புவி தோன்றிய காலத்தில் இருந்தே காலநிலை பல்வேறு விதமான மாற்றங்களுக்குட்பட்டு வருகிறது. காலநிலையில் தொடர்ந்த படிப்படியான பல மாற்றங்களும் திடீர் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை யாவும் இயல்பாக நிகழ்ந்தனவே தவிர ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் தாக்கத்தால் ஏற்பட்டவை அல்ல. அவை மனிதனின் தாக்கமில்லாமல் வேறு பல்வகைக் காரணங்களால் நிகழ்ந்தவை.

வேறு எந்த விலங்கினமும் அதற்கு முழுமுதற் காரணமாக இருக்கவில்லை. ஆனால் மனித சமூகம் நாகரிகம் அடைந்த பின்னர், குறிப்பாக பொ.ஊ.பி. 1850க்கு பிறகு தொழில்மயமாக்கம், போக்குவரத்து, நகரமயமாக்கம் ஆகியவற்றால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்திற்கு முழுமுதற்காரணமாகப் பொறுப்பேற்க வேண்டியது மனித சமூகமே.

புவியின் காலநிலையை மனித நடவடிக்கைகளுக்கு முன் என்றும், மனித நடவடிக்கைகளுக்கு பின் என்றும் பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம். தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தை அதற்கு முன் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைக் காட்டிலும் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதால் முன்னதைப் பின்னதற்கு நிகராகக் கருத இயலாது.

காலநிலை மாற்றம் என்பது புவி தோன்றியதிலிருந்தேதான் இருந்து வருகிறதே என்று, மனிதரால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கலாமா? அப்படிச் செய்வோமானால் அது தற்கொலைக்கு ஒப்பாகும். நாம் எப்படியிருந்தாலும் ஒரு நாள் இறக்கத் தான் போகிறோம், அதற்கு இப்பொழுதே இறந்தால் என்ன எனத் தற்கொலை செய்வதற்கு ஒப்பாகும்.

உலகின் மிகப்பெரும் ஐந்து பேரழிவுகள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்டவை. ஆனால் மனித சமூகம் வெறும் 200 ஆண்டுகளிலேயே ஒரு பேரழிவுக்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது நாம் ஆறாவது பேரழிவை எதிர்நோக்க வேண்டிய சூழலில் உள்ளோம். இன்று கொள்ளை நோய்க் காலத்திலும் வாழ்ந்து வருகிறோம், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறோம்.

பல பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய ஒரே தீர்வும் இருக்கிறது. தீர்வுகளை அறிந்திருந்தும் ஆறாவது பேரழிவிற்கு ஆறறிவுடைய மனித இனம் தான் காரணமாக இருக்கப் போகிறது என்பது வெட்கக்கேடு என்பதுடன், அதைத் தடுக்காமல் செயலின்மைக்குச் சாக்குப் போக்கு சொல்வது பொறுப்பற்ற அறிவின்மையின் உச்சக்கட்டமே.

உலகில் இதுவரை தோன்றியுள்ள ஒட்டு மொத்த உயிரினங்களின் உயிர்ப் பன்மையத்தைக் கருத்தில் கொண்டால், இன்று உலகில் உள்ள உயிரினங்கள் அதில் 2 சதவீதம் மட்டுமே. அந்தளவுக்குப் பன்மைத்துவமிக்க பல்வேறு வகையான உயிரினங்கள் உலகில் வாழ்ந்துள்ளன.

உலக உயிரினங்களில் இது வரை விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்ட மொத்த சிற்றினங்களின் எண்ணிக்கை 2 மில்லியன். அதாவது 20 லட்சம் வகையான சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. (உயிரினங்கள் பேரினம் என்றும் சிற்றினம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தங்களுக்குள்ளே இனப் பெருக்கம் செய்யும் விலங்குகளின் கூட்டத்தைச் சிற்றினம் என்று குறிப்பிடலாம்).

