2002 பிப்பிரவரி 27, 28 மற்றும் மார்ச்சு 1 ஆகிய நாள்களில் குசராத் மாநிலத்தில் சங்க பரிவாரங்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டதற்கும், பல்லாயிரம் முசுலீம்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதற்கும், அவர்களின் கோடிக்கணக்கில் மதிப்புடைய உடைமைகள் அழிக்கப்பட்டதற்கும் அப்போது குசராத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் ஆட்சிமீது குற்றம் சாட்ட முடியாது என்று இதற்காக நீதிபதி நானாவதி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் நற்சான்று வழங்கியுள்ளது.

gujarat riots 600கலவரங்கள் நடக்கும் போது அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்று ஊடகங்களும், மக்களும் குற்றம் சாட்டுவதைத் திசை திருப்புவதற்காகவே விசாரணை ஆணையங்கள் அரசுகளால் அமைக்கப்படுகின்றன. ஆறு மாதங்களுக்குள் ஆணையம் ஆய்வறிக்கையை அளிக்க வேண்டும் என்று அரசு கூறினால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுகூட ஆணையத்தின் அறிக்கை தரப்படுவதில்லை. காலங் கடந்து அரசிடம் அளிக்கப்படும் ஆய்வறிக்கைகளில் பலவற்றை அரசுகள் வெளியிடாமல் தவிர்த்து விடுகின்றன. பொதுவாக விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் ஆட்சியாளர்களையோ, அரசின் நிர்வாகத்தையோ குற்றஞ் சாட்டுவதில்லை. மேலும் கலவரம் நடந்து பல ஆண்டுகள் கழித்து அறிக்கை வெளியாவதால், அதில் யாரும் அக்கறை காட்டுவதில்லை. 2002-இல் குசராத்தில் முசுலீம்கள்மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் குறித்த நீதிபதி நானாவதி ஆணையத்தின் அறிக்கையும் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பது போலாகி விட்டது. இது ஊடகங்களில் பேசுபொருளாகவில்லை.

2002-இல் குசராத்தில் முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலை, இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்கான ஒரு முன்னோட்டம் என்று சங் பரிவாரங்கள் கூறின. அதேபோல், நரேந்திர மோடி 13 ஆண்டுகள் குசராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பின், 2014-இல் இந்தியாவின் பிரதமராகப் பதிவு ஏற்றது முதல் முசுலீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும், தாக்குதலையும் இந்திய அளவில் அரசின் நடவடிக்கைகள் மூலமும், சங் பரிவாரங்கள் வழியாகவும் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பின்னணியில் 2002-இல் குசராத்தில் முசுலீம்கள் மீதான தாக்குதலையும் அது குறித்த நானாவதி விசாரணை ஆணைய அறிக்கையையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

1992 திசம்பர் 6 அன்று அயோத்தியில் பாபர் மசூதி சங் பரிவாரங்களால் தகர்க்கப்பட்ட பின், அவ்விடத்தில் இராமர் கோயில் கட்டுவதற்காகக் ‘கரசேவை’ செய்தல் என்ற பெயரில் நாள்தோறும் இந்தியா முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் அயோத்திக்குச் சென்று வந்தனர். அவ்வாறு குசராத்திலிருந்து அயோத்திக்குச் சென்று திரும்பிய கரசேவகர்கள் இருந்த ‘சபர்மதி’ தொடர்வண்டி கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில் இருந்தபோது, எஸ்.6 எண் கொண்ட பெட்டி தீப்பற்றி எரிந்தது. அப்பெட்டியில் இருந்த 59 கரசேவகர்கள் தீயில் கருகி மாண்டனர். இந்நிகழ்ச்சி 2002 பிப்பிரவரி 27 அன்று நடந்தது.

