வயநாட்டில் நிகழ்ந்த பெருந்துயர்
இந்திய துணைக் கண்டம் மட்டுமின்றி, உலகத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது வயநாடு நிலச்சரிவுப் பேரழிவு. வயநாடு மாவட்டம், கேரளாவின் வடகிழக்குப் பகுதியில், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து நிலப்பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு, 1980-ஆம் ஆண்டு கேரளாவின் 12-ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இயற்கை எழில் நிரம்பிய வளமான மாவட்டம் இது. கடந்த சூலை 30 ஆம் நாள் நள்ளிரவு
1.30 மணிஅளவில் பேரழிவை அம் மாவட்டத்து மக்களுக்குத் தந்த நிலச்சரிவு நிகழ்ந்தது. அதே நாள் விடியற்காலை 4.00 மணிக்கு மீண்டும் ஒரு நிலச்சரிவு நிகழ்ந்தது. இந்நிலச்சரிவுக்கு முன் சூலை 28 -29 ஆகிய நாள்களில் 572 மில்லி மீட்டர் அளவிற்கு பேய்மழை பொழிந்திருந்தது. 2024 சூலை மாதத்தில் மட்டும் 2093.6 மி.மீ மழையைப் பெற்று வயநாடு மண் ஊறி, தளர்வாகியிருந்தது. கடும் வெள்ளப் பெருக்கால் தளர்ச்சி யுற்றிருந்த மண் சரியத் தொடங்கியது. பாறைகளும் சரிந்து உருண்டன. முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு ஆகியவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. முண்டகையில் புஞ்சிரிமட்டம் என்ற இடம் காணாமலே போனது.
நிலச்சரிவு நடந்து ஏழு நாட்களாக இறந்தவர்களைத் தோண்டி எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. 405 பேருக்குக் குறையாமல் பலியாகி இருக்கிறார்கள் என்றும், 200 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்றும், 183 உடல் உறுப்புகள் கிடைத்து இருக்கின்றன என்றும், மீட்புப் பணிகள் தொடர்கின்றன, நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் கேரள அரசு அறிவித்தது. அடையாளம் காணவே முடியாத உடல்கள் ஆங்காங்கே புதைந்து கிடக்கின்றன. சில இடங்கள் இருந்த இடம் தெரியாதபடி மண்ணால் மூடப்பட்டு விட்டன. ஹெலிகாப்டர்களும், மோப்ப நாய்களும் உயிரோடு எஞ்சி இருக்கும்
மனிதர்களையும், இறந்து மண்ணால் மூடப்பட்ட உடல்களையும் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சூரல்மலையில் இருவழிஞ்சி ஆறு திசை மாறி அப்பகுதியின் வாழ்விடங்களையே அழித்துவிட்டது. பல பகுதிகள் மொத்தமாக மண்ணில் புதைந்து விட்டன. தோண்டிப் பார்க்க முடியாத அளவிற்கு மிக ஆழமான பகுதிக்கு மக்களையும் கட்டிடங்களையும் தள்ளி ஒட்டுமொத்தமாக மண்ணால் மூடிவிட்டது. ஆறு பெருக்கெடுத்து கிராமத்தை அழிக்கத் தொடங்கிய நிலையில் அதை உடனடியாகத் தெரிவித்த ஒரு மருத்துவக் கல்லூரியின் செயல் அதிகாரி நீத்து என்ற நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்.
பெண்ணும் மண்ணுக்குள் புதைந்து போனார். கேரளத்து மக்கள் மட்டுமின்றி பல்வேறு வடமாநிலத்தவர்களும், 25 தமிழர்களும் மண்ணில் புதைந்திருக்கிறார்கள். குழந்தைகள் அனாதைகளாக நிற்கின்றன. ஒரு தொண்டுநிறுவனம் அனாதை தத்தெடுப்பை கையெடுத்துள்ளது. தங்களின் வாழ்நாள் உழைப்பாக உழைக்கும் மக்கள் கட்டியிருந்த வீடுகள் இருந்த தடம் இல்லாமல் ஒரே இரவில் மறைந்து விட்டன. தங்கச்சன் என்ற உழைப்பாளி இப்படிக் கூறுகிறார்: "இனி எதுவும் இல்லை; ஆறு மட்டுமே ஓடுகிறது."