உலகில் இன்னும் கண்டறியப்பட வேண்டிய பல்வேறு உயிரினங்கள் உள்ளன. பெருமளவு உயிரினங்கள் கடலில்தான் உள்ளன. பல உயிரினங்கள் அவை கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்படுவதற்கு முன்னே உணவுத்தட்டுக்கு வருவதாக சூழலியாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

அவற்றைக் கண்டறிதலும், வகைப்படுத்துதலும் முடிவில்லாது என்றென்றும் தொடர்ந்து செய்ய வேண்டிய பணி. மனித சமூகங்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி விவசாயம் செய்யத் தொடங்கியதிலிருந்தே காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் உயிரிகளின் அழிவும் ஏற்பட்டது. ஆனால் இயல்பிலே பரிணாம அழுத்தத்தால் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட வீதத்தில் அழிந்து வருகின்றன.

இது இயல்பான அழிவு வீதம் (normal extinction rate) என அழைக்கப்படுகிறது. அதாவது மனிதர்களின் தாக்கம் இல்லாது ஒரு வருடத்தில் பத்து லட்சம் சிற்றினங்களுக்கு ஒரு இனம் அழிந்து வரும் போக்கு காணப்படுகிறது.அதாவது புவியில் உள்ள 20 லட்சம் உயிரினங்களில் ஆண்டிற்கு இரண்டு சிற்றினங்கள் அழிந்து வருகின்றன.

ஆனால் இப்பொழுது மனித நடவடிக்கைகளால் இந்த அழிவுவீதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இயல்பான அழிவு வீதம் இன்று பல மடங்கு பெருகி 1000 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் 200இலிருந்து 2000 வரை உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அந்த அளவிற்கு உயிரிகளின் பன்மைத்துவமும் அழிந்து வருகிறது. இது உலக அளவிலான சராசரி அழிவுவீதத்தைக் குறிப்பிடுகிறது.

இது அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே மாதிரியாக இல்லை. சில உயிரினங்கள் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க இயலாதனவாகவும் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகி அழியக் கூடியனவாகவும் உள்ளன. குறிப்பாக நீரிலும் நிலத்திலும் வாழக் கூடிய இரு வாழ்விகளான தவளை, ஆமை ஆகியவற்றின் அழிவுவீதம் சராசரியை விட மிகவும் அதிகமாகவுள்ளது. தவளையைப் போன்ற இரு வாழ்விகள் சுற்றுச் சூழலில் நீர் மாசுபாட்டையும், காலநிலை மாற்றத்தையும் குறிகாட்டுபவையாக (pollution indicators) உள்ளன.

இருவாழ்விகளில் ஆமைகளின் அழிவுவீதம் 1000 சதவீதமாக உள்ளது.1900இலிருந்து 600க்கு மேற்பட்ட முதுகெலும்புள்ள நிலத்தில் வாழும் விலங்கினங்கள், அதாவது பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் அழிந்துள்ளன. இன்று 500க்கு மேற்பட்ட விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இயற்கையை காப்பதற்கான சர்வதேசக் கூட்டமைப்பு (IUCN) புவியின் உயிரினங்களில் எந்தெந்த உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன, எந்தெந்த உயிரினங்கள் பாதுகாப்பாக உள்ளன எனப் பலவிதமாக வகைப்படுத்துகிறார்கள்.

மிக அதிகமாக அழியும் தறுவாயில் உள்ள உயிரினங்களை ‘critically endangered’ என வகைப்படுத்துகிறார்கள். ஒரு உயிரினத்தின் எண்ணிக்கை 5000க்கும் கீழாகக் குறைந்து விட்டால் அவ்வுயிரினத்தால் புவியில் தொடர்ந்து தன் இனத்தை நிலைநிறுத்தச் செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும்.

