2026 ஏப்ரல் திங்களில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற இருக்கும் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியைத் தேர்வு செய்யலாம் என்பது குறித்துத் தமிழக மக்கள் முன்னணியும் தோழமை அமைப்புகளும் இணைந்து தமிழகத்தின் பரப்புரைக்கு வெளியிட்ட அறிக்கை:

பாசிசப் பார்ப்பனிய பாஜகவை முழுமையாகத் தோற்கடிப்போம்!.. அதன் ஆரியப் பார்ப்பனியக் கருத்துகளை அடியோடு வேரறுப்போம்!

மாநிலங்களின் முற்றுரிமைப் போராட்டங்களுக்குத் துணை நிற்போம்!

இந்திய அதிகாரப் பீடங்கள், ஆளுநர்கள் போன்ற அதிகாரத் தளங்களை அடிசாய்ப்போம்!

பன்னாட்டு முதலீட்டுச் சுரண்டல்களைத் தடை செய்வோம்!

தமிழ்நாட்டின் கனிமப் பொருள்கள், கடல் வளங்கள், நெடுஞ்சாலைத் துறை, வானூர்தி, கப்பல், தொடர்வண்டித் துறை, நிதித்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாட்டு அதிகாரத்தின் கீழ்க்கொண்டு வருவோம்!

தமிழே கல்வி மொழி, தமிழே ஆட்சி மொழி, தமிழே பயிற்று மொழி, தமிழே நீதிமன்ற மொழி, தமிழே வழிபாட்டு மொழி எனும் நெறிமுறையை உருவாக்குவோம்!

இந்தியப் பார்ப்பனிய அதிகாரத்தையும், வல்லாட்சி முதலாளியத்தையும் பாதுகாப்பவர்கள், அவற்றோடு அணிசேர்பவர்கள், அவற்றோடு உறவாடித் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவு கொடுப்பவர்கள் ஆகியோரை அம்பலப்படுத்தி எதிர்த்துக் களமாடுவோம்!!

ஆரியப் பார்ப்பனியம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழை, தமிழ் இனத்தை, தமிழ் நிலத்தைச் சிதைத்துச் சீரழித்து, பல்வேறு மொழிகளாக, இனங்களாகத் திரித்துக் கொடுமை புரிந்திருக்கிறது.

ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகார வெளியேற்றத்திற்குப் பிறகு இந்திய ஆட்சி அதிகாரத்தை வலுவாகக் கைப்பற்றிக் கொண்டு, கொடுங்கோன்மையில் திமிர் பிடித்து ஆடி வருகிறது ஆரியப் பார்ப்பனியம்.

இந்தியாவிற்குள் அடக்கப்பட்டிருக்கிற பல்வேறு இன மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ, வேறு எந்த அடையாளங்களைப் பற்றியோ ஒரு சிறிதும் கவலைப்படாமல், அவர்களின் கல்வி உரிமையை நசுக்கி, தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளைத் திணிப்பதும், இந்தி, சமஸ்கிருத அதிகாரத்தைத் திணித்து மாநில மொழிகளின் பயன்பாடுகளைத் தடுப்பதும், தொழில் வளங்களைப் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களுக்குக் காவு கொடுத்துத் தமிழகத்தின் தொழில் உருவாக்கங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டிச் சூறையாடி அவற்றில் பங்கு பெற்றுக்கொடுத்து வருகிறது இந்தியக் கார்ப்பரேட் அரசு.

அதன் செயல் வடிவமாக முன்னர் காங்கிரஸ் கட்சி இருந்தது. இப்போது அதைவிடப் பதின்மடங்கு அதிகார வெறியோடும் சூழ்ச்சிகளோடும் பாரதீய ஜனதா கட்சி இயங்குகிறது.

எனவே, இந்தியாவில் ஒடுக்கப்பட்டிருக்கிற இன மக்களின் அனைத்து உரிமைகளுக்கும் எதிரான பாரதீய ஜனதா கட்சியையும், இந்தியப் பார்ப்பனிய அதிகார வகுப்பைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற அதிமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளையும் சமரசமின்றி எதிர்த்து வீழ்த்தியாக வேண்டும். எதிர்வரும் தேர்தலில் அதிமுக - பாரதீய ஜனதாக் கூட்டணியைக் கட்டுத்தொகை (Deposit) கூடப் பெற முடியாதபடி அவர்களைத் தோற்கடித்தாக வேண்டும்.

அடுத்து, முதன்மைப் பகைக்கு மூட்டுத்தாங்குபவர்களைப் பற்றி...

ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் படிப்படியாகப் போராட்டங்களின் ஊடாக வளர்ந்து வந்திருக்கும் தமிழ்நாட்டு விடுதலை அரசியலின் கொள்கையை வலியுறுத்திப் பல இன்னல்களை ஏற்று வந்த கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கருத்துகளில், செயல்பாடுகளில் தங்களுக்கு எவ்வித இன்னலும் தராதவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துத் தன்மையாக்கிக் கொண்டு பேசியிருக்கிறார் சீமான்.

தவிரவும், அவற்றையெல்லாம் தானே முன்மொழிவது போல் உலகெங்கும் பரப்பி, தமிழரை ஏமாற்றி அவர்களின் ஆதரவினால் தன்னையும் தன் கட்சியின் தலைவர்கள் சிலரையும் வளப்படுத்திக் கொள்கிறார். மேலும், தமிழ்த்தேச விடுதலை அரசியலை, இந்திய அரசுக்கு அடிமைத்தன்மை உடையதாகவும், ஆரியப் பார்ப்பனியத்தின் அடிவருடி அரசியலாகவும் மாற்றி வருகிறார்.

இந்தியப் பார்ப்பனியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவர்களைத் துணையாகக் கொண்டு, நூறு ஆண்டுகளாகக் கொள்ள வேண்டிய ஏற்ற இறக்கமாக மாநில உரிமைகள் பேசும் கட்சிகளை முதன்மைப் பகை என ஆரியப் பார்ப்பனியச் சார்பில் சுட்டிக்காட்டி, அதையும் பிராமணக் கடப்பாரையைக் கொண்டு இடிப்பதாகக் கொக்கரித்துப் பொய்மைத் தமிழ்த்தேசம் பேசுகிற சீமானின் நாம் தமிழர் கட்சியையும் தமிழ்நாட்டு மக்களிடையே அம்பலப்படுத்தித் தோல்வி அடைய வைக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசிய அரசியலாளர்களுக்கு இருக்கிறது.

திரைப்பட மயக்கம் தீர்வாகுமா?

எவ்வகை அரசியல் அறிவும் இல்லாமல், திரைத்துறை மயக்கம் மட்டுமே கொண்டு, விளம்பர விரும்பியாகவும், அரசியல் பதவி விருப்பத்தோடும் இலக்கில்லாமல், தேர்தல் அரசியலில் இதுவரை ஈடுபட்டு வந்த ஒட்டுண்ணிகள் சிலரை உடன் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு அரசியலில் நுழைந்து தமிழ்நாட்டு இளைஞர்களின் அறிவை மழுங்கடிக்க வந்திருக்கிற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ளி அரசியல் அரங்கிலிருந்தே வெளியேற்றிட வேண்டும்.

நிலையான தீர்வு எவ்வாறு சாத்தியமாகும்?

இன்றைய தேர்தல் அமைப்பு முறைகளின் வழியாகச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருவதால் காட்சிகள் மாறுமே அன்றி, இந்தியப் பார்ப்பனிய அரசின் அதிகாரங்களையோ, பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டல் குறைபாடுகளையோ முழுமையாக ஒழித்துவிட முடியாது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலங்களின் தன்னாட்சி அதிகார உரிமைகளுக்காகப் போராடுவதன் வழியாகவே அவற்றை முழுமையாக வீழ்த்த முடியும்.

பகைவர்களை அம்பலப்படுத்தும் தேர்தல் வாய்ப்பு...

நிலையான மாற்றம் வரும் வரை அதிகார வெறியர்களை, பொய்மைத் தமிழ்த் தேசியர்களை அம்பலப்படுத்துவதற்காக எல்லாக் களங்களிலும் போராட்டங்களும் கலைகளும் நடைபெற வேண்டும்.

இன்றைய தேர்தல் மன்றங்களையும், நாடாளுமன்றங்களையும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டுப் பெறுவதற்கான போராட்டக் களங்களாகப் பயன்படுத்தாமல், "நான் முதலமைச்சராகி விடுவேன்" என்றெல்லாம் சீமானோ, விஜய்யோ கதையளப்பது மக்களை ஏமாற்றுவதே ஆகும்.

தோழமை அமைப்புகளின் ஒற்றுமை...