இவ்வளவு பெரிய பேரழிவுக்கு என்ன காரணம்?
வயநாடு மாவட்டத்தின் புவி அமைப்பும், இயற்கை அமைப்பும் இத்தகைய அழிவுகளுக்கு இடம் தரத்தக்கதாகவே இருக்கிறது. ஆனால், இந்தப் பேரழிவுகளுக்குக் காரணம் காடுகள் பெருவாரியாக அழிக்கப்பட்டதும், மலைகள் உடைக்கப்பட்டதும், ஒரே வகையான பயிராகத் தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டதும் முக்கியமான காரணங்கள். சுற்றுலா செல்லும் விருந்தினர்களுக்குப் பயன் தரும் வகையில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைகள் பல இடங்களில் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளன. புதிய கட்டுமானங்கள் தோன்றியுள்ளன. பாறைகளையும், மண்ணையும் அகற்றித் தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் மலைப்பகுதி மக்கள் . இப்போது வசதியான வாழ்வு என்ற நோக்கோடு இயற்கையை அழித்து வாழ்வதை வரவேற்பதும், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அரசு அழித்து வருவதும் இப்பேரிடரைக் கொண்டு வந்திருக்கிறது. இயற்கை வயநாட்டில் திருப்பி அடித்திருக்கிறது. 'மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம் ' என்ற நூலில் மார்க்சிய மூலவர்களில் ஒருவரான பிரடெரிக் ஏங்கல்ஸ் இவ்வாறு பதிவு செய்கிறார்:
" மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் இயற்கையைத் தனது சுற்றுச் சார்புக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனது தேவைக்கு ஏற்றவாறு இயற்கையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான். மனிதன் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை மாற்றி அமைக்க முயற்சிக்கும் போது, மனிதனை இயற்கை திருப்பி அடிக்கிறது.
மாதவ் காட்கில் குழு அறிக்கை - 2011
தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு இணையாக செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஷராத் ஆகிய மாநிலங்கள் வழியாக 1,600 கிமீ நீளத்தையும், சுமார் 1,40,000 ச.கி.மீ பரப்பளவையும் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் பாயும் அத்தனை ஆறுகளும் மேற்கு தொடர்ச்சி மலையிலேயே பிறக்கின்றன. உயிரியல் பன்முகத்தன்மை, புவியியல், பண்பாடு மற்றும் அழகியல் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சூழலியலின் நிலையை மதிப்பிடுவதற்கும், சுற்றுச்சூழல் (பாதுகாப்புச்) சட்டம், 1986-இன் கீழ்ச் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களை அறிவிப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பகுதிகளை வரையறுக்கவும், ஒரு குழு மாதவ் தனஞ்சய் காட்கில் தலைமையில் உருவாக்கப்பட்டது.
