2013 செப்டம்பர் 18 அன்று திருமதி ஜக்கியா ஜஃப்ரி, அகமதாபாத் 11 ஆவது பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வமான குற்றமுறையீட்டின் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறோம்.
அதில் மோடிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்:
1. 2002 பிப்ரவரி 27 அன்று துயரார்ந்த கோத்ரா சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு ‘மகாயஜ்னா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ இந்து பரிசத் அமைப்புகளின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து, புலனாய்வு அமைப்புகள் அனுப்பிய செய்திகளை அரசு வேண்டுமென்றே உதாசீனம் செய்தது. இந்த செய்திகளில் பைசாபாத் - அயோத்யாவிற்கு அனுப்பப்பட்ட 2800 மற்றும் 1900 கரசேவகர்கள் செல்லும் வழியெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
2. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் வரும் சமயத்தில் கரசேவகர் களால் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப் படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயந்திர ரவி, அரசாங்கத்திற்குத் தெரிவித்திருந்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. மாறாக வன்முறை நிகழ்வுகள் மிக வேகமாகப் பெருகுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
3. குஜராத் மாநிலம் முழுவதும் விஸ்வ இந்து பரிசத்தின் சதித் திட்டங்களுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பழி வாங்கும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட அனுமதிக்கப்பட்டன. மோடி மேற்கொண்ட முதல் தொலைபேசி கட்டளையே அமைதி திரும்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுதான். மாறாக மோடி, குஜராத்தின் விஎச்பி செயலாளரான டாக்டர் ஜெய்தீப் பட்டேலுக்கு போன் செய்து அவரைக் கோத்ராவிற்கு செல்லுமாறு பணித்திருக்கிறார். இவ்வாறு மோடிக்கும் விஸ்வ இந்து பரிசத்துக்கும் இடையிலான சதித் திட்டம் ரகசியமாகத் திட்டமிடப்பட்டு மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் கொல்லப்படுவது மேற்கொள்ளப்பட்டது.
4. விஸ்வ இந்து பரிசத் பந்த் நடத்திடவும், வீதிகளிலும் பொது இடங்களிலும் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட அனுமதித்ததும் மிகவும் மோசமானவைகளாகும். 2002 பிப்ரவரி 27 அன்று மதியமே மாநிலப் புலனாய்வுப் பிரிவினருக்கும், காவல் துறையினருக்கும் பந்த் அழைப்புக் குறித்து நன்கு தெரியும். அதுமட்டுமல்ல அதனைத் தொடர்ந்து காவல்துறை நிர்வாகம் வீதிகளில் இருந்த சாமானிய மக்கi ளஅப்புறப்படுத்தி, கலகக் கும்பல் முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களின் கடைகளின் மீது மட்டும் வன்முறை வெறியாட்டங்களை நடத்த வசதி செய்து கொடுக்கப்பட்டன.
5. கோத்ரா இரயில் நிலையத்தில் தீக்கிரைக்கு ஆளான சடலங்களை மக்கள் மனதில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ்./வி.எச்.பி.யினர் பார்ப்பதற்கும், அவற்றின் புகைப்படங்கள், ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படவும் அனுமதிக்கப்பட்டன. இவற்றை சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.
6. கோத்ராவில் இறந்தவர்களுக்காக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஆர்.எஸ்.எஸ்./வி.எச்.பி. ஆட்களுக்கு மோடி தலைமையிலான அரசாங்கம் மற்றும் நிர்வாகம் போதிய அவகாசம் அளித்தது.
7. கோத்ரா ரயிலில் இறந்தவர்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் வி.எச்.பி. செயலாளர் ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரால் அகமதா பாத்திற்குக் கொண்டு வரப்பட்டு, சவ ஊர்வலம் நடத்திட அனுமதிக்கப்பட்டது. 2002 பிப்ரவரி 27 அன்று மாலை மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சவ ஊர்வலத்தை மோடி துவக்கி வைக்கிறார். இக்கூட்டத்தில் ஜெய்தீப் பட்டேலும் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுகிறார். இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக வன்முறை வெறியாட்டங்கள் பெருகுவதற்கு மோடி பிரதானமாகப் பொறுப்பாவார்.
