ஒன்றை காட்டி இன்னொன்றை இல்லாமல் செய்வதில் இருக்கும் நுட்பம் அதுவாகவே மனதுக்குள் நிகழ்கையில்... வேறொன்றின் சிந்தனை தேடுவதைத் தொலைத்து விடும்.

எந்த ஒன்றை நோக்கி நம் கவனம் குவிகிறதோ... அது.. நம்மை நோக்கியும் குவிவது எப்படியோ அதற்கு இணையாக எந்த ஒன்றைத் தேடுகிறோமோ அந்த ஒன்று முன்னால் இருந்து கொண்டே இல்லாமல் போகும். இருக்கு ஆனால் இல்லை என்பது விளையாட்டு அல்ல. அது ஒரு வினை.

ரிசல்ட் பேப்பரில் மற்றவர்கள் எண்கள் அனைத்தும் நம் கண்ணுக்குத் தெரியும். இடையே நானும் இருக்கேன் நானும் இருக்கேன் என்று கையைத் தூக்கித் தூக்கி காட்டினாலும் நம் கண்ணுக்கு நம் எண் தெரியாது. மற்றவர் காட்டிக் கொடுத்த பிறகு கண்களுக்கு அகப்பட்ட அனுபவம் உண்டு தானே. மற்றவர்களுக்கும் நாம் காட்டிக் கொடுத்திருப்போம். இங்கயே இருக்கு.. கண்ணு தெரியுதான்னு பாரு என்று இடைச்செருகல் வேறு.

கண் கட்டு வித்தை என்று கூட சொல்வார்கள். கண் முன்னால் வைத்துக் கொண்டே பேனாவைத் தேடிக் கொண்டிருப்போம். கையில் இருந்த கோப்பையை... கண்கள்... டேபிளில் துழாவிய காட்சிப் பிழையும் உண்டு. கோயில் வாசலில் விட்டிருந்த செருப்பு... காலுக்கு பக்கத்திலேயே இருக்கும். ஆனால் கண்களுக்கு அகப்படாது. பார்க்கிங்- ல் நம் பைக் மட்டும் சில நொடிகளுக்கு காணாமல் போயிருக்கும். சில நொடி சித்தில்... பிறகு தானாக புன்னகைத்தபடி வண்டியின் அருகே சென்றிருப்போம்.

கரண்டியை முன்னால் வைத்துக் கொண்டே பாத்திர அடுக்கில் தேடிய கைகளை அறிவேன். நமக்காக காத்திருப்பவரை அருகே வைத்துக் கொண்டே கூட்டத்தில் தடுமாறிய தருணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் சாவிக்கு இது அதிகமாக நடக்கும். வீட்டு சாவியோ... வாகன சாவியோ... கை படும் இடத்தில் வைத்து விட்டு கண் படும் இடமெல்லாம் துழாவுவோம்.

அட அவ்ளோ பக்கத்துல நின்னு கைய கைய காட்டறேன்... உனக்கு கண்ணு தெரியல... எங்கயோ பாத்துட்டு போற.. என்று நண்பர்கள் சொல்லி கண்டிப்பாக கேட்டிருப்போம். நாமே நம் நண்பர்களிடம் சொல்லி இருப்போம்.

இப்படி...அன்றாடத்தில் நம்மையும் அறியாமல் நம்மில் நடந்து கொண்டிருக்கும் கண் கட்டு வித்தை அல்லது மேஜிக்.... பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்களை ஏமாற்றி விடும். வேண்டிய கோப்பு -ஐ தொட்டுக்கொண்டே தேடிக் கொண்டிருப்போம். ஆனால் எடுக்க தோன்றி இருக்காது. தேடி களைத்து தடுமாறுகையில்... ஆபீஸ் பாய் சட்டென நம் கை பக்கத்தில் இருந்தே எடுத்து நீட்டுவான். ஷாக்காகி பார்ப்போம். அவன் கெத்தாக பார்ப்பான்.

