2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி (மமக), விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை அமைத்து திமுக போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தற்போது இணைந்துள்ளன.

அதே போல் அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி இராமதாஸ் தலைமையிலான பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக - அதிமுக இரு கட்சிகளும் பிரிந்து இருவேறு கூட்டணிகளாகக் களம் கண்டன. ஆனால் இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன. விஜய் தன் பக்கம் வருவதற்குப் பல்வேறு நெருக்கடிகளைப் பாஜக கொடுத்துப் பார்த்தது; ஆனாலும் அவரது தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது.

விஜய் தன் பக்கம் வருவார் என்ற நம்பிக்கையில் அவரோடு கூட்டணி அமைக்கலாம் என்று காத்திருந்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் வேறு வழியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது. இப்படித் தேர்தல் களம் சூடாகி வருகிறது.

தமிழ்நாட்டில் நிலவுகிற இப்படியான சூழலில், நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேர்தல் புறக்கணிப்பு செய்த இயக்கங்கள் கூடப் பாசிசத்தின் அபாயம் கருதித் தேர்தலில் வாக்களிப்பது, தான் தேர்வு செய்யும் கட்சிக்குப் பரப்புரை செய்வது என மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது தமிழ்நாட்டின் சூழல். அனைவருக்கும் ஒரே இலக்கு பாசிச பாஜகவும் அதன் கூட்டணியும் வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான்.

பாசிசக் கொள்கையோடு செயல்படும் இந்துத்துவச் சக்திகளையும், அதனோடு கூட்டணி வைத்துள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும், அதே போல் சமூகப் பிளவுகளை உருவாக்கும் சாதிக் கட்சிகளையும், இந்துத்துவத்திற்குச் சேவையாற்றும் போலித் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு அவற்றை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது.

பாஜக முன்னெடுக்கும் இந்துத்துவ அரசியல், மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது. இந்த அரசியல், ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்பீடுகளான சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, மொழி-பண்பாட்டுப் பன்மை ஆகியவற்றைச் சிதைக்கிறது.

மேலும், பாசிசத்தின் முக்கிய அம்சமான ஒரே அடையாளத்தை (மொழி, மதம், சட்டம், கல்வி, தேர்தல் உள்ளிட்டவற்றை) திணிப்பது, எதிர்ப்புகளைக் காவல் துறை, நீதிமன்றம், நிர்வாகத்துறை, இராணுவம் ஆகியவற்றைக் கொண்டு ஒடுக்குவது போன்றவை இந்திய அரசியல் சூழலில் தெளிவாகக் காணப்படுகின்றன.

இந்தப் பாசிசத் தன்மையை எதிர்ப்பது ஜனநாயகத்தைக் காக்க நினைக்கும் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமை. இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான கருத்தியல் என்பது தேசிய இனங்களின் விடுதலைக் கருத்தியலே ஆகும். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கருத்தியலே இந்துத்துவப் பாசிசக் கருத்தியலுக்கு எதிரானது.

ஆனால், தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பேசப்படும் சில கருத்துகள், உண்மையான இந்துத்துவ எதிர்ப்பு நோக்கத்தை விட்டு விலகி, மறைமுகமாக இந்துத்துவ அரசியலை வளர்க்கும் அபாயத்தையும் கொண்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

தமிழ்த் தேசியம் என்ற கருத்து, வரலாற்றில் சாதி ஒழிப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, மொழி-பண்பாட்டு உரிமை போன்ற அடிப்படைகளில் வளர்ந்தது. இந்த அடிப்படைகளில் மிக முக்கியமானது பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாடு.

ஆனால், ஒருபுறம் பார்ப்பனியத்தைத் திறனாய்வதாக அல்லது எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு, மறுபுறம் அதனுடன் இணைந்து 'தமிழ்த் தேசத்தை வெல்வோம்' என்ற கருத்தைச் சீமான் போன்றவர்கள் முன்வைப்பது தமிழ்த்தேசிய அடிப்படைக் கருத்தியலுக்கு எதிரானது.

இந்திய அரசியலில் பாஜக பயன்படுத்தும் உத்தியைத் தமிழ்நாட்டிலும் பயன்படுத்துகிறது. குறிப்பிட்ட சாதிகளிடையே உட்புகுந்து, அவற்றில் செல்வாக்குள்ள கட்சிகளை பாஜக ஒருங்கிணைக்கிறது. வட தமிழகத்தில் வலுவாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சியையும், தென் தமிழகத்தில் செல்வாக்குள்ள நாடார் மற்றும் முக்குலத்தோர் அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் நேரடித் தொடர்புகளைப் பாஜக வலுப்படுத்தி வருகிறது. அதற்காக, யு.டி.எல்.எஃப். (UTLF) உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து பிரிந்த குறிப்பிட்ட சாதி வாக்கு வங்கியைக் கொண்ட தலைவர்களையும் தென் தமிழகத்தில் ஒரு குடையின் கீழ்க் கொண்டுவர முயற்சித்தது.

ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களைத் 'தேவேந்திரகுல வேளாளர்' என்ற பொதுப் பெயரில் அழைக்க அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் தென் தமிழகத்தில் பள்ளர் சமூகத்தினரிடையே உறவை ஏற்படுத்தியது. கட்சி ரீதியாகப் புதிய தமிழகத்தைத் தன்னோடு இணைத்துக் கொண்டது.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த எல். முருகன், கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் என ஒவ்வொரு சாதியைச் சார்ந்தவர்களையும் அவர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக மாநிலத் தலைவராக்கியது.

சாதி அடையாளங்களை "இந்து" அடையாளமாக மாற்றித் தன்னோடு இணைப்பது பாஜகவின் அடிப்படை உத்தி. ஏனெனில், சாதியை ஒழித்தால் இந்து மதம் இல்லாமல் போகிறது. எனவே, சாதியைப் பாதுகாப்பது பாஜகவின் கடமை. ஆனால் தமிழ்த் தேசியம் சாதி ஒழிப்பை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால், நாம் தமிழர் கட்சியோ, சாதி அடையாளங்களைத் தூக்கியெறிவதற்குப் பதிலாக, 'தமிழர்களுக்குள்' என்ற புதிய வடிவில் மீண்டும் சாதியை நிலைநிறுத்தும் முயற்சிகளைச் செய்கிறது.

இன அரசியல் என்ற அடிப்படையில் தமிழர் - தெலுங்கர் என்ற முரண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கிறது.

ஒவ்வொரு சாதியையும் 'குடி' என்ற பெயரில் தனித்தனியாகக் கொண்டாடுவது உண்மையில் சாதி உணர்வை வலுப்படுத்தச் செய்யுமே தவிர சாதியை ஒழிக்காது. அது சீமானுக்கும் தெரியும்.

சீமானைப் பொறுத்தவரை தேர்தல் அரசியலில் ஈடுபடுவதால், குறிப்பிட்ட சாதிச் சங்கங்களின் ஆதரவைப் பெறுவதற்கு இந்த "தமிழ்க்குடி" என்ற சொல் அவருக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. சௌராஷ்ட்ரா மாநாட்டில் கலந்துகொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுவது, பாரதியார் விழாவில் கலந்துகொண்டு பார்ப்பனர்களுக்கு ஆதரவாகப் பேசுவதெல்லாம் அந்த அடிப்படையில்தான்.

திராவிடக் கட்சிகளின் 'பார்ப்பன எதிர்ப்பு' அரசியலால் ஒதுக்கப்பட்டதாக உணரும் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்கைப் பெறுவதற்காகத் தனது கட்சியில் பார்ப்பனர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக 6 பார்ப்பன வேட்பாளர்களை அவர் களமிறக்கியுள்ளார். பார்ப்பனர்கள் நிரம்பி வாழும் மயிலாப்பூரில் ஒரு பார்ப்பனரை நிறுத்தித் தானும் சாதி பார்த்துத்தான் வேட்பாளரை நிறுத்துவேன் என்று காட்டுகிறார். திராவிடக் கட்சிகள் அதன் தொடக்கக் காலத்தில் இருந்தே சாதி பார்த்துத்தான் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். இந்தத் துயரத்தோடு சமரசம் செய்துகொள்கிறார்கள். ஆனால், நாம் தமிழர் கட்சி அப்படி நிறுத்தலாமா?

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 41 வயதான வழக்கறிஞர் வி. அனுஷா, 'தி இந்து' இதழுக்கு வழங்கிய நேர்காணலில், 'பரந்த தமிழ் சமூகத்திற்கு பிராமணர்கள் ஆற்றிய பங்களிப்புகளைத் திரு. சீமான் பாராட்டியத்தைக் கேட்டு, தான் அந்தக் கட்சியால் ஈர்க்கப்பட்டதாகக்' கூறியுள்ளார். மேலும், பிராமணர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதை அறிந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளார். பாஜகவை விடப் பார்ப்பனர்களுக்கு நாம் தமிழர் உகந்த கட்சியாக மாறியுள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிய முடிகிறது.

கொள்கையைத் தாண்டி வெற்றி என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட திராவிடக் கட்சிகள், சாதிச் சங்கங்களையும் இந்துத்துவப் போக்கு உள்ளவர்களையும் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மாற்றாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சி இந்துத்துவத்தையும் சாதியத்தையும் எதிர்க்க வேண்டுமே தவிர, அவர்களுக்குத் துணை செய்யும் அரசியலையும் நடைமுறையையும் கொண்டிருக்கக் கூடாது. இதனால்தான் நாம் தமிழர் கட்சியை 'இந்துத்துவத் தமிழ்த்தேசியக் கட்சி' என்கிறோம்.

