தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் அதிகாரம் இந்திய மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கத்தானே, ஏன் அதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமும் குறிப்பாக இஸ்லாமியர்கள் ஏன் பயப்பட வேண்டும்? நாட்டில் பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டு அமைதியாக இருந்தால் நல்லதுதானே என்று முகநூலில் நிறைய விமர்சனங்கள்.

"8 வழிச் சாலையை எதிர்த்தால் - நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப் போராடினால் - ஸ்டெர்லைட்டுக்கு எதிராக, கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடினால் - இந்தித் திணிப்பை எதிர்த்தால் - மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்தால் - ஜல்லிக்கட்டுக்குப் போராடினால் - மதவாதத்தை எதிர்த்தால் - முகநூலில் பாஜகவை எதிர்த்தால்"

NIAஉங்களை மாநில அரசின் அனுமதியில்லாமல் உங்களை அள்ளிக் கொண்டு சென்று விசாரிக்கலாம்..

ஏனென்றால் "இந்தியாவின் நலனுக்கு எதிராக இருக்கிறது" என்று அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கும் அதிகாரம் இந்த தேசிய புலனாய்வுக் குழுவிற்கு உள்ளது.

இந்த அதிகாரம் இல்லாமலேயே மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையரிடம் மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ விசாரணை நடத்தச் சென்றார்கள். ஆனால் இப்படி இந்த அதிகாரம் கிடைத்துவிட்டால் என்னவெல்லாம் செய்வார்கள்?

எந்த மாநிலத்தில் உள்ள எவரையும் மாநிலத்தின் அனுமதியில்லாமல் இந்தியாவின் நலனுக்கு எதிராக உள்ளது என்று குற்றம் சாட்டி கைது செய்யும் அதிகாரம் என்பது தமிழக மக்களைக் குறிவைத்தே சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உள்துறை அமைச்சர் அமித்சாவே உறுதிப்படுத்திவிட்டார்.

இந்தியாவின் நலன்? இந்திய மக்களின் நலன்? மாட்டுக்கறி கொண்டு செல்பவர்களை அடித்துக் கொல்லுவது இந்திய நலனா? இல்லை மாடுதான் இந்திய நலனா?

ஜனநாயகத்தைக் காப்பதுதான் இதன் முக்கிய குறிக்கோள் என்றால் எல்லாருக்குமே மகிழ்ச்சிதான். ஆனால் இது சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காகவும், தனக்குக் கட்டுப்படாத மாநில அரசின் மீது அதிகபட்ச பிரச்சனையைக் கொண்டு வந்து, அவர்களை அடக்க முற்படுவதற்காகவே இந்த அதிகாரம் இருக்கப் போகிறதோ என்கிற அச்சம்தான் காரணம்

இந்த தேசிய புலனாய்வு அமைப்பில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்னென்ன?

2009 ல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு என்கிற என்ஐஏ அமைக்கப்பட்டது.

15 ஜூலை 2019 அன்று தேசிய புலனாய்வு அமைப்பு என்கிற என் ஐ ஏ வில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

என்ன மாற்றம் செய்துள்ளார்கள்? 

1. என்ஐஏ யின் எல்லைக்குள் வரும் குற்றங்களை விரிவாக்குதல் :

ஆள் கடத்தல் - கள்ள நோட்டுக்களை விநியோகித்தல் - தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்தல் அல்லது விற்பனை செய்தல் - இணைய பயங்கரவாதம் - வெடி பொருட்கள் வைத்திருத்தல்

2. NIA இன் அதிகார வரம்பு:

இந்திய குடிமக்களுக்கு எதிராக அல்லது இந்தியாவின் நலனைப் பாதிக்கும் திட்டமிடப்பட்ட இந்த குற்றங்களை விசாரிக்க இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் காவல்துறை அதிகாரிகளைப் போலவே, என்ஐஏ அதிகாரிகளுக்கும் சமமான அதிகாரங்கள் உள்ளன.

மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் பிற நாடுகளின் உள்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு, இந்தியாவுக்கு வெளியே செய்யப்படும் குற்றங்களை விசாரிக்கவும் என்ஐஏ அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கும்

3. சிறப்பு நீதிமன்றங்கள்:

குற்றங்களை விசாரிப்பதற்காக செஷன்ஸ் நீதி மன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக, மத்திய அரசு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து நியமிக்கலாம்.