நமது கவனம் சிதறும் அந்த நொடியில்... அந்த பொருள் இருந்து கொண்டே இல்லாமல் போகிறது. பிறகு நமது கவனத்தில் அது குவிவதற்கு பிடிக்கும் நேரத்தில் நாம் கவனமின்றி தேடிக் கொண்டிருப்போம். இருந்து கொண்டே இல்லை என்றாகிவிடும் இருத்தலின் முன்... துண்டித்த பிறகும் இருப்பதாக வலிக்கும் உடல் பாகம் ஒன்றின் தலைமறைவு போல... கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும். மூளை மூடி இருக்கும்.

"இல்ல அன்னைக்கு உங்களுக்கு கண்டிப்பா மீசை இருந்துச்சு..." தில்லு முல்லு படத்தின் காட்சி நினைவில் இருக்கிறது தானே. அது தான். பார்க்க பார்க்க காணாமல் போவது... இல்லாததை இருப்பதாக நம்புவது என மைக்ரோ நொடி பிசகில் மூளை குழம்பி விடும்.

எல்லா நேரத்திலும் எல்லாருக்கும் பொருந்தும் என்று சொல்ல இயலாது. ஒரு முறையாவது நடந்திருக்கும் என்பது தான் சுவாரஸ்யம்.

வேண்டும் என்றே பார்த்தும் பார்க்காதது மாதிரி.. பார்க்காததை பார்த்த மாதிரி சொல்வது இதில் சேராது. இது முழுக்க முழுக்க கண் முன்னால் நடக்கும் காலம் காட்டும் மேஜிக்.

ஆறாவது சேர்ந்த அன்று எனக்கு தெரிந்த ஒரே ஒரு அண்ணன் மதிய இடைவேளையில் என்னை நோக்கி சிரித்தபடியே வருகிறார். பார்த்துக் கொள்ள சொல்லி வீட்டில் சொல்லி இருந்தார்கள். ஏற்கனவே புதிய இடம் என்ற பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு அவரின் வருகை... அப்பாடா என்றிருந்தது. மனதுக்குள் சட்டென ஒரு நம்பிக்கை மதிய சோற்றுக்கு அலையும் காக்கைகளை போல சிறகடித்தது. பள்ளி பசங்க மதிய நேரம் எப்படி இருக்கும் என்று தெரியும் தானே. கூட்டமும் ஓட்டமுமாக....வட்டமும் தட்டுமாக... சட்டிக்குள் கொத்தாக தூக்கி போட்ட வெங்காய வளைவுகளாக... அப்படி ஒரு குவிதல். ஆனால் சட்டென காணாமல் போனார் அண்ணா. அய்யயோ என்று பார்க்க பார்க்க ஆளை காணவில்லை. கூட்டத்தில் தொங்கி கொண்டிருந்தவனுக்கு பிடி நழுவியது போல அப்படி ஒரு தடுமாற்றம். என்னை பார்த்து தான வந்தார். எங்க அதுக்குள்ள காணோம். ஒரே குழப்பம். நான் வெறித்து கூட்டத்தை விலக்கி விலக்கி பார்த்தபடியே நிற்கிறேன். காணவில்லை. யோசனை என்னை அப்படியே நிற்க வைக்கிறது. ஆனால் அடுத்த சில நொடிகளில் வந்து என் முன்னால் நின்று சிரிக்கிறார்.

எப்படி. இப்ப தான காணோம். இப்ப எப்படி வந்தார். மாயத்தில் இருந்து வந்தது போல மனம் நம்பியது. இந்தக் காட்சி... இந்த ஒரு ஃபிரேம் தான் இந்த மாயத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து எழுத வைத்திருக்கிறது.

அடுத்த முறை கொஞ்சம் கவனத்தோடு அணுகுங்கள். பல மேஜிக் தருணங்களை அது நிகழும் போதே உணரலாம்.

- கவிஜி

Pin It