தொடர்புடைய படைப்புகள்

அன்பார்ந்த உழைக்கும் சொந்தங்களே! விடுதலைப் போராளிகளே!

2026 ஏப்ரல் 23-ஆம் நாள் தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கம்போல தேர்தல் திருவிழாவில் பேரம் பேசும் கூட்டணிகளும் கோமாளிக் கூட்டணிகளும் தேர்தலைச் சந்திக்க அவரவர் கோணத்தில் அணியமாகி வருகின்றன. குதிரை பேரம், கழுதை பேரம் எனப் பேரும் மட்டுமன்றி சந்தை போல தேர்தல் சந்தை உருவாகியுள்ளது. கால்நடைச் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட விலங்குகள் கத்திக்கொண்டு 'எதற்காக வந்தோம்' என்று வேடிக்கை பார்ப்பது போல், மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் விழிப்பிழந்து நிற்கிறார்கள்.

பருவ மழைக்காலத்தில் புற்றீசல் போலத் தோன்றி, பருவகாலத்தில் பல்வேறு புதிய கட்சிகள் முளைத்து எழுகின்றன. அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அரைவேக்காடுகளும் களத்தில் நிற்கின்றன.

பாதி மக்கள் நலத்தையும் பாதி கார்ப்பரேட் நலத்தையும் பின்னணியாகக் கொண்ட திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உருவாக்கிய 'இந்தியா' (INDIA) கூட்டணி ஒருபுறம்!

அப்பால் எடப்பாடி, பண்ணையார் பாஜகவுக்கு அடிபணிந்து உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மறுபக்கம்! இவை இரண்டிற்கும் இடையில் தவெக, நாம் தமிழர் கூத்தணிகள் இன்னொரு புறம்! மாற்றத்தை விரும்பும் மக்களோ தேசிய உரிமைகள் கொண்ட சோசலிசமே மாற்று என்று அறியாமல், ஏமாற்றும் கூட்டங்களுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் குறித்து சில கேள்விகளை முன்வைக்கின்றோம்.

‘நீ அரசியலில் தலையிடாவிட்டால் நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்’ என்னும் பிளேட்டோவின் கூற்றுக்கு இணங்க நாம் இந்த அரசியலில் தலையிடுகிறோம்; ஆனால் பங்கேற்பது இல்லை! தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டைக் கூறுமே தவிரத் தேர்தலில் பங்கேற்காது. அந்த நிலைப்பாட்டில் இருந்தும் நாம் தேர்தலை அணுகுகிறோம்.

சோவியத் ரஷ்யாவில் தோழர் லெனின் அவர்கள், 'டூமா' என்னும் நாடாளுமன்றத்தில் பங்கேற்பதன் வாயிலாகப் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என எண்ணினார்; பின்னர் அது பயனற்றது என உணர்ந்து ஆயுதப் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். அது நடந்த பின்னரும் லெனினின் டூமா நுழைவைக் காரணம் காட்டி இந்தியாவில் நாடாளுமன்றப் பாதையைத் தேர்ந்தெடுத்த சிபிஐ (CPI), சிபிஎம் (CPI-M), சிபிஐ-எம்எல் (CPI-ML) உள்ளிட்ட தேர்தல் இடதுசாரிக் கட்சிகளை நோக்கியே எமது நிலைப்பாட்டை முன்வைக்கின்றோம்.

முதலாளித்துவக் கட்டமைப்பிலும் ஏகாதிபத்திய காலகட்டத்திலும் இயங்கிக்கொண்டிருக்கும் தேர்தல் ஜனநாயகத்தால் மக்களுக்குச் சில சீர்திருத்தங்கள் செய்து தர முடியுமே தவிர, மக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளையும் தரும் சோசலிசக் கட்டமைப்பை உருவாக்க முடியாது. எனவே நாம் நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகப் பாதையை ஏற்பதில்லை; புரட்சிகரப் பாதையை மட்டுமே ஏற்கிறோம்.

ஆனால் தேர்தல் பங்கேற்பு என்னும் முடிவுக்கு வந்துவிட்ட இந்திய இடதுசாரிக் கட்சிகளை நோக்கி யாம் சில கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது.

சிபிஐ, சிபிஎம், சிபிஐ-எம்எல் உள்ளிட்ட பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளன. அதாவது அந்தக் கட்சிகள் சரியான பாதையில்தான் செல்கின்றனவா என்று ஆராய வேண்டியுள்ளது.

1925 என்பது இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். அந்த ஆண்டில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., சுயமரியாதை இயக்கம் ஆகியவை தொடங்கப்பட்டன. இந்த மூன்று இயக்கங்களும் 2025-இல் நூற்றாண்டைக் கண்டன. ஆனால் இந்த மூன்றின் வளர்ச்சியைப் பார்க்கும்போது என்னவாக இருக்கிறது என்று ஆராய்ந்தால், இந்தியாவில் புரட்சிவாதத்திற்கான காரணம் புரியும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது மதவாதம், இந்துத்துவா கொள்கையைக் கொண்டதாகும். இதன் நோக்கங்களை நிறைவேற்றும் தேர்தல் அரசியல் பிரிவே பாஜக ஆகும். அது சரியான திட்டமிடுதல்களோடும் தொடர் செயல்பாடுகளோடும் பணியாற்றி இன்று இந்திய ஒன்றிய ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.