மாதவ் தனஞ்சய் காட்கில் அவர்கள் இந்தியச் சூழலியலாளர், கல்வியாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் நிறுவனர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை ஆவார். மாதவ் காட்கில் இந்தியப் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும், காட்கில் கமிஜன் என்று அறியப்படும் 2010. இன் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து அறிக்கை அளித்த சூழலியல் நிபுணர் குழுவின் (WGEEP) தலைவராகவும் செயல்பட்டார். 2011 இல் அவர் மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு குறித்த அறிக்கை மிக முக்கியமானது. அவருடைய பரிந்துரைகள் ஓரளவேனும் பின்பற்றப்பட்டு இருந்தால் இன்று வயநாடு அழிவுக்கு உள்ளாகி இருக்காது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 75% சூழல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றார். அதற்கெனச் சூழல் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். காடுகளை அழித்து ஒற்றைப் பயிர்முறை, ஆறுகளின் போக்கை மாற்றி அமைத்தல், சுரங்கங்கள் அமைத்தல், அனல் மின்நிலையங்கள் அமைத்தல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பிட்ட பகுதிகளைச் சூழலியல் உணர் திறன் கொண்ட பகுதியாக அறிவிக்கப் பரிந்துரைத்தார். கட்டுமானங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டியதை அறிவுறுத்தினார். வயநாடு உள்ளிட்டுச் சில பகுதிகளைச் சூழலியல் ரீதியாக உணர்திறன் கொண்டதாக அறிவிக்கும்படி அரசுக்கு பரிந்துரைச் செய்தார். ஆனால் அவற்றை அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
கே. கஸ்தூரி ரங்கன் அறிக்கை 2013
மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் தொடர்புடைய 6 மாநிலங்களில் எதுவும் காட்கில் கமிட்டி அறிக்கையை ஏற்காததால், 2012-இல் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்பாக மற்றொரு உயர்மட்ட பணிக்குழுவை இந்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவின் முக்கிய நோக்கம், காட்கில் குழுவின் அறிக்கையைப் பலதரப்பட்ட முறையில் முழுமையாக ஆராய்வதும், அனைத்து மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளைப் பரிசீலிப்பதும் ஆகும். இந்தக் குழு தனது அறிக்கையை ஏப்ரல் 15, 2013 அன்று சமர்ப்பித்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் 37% பகுதியைச் சுற்றுச்சூழல் உணர்வு பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியதுடன், நடைபெற்றுக் கொண்டிருந்த சூழல் பாதிப்புச் செயல்பாடுகளைத் தடை செய்யும்படி இக்குழு பரிந்துரைத்தது. வயநாடு பகுதிக்கு அதிக பாதுகாப்பளிக்க இந்த அறிக்கை பரிந்துரை செய்தது.
வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் அனல் மின் நிலையங்கள் கட்டக்கூடாது; நீர்மின் திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்; ஒரு கட்டுமானம் என்பது 20,000 சதுர மீட்டர் பரப்பளவை தாண்டக்கூடாது -என்பது போன்ற பரிந்துரைகளை இக்குழு செய்தது. மேற்கு மலைத் தொடரின் குறிப்பிட்ட பகுதிகளில் சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தடை விதிக்க வேண்டும், அனல் மின் திட்டங்களை மேற்கு மலைத்தொடரில் அனுமதிக்கக் கூடாது என்று வலிய வலியுறுத்தியதுடன், வயநாடு பகுதியின் அதிகளவுப் பாதுகாப்புக்கு இக்குழு பரிந்துரை செய்தது.
*மாநில அரசுகளின் பொறுப்பற்ற போக்கு
கஸ்தூரி ரங்கன் ஆய்வுக் குழு அறிக்கையை இந்திய அரசு ஏற்றது; ஆனால் மாநில அரசுகள் ஏற்கவில்லை. அன்றைய கர்நாடக முதல்வர் இந்த பரிந்துரையை ஏற்க முடியாது என்றார். பலருக்கு வேலை வாய்ப்புகளை நடைபெற்றுக் கொண்டிருந்த திட்டங்கள் அளிப்பதாகக் கூறினார். இப்பகுதியை சுற்றுச்சூழல் உணர்வு மண்டலமாக (Ecologically Sensitive zone) அறிவித்தால், அது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கூறி, கே.கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையை ஏற்க மறுத்தார். வயநாடு பகுதியில் 1950 இல் 85% காடுகள் இருந்தன. 2018 இல் அங்கிருந்த காடுகளில் 62% அழிக்கப்பட்டன. வயநாட்டில் தோட்டப்பரப்பு 1500% அதிகரித்தது. இவையெல்லாம் வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்பட்டது. ஆனால் இவைதாம் ஒரு பேரழிவின் முன்னுரையாக அமைந்தன.