எந்தவொரு பகுதிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டால் மூத்த நீதிபதியின் பரிந்துரையின் பெயரில் வழக்குகள் பிரித்துக் கொடுக்கப்படும்; மேலும் இந்த குற்றங்களை எல்லாம் விசாரிப்பதற்காக மாநில அரசுகள் செஷன்ஸ் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக நியமிக்கலாம்.

###

இந்த சட்டம் நாட்டைக் காப்பாற்றும் சட்டமல்ல, நாட்டை காவல்துறையிடம் விற்கின்ற சட்டம் என்று காங்கிரஸ் சிபிஐஎம் போன்ற கட்சிகள் கூறி வந்தன.

"எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த மசோதா தவறாகப் பயன்படுத்தப்படாது என்று நான் சபைக்கு உறுதியளிக்கிறேன்.

பயங்கரவாதம் என்பது பயங்கரவாதம்தான். அதில் இடதுசாரி அல்லது வலதுசாரி என்கிற பேதமில்லை. யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்காமல் , பயங்கரவாதச் செயல்களை செய்பவர்களை இணைந்து ஒடுக்குவோம் இல்லையென்றால் தீவிரவாதிகளுக்கு பயம் அற்றுப் போய்விடும்

பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, பாலினமும் இல்லை. இது மனிதகுலத்திற்கு எதிரானது"

இது காந்தி சொன்னதா இல்லை வேறு யாரேனும் மகான் சொன்னதா என்று நினைக்க வேண்டாம். ஆச்சர்யமாக இருக்கிறது, இதைச் சொன்னது உள்துறை அமைச்சர் அமித்ஷா.

நிச்சயமாக இந்தியா தீவிரவாதத்திற்கு, பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும். ஆனால் இந்தக் கூற்றை சொல்பவர் யார்?

சொராபுதீன் என்பவரை குஜராத் போலிசார் போலியாக என்கவுன்டரில் கொலை செய்த வழக்கில், அமித்ஷா மீது சி.பி.ஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்தது.

இஷ்ரத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உள்ளிட்ட நான்கு முசுலீம்கள் படுகொலை வழக்கிலும் அமித்ஷாவின் பெயர் பலமாக அடிபட்டது.

தீவிரவாதிகளை விட்டு விட்டு தம்மை எதிர்த்தவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுவதுதான் ஜனநாயகமா?

சோரப்புதீனின் நண்பர் துளசிராம் பிரஜாபதியும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். அப்பாவி இந்திய மக்களை தீவிரவாதி என்று குற்றம் சாட்டுவது பயங்கரவாதம் இல்லையா?

சொராபுதின் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா, நாக்பூருக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது உயிரிழந்தார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அரசியல் மிரட்டல் இருப்பதாகவும் கூறிய லோயாவின் குடும்பத்தார், லோயாவுக்கு 100 கோடி லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக தலைமை நீதிபதி மோகித்ஷா மீதும் குற்றம் சாட்டினர்.

100 கோடி ரூபாய் கொடுத்து நீதியை முன் வாங்க வந்த அந்த மாபெரும் அரசியல் கட்சி எது என்பது மக்களுக்குத் தெரியும்.

இந்தியாவின் முக்கிய தூண்களுள் ஒன்றான நீதித்துறையையே விலைக்கு வாங்கி, அவர்களை மிரட்டியோ, கொலை செய்தோ வழக்கை திசை திருப்பும் செயல் பயங்கரவாதம் இல்லையா?

முஸ்லிம்கள் மீது போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டன என்பதைக் கூறிய உளவுத்துறை அதிகாரியான சஞ்சீவ் பட்-ஐ, சிறைக்காவலில் 10 வருடங்களுக்கு முன்பு கைதி இறந்த வழக்குக்காக ஆயுள் தண்டனை கொடுத்த பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை, பயங்கரவாதச் செயல் இல்லையா?

பயங்கரவாதத்தை சுட்டிக் காட்டியவருக்கு ஆயுள் தண்டனை; பயங்கரவாதம் செய்தவருக்கு அரசியல் பதவி? இதுதான் பயங்கரவாதத்தை ஒடுக்கும் முறையா?