அது அழியும் தறுவாயிலுள்ள உயிரினமாக ‘critically endangered’ பட்டியலில் சேர்க்கப்படும். அது போல 500க்கும் மேற்பட்ட உயிரினங்கள் தற்போது ‘critically endangered’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 5000க்கும் மேற்பட்ட பாலூட்டிகளின் வகைகளில் 25 சதவீதத்துக்கு மேல் அழியும் தறுவாயில் உள்ளன. இயற்கையைக் காப்பதற்கான சர்வதேசக் கூட்டமைப்பின் சிவப்புப் பட்டியலின் படி, 30,000க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன, அதாவது இது வரை கணக்கிடப்பட்ட 1,12,000 இனங்களில் 27 சதவீதம் கடுமையான ஆபத்தில் உள்ளன.

40 சதவீதத்துக்கும் மேலான ஆமையினங்களும் 30 சதவீதத்துக்கும் மேலான ஊர்ந்து செல்லும் விலங்குகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. புவியின் மிக முக்கியமான உயிர்ச் சூழலாகக் கருதப்படும் பவளப் பாறைகளில் 30 சதவீதத்துக்கு மேல் அழியும் தறுவாயில் உள்ளன.

கடல் நீர் அமிலமாக்கத்தால், பல வண்ணங்களைக் கொண்ட பவளப் பாறைகள் வண்ணமிழந்து (coral bleaching) வருகின்றன. இன்று உயிரிகளின் பன்மைத்துவமானது 70 சதவீதம் அழியும் நிலையில் உள்ளது. உலக வனவிலங்கு அறக்கட்டளையின் (WWF) 2018ஆம் ஆண்டு அறிக்கையின்படி, வெறும் 40 ஆண்டுகளில் பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, இருவாழ்விகளின் மொத்த எண்ணிக்கையில் 60 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

விவசாயத்தில் ஒற்றைப் பயிர்ச் சாகுபடியே அதிகம் செய்யப்படுவதாலும், குறிப்பிட்ட சில பயிர் வகைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாலும் உலகளவில் பாரம்பரியப் பயிர் வகைகளில் 75 சதவீதத்தை நாம் நிரந்தரமாக இழந்து விட்டோம். மீண்டும் நாம் ஒரே மாதிரியான பயிரினங்களையே சாகுபடி செய்வோமானால் அழிவு மேலும் துரிதமாகும்.

இன்று பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்தும் போக்கு முன்பை விட அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. உலகெங்கும் இதற்கான முயற்சிகள் சிறிய அளவிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஏனென்றால் ஒரே மாதிரியான பயிர்களைச் சாகுபடி செய்வோமானால், நோய்த் தாக்கம் அதிகரிக்கும், பன்மைத்துவம் அழியும், அதுவே உணவு உற்பத்தி குறைந்து போகவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படவும் காரணமாகலாம். ஆகவே பல்வேறு வகையான பயிரினங்களையும், தாவரங்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.

கடல் படுகைகளில் படிம எரிபொருள்களைப் பெறுவதற்கான எண்ணெய் துரப்பணப் பணிகளாலும், பலவிதமான தாதுக்களைப் பெறுவதற்கான சுரங்கப் பணிகளாலும், கடல்வழி போக்குவரத்தாலும் கடலின் உயிர்ச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவுகளைக் கடலில் சேர்ப்பதாலும், நெகிழிக் கழிவுகளாலும் மாசு மிகவும அதிகரித்துள்ளது. மீன்பண்ணை, இறால் பண்ணை ஆகியவற்றை வளர்ப்பதாலும் கடல் மாசுபாடு அதிகரித்து வருகிறது.

ஒரே நேரத்தில் மீன்கள் பெருமளவில் பிடிக்கப்படுவதால் மீன்களின் பன்மைத்துவம் 75 சதவீதம் அழிந்து விட்டது. பெரிய மீன்களின் மொத்த வகையில் 90 சதவீதம் அழிந்து விட்டது. விவசாய உரங்களின் நைட்ரஜன் கழிவுகள் கடலுடன் கலப்பதால் கடல் நீரில் ஆக்சிஜனின் அளவு குறைந்து கடலில் பல பகுதிகளில் இறந்த பகுதிகள் தோன்றியுள்ளன.