அனைவருக்கும் முன்னுள்ள பிரச்சினை :
உலகின் ஒவ்வொரு பகுதியும் இப்போது சூழல் பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளது. கேரளாவில் வயநாடு மட்டுமல்ல, ஏனைய கேரளப் பகுதிகளும், தமிழ்நாட்டின் பல பகுதிகளும், வட இந்தியப் பகுதிகளும் சூழல் பாதிப்பின் காரணமாக அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன. 2021 பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலம் ஒரு பேரிடரைச் சந்தித்தது. நந்தாதேவி பனிப்பாறை உருகி, உடைந்து, தவுளி கங்கா ஆற்றில் நீர் பெருக்கு ஏற்பட்டது. 190 பேர் ஆற்றில் காணாமல் போயினர். கங்கையில் நீர் பெருக்கு ஏற்பட்டு கரையோர கட்டிடங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் காணாமல் போயின. ரிஷி கங்கா, ரெய்னி நீர் மின்திட்ட தொழிலாளர்களில் 153 பேர் காணாமல் போயினர். இது ஒற்றை நிகழ்வு அல்ல. இது போல தொடர் நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன; இனிமேலும் நிகழும். வளர்ச்சி என்ற பெயரிலும், வசதி என்ற பெயரிலும், இயற்கையை அழிக்கும் செயல்பாடுகள் தொடரும் வரை இத்தகைய பேரிடர்களும் தொடரும்.
புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம்:
இத்தகைய பெருமழைகளுக்கும், வெள்ளப்பெருக்குகளுக்கும், நிலச்சரிவுகளுக்கும் என்ன காரணம்?
வளிமண்டல வெப்பம் அதிகரித்தலும், இதனால் ஏற்படும் காலநிலை மாற்றமும்தாம். புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் புதைப்படிவ எரிமங்களின் எரிப்பு மற்றும் காடுகள் அழிப்பு ஆகியவை. புதைப் படிவ எரிபொருள் என்பவை நிலக்கரி, நிலத்தடியில் வெவ்வேறு ஆழங்களில் எடுக்கப்படும் எண்ணெய்எரிவாயு போன்றவை. நிலக்கரி, எண்ணெய் -எரிவாயு உள்ளிட்ட புதைப்படிவ எரிபொருளைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலும்,
இதனால் உருவாகும் கார்பன் என்னும் கரியையும் தண்ணீரையும் பயன்படுத்தி சூரியஒளியில் தனக்கான உணவை உற்பத்தி செய்து கொள்ளும் காடுகளை அழிப்பதாலும், புவி வெப்பமயமாதல் தொடர்கிறது.
இந்த அழிவுகளுக்கு மனிதர்களே காரணம். கிபி 1800 -க்குப் பிறகு புவி வெப்பம் 1.5 செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. புவி வெப்பமயமாதலால் உலகின் அத்தனை கட்டமைப்புமே பாதிக்கப்படுகிறது. இது சங்கிலித் தொடர் பாதிப்புகளை உருவாக்குகிறது. இந்தத் தொடர் பாதிப்புகளில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, புயல்கள், கடல் மட்ட உயர்வு, மேக வெடிப்புப் பெருமழைகள், கட்டுப்படுத்த முடியாத வெள்ளம் என்று அழிவின் வடிவங்கள் தொடர்கின்றன. 1850 -தொழில் புரட்சிக்கு முன்பு உலகின் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. தொழிற்புரட்சி காலத்திலிருந்து, தொழிற்சாலைகள் பெருக்கத்தால், அவை அதிக எரிபொருட்களைப் பயன்படுத்தியதால், புவி வெப்பம் உயர்ந்திருக்கிறது. இஸ்ரோ (ISRO - Indian Space Research Organization) விஞ்ஞானிகள் ஆய்வு செய்து இதற்கான காரணத்தை விளக்கியுள்ளனர்: நவீன தொழில் வளர்ச்சி மிதமிஞ்சிய நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோகார்பன் பயன்பாடுகள், கரியமில வாயுவும், பசுங்குடில் வாயுக்களும் உருவாகக் காரணமாகின்றன. கரியமில வாயுவும், பசுங்குடில் வாயுக்களும், பூமியைச் சூழ்ந்து போர்வையாக மூடியிருக்கும் வளிமண்டலத்தில் நிறைகின்றன. சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்துத் திருப்பி அனுப்பாமல், வளிமண்டலம் சூரிய வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு சூடாகிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உலகின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. புவி வெப்பமயமாதலால் கடல் நீரும் அதிக வெப்பமடைகிறது. கடல் நீர் அதிக அளவில் ஆவியாகி, மழை மேகமாகி . அளவுக்கு மீறிய பேய் மழைகளை உருவாக்குகின்றன.