இந்துத்துவத்தை எதிர்ப்பதற்குப் பதிலாகத் "தமிழ் இந்து" எனக் கூறி புதிய வடிவில் இந்துத்துவத்திற்குத் தமிழர்களைப் பலிகொடுக்கும் அரசியலைச் செய்கிறார்கள். "நாங்கள் இந்துக்கள் அல்ல, தமிழர்கள்" என்று தமிழ்ச் சான்றோர்கள் தொடங்கி வரலாற்று ஆய்வாளர்கள் வரை தரவுகளோடு கூறிக்கொண்டிருக்கும்போது, தமிழர்களைத் 'தமிழ் இந்து' என வகைப்படுத்தித் தமிழ்த் தேசிய அரசியலில் நஞ்சை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்து தமிழர்களை விடுவிப்பது வெறும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்ல, அரசியல், பொருளாதாரம், சடங்கு உள்ளிட்ட சமூக நடைமுறைகள் அனைத்திலும் பார்ப்பனியம் செலுத்தி வரும் ஆதிக்கத்திலிருந்து வெளியேறுவதாகும்.

பார்ப்பனியம் சாதி, மதம், கடவுள், சாஸ்திரம், புராணங்கள், வாழ்வியல் நடைமுறைகள், சடங்குகள் எனத் தமிழர்களின் வாழ்வியலில் நீக்கமற நிறைந்துள்ளது. இந்தப் பார்ப்பனியத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக "பிராமணக் கடப்பாரையைக் கொண்டு திராவிடக் கோட்டையைத் தகர்ப்பேன்" என்று பேசுவது பார்ப்பனியத்திற்கும் அதன் மூலம் இந்துத்துவத்திற்கும் சேவகம் செய்வதாகும்.

தேர்தல் பரப்புரையைத் திருத்தணி மலை அடிவாரத்தில் வேலுக்குச் சிறப்பு வழிபாடு செய்து, கையில் வேலுடன் மலையேறி முருகனை வழிபட்டு, "முருகனை நம்பினோர் கைவிடப்படுவதில்லை; அவரை நம்பி இந்தப் போர்க்களத்திற்குச் செல்கிறோம், அதனால் முருகனிடம் சொல்லிவிட்டுச் செல்கிறோம்" என்று கூறித் தொடங்கினார். ஆனால், முருகனோடு நிற்காமல் அப்படியே குரோம்பேட்டை அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்தார். முருகன் தமிழ் இறைவன் என்று பேசிவிட்டு விநாயகரை வழிபடுவது எதற்காக? இதுதான் பார்ப்பனியத்திற்கு எதிரான நிலப்பாடா?

ஒரு விடுதலை அரசியல் என்பது, எந்த ஓர் ஆதிக்கத்திற்கும் எதிரானது. அதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட ஆதிக்கத்தை மாற்றி அந்த இடத்தில் மற்றோர் ஆதிக்கத்தை நிறுவுவதாகவோ அல்லது ஆதிக்கத்திற்குச் சேவகம் செய்வதாகவோ இருக்கக் கூடாது. அது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும், சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் முயற்சியாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு - சமூகநீதி, சாதி எதிர்ப்பு, மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகள் ஆகியவற்றின் மீது கட்டப்பட்டதாகும். அந்த வரலாற்றின் அடிப்படைச் சிந்தனைகள் - தமிழிய, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைகள் ஆகும். அவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பாஜக போன்ற வெளிப்படையான பாசிச அரசியலை மட்டுமன்றி, தமிழ்த் தேசியம் என்ற பெயரில் மறைமுகமாகச் சமூகப் பிளவுகளை உருவாக்கும் போலித் தமிழ்த்தேசியத்தையும் நாம் வளர அனுமதிக்கக் கூடாது.

அதேநேரம், உண்மையான மாற்றம் என்பது ஒரு கட்சியைத் தோற்கடிப்பதிலோ, ஒருவரை எதிர்ப்பதிலோ மட்டும் இல்லை என்பதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

பொதுவுடைமைத் தமிழ்த் தேசத்தைப் படைப்பது என்பது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது அல்ல. பொதுவுடைமைச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்ட கோட்பாட்டையும் அதை அடைவதற்கான போராட்டக் களத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதற்காகப் பாசிசமும், இந்துத்துவமும், சாதி ஆதிக்கமும் எந்த வடிவில் இருந்தாலும், மக்கள் ஒன்றிணைந்து போராடி நமக்கான தமிழ்த் தேசத்தைப் படைப்பதை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும்.

- க.இரா.தமிழரசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.