கடலை அடுத்துள்ள சதுப்பு நிலங்கள் மிகுந்த சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவை பேரழிவுகளைத் தடுக்கக் கூடிய காப்பரணாகவும் தாங்கியாகவும் செயல்பட்டு, மண்ணரிப்பு, வெள்ளம், ஆகியவற்றைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் போது உப்பு நீரை வடிகட்டி நீரைத் தூய்மைப்படுத்துகின்றன.

உலகளவில் 80 சதவீதம் சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மனித நடவடிக்கைகளால் சேகரிக்கப்பட்ட கழிவுகளாலும் அவை பாதிக்கப்பட்டுள்ளன. சதுப்பு நிலங்கள் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சதுப்பு நிலங்களுக்கே பிரத்தியேகமான நீர்ப்பறவைகள், விலங்கினங்கள், உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில உயிரினங்கள் கடல் நீரில் வாழும், பிறகு இடம்பெயர்ந்து இனப்பெருக்கத்திற்காக நன்னீருக்குச் செல்லும்; பிறகு மீண்டும் கடலுக்கு இடம்பெயரும். நீர் மாசுபாட்டாலும், பெரிய அணைக் கட்டுமானங்களாலும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சியே பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் நன்னீரின் அளவும் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. உலகின் பனியில்லாப் பகுதிகளில் 25 சதவீதத்துக்கு மேலான இடங்கள் கால்நடைகளை வளர்ப்பதற்கே பயன்படுத்துப்படுகின்றன. ஆனால் 12 சதவீத நிலமே விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பெருகும் கால்நடைப் பண்ணைகளால் பசுங்குடில் வாயுக்களின் அளவு 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

விவசாயத்தின் மூலமாக உருவாகும் பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் 7 சதவீத அளவில் உள்ளது. உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் 40 சதவீதம் கால்நடைத் தீவனங்களுக்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது. நன்னீரில் 75 சதவீதம் விவசாயத்திற்காகவும், கால்நடை வளர்ப்பிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

கால்நடைப் பண்ணைகளுக்காக இயற்கைச் சூழல்கள் அழிக்கப்படுகின்றன. கால்நடைப் பண்ணைகளில் சில குறிப்பிட்ட வகைகளே வளர்க்கப்படுவதால் பன்மைத்துவம் அழிவதற்கும் கால்நடைப் பண்ணைகளே காரணமாக உள்ளன. கால்நடைகள் சுகாதாரமற்ற சூழலில் கூட்டம் கூட்டமாக வளர்க்கப்படுவதால் அதுவே நோய்கள் எளிதில் பரவுவதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. தொற்றுநோய்களின் அடைகாப்பகங்களாகவே கால்நடைப் பண்ணைகள் உள்ளன.

உலக நிலப்பரப்பில் 30 சதவீதமே காடுகள் உள்ளன. நாம் 40 சதவீதத்துக்கு மேலான காடுகளை இழந்து விட்டோம். விவசாயம் ஆரம்பமானதிலிருந்தே காடுகளின் அழிவு தொடங்கியது. தொழில்மயமாக்கம், நகர விரிவாக்கம் ஆகியவற்றால் காடுகள் மேலும் மேலும் அழிக்கப்பட்டு வருகின்றன. ஓராண்டிற்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

உலகளவில் உயிர்ப் பன்மையத்தில் 50 சதவீதத்துக்கு மேல் காடுகளில்தான் காணப்படுகிறது. குறிப்பாக மடகாஸ்கர், அமேசான், மேற்குத்தொடர்ச்சி மலை போன்ற வெப்ப மண்டல மழைக் காடுகள் அதிக உயிர்ப் பன்மைத்துவம் கொண்டவையாக உள்ளன. இவை Ecoloical hotspots எனப்படுகின்றன.