தற்போதுள்ள உலகின் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் என்பதிலிருந்து 16 டிகிரியாக உயர்ந்து விடக்கூடாது என்பதுதான் சூழலியலாளர்களின் கவலை. இந்த வெப்பத்தை 15.5 செல்சியசுக்குள் கட்டுப்படுத்தும் முயற்சியாகத்தான் பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற
பன்னாட்டு முயற்சிகள்! பாரிஸ் ஒப்பந்தம் - 2015 :
இது காலநிலை மாற்றம் குறித்த ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் , அதற்காக நிதி அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது . 2015 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் காலநிலை மாற்ற மாநாட்டில் 196 பங்கேற்பு நாடுகளால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. . 2023-நிலவரப்படி, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) ஒப்பந்தத்தில் 195 உறுப்பினர்கள் பங்கு பெற்றுள்ளனர்.
2021-இல், COP26 மாநாடு (Conference of the Parties (COP) to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது. இது ஐநாவின் 26 -ஆவது பருவநிலை மாநாடு ஆகும். இம்மாநாட்டில் புவியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியசுக்குக் கீழே குறைப்பதற்கு உலக நாடுகள் ஒத்துக் கொண்டன. 2022ஆம் ஆண்டு COP 27 -மாநாடு எகிப்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிலும், படிம எரிபொருள் கைவிடுவதைப் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. உலக அளவில் கரி உமிழ்வைக் (carbon emission) குறைப்பது பற்றி மட்டுமே பேசப்பட்டது. உலகத்தை அழித்துக் கொண்டிருக்கும் பிரச்சனையின் வேர்களை வெட்ட இன்னமும் உலக நாடுகள் உடன்படவில்லை.
கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்:
புவி வெப்பமடைதலால், பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வது குறித்து, பல நாடுகள் கவலை அடைந்துள்ளன. கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் இப்போது உருகி வருகின்றன. மெல்ல மெல்ல கடல் மட்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. மாலத்தீவு விரைவில் கடலுள் மூழ்கும் அபாயம் தோன்றியிருக்கிறது. மாலத்தீவு தன் மக்களைக் குடியேற்றிப் பாதுகாக்க வெளிநாட்டில் இடம் வாங்குகிறது. 2050-க்குள் இந்தியாவில் மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடலுள் மூழ்கும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் பல நாடுகளின் நிலப்பகுதிகள் கடலுள் மூழ்குவதால் 150 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரம் ஷகார்த்தா இடம் மாற்றப்பட இருக்கிறது. அதை ஒட்டிய கடற் பகுதியில் ஓராண்டுக்கு 1.5 சென்டிமீட்டர் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. 2050-இல் ஷகார்த்தா கடலில் மூழ்கும் என்று ஆய்வாளர் ஹென்றி ஆண்ட்ரியாஸ் கணித்துள்ளார். இந்தோனேசியாவின் சில பகுதிகளில் ஆண்டுக்கு 25 சென்டிமீட்டர் அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் கணக்கிட்டால், 10 ஆண்டுகளில் 2.5 மீட்டர் கடல் மட்டம் உயர்ந்து,2050 அளவில் ஷார்த்தா முற்றிலுமாகக் காணாமல் போகும். அவ்வாறெனில், ஷகார்தாவில் ஒரு கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, கொச்சி போன்ற நகரங்கள் ஒன்பது ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவிற்குக் கடலில் மூழ்கும் என்று தினமலர் ஏடு 7 நவம்பர் 2021 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடல் மட்ட நீர் உயர்வால் 50 பெரிய கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் என்ற செய்தி வெளியாகி உள்ளது. 2030க்குள் மும்பை, கொல்கத்தாவுக்கு தெற்கே உள்ள சுந்தரவனக் காடுகள், கொல்கத்தா, ஒடிசாவில் கட்டாக், குஷராத் கடற்கரையோர நகரங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவிற்குக் கடலுக்குள் மூழ்கும். 2100ல் கடற்கரை நகரங்கள் அனைத்துமே கடலுள் மூழ்கும் அபாயம் காத்திருக்கிறது.