நரோடா பாட்டியா படுகொலைக்குத் தலைமை தாங்கிய மாயாபென் கோத்நானிக்கு அமைச்சர் பதவி.

சோராபுதீன் கொலைவழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட அமித் ஷா உள்துறை அமைச்சர்.

மாலேகான் குண்டுவெடிப்பு சாமியாருக்கு எம்பி பதவி.

இப்படி குற்ற வழக்குகள் பயங்கரவாத குண்டு வெடிப்பு வழக்குகள் அப்பாவி இந்திய மக்களை என்கவுண்டர் செய்தும், கலவரம் செய்தும் கொன்ற வழக்கில் உள்ளவர்களையெல்லாம் பதவியில் வைத்திருப்பது, இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள பயங்கரவாதம் இல்லையா? .

தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு விளக்கம் தருவதற்கு அவர்களும் தயாராக இல்லை, கேள்வி கேட்பவர்களுக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை.

இப்படி இவர்களின் மேற்பார்வையில் வருகின்ற என்ஐ ஏவில் தான் இவர்கள் அதிகப்பட்ச அதிகார மாற்றங்களை செய்துள்ளனர் என்பது எவ்வளவு ஆபத்தானது?

தாங்கள் ஆளாத மாநிலங்களின் அதிகார உரிமையுடன் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தலாம்? என்னென்ன தடைகள் எல்லாம் இருக்கின்றது? அவற்றைக் களைவதற்கு என்னென்ன செய்யலாம் என்று உணர்ந்து தங்களுக்கு சாதகமாக இயற்றிய சட்டமே இது.

சரி இந்தியாவைப் பாதுகாக்க ஒரு புதிய முயற்சியை நீங்கள் கையில் எடுக்கின்றீர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆள் கடத்துதல் பயங்கரவாதம் என்றால், ஆட்களைக் கடத்தி கூட்டமாக சேர்ந்து அடித்துக் கொல்லுதலும் பயங்கரவாதம்தானே?

இனி பசுவின் பெயரால் இஸ்லாமியர்களைக் கடத்தி கொலை செய்பவர்களை இந்த அமைப்பு விசாரிக்குமா? இல்லை பசுவைக் கொண்டு செல்லும் இஸ்லாமியர்களை ஆள் கடத்துதல் பெயரில் வழக்கு பதிவு செய்யப் போகிறார்களா? இவர்கள் ஆள் என்று குறிப்பிடுவது மாடுகளைத்தானா?

கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்வது பயங்கரவாதமா? அப்படியெனில் இந்திய மக்கள் காலம் காலமாக சம்பாதித்த, சேமித்து வைத்,த பணத்தினை எல்லாம் ஒரே நாளில் செல்லாக் காசாக்கி, தெருத் தெருவாக அலைய விட்டு ,பேங்க் வாசலில் நிற்க வைத்து சாகடித்ததும் மக்களுக்கு எதிரான பயங்கரவாதம்தானே?

இணைத்தின் வழியாக ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து எழுதுவது - முகநூலில் பாசிசத்திற்கு எதிரான பதிவுகள் போடுவது - டுவிட்டரில் கோ பேக் மோடி என்று ஹேஷ்டேக்கை பிரபலமாக்குவது என்று தங்களுக்கு எதிராக மக்கள் தெரிவிக்கும் எல்லா ஜனநாயக உரிமைகளுக்கும் இணைய பயங்கரவாதம் என்று பெயரிட்டு அவர்கள் வெளியில் வரமுடியாத வழக்குகளில் மாட்டி விடுகின்ற ஆபத்துகள் நிறைந்ததா இந்தச் சட்டத் திருத்தம்?

இந்த குற்றங்களுக்கெல்லாம் மாநில அரசின் அனுமதியில்லாமல் மத்திய அரசு சுயேட்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் மிகவும் ஆபத்தானது.

ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற ஒரு சக்தி இப்படி சொல்லுகிறதென்றால், அதனை ஒட்டு மொத்த மக்களின் பாதுகாப்பாகக் கருதலாம். ஆனால் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய, எதிர்த்துப் பேசுபவர்களை ஆன்டி இந்தியர்களாக்கிய, சொந்த நாட்டு மக்களை பசுவின் பெயரால் அடித்துக் கொல்கிற, என்கவுண்டரில் அப்பாவி மக்களை போட்டுத் தள்ளுகிற ஒரு கூட்டத்தின் கைகளில் இந்த அதிகாரம் போகிறதெனில் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?