வெப்ப மண்டல மழைக் காடுகளில் காணப்படும் ஒரு மரமே நூற்றுக் கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. உலகில் மூன்றில் இரண்டு வகையான உயிரினங்கள் வெப்பமண்டல மழைக் காடுகளிலேயே காணப்படுகின்றன. அந்தளவுக்குப் பன்மைத்துவம் மிகுந்தாக வெப்ப மண்டலக் காடுகள் உள்ளன. ஆனால் இன்று வெப்ப மண்டலக் காடுகளில் மூன்றில் ஒரு பங்கு அழிக்கப்பட்டுள்ளது.

துருவப் பகுதிகளைக் காட்டிலும் நில நடுக்கோட்டுப் பகுதியிலும், மிதவெப்ப மண்டலப் பகுதியும் சூரியனிலிருந்து அதிக ஆற்றலைப் பெறுவதால் இங்குதான் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான பல்வேறு வாழிடங்கள் ஏற்படக் காரணமாக உள்ளது. பன்மைத்துவமான பகுதிகள் அதிகமாக அழிக்கப்படுவதே பெரும் எண்ணிக்கையில் உயிரினங்கள் அழிவதற்குக் காரணமாக உள்ளது.

இந்தோனேசியாவில் பனை எண்ணெய்(‘பாமாயில்’) தயாரிப்பிற்காகக் காடுகள் பெருமளவில் அழிக்கப்படுவதால் பல உயிரினங்கள் அழிந்துள்ளன. காண்டாமிருகம், உராங்குட்டான் எனப் பல விலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளன. குறிப்பாக வெப்ப மண்டலக் காடுகளைப் பாதுகாக்க மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

இந்த உயிர்க்கோளம் ஒரு பேருயிரி. ஒரு பெரும் வலையமைப்பாக உள்ள உயிர்க் கோளத்தின் அங்கங்களாக பல உயிர்ச் சூழல்கள் உள்ளன. அதில் ஒரு பகுதியில் ஏற்படும் பாதிப்பு பிற பகுதிகளின் மீதும் தாக்கம் ஏற்படுத்தி உயிர்க் கோளத்தின் சமநிலையைப் பாதிக்கிறது.

ஒரு சூழலைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டவையாக சில உயிரினங்கள் காணப்படுகின்றன. அவை ‘முக்கியமான சிற்றினங்கள்’ (keystone species) என அழைக்கப்படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட உயிரினம் அழிந்தால், அதோடு தொடர்புடைய விலங்கினங்கள், அது இரையாக உண்ணும் விலங்குகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது.

அதனால் அச்சூழலின் உயிர்ச் சமநிலை பாதிக்கப்பட்டு அவ்வுயிர்ச்சூழல் அதே உயிர்ச்சூழலாகத் தொடர்வதற்கான பிரத்தியேகப் பண்புகளை இழந்து விடும். முக்கியமான சிற்றினம் வேட்டையாடும் விலங்கினமாக இருக்கும் போது அதன் இரையாக உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதிலும் அச்சூழலின் சமநிலையைக் காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அப்படிப்பட்ட முக்கியமான சிற்றினம் அழிந்து விட்டால் அவற்றின் இரையாக இருந்த உயிரினங்களின் எண்ணிக்கை பெருகும். அது மற்ற விலங்குகளையும், சூழலின் உயிர்ச் சமநிலையும் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பிட்ட சூழலில் அதற்கு பிரத்தியேகமான உயிரிகளே வாழ்கின்றன, அதில் வாழ்வதற்கான தகவமைப்பு எல்லா உயிரினங்களுக்கும் இருக்காது.

முக்கியமான சிற்றினம் அழிந்து போகும் போது அதன் சூழலும் அழிந்து போகும். இவ்வாறு ஒரு உயிரினம் அழியும் போது அதற்குத் தொடர்புடைய உயிரினங்களும் அழிவுறுவதால், அழிவு மேலும் அழிவை ஏற்படுத்தவும், அழிவுகள் அதிகரிப்பதற்கும் காரணமாகிறது (Extinction leads to extinction).