இந்தப் பின்னணியில் தேசிய இனங்களின் உரிமைகளைப் பெறுவதற்கு அந்தந்தத் தேசத்திற்குள் இருக்கிற அனைத்துக் கட்சிகளையும், இயக்கங்களையும் நட்பு அணியினராக ஒன்று சேர்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இந்நிலையில், மேலே குறிப்பிடப்பட்ட கட்சிகள் அல்லாது, தமிழ் உரிமைகளுக்காக, தமிழ் இன உரிமைகளுக்காக, தமிழ்நாட்டின் முற்போக்கு உரிமைகளுக்காகக் குறைந்த அளவிலாவது செவிசாய்க்கிற, ஆதரவளிக்கிற கட்சிகளிடம் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு இயக்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளே கீழே உள்ளவை:

  1. ஆரியப் பார்ப்பனிய அதிகார வெறியை எதிர்ப்பதோடு தமிழிய அற உணர்வு சார்ந்த மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரியக் கோட்பாடுகளை ஏற்பவர்களை ஆதரிப்பது.
  2. ஆளுநர் அமைப்பு முறையை முற்றாக ஒழிக்கப் போராட வேண்டும்.
  3. இந்தி / சமஸ்கிருத ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க உடனடியாக உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  4. கல்வித்துறையின் அதிகாரம் முழுமையும் (தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை) தமிழ்நாட்டு அரசின் அதிகாரத்தின் கீழேயே கொண்டு வர வேண்டும்.
  5. தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலுவையிலுள்ள அனைத்து நிதியையும் உடனடியாக ஒன்றிய அரசு வழங்கியாக வேண்டும். ஜி.எஸ்.டி. முறையை முற்றிலும் நீக்கம் செய்துவிட்டு, வரி வசூலிக்கும் உரிமை அந்தந்த மாநிலங்களுக்கே உண்டு எனும் நிதி மேலாண்மையை நிறுவிட வேண்டும்.
  6. தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசின் சுங்கச்சாவடிகள் அனைத்தையும் முழுமையாக நீக்க வேண்டும்.
  7. ஆணவப் படுகொலைகளுக்குக் கடும் சட்டம் இயற்றித் தடை செய்வதோடு, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குச் சிறப்புகள் செய்யவும், அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதோடு, அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு கொடுக்கவும், சாதி, மதம் இல்லை எனப் பதிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரவும் வேண்டும். மேலும், காவல் நிலையப் படுகொலைகளுக்கு எதிராகக் கடும் சட்டங்கள் இயற்றித் தடை செய்ய வேண்டும்.
  8. திருக்குறளைத் தமிழ்நாட்டின் தேசிய நூலாகவும், திருவள்ளுவரைத் தமிழ்நாட்டின் தேசியப் பாவலராகவும் அறிவிக்க வேண்டும்.
  9. மூடநம்பிக்கைகள், சாதிச் சங்கங்கள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டும் சட்டங்களை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
  10. இந்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டங்களைப் புறக்கணித்துத் தமிழ்நாட்டிற்கான தனித்துவ தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களை இயற்றிடல் வேண்டும். என்.ஐ.ஏ. போன்ற மாநில உரிமைகளில் தலையிடும் முகமைகளை ஏற்க மறுத்து ஆள்தூக்கிச் சட்டங்களை எதிர்க்கவும் முன்வர வேண்டும்.

குறைந்த அளவு இந்த 10 கோரிக்கைகளை உண்மையாகவே நிறைவேற்றக் கூடிய வகையில் மாநில உரிமைகளை மீட்டெடுக்க உறுதி கூறும் கட்சிகளுக்கு / கூட்டணிக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம், ஆதரவு அளிக்கலாம் என்று கீழ்க்காணும் இயக்கங்கள் கூட்டாகக் கோரிக்கை வைக்கின்றன:

  • பொழிலன் (முதன்மை ஒருங்கிணைப்பாளர்)
  • பேராசிரியர் ந. செவ்வரசன் (த.ம. முன்னணி - தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்)
  • கண. குறிஞ்சி (த.ம. முன்னணி - தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை)
  • நிலவழகன் (த.ம. முன்னணி - மக்கள் தமிழகம் கட்சி)
  • தங்க. குமரவேல் (த.ம. முன்னணி - தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்)
  • பாலன் (தமிழக மக்கள் முன்னணி)
  • நாகேசுவரன் (த.ம. முன்னணி - பெரியார் பேரவை)
  • சௌ. சுந்தரமூர்த்தி (த.ம. முன்னணி - தமிழர் விடுதலைக் கழகம்)
  • தெய்வமணி (த.ம. முன்னணி - அம்பேத்கர் சிந்தனைகள் இயக்கம்)
  • கோப்பெருஞ்சோழன் (த.ம. முன்னணி - தமிழ்த் தேசிய மக்கள் விடுதலைக் கழகம்)
  • மதியவன் இரும்பொறை (தமிழ்த் தேச மார்க்சியக் கழகம்)
  • க. இர. தமிழரசன் (தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்)
  • தேவதாசு (ஐந்திணை மக்கள் கட்சி)
  • குணசேகரன் (சாமான்ய மக்கள் கட்சி)
  • காந்தி (தமிழ்த் தேசிய மீட்சி இயக்கம்)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.