கண்ணெதிரே நிகழும் காலநிலை மாற்றம் மனிதர்களுக்கு பலவிதங்களில் முன்னெச்சரிக்கை விடுக்கிறது. அதில் ஒன்றே இந்த மூழ்கிக் கொண்டிருக்கும் குட்டித் தீவு.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் மேரிலாந்து கிறிஸ்பி துறைமுகத்தில் இருந்து 30 கி மீ தொலைவில் அமைந்துள்ள குட்டித் தீவு டான்ஜியர் தீவு (Tangier island).
1850 முதல் சமீபகாலம் வரை இத்தீவின் 67% நிலப்பரப்பும் கடல் நீரில் மூழ்கி விட்டது. 2010 அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அப்போது இங்கு 727 பேர் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று இத்தீவின் மக்கள்தொகை வெறும் 400 பேர் மட்டுமே. மணற்திட்டுகள் அதிகமுள்ள இத்தீவு 2051 ஆகும்போது கடலில் முற்றிலும் மூழ்கிவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.1967ம் ஆண்டிற்குப் பிறகு தீவின் உயரமான இடங்கள் அதிகரிக்கும் கடல் நீரில் அதிகமாக மூழ்கத் தொடங்கின என்று செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. தீவின் மூன்றில் இரண்டு பகுதி குறைவான காலத்திற்குள் வேகமாக மூழ்கியது. இங்கு கடலோரப் பிரதேசங்களுடன் இணைந்துள்ள பகுதிகள் 2030 ஆகும்போது சதுப்புநிலங்களாக மாறும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மீன் பிடித்தலை முக்கியத் தொழிலாகக் கொண்ட இத்தீவு மக்கள் இன்று வாழும் நிலப்பகுதி வரும் முப்பதாண்டுகளில் சதுப்பு நிலமாக மாறும்போது சொந்த வீடு வாசல்களை இழக்க நேரிடும். நாநூறு பேரை குடிபெயரச் செய்ய வேண்டும் என்றாலும் கூட இவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்கு வேறு தொழிலைத் தேட வேண்டும். கடல்நீர் மட்டம் உயர்வதைத் தடுக்க கடல் சுவர் எழுப்பி வீடுகளை உயரமாகக் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் விரைவாக உயரும் கடல்நீர் தீவை ராட்சச வேகத்தில் விழுங்குகிறது. இதனால் இத்திட்டம் நிறைவேற்ற இயலாத ஒன்றாகி விட்டது.
மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் தீவை கடல்நீரின் ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் நல்ல பலன் ஏற்படும் என்று வெர்ஜீனியா வனத்துறை (Virgenia Department of Forestry) அதிகாரிகள் நம்புகின்றனர்.
உவர் தன்மை உடைய கடலோரப் பிரதேசங்களை காக்க ஓக் உள்ளிட்ட மரங்களை நட்டு வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்காக 150 மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் வெற்றி பெறுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
கடல்நீர் மட்டம் உயர்கிறது. காலநிலை மாற்றத்தின் கெடுதிகளை அனுபவிக்கிறோம். எங்கோ இருக்கும் டான்ஜியர் என்ற ஊர் பேர் தெரியாத இந்த குட்டித்தீவு மூழ்கினால் நமக்கென்ன என்று இனியும் நம்மால் இருக்க முடியாது. ஏனென்றால் இது இயற்கை மனித குலத்திற்கு விடுக்கும் அதிதீவிர முன்னெச்சரிக்கை. எல்லாவற்றையும் போல இதையும் நாம் அலட்சியம் செய்தால் பெரும் துயரங்களை சந்திக்க தயாராக வேண்டியிருக்கும். இப்போதும் சூழல் சீரழிவைக் குறைக்க உருப்படியாக எதுவும் செய்யாமல் இருந்தால் வரும் சில பல பத்தாண்டுகளில் உலகம் கடலிற்குள் மூழ்கிப் போய்விடும். எச்சரிக்கை!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்