தில்லியைச் சேர்ந்த முற்போக்குக் கருத்தினரும் தொழில் முனைவோருமான திவ்யா மோடி அவர்கள் “திவ்யா மோடி டோங்யா” என்றுள்ள தனது பெயரை திருமணத்திற்கு முந்திய பெயரான ‘திவ்யா மோடி’ எனப் பெயர் மாற்றம் கோரி திவ்யா மோடி விண்ணப்பித்தார். அதற்கு பதிப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் நகரகப் பணிகள் அமைச்சகத்திலிருந்து ஓர் அறிவிக்கை பெறப்பட்டது.

மேற்குறிப்பிட்ட அறிவிக்கை (Notification)யில் பெயர் மாற்றம் செய்திட மணவிலக்குப் பெற்றதற்கான நீதிமன்றத் தீர்ப்பாணையின் நகல் அளித்திடல் வேண்டும் அல்லது மணவிலக்கு வழக்கு நிலுவையில் இருப்பின் கணவரிடமிருந்து ‘மறுப்பின்மைச் சான்று’ பெற்று அளித்திடல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுப்பின்மைச் சான்று அளித்திடாவிடின் வழக்கின் தீர்ப்பு வரும்வரை பெயர் மாற்றம் செய்திட முடியாது எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெயர் மாற்றத்திற்கு மேற்குறிப்பிட்டத் தகவல்கள் அளிக்கப்படல் வேண்டும் என்ற அறிவிக்கை, அரசமைப்புச் சட்டம் பிரிவு 14இல் ‘சட்டத்தின்முன் அனைவரும் சமம்’ என்று கூறப்பட்டுள்ளதையும், பிரிவு 19(1) (a) இல் அளிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தையும், பிரிவு 21இல் உறுதியளிக்கப்பட்டுள்ள தனிமனிதச் சுதந்திரத்தையும் மறுப்பதாகவும் இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரானதும் ஆகும் என்று ஒன்றிய அரசுக்கு எதிராக 29.02.2024 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் திவ்யா மோடி வழக்குத் (W.P. (C) 3028/2024) தொடுத்துள்ளார்.

இந்த வழக்கை தற்காலிகத் தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பிரீதம்சிங் அரோரா ஆகியோர் அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு வழக்கை 28.05.2024 அன்றைக்கு ஒத்தி வைத்துள்ளது.

திருணமான பெண் தன் பெயருக்குப் பின் கணவன் பெயரைச் சேர்த்துக் கொள்வது பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம். அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் போன்றவையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பெண் எவ்வளவு படித்திருந்தாலும் உயர் பதவியில் இருந்தாலும் ஆணின் பாதுகாப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் உரியவள் என்று வரலாற்றில் நெடுங்காலமாக இருந்துவரும் ஆணாதிக்கக் கருத்தின் முத்திரைதான் பெண்ணின் பெயருக்குப்பின் கணவன் அல்லது தந்தையின் பெயரைச் சேர்ப்பதாகும்.

பெண்களுக்குச் சமஉரிமையை மறுப்பது தொடரலாமா?

ஆள்வது அரசமைப்புச் சட்டமா? மநுசாத்திரமா? என்ற வினா எழாமல் இருக்காது. பெண் ஆணுக்கு நிகர் அல்ல என்ற கெட்டிப்பட்டுள்ள பாலினப் பாகுபாட்டை பெண்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் சனாதனம் சமூக நடப்பில் மட்டுமல்ல, அரசியல் நடைமுறையிலும் தொடர்கின்றது என்பதையே இந்த வழக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

பெண்கள் தனியாகப் பொதுவெளியில் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்போது, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள கடவுச் சீட்டு (Passport)க்கு விண்ணப்பிக்கும்போது என இந்த அலைக்கழிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன. கல்வி கற்றப் பெண்களாயினும் தொழில் முனைவோராக உள்ள பெண்களாயினும் இதிலிருந்துத் தப்ப முடியாது.

1.          பெண்-ஆண் என வேறுபாடு இல்லாமல் குடிமக்களுக்கு அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளைப் பயன்படுத்தத் தேவையற்றத் தடைகளை உருவாக்குவதா?

2.          பெண்-ஆண் பாகுபாட்டை இன்னமும் தொடரத்தான் வேண்டுமா?

3.          ஆணாதிக்கச் செயல்களை இப்போதும் நியாயப்படுத்துவதா?

பெண்கள் சமஉரிமைத் துய்ப்பது எப்போது?

குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26இல் நடைமுறைக்கு வந்து 74 ஆண்டுகள் ஆனபின்னும் அரசமைப்பு உறுதியத்துள்ள பெண்-ஆண் சமத்துவ உரிமையை மறுக்கும் அரசதிகாரத்தில் அமர்ந்துள்ள பார்ப்பனிய-உயர்சாதி சனாதன வல்லதிகாரத்தைத் தகர்த்திடல் வேண்டும். அதற்கு அரசதிகாரத்தில் உள்ளப் பதவிகள்- பணிகள் யாவற்றிற்கும் வகுப்புவாரி விகிதாச்சார இடப்பங்கீட்டை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

பெரியார் முன்னெடுத்த பெண்-ஆண் சமஉரிமைக் கோட்பாடு செயலுக்கு வர அவரதுக் கருத்துகள் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளின் பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்யவேண்டும்.

பாலின அடிப்படையில் உரிமை மறுப்புகளையும் பாகுபாட்டினையும் களைந்தெறிவோம்!

- தி.துரைசித்தார்த்தன்

Pin It