பின்தங்கிய நாடான ஈரானில்
நடக்கும் ஆட்சி முற்போக்கென்று
நாம் முலாம் பூசவில்லை..
ஆட்சி மாற்றம் வேண்டுமெனில்
அந்த மக்கள் பார்த்துக்கொள்வர்!
அமெரிக்க ஏகாதிபத்தியமும்
இஸ்ரேலின் சீயோனிசமும்
வானூர்தியில் குண்டுகளை வீசி
பள்ளிக் குழந்தைகளையும்
மதகுருமாரையும்
இராணுவத் தலைவர்களையும்
அறிவியலாளரையும்
எப்படிக் கொல்லலாம்?
ஆட்சி மாற்றத்திற்காம்..
அடுக்குகிறார் பொய்களை!
ஜெனிவாவில் பேச்சுவார்த்தை
நடைபெறும்போதே
டெஹ்ரானில் குண்டு வீசியதேன்?
ஈராக்கில் பொய்யான 'பேரழிவு ஆயுதம் போல்'
ஈரானில் பொய்யான 'அணு ஆயுதமா'?
முந்தைய லிபியா, ஈராக், சிரியா
அமெரிக்க அடாவடித்தனத்தின் பின்னர்
முன்னேறியா இருக்கிறது?
'தட்டிக் கேட்க ஆளில்லை என்றால்
தம்பி சண்டப் பிரசண்டன் போல்'
மூலைக்கு மூலை
ஊளையிடும் ஆயுதக் குழுக்கள்!
ஆப்கானில்
முந்தைய வியட்நாம் போலே
மீண்டும் அடிவாங்கியது அமெரிக்கா!
இதுவரை ஆட்சி மாற்றம்
என்னதான் கிழித்தது?
உண்மைத் தேவை
இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும்
வரவேண்டும் ஆட்சி மாற்றம்!
அதுதான் வாஷிங்டன் டெல்அவிவ் வீதிகளில்
உழைக்கும் மக்களின் முழக்கம்!
உலக மக்களின் முழக்கமும் கூட!
இனவாத இலங்கை அரசுக்கு
முன்பு ஈரான் அரசு உதவியதால்
'இப்போது அடி' என்று
ஏகாதிபத்தியத்துக்கும் சீயோனிசத்திற்கும்
சிலர் அழைப்பு விடுவதும்
அமெரிக்கா இஸ்ரேல் செய்த
இரண்டகத்தை வசதியாய் மறப்பதும்
அகநிலைவாத அணுகுமுறையே!
கொள்கை சார்ந்த நிலைப்பாடு அல்ல!
தமிழ்த் தேசியம் என்றாலும்
பாட்டாளி வர்க்க சர்வதேசியப்
பார்வையைக் கொள்ளட்டும்!
- ஆற்றல்