இன்றிலிருந்து 30 ஆண்டுகளுக்குள் ஆயிரக்கணக்கான குட்டித் தீவுகள் கடலுள் மூழ்கி விடும். ஏனெனில், ஒரு வருடத்திற்கு 270 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன. கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் 7 மீட்டர் உயர்ந்துவிடும். ஆஸ்திரேலியாவுக்கும் ஹவாய்க்கும் நடுவில் பசிபிக் கடலில் உள்ள துவாலு (Tuvalu) என்ற தீவு -நாடு மிகப்பெரும் அச்சத்தில் இருக்கிறது. அதிலிருந்த ஒன்பது தீவுகளில் இரண்டு தீவுகள் மூழ்கிவிட்டன. மீதி உள்ளவை கடல் மட்டத்திலிருந்து மூன்று மீட்டர் உயரத்தில் உள்ளன. மாலத்தீவுகள், மார்ஷல் தீவுகள், ஃபிஜி தீவுகள், சமோவா தீவுகள்-அனைத்தும் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் தூரத்தில் இல்லை.
இந்திய நகரங்கள் குறித்து அமெரிக்காவின் நாசா (National Aeronautics and Space Administration) ஓர் எச்சரிக்கையை அளித்துள்ளது. 2050-இல் 12 இந்திய நகரங்கள் கடலுள் மூழ்கும் என்று கூறியுள்ளது. அதுவும் 2.7 மீட்டர் அளவு ஆழத்துக்கும் கீழ் மூழ்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சின், மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.
2024 ஆகஸ்ட் 4 அன்று மாலைமலர் இதழ் ஒரு செய்தியை வெளியிட்டது. 2040-ல் சென்னையின் நிலப்பரப்பில் 7% கடலுள் மூழ்கும் என்று தெரிவிக்கிறது.
1987 -2021 க்கு இடைப்பட்ட காலக்கடடத்தில், சென்னை கடல் மட்டம் 6.79 மில்லி மீட்டர் உயர்ந்து இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் 2100-ஆம் ஆண்டளவில் 74.7 செ.மீ அளவிற்குக் கடல் மட்டம் உயரும் என்று கணக்கிட்டுள்ளனர்.
பெங்களூரில் செயல்படும் அறிவியல் -தொழில்நுட்பம் -மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP - The Centre for Study of Science, Technology and Policy), சென்னை தீவுத்திடல், மயிலாப்பூர், தமிழ்நாடு அரசின் நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சென்னை துறைமுகம் உள்ளிட்டவை கடலுள் மூழ்கும் என்று எச்சரித்துள்ளது. சென்னையில் மூழ்க இருப்பதாகக் கூறப்படும் 7.29% நிலப்பகுதி என்பது 86.6 சதுர கிலோமீட்டர் ஆகும். 2060 இல் சென்னை நிலப்பரப்பில் 9.65%, அதாவது சென்னையின் 114.31 சதுர கிலோமீட்டர் கடலில் மூழ்கும்.
இவ்வாறு கடல் மட்டம் உயரும் வேகம் புவி வெப்பமயமாதல் காரணமாக இப்போது அதிகரித்து வருகிறது. 2040-ல் தூத்துக்குடியில் 10% மூழ்கும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 3029.33 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கடலுள் மூழ்கும் என்று கணித்துள்ளனர்.
காவிரிப்படுகையின் நிலை என்ன?
காவிரிப் படுகையின் அழிவு இரண்டு பங்கு வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம், காவிரிப் படுகையின் நிலப்பரப்பு மேலும் மேலும் கீழ்நோக்கித் தாழ்ந்து கொண்டிருக்கிறது (subsidence); அதே நேரம், கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நகரங்களைப் பற்றிப் பேசும் ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கும் காவிரிப்படுகை பற்றிப் பேசுவதில்லை. இதில் வியப்பு என்னவென்றால், காவிரிப்படுகை மக்களும், காவிரி படுகையைச் சேர்ந்த அரசியல் ஆளுமைகளும் இது குறித்து சிந்திப்பதில்லை.
