(சென்ற இதழ் தொடர்ச்சி)

கடல்மட்ட உயர்வு

பூமியில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் அதிக அளவு வளிமண்டலத்தில் தங்குவதால், அது சூரியனில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கி கொண்டு  வெப்பத்தை வெளியிடுகிறது. இதனால் தொடர்ந்து வளிமண்டலம் வெப்பமாகவே இருக்கிறது. இவ்வாறு வெப்பமாக இருப்பதால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் பாளங்கள்     உருகி கடலில் கலக்கிறது. உதாரணமாக வட துருவப் பகுதியான ஆர்டிக்  வேகமாக உருகி வருகிறது. அடுத்த பத்து முதல்  பதினைந்து ஆண்டுகளில் ஆர்டிக் கடல் பனி பாளங்கள் இல்லாத கடலாக மாறும் சூழல் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுகிறார்கள். இவ்வாறு உருகும்   பனிப்பாளங்கள் என்பது பல லட்சக்கணக்கான மைல் அளவு பரப்பளவு கொண்டது. இவை உருகி கடலில் கலப்பதால் கடல் நீர் மட்டம் உயருகிறது.

sealevel chart 600இது எவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கடல் மட்டம்  உயர்ந்து வருவது பற்றியது ஆகும்.

இந்த கடல்மட்டம் உயர்வினால் பல சின்னஞ் சிறிய  தீவுகள்  இன்னும் சில  ஆண்டுகளில் முழுமையாக கடலில் மூழ்கிவிடும். உதாரணமாக மாலத்தீவுகள் அடுத்த முப்பது ஆண்டுகளில் கடலில் மூழ்கி இதுபோல  எண்ணற்ற தீவுகளும், கடற்கரை ஒட்டிய நகரங்களும் கடலில் மூழ்கி விடும்.    இதனால் அந்தப் பகுதியில் வாழக்கூடிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்க்கூடிய சூழல் ஏற்படும்.

இன்னொரு புறம் புவி வெப்பமடைதல்  காரணமாக உயரமான மலைகளில் உள்ள பனிப்பாளங்கள் வேகமாக உருகுகின்றன. அதனால் என்ன என்று நீங்கள் கேட்கலாம்? இந்த பனிபாளங்கள்தான் பல ஆறுகள் உற்பத்தியாவதற்கு மிகப்பெரிய   நதிமூலமாக உள்ளன. உதாரணமாக இமயமலையில் உள்ள பனிபாளங்கள் கங்கை,சிந்து,பிரம்மபுத்ரா மற்றும் பல வற்றாத ஜீவநதிகள் உற்பத்தியாவதற்கு மூலமாக உள்ளது. இமயமலையில் உள்ள பனிபாளங்கள் வேகமாக உருகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

sea 600கீழ்கண்ட படத்தில் உள்ள காஷ்கவுல்ஸ் பனிப்பாளம் கனடா நாட்டின்  செயின்ட் இலியாஸ் மலையில் அமைந்து உள்ளது.

இந்த பனிப்பாளம்  உருகியதால் யான்கொன் என்ற ஆறு தனது வழித்தடத்தை எதிர் திசையில் மாற்றி  உள்ளது. காஷ்கவுல்ஸ் பனிப்பாளமானது சிலிம் மற்றும் காஷ்கவுல்ஸ் ஆறுகளின் நீர் ஆதாரமாக உள்ளது. இதுபோல எண்ணற்ற ஆறுகள் தனது திசையை மாற்றும் அல்லது காணாமல் போகும் அபாயம் உள்ளன.

(தொடரும்)