1925-இல் சென்னை மாகாணத்தில் தந்தை பெரியார், பி.டி. தியாகராயர், ஏ.டி. பன்னீர்செல்வம், டி.எம். நாயர், சௌந்தரபாண்டியன், அன்னை மீனாம்பாள் உள்ளிட்ட பல தலைமை ஆளுமைகளால் சுயமரியாதை இயக்கம் தொடங்கி நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1944-இல் தந்தை பெரியாரால் நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு திராவிடர் கழகமாக உருவெடுத்தது. சமூக நீதி, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, வேத, புராண, சாஸ்திர, இதிகாச எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அம்சங்களின் விளைநிலமாகத் திராவிடர் கழகம் திகழ்கிறது.

திகவிலிருந்து முரண்பட்டு திமுக, அதிமுகவும் இன்னபிற திராவிடக் கட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக உருவாகி வளர்ந்தன. ஆர்.எஸ்.எஸ். திட்டங்களைச் செயல்படுத்தும் பாஜக போல் அல்லாமல், திகவிலிருந்து முரண்பட்டு வந்தவையே மேற்கண்ட திராவிடக் கட்சிகள் ஆகும். எனவேதான் ஒரு சில சீர்திருத்தங்களைத்தான் இக்கட்சிகளால் செய்ய முடிந்தது; புரட்சிகரப் பாதையில் செல்ல முடியவில்லை. ஏனெனில் இவை முதலாளித்துவ சீர்திருத்தக் கட்சிகளே ஆகும்.

1925-ஆம் ஆண்டு புரட்சிகரத் தன்மையுடன் தொடங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஒன்றிய காங்கிரசு ஆட்சூழலுக்குப் பின்னர் நாடாளுமன்றப் பாதையைத் தேர்ந்தெடுத்தது. கருத்து முரண்பாடு காரணமாகப் "புரட்சி செய்யப்போகிறோம்" என்ற முழக்கத்துடன் சிபிஐ-யிலிருந்து பிரிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) 1964-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அந்தக்ட்சியும் நாடாளுமன்றத் தேர்தல் பாதையை ஏற்றுக்கொண்டது.

சிபிஎம்-மின் பின்னடைவுக்குப் பிறகு கிளர்ந்தெழுந்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் 1967-இல் நகல்பாரி இயக்கமாகவும், 1972-இல் சாரு மஜும்தார் தலைமையில் சிபிஐ-எம்எல் இயக்கமாகவும் உருவெடுத்தனர். அவர்கள் "புரட்சி செய்யப்போகிறோம்" என்ற முழக்கத்துடன் செயல்பட்டபோது, மிஸ்ரா அவர்களின் திரிபுவாதம் கட்சியை உடைத்தது. அதுதான் இப்போது எம்.எல். குழுக்களும் நாடாளுமன்றத் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைகிறது. இக்குழுக்களின் இம்மாதிரியான முடிவுகள் புரட்சியைத் தள்ளிப்போடுகின்றன.

தேர்தல் பாதையில் சென்ற இடதுசாரிக் கட்சிகள் குறைந்தபட்சம் தங்கள் தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணியைக் கூட அமைக்க முடியவில்லையே, ஏன்? என்று கேட்கிறோம். திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட முதலாளித்துவக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி அமைத்து, இறுதியில் ஒற்றை இலக்கிலான சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளை அவர்களிடம் யாசித்துப் பெறுவது ஏன்? என்று கேட்கிறோம்.

யார் யாரையோ முதல்வர் வேட்பாளர்களாக அறிவித்து அவர்கள் பின்னால் போகும் சிபிஎம், மக்கள் விடுதலை போன்ற கட்சிகளும்; திமுக, அதிமுக போன்ற கட்சிகளை மாறி மாறி ஆதரிக்கும் சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளும், மறைந்த ஆளுமைத் தோழர்களான நல்லகண்ணு மற்றும் சங்கரய்யாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஏன் துணியவில்லை? என்று கேட்கிறோம். எடுத்துக்கொண்ட தேர்தல் பாதையிலாவது சரியாகச் சென்று இருக்கிறீர்களா என்று நட்பு முரண்பாட்டோடு நாங்கள் உங்களைக் கேட்கிறோம். காங்கிரஸ் ஆட்சியின்போது இந்திய நாடாளுமன்றத்தில் நீங்கள் முதன்மை எதிர்க்கட்சியாக இருந்ததை மறந்துவிட்டீர்களா?

இன்றைய காலகட்டத்தில் சாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பவற்றை முன்னிறுத்தும் கட்சிகளை ஆதரிப்பதே நமது நிலைப்பாடாகும். பெருவாய்ப்பாக மேற்கண்டவற்றை முன்னிறுத்தும் கட்சிகள் தேர்தல் பாதையில் அணிவகுக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகளின் தலைமையில் இந்திய அளவிலான ஒரு ஐக்கிய முன்னணியை யாம் முன்மொழிகிறோம். அதையே தமிழ்நாட்டிலும் விரும்புகிறோம். அப்படிப்பட்ட ஐக்கிய முன்னணியைக் கூட்ட இடதுசாரிகள் முயல வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம். அப்படி அமைக்கப்பட்டால் அதற்கு நாங்கள் ஆதரவைத் தெரிவிப்போம். ஆனால் யாம் தேர்தலில் பங்கேற்பது இல்லை. அந்த வகையில் தேர்தல் புறக்கணிப்பே நமது தற்போதைய நிலைப்பாடாகும்.

- தங்க.குமரவேல்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.