேர் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்வது தெரியவந்தது. எனினும் அவர்கள் முகத்தை அடையாளம் காண முடியவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் அரசியல் சூழல் நடுநிலை யாளர் மற்றும் பத்திரிகையாளரின் ஜனநாயகப் பங்களிப்புக்கு ஏற்றதாக இல்லை. காஷ்மீரில் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கிப் போவதை இராணுவத்தாலும் தடுக்க முடியவில்லை. நிலைமை மோசமாகி வருவதை அவர் சுட்டிக் காட்டியபோது தீவிரவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு விலையாக அவர் உயிர்தானா கிடைத்தது?
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பாதுகாப்புப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பல காலமாக உள்ளது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் 49 பக்க அளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016 ஜூலை முதல் 2018 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளன. இதே போல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தப் புகார்கள் பற்றி சர்வதேச அளவில் சுதந்திரமான ஓர் அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஜம்மு- காஷ்மீரில் அளவுக்கு அதிகமான பாதுகாப்புப் படைகளைக் குவித்து மீண்டும் மனித உரிமை மீறல் நடைபெறாமல் இருப்பதற்கு உறுதியான நடவடிக்கையை இந்தியா எடுக்கவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் இந்த அறிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. தவறான உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்றும், இது போன்ற அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன வென்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், உண்மை நிலவரத்தை ஆராயாமல் இந்தியா மீது தவறான எண்ணத்தை உண்டாக்கவல்லது என்றும் இந்தியா கூறியுள்ளது.
இந்தச் சிக்கலான பிரச்சினையை நடுநிலைமை யோடு கையாளும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதுவரை காஷ்மீரில் 19 பத்திரிகையாளர்கள் தங்களது உயிரைப் பலி கொடுத்திருக்கின்றனர். இப்போது அந்த வரிசையில் சுஜாத் புகாரியும் வருகிறார்.
காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரால் இந்திய ராணுவம் தீவிரவாதிகளை வேட்டையாடப் புறப்பட்டு விட்டது. வன்முறையை வன்முறையால் அடக்கி விடலாம் என்று அரசாங்கம் கருதுகிறது. இவற்றையெல்லாம் துணிச்சலோடு எடுத்துக்கூறும் பத்திரிகையாளர்களுக்குக் கொலைவெறி மரணம் தான் எப்போதும் காத்திருக்கிறது.