8. “இந்துக்கள் தங்கள் கோபத்தைக் வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று உயர் காவல்துறையினருக்கும் நிர்வாகத்தினருக்கும் மோடி அறிவுறுத்தி இருக் கிறார். இரு மூத்த அதிகாரிகளும், கேபினட் அமைச்சர் ஹரேன் பாண்டியாவும் இவை தொடர்பாக சாட்சியம் அளித்திருக்கின்றனர். மாநிலப் புலனாய்வுப் பிரிவில் பணியற்றிய சஞ்சீவ் பட் என்னும் அதிகாரியும் இது குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன்பும் சாட்சியம் அளித்திருக்கிறார்.
9. அகமதாபாத்தில் வேண்டுமென்றே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜெய்தீப் பட்டேல் தலைமையில் ஊர்வலமாகச் சென்று, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஊர்வலத்தினர் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோரையும் தாக்கினார்கள். பின்னர் அகமதாபாத் வீதிகள் வழியே ஊர்வலமாகச் சென்றனர். நரோடா பாட்டியா, நரோடா காம் மற்றும் குல்பர்க் சொசைட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்களைப் பட்டப் பகலில் பலர் கண்முன்னாலேயே வல்லுறவு செய்திடவும் அனுமதிக்கப்பட்டது. 2002 பிப்ரவரி 28 அன்று இவ்வாறு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறவும், ஆத்திரமூட்டும் வகையில் சவ ஊர்வலங்கள் நடைபெறவும் மோடி, காவல்துறை மற்றும் நிர்வாகத்தினரால் வேண்டுமென்றே அனுமதிக்கப்பட்டது.
10. இராணுவம் வரவழைக்கப்பட்ட போதிலும், அவை செயல்பட அனுமதிக்கப் படவில்லை.
11. குஜராத் மாநிலத்தின் 25 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் காவல்துறை யினர் உதவியுடனேயே வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைகளில் அமர்ந்து கொண்டு இவற்றிற்கு உத்தரவிட்டனர். மோடி உள்துறை அமைச்சர் என்ற முறையில் இதற்குத் தலைமை வகித்தார்.
12. 2002 மே மாதம் வரை வன்முறைகள் தொடர மோடி அனுமதித்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிசத் ஆகியவை இவ்வன்முறை களுக்குப் பின்னே இருக்கின்றன என்பதனை ஏராளமான கடிதப் போக்குவரத்துக்கள் மெய்ப்பிக்கின்றன.
13. உச்சநீதிமன்றம் உறுதியாகத் தலையிடும் வரை கீழமை நீதிமன்றங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பெயரளவிலேயே நடவடிக்கைகள் இருந்தன. வழக்குகளை விசாரிப்பதற்காக அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ ந்து பரிசத் ஆதரவாளர்களேயாவர். இதன் காரணமாகவே பெஸ்ட் பேக்கரி விசாரணை மற்றும் பில்கீஸ் பானு வழக்கு மாநிலத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.
14. 2002 பிப்ரவரி 27 அன்று மோடியே முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் பேச்சை மேற்கொண்டார். முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்ட அவரது உள்துறையே அனுமதித்தது. காவல்துறைத் தலைவர் (புலனாய்வு) ஆர்.பி.ஸ்ரீகுமார் தலைமையிலிருந்த மாநிலப் புலனாய்வுப் பிரிவு விஸ்வ இந்து பரிசத் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகித்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். ஆனால் இது அரசால் கண்டு கொள்ளப்படவில்லை. பவநகர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் சர்மாவும் இதேபோன்று வெறுப்பைக் கக்கிய சந்தேஷ் என்னும் நாளிதழ் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார். ஆனால் இதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. மாறாக அந்த செய்தித் தாளுக்கு வாழ்த்துச் செய்தியை மோடி அனுப்பி இருந்தார். நேர்மையாக நடந்து கொண்ட அதிகாரிகள் மோடியால் தண்டிக்கப்பட்டனர்.
15. குஜராத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட்ட பின், வன்முறை தொடர்பாக நடைபெற்ற காவல்துறை ஆவணங்கள் அனைத்தையும் மோடி அழித்துவிட்டார். அதற்காகவும் அவர் விசாரிக் கப்பட வேண்டியவராவார்.
இக்குற்றச்சாட்டுகளின்மீது பெருநகர் நீதித்துறை நடுவரின் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி போடப்பட்டிருக்கிறது.