முசுலீம்கள்தான் தொடர் வண்டியின் பெட்டிக்குத் தீயிட்டனர் என்று கூறி விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் உள்ளிட்ட சங் பரிவாரங்கள் முசுலீம்கள் மீது கொடிய தாக்குதலை நடத்தின. கருவுற்றிருந்த முசுலீம் பெண்களின் வயிற்றை வாளால் கிழித்து அக்குழந்தையை எடுத்து மேலே வீசி வாளால் வெட்டினர். அந்த அளவுக்கு முசுலீம் வெறுப்பு எனும் நஞ்சு சங் பரிவாரங்களின் நெஞ்சங்களில் வளர்த்தெடுக்கப் பட்டிருந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப் பட்டனர். பல ஆயிரம் முசுலீம்கள் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கில் மதிப்புடைய முசுலீம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இலட்சத்திற்கும் மேற்பட்ட முசுலீம்கள் அகதிகள் முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர். மூன்று நாள்கள் முசுலீம்கள் மீது சங்பரிவாரங்கள் நடத்திய தாக்குதல்களைத் தடுத்திட முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன், தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. எனவேதான் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் முதலமைச்சர் நரேந்திர மோடி, “இராஜ தர்மத்தைக் காக்கத் தவறி விட்டார்” என்று கண்டித்தார். அப்போது துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி நரேந்திர மோடிக்கு உற்ற துணையாக நின்றதால் நரேந்திர மோடி பதவி விலகும் நிலையிலிருந்து தப்பினார்.

குசராத்தில் முசுலீம்கள் மீதான கொடிய தாக்குதலுக்கு உலக அளவில் கடும் கண்டனம் எழுந்தது. எனவே நரேந்திர மோடி தலைமையிலான குசராத் அரசு, 2002 மார்ச்சு மாதம் நீதிபதி கே.ஜி.ஷா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. சபர்மதி தொடர்வண்டிப் பெட்டி எரிப்பு மற்றும் அதன் விளைவாக எழுந்த கலவரங்கள் குறித்து ஆராய்தல் ஆணையத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. நீதிபதி கே.ஜி.ஷா மோடிக்கு நெருக்கமானவர் என்று எதிர்ப்புகள் எழுந்ததால், உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.டி. நானாவதி ஆணையத்தின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். 2008-இல் கே.ஜி. ஷா இறந்துவிட்டதால், குசராத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அக்சய் மேத்தா ஆணையத்தின் உறுப்பினரானார்.

2004-இல் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரசுக் கட்சியின் ஆட்சி ஒன்றிய அரசில் அமைந்தது. ஒன்றிய அரசு குசராத் கலவரம் குறித்து வேறொரு விசாரணை ஆணையத்தை அமைக்குமோ என்கிற அச்சத்தால், ஆணையத்தின் விசாரணை இலக்கை குசராத் அரசு விரிவுபடுத்தியது. முதலமைச்சர் மோடி, பிற அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகள், தனிப்பட்ட நபர்கள், அமைப்புகள் ஆகியோர் குறித்தும் விசாரணை ஆணையம் ஆராயும் என்று குசராத் அரசு அறிவித்தது.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொடர் வண்டித் துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத், இரயில்வே துறையின் உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை கோத்ரா இரயில் பெட்டி எரிப்பு குறித்து ஆராய அமைத்தார். அக்குழு, எஸ்.-6 இரயில் பெட்டியினுள் இருந்த பொருளால்தான் தீப்பிடித்து எரிந்தது என்று கூறியது.

விசாரணை ஆணையத்தின் முதல் அறிக்கை 2008 செப்டம்பரில் அரசிடம் அளிக்கப்பட்டது. அதன்பின் அது குசராத் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. அதில் எஸ்.-6 பெட்டியிலிருந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலால்தான் தீப்பற்றியது என்று கூறப்பட்டது. நானாவதி - மேத்தா ஆணையத்தின் இரண்டாவது அறிக்கை 2018 நவம்பர் 11 அன்று குசராத் அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆய்வறிக்கை குசராத் சட்டமன்றத்தில் வைக்கப்படவில்லை. குசராத் கலவரத்தின் போது கூடுதல் காவல்துறை ஆணையராக இருந்த ஸ்ரீகுமார் என்பவர் குசராத் உயர்நீதிமன்றத்தில் நானாவதி - மேத்தா அறிக்கையைக் குசராத் சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென்று பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதன் விளைவாக 11.12.19 அன்று அந்த அறிக்கை குசராத் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது.

