கல்வி
தமிழ் வழியில் படித்தோருக்கு உயர்கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். முதற்கட்டமாக 50 விழுக்காடாவது தருதல் வேண்டும்.
கல்விக்கான இறையாண்மை அதிகாரம் முழுக்க முழுக்க மாநிலங்களுக்கே இருக்கிறபடி தமிழ்நாடு அரசு கடுமையாகப் போராடிப் பெற வேண்டும்.
அனைத்து ஆங்கில வழி மழலையர் பள்ளிகளையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும். அவற்றுக்கு மாற்றாக ஆங்கில வழி மழலையர் பள்ளிகளைத் தமிழ்வழி மழலையர் பள்ளிகளாக அரசே திறக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மழலையர் பள்ளிகள் தனியாரிடம் இருக்கக் கூடாது.
தாய் தமிழ்ப் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றிட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பாடங்கள் நடத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மருத்துவப் பட்டப்படிப்பில் ஒன்றிய அரசின் அகில இந்திய ஒதுக்கீடு 15%, மற்றும் மருத்துவ உயர் கல்வியில் 50% ஒதுக்கீடு ஆகியவற்றைத் தமிழ்நாடு நீக்க வேண்டும். இந்தியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவக் கல்வி கட்டமைப்பு இங்கு இருப்பதால், இந்திய அளவிலான ஒதுக்கீட்டை நம் மாணவர்கள் நம்பி இருக்கத் தேவையில்லை.
தமிழ்நாடு அரசின் சார்பில் முறையாகத் தமிழ்நாடு வரலாற்று நூலை உருவாக்கி மலிவு விலையில் மாணவர்களுக்குக் கொடுத்திடல் வேண்டும். அந்த வரலாற்று நூலே அரசால் ஏற்பட்ட வரலாற்று நூலாக இருத்தல் வேண்டும்.
அதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆங்கிலம் தமிழ் அகராதி மலிவு விலையில் தமிழ்நாடு அரசே பொறுப்பெடுத்து - உருவாக்கி வெளியிட வேண்டும்.
தமிழர் எனும் பதிவு
தமிழ்நாட்டின் தமிழர்கள் அனைவரும் தங்களின் தேசிய இனத்தைத் தமிழர்கள் என்றே பதிந்திட வேண்டும்.
இந்தியக் குடிமகன் என்று பதிந்து கொள்வது சட்டத்தின் படி இருக்கிற அதே சூழலில், தமிழன் என்கிற தேசிய இன அடையாளத்தைப் பதிவிடுவதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது.
தமிழ்நாட்டு எல்லை
தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்குமான எல்லை, குறிப்பாக ஆனைக்கட்டிப் பகுதியில், வரையறுக்கப்படாமலிருக்கிறது. தமிழக அரசு அதை முறைப்படுத்தித் தமிழகத்தின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும்.
சுங்கச்சாவடிகள்
இந்தியாவிலேயே மிக அதிகமான அளவு 78 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. இவற்றை முற்றிலும் நீக்குவதற்கு முன்பு உடனடியாகப் பாதியாகவாவது குறைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்படாமலிருப்பதைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு சுங்கச்சாவடியின் காலத்தையும் வரையறை செய்ய வேண்டும். காலத்தை மீறிச் சுங்கங்கள் பெறுதலைத் தடை செய்ய வேண்டும்.
சாதி ஆணவப் படுகொலை
நீதிமன்றங்கள் வலியுறுத்தியபடி ஆணவப் படுகொலைகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். மேலும் கடமை தவறும் அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பான்மைச் சமூகங்கள் தொகுப்பாக இருக்கும் பகுதியில், அதே சாதியைச் சார்ந்தவர்கள் உயர் பொறுப்பில் அமர்த்தப்படக் கூடாது. அதேபோல் தேர்தல்களில் பெரும்பான்மை எண்ணிக்கைச் சாதியினரையே அந்தப் பகுதியின் வேட்பாளராக நிறுத்தவும் கூடாது.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை எந்தக் குறிப்பிட்ட சாதியோடும் பதியாமல், சாதி சமயமற்றவர் என்றே பதிவு செய்தல் வேண்டும். அவர்களின் குழந்தைகளையும் சாதி சமயமற்றவராகவே பதிந்திடல் வேண்டும்.
சாதிமறுப்பு இணையருக்கு அரசுப் பணிகளில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இணையருக்கு இலவசமாக வீடு வழங்கப்பட வேண்டும். அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி வரை கற்பதற்கான முழுச் செலவினையும் அரசே ஏற்க வேண்டும்.
பெயர்ப்பலகை
தமிழில் பெயர்ப்பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் ஒன்று போலவே ரூ.2000 மட்டும் தண்டம் விதிக்கப்படுகிறது. இதை மாற்றி கடையின் அளவிற்கு ஏற்ப தண்டத் தொகையை அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் இதில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் பெயர்ப்பலகையைக் கண்காணிக்கும் பொறுப்பு, தொழிலாளர் நலத்துறையிலிருந்து முழுமையாகத் தமிழ் வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட வேண்டும். அதற்கு ஏற்ப தமிழ் வளர்ச்சித் துறையில் உரிய அளவு அலுவலர்கள் அமர்த்தப்பட வேண்டும்.
ஆட்சிமொழி
தமிழக அரசின் அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் 100% தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். இது முதலில் தலைமைச் செயலகத்திலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். பிற மொழி சார்ந்த உயர் அதிகாரிகளுக்கான தமிழ்மொழிப் பயிற்சி தமிழக அரசால் குறிப்பிட்ட கால அளவிற்கு உறுதியாக வழங்கப்பட வேண்டும்.
வழிபாட்டுமொழி
அனைத்து ஆலயங்களிலும் குடமுழுக்கு 100% தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
அனைத்துச் சாதியினரும் பூசகர் (அர்ச்சகர்) ஆகலாம் என அரசாணை மட்டுமே தமிழகத்தில் உள்ளது, அதைச் சட்டமாக்க வேண்டும்.
வள்ளுவர் சிலை
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலையை அரசு நிறுவ வேண்டும்.
திருக்குறளைத் தமிழ்நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
இடம் பெயர் தொழிலாளர்கள்
வேறு மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்கள் பற்றிய அனைத்து விளக்கங்களும் அரசால் பதிவு செய்யப்பட்டு, அது பொது வெளியில் பகிரப்பட வேண்டும். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போல், இடம் பெயர் தொழிலாளர்களுக்குச் சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பு
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் 100% வேலைவாய்ப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கும் படி சட்டம் இயற்ற வேண்டும். அதே போல் தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் 80% தமிழகத்தில் உள்ளவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
சிறைத்துறை
சிறைக்குள் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைப்படுத்தப்பட்டிருக்கிற வாழ்நாள் சிறையாளர்கள் அனைவரையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும்.
தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர் சிறப்பு முகாம் காலந்தாழ்த்தின்றி உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை முழுமையாக நீக்கப்பட வேண்டும். இதற்காகத் தமிழகச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும்.
மனித உரிமை
காவல்துறை சித்திரவதைக்கு எதிரான சிறப்புச் சட்டம், தமிழகத்தில் இயற்றப்பட வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகளை நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை மிகத்தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்கள் அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வானூர்தி நிலையம்
தமிழ்நாட்டிற்குள் பயணம் மேற்கொள்ளும் அனைத்து வானூர்திகளிலும் அறிவிப்புகள் உறுதியாகத் தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள அனைத்து வானூர்தி நிலையங்களிலும் பணியமர்த்தப்படுவோர்க்குத் தமிழும், ஆங்கிலமும் தெரிந்திருக்க வேண்டும்.
தொலைக்காட்சி
பொதிகை என்றும் தூர்தர்ஷன் என்றும் இந்திய அரசின் தொலைக்காட்சிகள் இயங்குவது போன்று தமிழ்நாட்டு அரசுக்கு என்று ஒரு தொலைக்காட்சி இயக்கப்பட வேண்டும். எத்தனையோ தனியார் தொலைக்காட்சிகள் இருக்கும் சூழலில் தமிழ்நாட்டு அரசுக்கென்று ஒரு தொலைக்காட்சி செய்திகளை, பண்பாட்டு நிகழ்ச்சிகளை, வரலாற்று நிகழ்ச்சிகளை, அறிவியல் நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்துகிற வகையில் இயக்கப்பட வேண்டும்.
மூட நம்பிக்கை ஒழிப்பு
பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகளை நீக்க, மராட்டிய மாநிலத்தில் உள்ளது போல, மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்திலும் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆளுநர்
ஆளுநர் அமைப்பு முறையே இந்திய அரசியலுக்குத் தேவை இல்லை என்கிற கருத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக இயற்றி இந்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதே கருத்தைப் பிற மாநிலங்களில் உள்ள சட்டமன்றப் பேரவைகளில் தீர்மானம் இயற்றிடக் கருத்துப் பரப்பல் மேற்கொள்ள வேண்டும்.
ஆளுநருக்கான அனைத்துச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. எனவே ஆளுநருக்கான செலவு விளக்கத்தை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டிற்கென்று தனிக் கொடி
கர்நாடகா, மிசோரம், நாகாலாந்து, காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிற்கென்று தனிக் கொடி ஒன்றை தமிழ்நாடு அரசு தமிழறிஞர்களையெல்லாம் அழைத்துக் கலந்து பேசி அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு நாள் விழாவன்று அந்தக் கொடி தமிழ்நாடு எங்கும் மதிப்போடு ஏற்றப்பட வேண்டும்.
தொழிலாளர் போராட்டங்கள்
பன்னாட்டுத் தொழிலகங்களில் நடைபெறும் தொழிலாளர்களின் போராட்டங்களின் காரணங்களை அரசு கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்களிடம் பேசி அவற்றைச் தீர்த்து வைக்க வேண்டும். தொழிலாளர்களைச் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி ஒடுக்குவதை முற்றிலுமாக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அடிநிலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு முடிந்தவரை நிறைவேற்றிடல் வேண்டும். சட்டம் ஒழுங்கு என்கிற பெயரில் போராட்டங்களை அடக்குவதை மேற்கொள்ளக் கூடாது.
- தமிழக மக்கள் முன்னணி