உலகளவில் அந்தந்தச் சூழலுக்குரிய பிரத்தியேகமான பூர்விகச் சிற்றினங்கள் (native species) 70 சதவீதம் அழிந்து விட்டன. வேற்றிடத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படும் சூழலுக்குப் பொருத்தமில்லாத உயிரினங்கள், வளர்க்கப்படும் தாவர இனங்கள், விலங்கினங்கள் வேற்றிடச் சிற்றினங்கள் (invasive species) என அழைக்கப்படுகின்றன.

வேற்றிடச் சிற்றினங்களை அறிமுகப்படுத்தும் போது அந்த இடத்தின் சூழல் பாதிக்கப்படுகிறது. அந்த இடத்தில் உள்ள உயிரினங்களின் சமநிலை மாற்றத்துக்குள்ளாகிறது. உயிர்ச் சூழல் அதிகமாகப் பாதிக்கப்படுவதற்கு இந்த வேற்றிட உயிரினங்களை அறிமுகப்படுத்துவதும் ஒரு காரணமாக இருக்கிறது.

கருவேல மரம், பார்த்தீனியச் செடி ஆகிய வேற்றிடத் தாவரங்கள் இங்குள்ள பூர்விகத் தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிப்பதால் சூழலின் சமநிலையைப் பாதித்து, சூழலையே மாற்றத்துக்குட்படுத்துகிறது. அதே போல் யூகலிப்டஸ் மரங்களும் வெப்ப மண்டலச் சூழலில் வளர்க்கப் பொருத்தமில்லாதவை, அவை அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்வதால், வறட்சியை ஏற்படுத்தி மற்றத் தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

பைன் வகை மரங்கள், வெப்ப மண்டலப் பகுதிகளில் வளர்க்கப்பட்டால் அதன் மூலம் காட்டுத்தீ உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. காடுகளை உருவாக்குகிறோம் என்ற பெயரில் சூழலுக்கு பொருத்தமில்லாத மரங்களை வளர்த்தல் அந்தச் சூழலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். ஆகவே அந்தந்தப் பகுதிகளுக்குப் பொருத்தமான வகை மரங்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டியது அவசியம். அதுவே அச்சூழலைப் பாதுகாப்பதற்கு உதவி புரியும்.

ஆர்க்டிக்கில் பனி அதிகம் உருகி வருகிறது. அதனால் பனிக்கரடிகள் அழியும் அபாயத்தில் உள்ளன. இப்போது உலகளவில் 20,000 பனிக்கரடிகள் மட்டுமே உள்ளன. புவி வெப்பமாதலைத் தடுக்கா விடில் அவை நிரந்தரமாக அழிந்து விடும் ஆபத்து உள்ளது. பனித்தளம் இருந்தால்தான் பனிக் கரடிகளால் அவற்றின் இரையான சீலைப் பிடித்து உண்ண முடியும்.

ஆர்க்டிக் பனிக்கரடிகளைப் பாதுகாக்க அவற்றை அண்டார்டிகாவில் வாழ விடலமா என்று சிலர் கருத்துத் தெரிவித்தனர். ஆர்க்டிக்கில் வேட்டையாடும் பனிக்கரடிகளை அண்டார்டிகாவில் விடுவோமானால் அண்டார்டிகாவில் உள்ள பென்குவின்களும், பிற உயிரினங்களும் அழியும் அபாயம் ஏற்படும். ஆகவே அந்தந்த உயிர்ச் சூழலுக்குப் பொருத்தமான உயிரினங்கள் வாழ்வதைப் பாதுகாக்க வேண்டும்.

காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்களின் வாழ்விடம் அழிக்கப்படுகிறது. அதைச் சார்ந்து வாழும் மனிதர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது.உலக அளவில் பெருமளவிலான ஆதிவாசிகளும், பழங்குடி மக்களும் காடுகளை நம்பித்தான் வாழ்ந்து வருகிறார்கள். கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் காடுகளைச் சார்ந்தே உள்ளது. காடுகளின் மூலமாகத்தான் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது. நம் அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு பெற காடுகள் மிகவும் இன்றியமையதாவையாக உள்ளன.

இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால் உலகளவில் காடுகள், மற்ற உயிரினங்களின் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதில் 80 சதவீதம் முக்கியப் பங்கு வகிப்பது பழங்குடி மக்களே. உலகளவில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 5 சதவீதம் மட்டுமே உள்ளது. இயற்கைச் சூழலோடு இயைந்த அவர்களது வாழ்க்கை முறை காடுகளை அழிக்காமல் அவற்றைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது.

அவர்களுடைய வாழ்க்கை முறை நகர்ப்புற சமுதாயங்களைப் போல அதிக அழிவுகளை ஏற்படுத்துவதில்லை. அவர்கள் காடுகளையும் மரங்களையும் மதித்துத் தங்களது முன்னோர்களாக கருதி வழிபடுவார்கள். அவர்களது வழிபாட்டுமுறை, மத வழிபாட்டு முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது.

மதங்கள் பொருளாதாரச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டவை. உண்டியல் இல்லாமல் ஒரு மதக் கோவிலும் கிடையாது, மத உண்டியல்கள் வேப்ப மரங்களையும் விட்டு வைக்கவில்லையே! பழங்குடியினரின் வழிபாடு உயிர் நேயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

பழங்குடி மக்கள் மரங்களையும், பிற உயிரினங்களையும் தங்களது உறவுகளாகவே கருதி வணங்குகிறார்கள். காடுகளை அழிப்பதாலும், காலநிலை மாற்றத்தாலும் பழங்குடி மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எந்தளவுக்குப் பழங்குடி மக்கள் பாதுகாக்கப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு உயிர்ச்சூழல் பாதுகாக்கப்படும் என்பது இன்று உலகளவில் பலராலும் அங்கீகரிக்கப்படுகிறது. முன்னர் இருந்ததைக் காட்டிலும் இன்று பழங்குடி மக்களின் முக்கியத்துவம் அதிகம் உணரப்படுகிறது.

உலகளவில் காணப்படும் சூழலியல் பிரச்சினைகளான காலநிலை மாற்றம், பன்மைத்துவ அழிப்பு ஆகியவற்றுக்குத் தீர்வாகப் புதிய பசுமை ஒப்பந்தம் (New green deal) குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளது. அதன் திட்டங்களுள் ஒன்றாக உலகப் பாதுகாப்பு வலையமைப்பு (Global safety net) ஏற்படுத்தப்படும் என முன்னிறுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் 15% பகுதிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இதற்குக் கூடுதலாக ஒரு 50 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கூடுதலாக 35% நிலப் பரப்புகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக்காக்கப்பட்டு, அங்கு காடுகள் உருவாக்கப்பட்டு உலகப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க வேண்டும். அதுவே இந்த இரண்டு சூழலியல் பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையும். அதாவது இப்போது 15 சதவீதமாக உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.

இத்திட்டம் குறிப்பிடத்தக்க அளவில் பழங்குடியினர் வாழும் பகுதிகளை விரிவுப்படுத்துவதாகவும் உள்ளது. குறிப்பாக கனடா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற அதிக நிலப் பரப்புகளைக் கொண்ட இருபது நாடுகள் இத்திட்டத்திற்கு அதிகப் பங்களிப்பை அளிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக வெப்ப மண்டலக் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புவியின் நிலப்பரப்பில் 50 சதவீதத்தை உயிர்ச்சூழலுக்காக ஒதுக்க வேண்டும். மரங்களுக்கான தேவைகளை நிறைவு செய்யக் காடுகளை அழிக்கக் கூடாது, அதற்காகத் தனியாக சமூகக் காடுகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக சூழலுக்குப் பொருத்தமான மரங்களைக் கொண்ட சமூகக் காடுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதர்களே தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்திற்கும் உயிர்ப் பன்மைத்துவம் அழிவதற்கும் காரணமாக இருக்கிறோம், மனிதர்களே அதற்குத் தீர்வையும் அளிக்க வேண்டும்.

(தொடரும்)

- சமந்தா

Pin It