ஒன்பது தொகுதிகளாக - 1500 பக்கங்கள் கொண்ட நானாவதி-மேத்தா ஆணைய அறிக்கையில், “கோத்ரா கலவரத்தில் முதலமைச்சருக்கோ, மற்ற அமைச்சர்களுக்கோ, காவல்துறை அதிகாரிகளுக்கோ எவ்வகையிலும் தொடர்பு இருந்ததற்காக எந்த ஆதாரமும் இல்லை. மேலும் வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதிலும் தங்கள் கடமையைச் செய்வதில் எந்தக் குறைபாடும் இல்லை. தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப் பட்டுள்ளன. எந்தவொரு மத அமைப்போ, அரசியல் கட்சியோ திட்டமிட்டு இக்கலவரத்தை நடத்தியதற்கான ஆதாரம் இல்லை. விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளின் உள்ளூர் அளவிலான தொண்டர்கள் சிலர் தங்களது பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதை ஆணையத்தின் முன் வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சொல்ல முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்வதாயின், 1992 திசம்பர் 6 அன்று அயோத்தியில் திரண்ட கரசேவகர்கள் உணர்ச்சி வயப்பட்டு பாபர் மசூதியை இடித்தது போல், 2002 பிப்பிரவரி 27 அன்று எஸ்-6 இரயில் பெட்டியில் 59 கரசேவகர்கள் மாண்டதால் இந்துக்கள் உணர்ச்சி வயப்பட்டு முசுலீம்களைத் தாக்கினார்களே தவிர, இதில் இந்து அமைப்புகளுக்கோ, அரசு நிர்வாகத்திற்கோ, ஆட்சியில் இருந்தவர்களுக்கோ எந்த வகையிலும் தொடர்பு இல்லை; அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது என்பதே நானாவதி - மேத்தா ஆணையத்தின் கூற்றாகும்.

முதலமைச்சராக இருந்த மோடியோ, அவரின் அமைச்சர்களோ முசுலீம்கள் மீதான தாக்குதலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தூண்டி விட்டார்களா என்பது ஒருபுறம் இருக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்படவும், பல்லாயிரக்கணக்கான முசுலீம்கள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, உடைமைகளை இழந்து அகதிகள் முகாம்களில் தங்கிடவும் நேர்ந்த கொடுமைக்கு ஆட்சியில் இருந்த மோடியும் அவருடைய அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டுமல்லவா? அதனால்தானே பிரதமர் வாஜ்பாய், நரேந்திர மோடி ‘இராஜ தர்மத்தைக்’ கிடைப்பிடிக்கத் தவறி விட்டார் என்று கண்டித்தார்.

மேலும் விசாரணை நீதிமன்றத்தால் முதலமைச்சர் மோடி ஆட்சியில் பெண் அமைச்சராக இருந்த மாயா கொத்தானியும் மற்ற பா.ச.க.வினரும் குசராத் கலவரத்தில் ஈடுபட்டதற்காகத் தண்டிக்கப்பட்டனர். ஆனால் நானாவதி ஆணையம் முழுப்பூசணியைச் சோற்றில் மறைப்பது போல் இந்த உண்மையைப் புறக்கணித்துவிட்டு, எங்கும் திட்டமிட்ட வன்முறை நிகழவில்லை என்றும் எந்த அரசியல் கட்சியும், மத அமைப்பும் இதில் ஈடுபடவில்லை என்றும் கூறுவது வெட்கக் கேடாகும்.

குசராத்தில் 2002 பிப்பிரவரி 27, 28 மற்றும் மார்ச்சு 1 ஆகிய நாள்களில் முசுலீம்கள் மீது சங் பரிவாரங்கள் காவல் துறையின் - ஆட்சி நிர்வாகத்தின் துணையுடன் எவ்வாறு கொடிய தாக்குதல்களை நடத்தின என்பது குறித்து நாளேடுகளில் அப்போது விரிவான செய்திகள் வெளியிடப்பட்டன. காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைகளில் சங் பரிவாரத்தினர் அமர்ந்து கொண்டு தாக்குதல்களுக்கான ஆணைகளைப் பிறப்பித்தனர். காவல் துறையினர் உயர் அதிகாரிகள் மூலம் விசாரணை ஆணையத்திடம் ஆட்சியாளர்கள் - காவல் துறை அதிகாரிகள் - சங் பரிவாரங்களுக் கிடையே தாக்குதலின் போது இருந்த தொடர்புகள் குறித்து சாட்சியம் அளித்தனர்.