காவிரிப்படுகையின் பெரும் பகுதி கடல் மட்டத்தைவிட ஒரு மீட்டர் அல்லது மூன்று அடி உயரத்திலேயே இருக்கிறது. இந்த மூன்று அடி உயரம் என்பது விரைவில் கடல் மட்டத்தை விடத் தாழ்ந்து போகும். காவிரிப்படுகையில் ஓஎன்ஜிசியின் எண்ணெய்
எரிவாயுத் திட்டங்களால் நிலம் தாழ்ந்திருக்கிறது என்பது உண்மை. ஓஎன்ஜிசி-யின் எண்ணெய் -எரிவாயுத் திட்டங்கள் இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எண்ணெய் எரிவாயு பெருமளவு நீருடன் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதால், நிலத்தின் கீழே ஏற்படும் வெற்றிடத்தைச்சரி செய்ய நிலம் கீழ்நோக்கித் தாழ்கிறது.
வேளாண் மண்டலப் பாதுகாப்புச் சட்டம் (2020) புதிய கிணறுகளை அமைக்க அனுமதிக்காத நிலையில், பழைய கிணறுகளை மராமத்து செய்யப் போவதாகக் கூறிக்கொண்டு ஒவ்வொரு கிணற்றிலும் 45 முதல் 60 நாட்களுக்கு ஓ.என்.ஜி.சி. வேலை செய்கிறது. பழைய எண்ணெய்க் கிணற்றின் வாய்க்குள் சற்றே சிறிய குழாய்களைச் செலுத்தி, 1500 மீட்டர் ஆழத்தில் பக்கவாட்டில் திருப்பி, பக்கவாட்டுக் கிணறுகளை அமைக்கிறது. அக்கிணறுகள் 3 கிலோ மீட்டர் ஆழம் வரை செலுத்தப்படுகின்றன. சேல் அல்லது களிப்பறையில் அக்கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
காவிரிப் படுகைக்கு அருகில் உள்ள ஆழமற்ற கடற்பகுதி, ஆழமான கடற் பகுதியில் வேதாந்த நிறுவனமும், ஓ என் ஜி சி நிறுவனமும் பல நூறு எண்ணெய் -எரிவாயுக் கிணறுகள் அமைக்க முன்னமே உரிமங்களைப் பெற்றிருக்கிறார்கள். கடலுக்குள் கிணறுகளை அமைத்தாலும் அது காவிரிப் படுகையை மிகப்பெரும் அளவிற்குப் பாதிக்கும்.
நிலத்தைக் குடைந்து எண்ணெயையும், எரிவாயுவையும் தண்ணீரோடு சேர்த்து பெருமளவுக்குத் தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டிருப்பதால் முன்னமே காவிரிப் படுகையின் நிலப்பரப்பு தாழ்ந்து போயிருக்கிறது. ஓ என் ஜி சி நிறுவனம் எண்ணெய் எரிவாயு மற்றும் தண்ணீரைத் தொடர்ந்து உறிஞ்சி எடுக்குமானால், காவிரிப்படுகையில் நிலம் உள்வாங்குதல் விரைவுபடுத்தப்படும்.