சிறப்பு நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் நியமிப்பது, அந்த நீதிமன்றத்துக்கான அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது அனைத்துமே மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்கும்.

நீதியையும், நீதிமன்றங்களையும் ஒரு சாரார் கட்டுக்குள் வைத்திருப்பதன் ஆபத்தை வருங்காலத்தில் உணர்வீர்கள்.

1985 இல் உருவாக்கப்பட்ட தடா சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலானோரைக் கைது செய்து சிறையில் அடைத்து வைப்பதில் முடிந்தது. இதில் தலித்துகள், இஸ்லாமியர்கள், பழங்குடிகள் காவல் துறையின் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டு வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். பின்னர் 1995 இல் தடா கைவிடப்பட்டது.

காங்கிரஸ் தடா கொண்டு வந்தால் நாங்கள் ஒரு சட்டம் கொண்டு வருவோம் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2002 இல் பொடாவை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த சட்டத்தில் மதக் கலவரங்களை உருவாக்கும் பயங்கரவாதத்தை அதிலிருந்து நீக்கியது. சட்டம் இயற்றுபவர்களே குற்றவாளியாகக் கூடாதல்லவா?

இந்துத்துவ தீவிரவாதிகள் தொடர்புடைய குண்டுவெடிப்பு வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த இந்துத்துவ தீவிரவாதிகளில் பெரும்பான்மையினர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் அல்லது ஜாமீனில் வெளியே உள்ளனர்.

என்.ஐ.ஏ.வால் தேடப்படும் குற்றவாளிகளுள் இஸ்லாமியர்கள் 41 சதவிகிதம் இருக்கின்றார்கள். சரி இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்தக் குற்றவாளிகளை அவர்கள் தேடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஏன் ஆர்எஸ்எஸ்-ல் இருந்தோ மற்ற இந்துத்துவா கும்பல்களில் இருந்தோ ஒருவரும் இந்த பயங்கரவாதப் பட்டியலில் இல்லை. அடித்துக் கொல்லுதல் எல்லாம் பயங்கரவாதச் செயல்களில் சேராதா என்ன?

காங்கிரஸ் உட்பட இந்த மசோதாவுக்கு 272 வாக்குகள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்படுகிறது. வெறும் 6 வாக்குகள் மட்டுமே மசோதாவுக்கு எதிராக விழுந்தது.

இந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி!

1) Hasnain masoodi (National Conference),
2) k.Supparayan (CPI)
3) P.R.Natarajan (CPIM)
4) Abdul Majeed Arif (CPIM)
5) Syed Imtiaz Jaleel (AIMIM)
6) Asaaduddin Owaisi (AIMIM)

திமுக, திரிணமுல் உள்ளிட்ட கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

வாக்களிப்பில் பங்கு கொள்ளாதது அந்த சட்டத்தை அவமதிப்பதற்காகவே என்று காரணங்கள் கூறப்பட்டாலும், வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்துவிட்டு வெளிநடப்பு செய்திருந்தால், சிறுபான்மையினருக்கு அவர்கள் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை அதிகரித்திருக்கும்.

"அவர்கள் சாக வேண்டும் என்று எனக்கு விருப்பமில்லை. ஆனால் அடித்துக் கொல்லப்படும்பொழுது நான் வேறு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டேன்" என்று சொல்லிவிட்டு கடந்து செல்பவர்களுக்கும், அடித்துக் கொல்பவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

இந்தியாவை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்கத்தான் இந்த சட்டத் திருத்தம் என்று நம்புகிறோம்.

அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் சிறுபான்மையினரிடம் ஓட்டு வாங்கிச் சென்ற கட்சிகளுக்கு நிச்சயமாய் உண்டு.

இந்தியாவின் நலனுக்கு எதிராக உள்ள பயங்கரவாதத்தை இணைந்து எதிர்ப்போம். ஆனால் இந்தியாவின் நலனை விரும்புவர்களை பயங்கரவாதிகளாகப் பார்க்காதீர்கள்.

- ரசிகவ் ஞானியார்