குசராத் கலவரத்தின் போது கூடுதல் காவல் துறை ஆணையராக இருந்த ஆர்.பி. ஸ்ரீகுமார் முதலமைச்சர் நரேந்திர மோடி அரசு கலவரத்தை ஒடுக்கத் தவறி விட்டது என்று அப்போதே குற்றம் சாட்டினார். நானாவதி ஆணையத்திடம் இதுகுறித்து ஒன்பது அறிக்கைகள் அளித்தார். அதனால் குசராத் அரசு அவருக்குப் பதவி உயர்வு அளிக்கவில்லை. மற்றொரு காவல் துறை அதிகாரி இராகுல் சர்மா என்பவர் குசராத் கலவரத்தின் போது பவநகர் மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்தார். அவருடைய கட்டுக்கோப்பான நடவடிக்கையால், பவநகர் மாவட்டத்தில் சங் பரிவாரங்களின் வெறியாட்டம் மட்டுப்படுத்தப்பட்டது. நரோடா பாட்டியா பகுதியில் முசுலம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அரசியல்வாதிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவை, இராகுல் சர்மா 2004-இல் நானாவதி ஆணையத்திடமும் 2008-இல் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடமும் அளித்தார். அதனால் மோடி ஆட்சி அவருக்குப் பல வகையிலும் தொல்லை கொடுத்தது. அவர் பதவியிலிருந்து விலகி வழக்குரைஞராகத் தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

மூன்றாவது காவல் துறை அதிகாரி சஞ்சய் பட். இவர் குசராத் கலவரத்தின் போது உளவுப் பிரிவில் அதிகாரியாக இருந்தவர். சக்கியா ஜப்ரி வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சாட்சியம் அளித்த சஞ்சய் பட், “கலவரம் நடக்கப் போகிறது என்று முதலமைச்சர் நரேந்திர மோடிக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 2002 பிப்பிரவரி 27 அன்று மோடி கூட்டிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் நானும் இருந்தேன். அப்போது நரேந்திர மோடி இந்துக்கள் தங்கள் சினத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று சொன்னார்” என்று கூறினார். அதன்பின் குசராத் அரசு அளித்த நெருக்குதல்களைத் துணிவுடன் எதிர்கொண்டார் சஞ்சய் பட். ஆனால் நரேந்திர மோடி பிரதமரான பின் 2015-இல் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 1990-இல் அவர் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காவல் நிலையத்தின் விசாரணைக் கைதியின் சாவுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்டு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இம்மூன்று காவல்துறை அதிகாரிகளும் அரசுக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர் என்று நானாவதி ஆணையம் கண்டித்துள்ளது. இம்மூவர் மீதும் காவல்துறையின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குசராத் அரசு அறிவித்துள்ளது. இதே போன்று குசராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முசுலீம் குடும்பங்களுக்கு நீதித்துறை மூலம் நியாயம் பெற்றுத் தருவதற்காகத் தொடர்ந்து போராடி வரும் சமூகச் செயற்பாட்டாளர் தீஸ்தா செதால்வத் மீதும் குசராத் அரசு பல வழக்குகளைத் தொடுத்துள்ளது.

நானாவதி - மேத்தா ஆணையம் குசராத் அரசுக்கு ஒரு அடியாள் போல் செயல்பட்டிருக்கிறது. எனவே தான் ஆணைய அறிக்கையில், “இதுபோன்ற கலவர சமயங்களில் செய்தி ஏடுகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கின்றனவா என்று அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். செய்தி ஊடகங்கள் எல்லை மீறுவதாகத் தெரிந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளது. அரசுக்கு எதிராகக் கருத்து கூறுவோரை தேச விரோதிகள், நகர நக்சலைட்டுகள் என்று கூறி மோடி ஆட்சி ஒடுக்கி வரும் நிலையில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆணையத்தின் அறிவுரை அமைந்துள்ளது.

இந்தியா சுதந்தரம் அடைந்த பின் திட்டமிட்டு முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் இது. இக்கொடிய தாக்குதலுக்கு யாரும் பொறுப்பில்லை என்று நானாவதி ஆணையம் கூறுவது சட்டத்தின் ஆட்சி, சனநாயகக் கட்டமைப்பு ஆகியவற்றையே இழிவு படுத்துவதாகும். மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி நாட்டைப் பாசிசத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் சங் பரிவாரங்களின் ஆதிக்கத்தை முறியடித்து உண்மையான மதச்சார்பின்மையையும், சனநாயக நெறியையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்முன் உள்ளது.

- க.முகிலன்

Pin It