தமிழ்த் தேச இறையாண்மை இயக்கத்தின் அரசியல் இதழாக தமிழக மக்கள் இறையாண்மை இதழ் வெளி வருகிறது.

இந்தியாவின் முழு அடிமையாகவே இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் நிலைமை இருக்கிறது. இந்நிலைமை மாற்றப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரு தேசம் அல்ல. பல தேசிய இனங்களைக் கொண்டது. இந்தியாவை நாடு என்றோ தேசம் என்றோ சொல்வது அரசியல் பிழையாகும்.

இந்தியா ஒரு தேசம் அல்ல. பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டமாகும். இந்தியாவை தேசம் எனக் குறிப்படுவது தேசம் என்ற கொள்கையை மறுப்பதாகும். தேசம் என்பதின் மூல அடிப்படை ஒரு இனத்தின் மொழியே. இந்தியாவிற்கு என்று ஒரு மொழியோ, தேசிய இனமோ ஒரு தேசமோ இல்லை. இந்தியாவிற்குள் இருக்கும் அனைத்து தேசிய இனங்களையும் பார்ப்பனியத்திற்கு அடிமை செய்யும் பார்ப்பனக் கூட்டம் தான்இந்தியாவை தேசம் எனக் கூறுகிறது. பிறர் அதற்குப் பலியாகி உள்ளனர். இந்தியாவிற்கு உட்பட்டு இருக்கும் அனைத்து தேசிய இனங்களையும் இன அடிப்படையில் ஒழித்துக் கட்டுவதே பார்ப்பனியத்தின் திட்டம். முதலாளிய வளர்ச்சியிலும் முதன்மைப் பாத்திரம் ஆற்றும் பார்ப்பன-பனியா கூட்டமும், தேசிய இனங்களில் ஆதிக்கம் பெற்ற ஆதிக்க சாதியினரில் பெரும் பகுதியினரும் இந்திய தேசத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர். இதனால் தான் பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் வீழ்த்துவது தேசிய இனக் கொள்கையாக அமைகிறது. எனவே தான் பார்ப்பன இந்தியாவிற்கு எதிராக இந்திய தேசிய இனங்கள் கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.

அதே சமயம் நடைமுறையில் தங்கள் இனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தனித்துச் செயல்பட வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு தேசிய இனமும் தங்கள் தேசிய இனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தனிக் கட்சி அமைப்புகளை தொடங்க வேண்டும். தேசிய இனங்கள் அனைத்தும் இந்தியாவிற்கும் பார்ப்பன- பனியா கூட்டத்திற்கும், முதலாளியத்திற்கும் எதிராக ஒத்த கொள்கை கொண்டவர்களாக செயல்பட வேண்டும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் எமது அரசியல் இயக்கமான தமிழ்த் தேச இறையாண்மையும் எமது அரசியல் - பண்பாட்டு இதழும் செயல்படும். இறையாண்மை என்பது தேசிய இனங்களின் அரசியல் ஆளுமையை - ஆட்சியை பேசுகிறது. தேசிய இனம் என்பதே அரசு உரிமை என்பதையே அடிப்படையாகக் கொண்டதாகும்.

தமிழகத்தில் நிலவும் சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதை முதன்மை நிலையாகக் கொண்டே செயல்பட வேண்டும். தமிழக சாதி ஒழிப்புப் போராட்டத்தில் - பார்ப்பன எதிர்ப்புப் போரில் பெரியார் முதலிடத்திலிருந்தார். தமிழ்த் தேசம் தொடக்க காலத்திலிருந்தே திருவள்ளுவர் தொடங்கி, பார்ப்பன எதிர்ப்பில் முதன்மை பங்காற்றி வருகிறது. சாதி ஒழிப்புப் போரில் பெரியார் முக்கிய இடத்தில் இருந்தார். எனினும் சாதி ஒழிப்பில் தமிழ் நாடு முழுமை பெறவில்லை. சாதி ஆதிக்க வெறியர்கள் சாதி ஒழிப்பை ஏற்கவில்லை. மாறாக பார்ப்பனிய கொள்கைகளைக் கொண்டவர்களாகவும், நடைமுறைப் படுத்துபவர்களாகவும் இன்று வரை நீடிக்கின்றனர்.

சாதி ஒழிப்பிலும், தமிழ்த் தேச விடுதலையிலும் முதன்மைப் பாத்திரம் ஆற்றிய தந்தைப் பெரியாரும், பார்ப்பன எதிர்ப்பில்-தத்துவத்திலும், நடைமுறையிலும் இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் பங்காற்றிய மாமேதை அம்பேத்கரும் நமது செயல்பாட்டில் பேராற்றல்களாக இருக்கின்றனர். இவர்களை நமக்குத் துணையாக கொண்டு செல்வதும். நமது வரலாற்றுக் கடமை ஆகும். நமது அடிப்படை கொள்கையாக மார்க்சியம் திகழும்.

உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டத்திற்கு தலைமை ஏற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கு முதன்மை மெய்யியலாக இருக்கும் மார்க்சியேமே நமக்கும் அடிப்படையானதாக இருக்கும். தமிழ்த் தேச இறையாண்மையை முன்னெடுக்க பேருதவி செய்யும் தமிழக மக்கள் இறையாண்மையை உயர்த்திப் பிடிப்போம்.

- தமிழ்த் தேச இறையாண்மை இயக்கம்

Pin It