கிருஷ்ணா கோதாவரி படுகையில் நிகழ்ந்த நிலம்தாழ்தல் காவிரிப் படுகையிலும் நிகழ்ந்துள்ளது:
ஆந்திராவில் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகைப் பகுதிகள் எண்ணெய் -எரிவாயுத் திட்டங்களால் 3 அடி முதல் 6 அடி வரை நிலப் பகுதிகள் தாழ்ந்து போயிருக்கின்றன. இது மிகப்பெரும் கவலையை அப்பகுதி சூழலியலாளர்களுக்கு உருவாக்கி இருக்கிறது. ஜி கிருஷ்ணராவ் என்ற ஆந்திரப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலவியலாளர், கிருஷ்ணா -கோதாவரிப் படுகையின் உயரம் தாழ்ந்து போவது குறித்து ஆய்வு செய்தார். ஜி. கிருஷ்ணராவ் கிழக்குக் கோதாவரி பகுதி 1.5 அடி முதல் 5.4 அடி வரை நிலப்பகுதி உள்வாங்கி இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார் (The Hindu, 23 July 2017) . இதை ஆய்வு செய்த ஆந்திராவில் உள்ள படுகை ஆய்வுகள் நிறுவனம் (Delta Studies Institute) தெளிவாகக் காணக்கூடிய அளவில் நிலத்தில் மாற்றங்கள் (noticeable land changes) இருப்பதாக அறிக்கை அளித்தது. கிருஷ்ணா -கோதாவரி படுகையில் என்ன நிகழ்ந்திருக்கிறதோ அது காவிரிப் படுகையிலும் நிகழ்ந்திருக்கிறது.
சான்றாக, மயிலாடுதுறை உள்ளிட்ட பழைய நாகப்பட்டினம் மாவட்டத்தின் 165 கிலோமீட்டர் தூரம் உள்ள கடற்கரையின் நிலவியலை ஆய்வு செய்து, அதன் புவியியல் அமைப்பு குறித்து, அது ஒரு "தாழ்வான கடற்கரை மண்டலம்" (the low elevation coastal zone) என்றும், சில பகுதிகள் கடல் மட்டத்தை விடவும் தாழ்வாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் (Times of India, 19 July 2023). காவிரிப் படுகையில் பல கிராமங்கள் கடல் மட்டத்திற்கும் கீழே இருக்கின்றன என்பதை அறிய பலருக்கும் வியப்பாக இருக்கும். சில பகுதிகள் மட்டும் 5 மீட்டர் உயரத்தில் இருக்கின்றன. காவிரி படுகையில் 75% நிலப்பரப்பு நிலம் தாழ்ந்து கடலுள் மூழ்கும் நிலையை அடைந்திருக்கிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில இதழ் ஓர் ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கிறது (“submergence due to land subsidence,” Times of India, 19 July 2023). அது மட்டுமின்றி, படுகையின் பல இடங்கள் கடல் மட்ட அளவிற்கே, சமமாக இருக்கின்றன (0 m level).
இந்நிலையில் நம் முன் உள்ள கேள்வி இதுதான் : கடல் மட்டத்தை விட அதிக உயரத்தில் இல்லாத காவிரிப்படுகையில், மேலும் நிலம் உள் வாங்கினால், அதே நேரம் கடல் மட்டமும் உயர்ந்து வந்தால், காவிரிப் படுகை என்னவாகும்? காவிரிப் படுகையின் பெரும்பகுதி கடலுக்குள் போய்விடும் என்பதை எவராவது நமக்கு உணர்த்த வேண்டுமா? இப்படி ஒரு பேரழிவு இருக்கிறது என்பதை இன்னமும் நாம் உணரவில்லை.
பேரழிவும், பெருந்துயரும் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். இன்று நிலச்சரிவு ஏற்பட்டு வயநாடு மண்ணால் மூடப்பட்டிருக்கிறது. நாளை காவிரிப்படுகை பேரழிவுத் திட்டத்தால் நிலம் உள்வாங்கப்பட்டுக் கடல் நீரால் மூடப்படும். இரண்டிற்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது? வரலாற்றுப் புகழ் மிக்க, தமிழர்களின் பண்பாடு செழித்த, ஏராளமான தொல்லியல் சான்றுகளைத் தன் வயிற்றுக்குள் உள்ளடக்கி வைத்திருக்கக் கூடிய, இன்றளவும் தமிழ்நாட்டு மக்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கும் உணவுக்கலமாக இருக்கக்கூடிய, தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குக் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய, இந்த காவிரிப்படுகையை இழந்துவிட்டால் தமிழினம் வாழுமா?
இன்று வயநாடு, நாளை காவிரிப் படுகை! காவிரிப் படுகையின் இருப்பு தமிழினத்தின் இருப்புக்கு மிகவும் தேவை!
- பேராசிரியர் த.செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு