‘நீதி இல்லை என்றால் அமைதி இருக்க முடியாது’. 2002ம் ஆண்டு குஜராத் மதப் படுகொலைகளில் பாதிக்கப்பட்ட 100 பேர் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் கூறியுள்ளனர்.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்? நீதியில்லாத அமைதி மயான அமைதி. 1200 பேர் விதம் விதமாகக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டன. வழக்குகள் பல நடக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த அனைத்து புகார்களும் வழக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன என்கிற முடிவிற்கு உடனே வந்துவிடாதீர்கள். பல புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படவேயில்லை. புகார் கொடுக்க வந்தவர்கள் அடித்து விரட்டப்படாத அல்லது பிடித்து உள்ளே போடப்படாத குறைதான். அவையெல்லாம் போக எஞ்சிய புகார்களின் மீதான வழக்குகள்தான்.அவை.

ஆனால், மோடி. தான் செய்யவில்லை என்கிறார். தன்னுடைய கட்சிக்காரர்கள் செய்யவில்லை என்கிறார். தங்களது வழிகாட்டிகளான சுயம் சேவக்குகளும் செய்யவில்லை என்கிறார். சங்பரிவாரிகள் யாரும் செய்யவில்லை என்கிறார். அப்புறம் யார்தான் இவ்வளவு பேரைக் கொன்றது? இந்துக்கள் என்கிறது சங்பரிவாரம். ஆனால், அவர்களுக்குப் பெயர்கள் கிடையாது; ஊர் கிடையாது; விலாசம் கிடையாது; வானத்திலிருந்து குதித்தார்கள் போலும். கொலை வெறியாடிவிட்டுப் பறந்துவிட்டார்கள் போலும். நிற்க.

குல்பர்க் சொசைட்டி என்கிற இடத்தில் 68 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அதில் ஒருவர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரி. உயிரைப் பறிக்கப் போகிறார்கள் என்பது தெரிந்து காவல்துறைக்கு அபயக் குரல் எழுப்பியிருக்கிறார். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறியிருக்கிறார். மதபோதையில் காவல்துறை வேண்டுமென்றே உறங்கிவிட்டிருந்தது.

இஷான் ஜாப்ரியின் மனைவி 2006ம் ஆண்டு இக்கொலைக் குற்றச்சாட்டில் மோடியின் மீது புகார் கொடுக்கின்றார். ஏன் நாலு வருடங்கள் இடைவெளி என்று கேட்டால், புகார் கொடுக்கப்படப் போவது முதலமைச்சருக்கு எதிராக; எனவே போதுமான ஆதாரங்களை சமூகநல ஊழியர் தீஸ்தா செதால்வத்துடன் சேர்ந்து திரட்டிக் கொண்டு புகார் கொடுக்கின்றார். காவல்துறை புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. மாநில உயர்நீதிமன்றத்தை 2007ல் அணுகுகிறார். அதுவும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து விடுகின்றது. பின்னர் இந்த வழக்கை எடுத்துக் கொள்கிற உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவிடம் இந்தப் புகாரை விசாரிக்குமாறு உத்தரவிடுகின்றது. பிரசாந்த் பூஷன் இவ்வழக்கில் ‘நடுநிலையாளராக’ (அமிகஸ் கூரி) நியமிக்கப்படுகிறார். 2010ல் சிறப்பு விசாரணைக் குழு தன்னுடைய அறிக்கையை அவரிடம் அளிக்கின்றது. பூஷன் அப்போது தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகுகின்றார். (காரணம் தெரியவில்லை). புதிதாக நியமிக்கப்படுகின்ற ராஜீ ராமச்சந்திரன் அந்த அறிக்கையில் குறைகளைக் காண்கிறார். எனவே இவ்வருடம் மார்ச் மாதம் மீண்டும் விசாரிக்குமாறு எஸ்.ஐ.டிக்கு உத்தரவிடப்படுகிறது. ஏப்ரல் மாதம் அது தன்னுடைய இறுதி அறிக்கையை அளிக்கின்றது. அந்த அறிக்கையை உச்சநீதிமன்றம் ராமச்சந்திரனிடம் அளிக்கின்றது. அவர் தன்னுடைய அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் அளித்த பின்னர் 2011 செப்டம்பர் 12 அன்று உச்சநீதிமன்றம் மோடியின் மீதான புகாரை விசாரிக்குமாறு கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிடுகின்றது.

நடந்தது இதுதான். மோடி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறவில்லை. புகாரையும் தானே ஏற்றுக் கொண்டு விடவும் இல்லை. குற்றம் நடந்த பகுதியில் உள்ள நீதிமன்றம்தான் முதலில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளது. முறையும் அதுதான். அங்கு நீதி கிடைக்கவில்லை என்றால் பின்னர் மீண்டும் மேல் நீதிமன்றங்களுக்கு வரலாம். அதுவும் காவல்துறை புகாரை ஏற்க மறுத்த பின்னணியில், மாநில உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டவரின் மனுவை நிராகரித்துள்ள பின்னணியில், கீழ் கோர்ட் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஐ.டி தன்னுடைய அறிக்கையை அங்கே அளிக்க வேண்டும். நீதிமன்றத்தின் ‘நடுநிலையாளர்’ ராமச்சந்திரனின் அறிக்கையையும் அவரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இது உண்மையில் மோடிக்கும் சங்பரிவாரத்திற்கும் விழுந்த அடிதான். ஆனால் அவர்கள் ஏதோ உச்சநீதிமன்றம் தங்களைக் குற்றமற்றவர்கள் என்று சொல்லிவிட்டது என்பது போல் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி என்ன என்பதைப் பார்க்கும் முன் உச்சநீதிமன்ற ஆணையின் உண்மையான பொருள் என்னவென்பது பற்றி மேலும் சில விவரங்களைப் பார்க்கலாம்.

‘உண்மையில், இதன் பொருள், மோடிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து மட்டுமின்றி, விசாரணை முடிக்கப்பட்டுவிட்டது, நீதிமன்ற உதவியாளரால் சுயேச்சையான ஒரு மதிப்பீடும் செய்யப்பட்டுவிட்டது, சட்டத்தின்படி கீழமை நீதிமன்றமே இந்த வழக்கை தீர்மானிப்பதற்குப் பொருத்தமான அமைப்பு என்று கூறியுள்ளது. மோடியும் மற்றவர்களும் இப்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். வழக்கிலிருந்து எவரையும் விடுவிக்கும் முன் புகார் கொடுத்தவர்களின் கருத்துக்களைக் கேட்டாக வேண்டும். இது உண்மையிலேயே ஒரு நல்ல உத்தரவு என்று கொல்லப்பட்ட ஜாப்ரியின் மகன் கூறுகிறார்’ (ஸ்மிருதி கோப்பிகர், அவுட்லுக், செப்.26, 2011).

‘நாங்கள் விரும்பியதைவிட ஐந்து படிகள் இப்போது முன்னே இருக்கிறோம்‘ என்கிறார் இந்த வழக்கில் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரியுடன் சேர்ந்து வழக்கு தொடுத்திருக்கும் தீஸ்தா. (அவுட்லுக்)படுகொலைகள் துவங்குவதற்கு முதல் நாள் (2002 பிப்ரவரி 27) மோடியின் வீட்டில் நடந்த ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்டவர் சஞ்சீவ் பட் என்கிற காவல்துறை அதிகாரி. மறுநாள் நடக்கப் போகும் நரவேட்டையை முன்னரே சங்பரிவாரத்துடன் திட்டமிட்டிருந்த மோடி ‘இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக் கொள்வதைக் கண்டுகொள்ளாதீர்கள்’ என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அம்பலப்படுத்தியவர். அதற்காக அவரை இடைநீக்கம் செய்தது நரபட்சிணியின் அரசாங்கம். அவர் எழுதிய ஒரு பகிரங்கக் கடிதத்தில் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்.

‘2002ல் படுகொலைகளை நடத்தியவர்களையும், அதற்கு உதவியவர்களையும் மேலும் சில படிகள் தண்டனைக்கு அருகில் எடுத்துச் சென்றிருக்கிறது மிகுந்த மதி நுட்பத்துடன் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உச்சநீதிமன்ற உத்தரவு’. (அவுட்லுக்).

நீதிமன்றத்தின் ‘நடுநிலையாளர்’ ராஜீ ராமச்சந்திரன் என்ன கூறியிருக்கிறார் என்பதையும் பார்த்து விடுவோம்.

‘உச்சநீதிமன்ற உத்தரவு மாசு மருவற்றது. அது சட்டத்தின் ஆட்சியை உயர்த்திப் பிடிக்கிறது. புகார் கொடுத்தவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்படக் கூடியவர்கள் ஆகிய இரு தரப்பினரின் உரிமைகளையும் அது பாதுகாக்கின்றது. இனி சட்டம் தன் கடமையைச் செய்யும். என்னிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட சாட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் சுயேச்சையாக மதிப்பிட்டு நான் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறேன். எஸ்.ஐ.டியின் அறிக்கையும் என்னுடைய அறிக்கையும் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அந்த நீதிமன்றம் சட்டப்படி செயல்படும் என்பதிலும், நீதி நிலைநாட்டப்படும் என்பதிலும் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லை. யாரையும் குற்றமற்றவர் என்றோ குற்றவாளி என்றோ இப்போது கூறமுடியாது’. (டெகல்கா, செப்டம்பர் 13, 2011).

‘இது மோடியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது என்ற கட்டத்தினையும் தாண்டிய நிலைமை.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பதே இதன் பொருள்’ என்று மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிறார். (தீக்கதிர், 22.9.11).

உண்மை இவ்வாறு இருக்கையில் மோடி அன்ட் கம்பெனி தங்களைக் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது என்று வியாக்கியானம் செய்வது, கொண்டாடுவதற்கு ஒரு முக்கியமான உள்ளர்த்தம் இருக்கிறது. எங்களை விடுவித்தால் அமைதி நிலவும்; இல்லை என்றால், மீண்டும் நரவேட்டைதான் என்பது.

‘நீதிமன்ற உத்தரவின் தன்மை வேறு விதமாக இருந்திருந்தால் அது பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்‘ என்று ஜாப்ரியின் மகன் தன்வீர் மிகச் சரியாகவே கூறியுள்ளார்.

கீழமை நீதிமன்றத்தில் மோடி குற்றவாளி என்று தீர்ப்பானாலும் இதுதானே நடக்கும் என்கிற கேள்வி எழலாம். அதிலொன்றும் சந்தேகமில்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மோடி விசாரிக்கப்படவே இல்லை. விசாரிக்கப்படாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதாக ஆகிவிடும். எப்படியாயினும் மோடி குற்றவாளி என்று தீர்ப்பானாலும் அதைக் கலரவங்கள் மூலம் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கும் சங்பரிவாரம். குற்றமற்றவர் என்று தீர்ப்பானால் சொல்ல வேண்டியதில்லை; புதிய மகாத்மா என்று மோடிக்கு பட்டம் சூட்டினாலும் சூட்டுவார்கள்.

மேலும், மோடி குற்றமற்றவர் என்று இப்படியொரு பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் இருக்கிறது. கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கும் நீதிபதியின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள். அவர் சற்று உறுதி குறைந்தவராக இருந்தால் மோடியின் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அதற்கு மாறாக தீர்ப்பு வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். அதாவது தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டுமே தவிர வேறு மாதிரி இருக்கக் கூடாது என்று மறைமுகமாக மிரட்டுகிற உத்தி இது.

சங்பரிவாரம் ஏககாலத்தில் ஒன்றுக் கொன்று முரணான பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தும். அதில் எது வெற்றி பெற்றாலும் அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும். நிற்க.

தனக்கு எதிரான தீர்ப்பை தனக்குச் சாதகமானதாகச் சித்தரிப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கும்? முதலாவதாக, பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக அவர் இதைச் செய்கிறார் என்பது வெளிப்படை. 2002ல் படுகொலைகளைத் தலைமையேற்று நடத்தியதிலிருந்தே மோடியைப் பிரதமராக்க வேண்டும் (?) என்கிற குரல்கள் சங்பரிவார வட்டாரங்களில் எழுந்து கொண்டிருக்கின்றன. பின்னே சிறுபான்மையினரைப் படுகொலைகள் செய்வதுதானே சங்பரிவாரத்தில் தலைவராவதற்கான உச்சபட்சத் தகுதி? ஆனால், 2004ல் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியுற்றதற்கு குஜராத் நரவேட்டை முக்கியமான காரணங்களில் ஒன்றாகிவிட்டது. அதன் காரணமாக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த, அதன் மூலம் அது ஆட்சிக்கு வருவதற்கு உதவிய ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் பல கூட்டணியை விட்டு விலகிவிட்டன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பின் மீது விழுந்த மரண அடியாக அது ஆனது.

இப்போதும் கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஐக்கிய ஜனதாதளம் மோடி பிரதமர் வேட்பாளர் என்றால் தான் கூட்டணியிலிருந்து விலகி விடுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. மோடி கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பீகாருக்குப் பிரச்சாரத்திற்கு வரக் கூடாது என்று அக்கட்சி வலியுறுத்தியது அனைவரும் அறிந்ததே.

எனவே, மோடிக்கு நல்ல பிள்ளை வேடம் தேவைப்படுகிறது. ‘மதவெறி அரக்கன் என்கிற வார்ப்படத்திலிருந்து வெளிவரவேண்டும் என்பது ஒரு தெளிவான காரணமாகத் தோன்றுகின்றது’ (சீத்தாராம் யெச்சூரி, தீக்கதிர்). மோடிக்கு அப்படியொரு பிம்பத்தை உருவாக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கும் இருக்கிறது. ஏனெனில், பாஜகவின் வாக்கு வங்கி ஒரு கட்டத்திற்கு மேல் (சுமார் 19-20 ) வளராதது மட்டுமின்றி தேயவும் தொடங்கிய நிலையில் புதிய கட்சிகள் கூட்டணியில் சேராமல் அதனால் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது பற்றி கனவு மட்டுமே காண முடியும்.

இந்த நாடகம் உடனடியாக பலன் கொடுக்கத் துவங்கிவிட்டது என்பதை மதச்சார்பற்ற கட்சியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மோடிக்கும் அவரது உண்ணாவிரதத்திற்கும் ஆதரவு தெரிவித்திருப்பதிலிருந்து காணலாம். ஜெயலலிதாவிற்கு இந்துத்துவ அரசியலின் சில அம்சங்கள் உவப்பானவை என்பது தெரிந்த விஷயம். ஆனால், மதச்சார்பற்ற பாரம்பரியம் கொண்ட தன் கட்சியை தன்விருப்பம் போல் மதவாதிகளுடன் கைகோர்க்கும்படிச் செய்துவிட முடியாது என்பது அவருக்கும் தெரியும். எனவே பாருங்கள் மோடி நல்லவர், குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றமே சொல்லி விட்டது என்றெல்லாம் கற்பித்து பாஜக கூட்டணிக்கு தன் அணிகளைத் தயார் செய்கிறார். ‘மோசமான கட்சியில் இருக்கும் நல்லவர்’ என்று வாஜ்பாயைச் சித்தரித்து தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததை கருணாநிதியும் திமுகவும் நியாயப்படுத்தியது நினைவிருக்கும். அது போலத்தான் இதுவும். எனினும், மதவாதிகளுடன் இணைந்தால் ஜெயலலிதா தோல்வியைத் தவிர வேறு எதையும் சந்திக்கப் போவதில்லை.

மதநல்லிணக்கத்தையும் அமைதியையும் வலியுறுத்தி (?) மோடி உண்ணாவிரதம் இருப்பது புலி பசுந்தோல் போர்த்திக் கொள்வது போலத்தான். ஆனால், அந்தத் தோல் அது அடித்துத் தின்ற பசுவினுடையதுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காந்தியைச் சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். பின்னர் தங்களது அமைப்பின் கட்டுக் கோப்பையும், ஒழுக்கத்தையும் காந்தி வியந்து பாராட்டினார்.என்று நா கூசாமல் தம்பட்டமும் அடித்தது. அது போல் மதநல்லிணக்கத்தைக் கொன்றுவிட்டு அதைக் காப்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறது நரபட்சிணி.

இறுதியாக ஒரு விஷயம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக குஜராத்தில் மதக் கலவரங்களே நடக்கவில்லை என்கிறார் மோடி. பெரும்பாலும் எப்போதுமே ஒடுக்குபவர்கள்தான் கலவரங்களை ஆரம்பிக்கிறார்கள். கிட்டத்தட்ட மொத்த அரசு எந்திரமும் இந்துத்துவமயமாக்கப் பட்டுவிட்டது; மக்கள் சமூகத்தின் மிகக் கணிசமான பகுதி இந்துத்துவமயமாக்கப் பட்டுவிட்டது; எஞ்சிய பகுதியின் பெரும்பகுதி இந்துத்துவத்தின் மௌன ஆதரவாளர்களாகவோ அல்லது கையாலாகாத்தனமானவர்களாகவோ (காங்கிரஸ் உள்ளிட்ட இதர முதலாளித்துவக் கட்சிகள்) இருக்கின்றனர்; சிறுபான்மையினரின் பொருளாதார அடித்தளம் அடித்து நொறுக்கப்பட்டு கிட்டத்தட்ட முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டுவிட்டனர் (மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம்கள் போரா என்கிற பிரிவைச் சோந்தவர்கள். அவர்கள் எப்போதுமே இதர முஸ்லிம்களுடன் சேர்ந்து இருந்ததில்லை);

தலித்துகள் போல் முஸ்லிம்களும் சேரிகள் எனும் பகிரங்க சிறைக்குள் அடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்; முஸ்லிம்கள் மீதும் கிறித்துவர்கள் மீதும் எழுதப்படாத முழுமையான பொருளாதாரத் தடை அமலில் இருக்கிறது; தாங்கள் உயிரோடு இருப்பதே அதிசயம் என்கிற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மையினர் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியுமா என்ன?

 மத ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ ஒடுக்கப்படும் மக்கள் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும்போது ஒடுக்குபவர்கள் கலவரங்களை நடத்தி அவர்களை அடக்குகிறார்கள். மதவாதம் தலைவிரித்தாடும் குஜராத்தில் மதக்கலவரங்களே நடக்கவில்லை என்றால் அங்கே சிறுபான்மையினர் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சூழலே, அங்குஇல்லை என்று பொருள்.

Pin It