மனித குலத்திற்கு மட்டுமே உரித்தான பண்பு ஒன்று உண்டு. தான் கண்டறிந்த, தன்னுடைய பட்டறிவை அடுத்தத் தலைமுறைக்குக் கையளித்துவிட்டுக் கண்ணை மூடும். முந்தையத் தலைமுறை விட்ட இடத்திலிருந்து, மேலும் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுகிறது அடுத்தத் தலைமுறை. இது ஒரு தொடர் ஓட்டம். மனித வர்க்கத்தின் வியக்கத் தக்க மேம்பாட்டுக்கு இதுவே காரணம்.

காட்டுமிராண்டியாகப் பயணத்தைத் தொடங்கிய மனிதவர்க்கம் பல்வேறு விடுதலை பெற்ற தேசங்களாகப் பரிணமித்து, ஓர் ஒடுக்குமுறையற்ற பொதுமைச் சமுகம் நோக்கிப் பயணிக்கிறது. ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும், அதிலிருந்து விடபட ஒவ்வொரு தேசிய இனமும், ஒவ்வொரு சமூகமும் போராடுகிறது.

உலகெங்கும் தேசிய இனங்கள் தங்களுக்கான விடுதலை பெற்ற தேசங்களை அமைதி வழியிலோ அல்லது ஆயுதம் ஏந்தியோ உருவாக்கிக் கொள்கின்றன. தேச விடுதலை என்பது ஆசைக்குப் படைத்துக் கொள்வதன்று. மற்றொரு தேசம் ஒடுக்கி மேலாண்மை செய்ய முற்படும் போது, தேசவிடுதலைப் போராட்டம் தவிர்க்கவியலாதகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் வந்தேரிகளான ஆரிய பார்ப்பனர்களால் நிறுவப்பட்ட நுட்பமான ஒடுக்குமுறைக் கருத்தியலும், கட்டமைப்பும் சனாதனம் ஆகும். வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுல மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு எதிர்ப்பு, திருவிதாங்கூர் சுசீந்திரம் சத்யாகிரகம், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், இரயில் நிலையங்களில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டம், வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கை, பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்பு, தமிழ்நாடு நீங்கிய இந்திய நாட்டுக் கொடி எரிப்புப் போராட்டம், இராமன் பட எரிப்பு, பிராமணாள் கபே பெயர் அழிப்புப் போராட்டம், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம், காந்தி பட எரிப்புப் போராட்டம், தமிழ்நாடு பிரிவினைக் கோரிக்கை, கருவறை நுழைவு அறிவிப்பு ஆகியவற்றின் உள்ளீடு ஆரிய எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு மற்றும் அதன் அரசியல் வடிவமான இந்திய தேசிய எதிர்ப்பு ஆகியவையே ஆகும். பெரியார் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து விடுவிக்காமல், தமிழ் மக்களை சமூக அடிமைத்தனத் திலிருந்தும், சாதி இழிவிலிருந்தும், சனாதனத்திலிருந்தும், இந்து மதத் திலிருந்தும், பார்ப்பனியத்திலிருந்தும் விடுவிக்க முடியாது என்பதை உணர்ந்து இருந்தார். பெரியாரின் வாழ்நாள் போராட்டம் முழுவதும் சனாதன ஒழிப்பு மற்றும் இந்தியா விலிருந்து தமிழ்நாடு விடுதலை என்ற இரண்டு முனைகளைக் கொண்டது.

periyar 364சமூக விடுதலைக்கான வழியாக தமிழ்நாடு பிரிவினை

இந்தியத் துணைக்கண்டத்தில் நீண்டகால சமூக மேலாதிக்கமும், ஒடுக்குமுறையும் செய்துவந்த பார்ப்பனீயம் இந்திய தேசியமாக அரசியல் வடிவெடுத்தபோது, சமூக விடுதலை கோரிய சக்திகள், பார்ப்பனீயத்துக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு, வருணாசிரமத்துக்கு எதிராகவும், பின்னர் இந்தியாவுக்கு, இந்திய தேசியத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பின. அதில் முக்கியமானதும் முதற்குரலும் தந்தை பெரியாருடையது. சமூக விடுதலையைப் பெற, நாட்டுப் பிரிவினையைத் தவிர வேறொரு வழியில்லை என்ற முடிவின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் விடுதலைக் கோரிக்கையை முன்னெடுத்தார்.

தமிழ்நாட்டின் விடுதலைக் கோரிக்கையின் முதற் குரல்

தான் ஒரு தனித் தேசிய இனம் என்று தெளிவாக அறிந்து கொண்ட பிறகும், தன் தேச விடுதலையைக் கோராமல், ஒடுக்கும் தேசியத்துக்கு உடன்பட்டு, ஒடுக்கு முறைக் கட்டமைப்புக்குள் அரசியல் நடத்துவது என்பது பிழைப்புவாத அரசியலே ஆகும். தமிழகத்தைப் பொறுத்த வரை, சென்னை மாகாணத்தை, அல்லது தமிழகத்தைந் தனிநாடாக பிரிக்கக் கோரிய முதற்குரல் பெரியாருடையது.

இந்திய வரைபடத்தை அனைத்து மாநிலங்களும் எரிக்க கோரினார்!

1928லிருந்தே இந்தியா ஒரு நேஷனா? என்ற கேள்வியை எழுப்பி வந்திருக்கிறார். “இந்தியா” என்பது தமிழர்களுக்குப் பகை சக்தி என்பதை முதன்முதலாகப் புரிய வைத்தவர் பெரியார். இந்தியாவிலிருந்து, அவர் குறிப்பிடும் திராவிட நாடு என்ற சென்னை மாகாணம், 1956க்குப் பின்னர் தமிழ்நாடு, பிரிந்தே ஆக வேண்டும்; அதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தம் இறப்பு வரைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். இந்தியா என்ற கட்டமைப்பு இருக்கும் வரை எந்த சமத்துவமும் சாத்தியமில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார். தமிழ்நாடு நீங்கிய இந்திய வரைபடத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்த பெரியார், உத்தரப் பிரதேசத்துக்குச் சென்று, இந்திய வரைபடத்தில் உத்தரபிரதேசத்தை மட்டும் கத்தரித்து எடுத்துவிட்டு, எரிக்கும்படி பிரச்சாரம் செய்தார். உத்திரப் பிரதேச மாநிலத்தில், 1959ஆம் ஆண்டு ஒரு பிரச்சாரப் பயணத்தை மேற்கெண்ட பெரியார், கான்பூரில் நடைபெற்ற விழாவில்,

“இந்த ஆட்சியில் நாம் இருந்துகெண்டு சாதியை ஒழிக்க முடியாது. எனவே இந்திய தேசப்படத்தில் தமிழ்நாட்டை மட்டும் கத்தரித்து எடுத்துவிட்டு மற்ற பாகத்தை நெருப்பு வைத்து எரிப்பது என்று தீர்மானித்து உள்ளோம். இப்படி எரிப்பதன் மூலம் உங்களின் உ.பி.யும் கூடத்தான் சேர்த்து எரிக்கப்படும். இதனால் மற்ற நாட்டை வெறுத்து எரிப்பது என்பதாகாது. நீங்களும் கூட சாதி ஒழிப்பிற்காக-பார்ப்பனர்களின் ஆதிக்க ஒழிப்பிற்காக நேரு ஆட்சியிலிருந்து விடுபட உங்கள் உத்திரப்பிரதேசத்தை மட்டும் கத்தரித்து எடுத்து விட்டு பாக்கிப் பகுதிகளைக் கொளுத்தலாம்” (விடுதலை, 21.02.1959). பெரியாரின் சாரம் விடுதலை என்பதுதான்.

இந்தியா நேஷன் அல்ல; தமிழ்நாடு ஒரு நேஷன்!

இந்தியா ஒரு நேஷன் என்பதை மறுக்கும் பெரியார், ஆந்திரா, திராவிடநாடு, வங்காளம் ஆகியவற்றை நேஷன்கள் என்று அழைக்கிறார். அதுதான் உண்மையும் கூட. ஆந்திராவை, தனியாகவும் திராவிட நாட்டைத் தனியாகவும் அவர் கூறுவதால், தமிழ்நாட்டைக் குறிக்கும் சொல்லாக திராவிடநாடு என்ற சொல்லை இவ்விடத்தில் அவர் பயன்படுத்தி இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

“இந்தியா ஒரு நேஷன் என்று செல்வதைவிட, திராவிட நாடு ஒரு நேஷன், ஆந்திரநாடு ஒரு நேஷன், வங்காளநாடு ஒரு நேஷன் என்று சொன்னாலும் பெருந்தும். உதாரணமாக திராவிட நாட்டை எடுத்துக் கெண்டால் திராவிடநாடு தனிக்கலை, தனிமொழி, தனி நாகரிகம், தனி ஆட்சியின்கீழ் ஆயிரக்கணக்கான வருஷங்கள் இருந்து வந்ததென்று சரித்திரம் சாற்றுகிறதென்பதை யாராலும் மறைக்க முடியாது.”

“56 வித்தியாசமான ஆட்சிகளின்கீழ் இருந்துவரும் ஒரு நாட்டை ஒரு நேஷன் என்று செல்லி எல்லா மக்களையும் ஒன்றுபடுத்தி, அன்னியனிடமிருந்து விடுதலையடைந்து கொண்டு, ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரை சவாரி செய்யலாம் என்றால், இதை யார் ஒப்புக்கொள்வார்கள் என்று கேட்கிறோம்” (குடிஅரசு, தலையங்கம்-28.01.1940).

“இதில் பெரியார் “திராவிட நாடு” என்று சொல்லியிருக்கும் சொல்லை ஒருவர் ஏற்க வேண்டிய தேவையில்லை. ஆனால் அவர் பேசுகிற விடுதலைக் கருத்தியலை ஏற்க வேண்டு மல்லவா? பெரியார் திராவிட நாடு என்று கூறுவதை ஏற்க முடியாது என்றால், அதைத் தமிழ்நாடு என்று மாற்றி, விடுதலைக் கோரிக்கையின் சாரத்தை இழந்து விடாமல், இறையாண்மை அரசியலைக் கைக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

சூத்திரப் பட்டத்தைப் போக்கிக் கொள்ள எஞ்சியிருக்கும் ஒரே வழி பிரிவினை!

மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்திய இந்து மதவெறி பெண் சாமியார் பிரக்யா சிங் சமீபத்தில் “சூத்திரர் கள் என்று கூறினால், அது தவறல்ல; சூத்திரர்கள் அதை ஏற்கவேண்டும்” என்று பேசியிருக்கிறார். ஒருவன் தன்னை இந்து என்று ஏற்றுக்கொள்ளும்போது, இயல்பாகவே, ஒரு பிரிவுக்காரன் தன்னை பிராமணனாக அறிவிக்கிறான். தவிர்க்கவியலாதபடி இன்னொரு பிரிவினர் தங்களை சூத்திரர்களாக ஏற்கவேண்டியுள்ளது. இது நடைமுறையில் இருப்பது மட்டுமின்றி, சட்டப்பூர்வமாகவும் நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது. இந்நிலையில் சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமர் பட்டத்தையும் ஒழித்துக்கட்ட, இந்தியாவில் இருந்தே நாம் ஒழிந்தாக வேண்டும்; தமிழ்நாடு பிரிவினைத் தவிர வேறு வழியில்லை என்ற பார்வையை பெரியார் இறக்கும்வரை கொண்டிருந்தார்.

தவிர்க்கவியலாதபடி, சமூக சமத்துவத்தைப் பெறுவதற்குப் பிரிவினை தவிர வேறு வழியில்லை என்பதையும், தமிழ்நாடு விடுதலை பெற்றுத்தான் ஆகவேண்டும் என்பதையும் பெரியார் இவ்வாறு பதிவு செய்தார் :

“நான் முதலில், நான் இந்து அல்ல என்று சொல்லி விட்டால் இழிவு நீங்கிவிடும் என்று தான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனை வரும் இந்துக்கள்-இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலா லேயே தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில்தான் முக்கியக் கவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படு கிறார்கள். காரணம் பதவி கிடைக்காதே என்கின்ற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்று பயப்படுகிறார்கள். 50 வருட காலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு, பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல், சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு நல்ல அளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்”

எனவே, நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும், சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்துகொண்டு முன்வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளையன் ஒழிந்ததுபோல் வடநாட்டானும் ஒழிய வேண்டாமா இந்நாட்டைவிட்டு? இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின் எதற்காக ஒரு இமயமலைப் பார்ப்பான், ஒரு வடநாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்? எதற்காக வடநாட்டவர்கள் இங்கிருந்து நம்மைச் சுரண்டி வரவேண்டும்? கேட்பாரில் லையோ? இத்தமிழ்நாட்டில் எதற்காக இந்நாட்டை வட நாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துவிட்டு இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வரவேண்டும்? வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தா யினும் உங்களுக்கு புத்திவரக்கூடாதா? -பெரியார், விடுதலை (19.10.1948).

1938இல் பெரியாரின் பார்வை இது

“பாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளைப் பாழாக்கி விட்டோம். நாட்டையும் மக்கள் சமூகத்தையும் உண்மையாய் மேன்மையடையச் செய்ய முயற்சித்த ஒப்பற்ற பெரியார்களை நாஸ்திகன், தேசத் துரோகி, மக்கள் துரேகி, சுயநலக்காரன் என்றெல்லாம் வைது அவர்கள் பாடு பயன்படாத முறையில் செய்துவிட்டோம்.

உதைக்கும் காலுக்கும் முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்! மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றா னுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத்தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வடநாட்டானுக்கும் தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகி விட்டோம்.

இனியாவது ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தேறும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்ட தோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை இழிதன்மை வேறு என்ன என சிந்தியுங்கள். “புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!! ‘தமிழ்நாடு தமிழருக்கே!’” (பெரியார், குடிஅரசு தலையங்கம், 23.10.1938).

1950இல் பெரியாரின் பார்வை

“இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்க லாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்ற வனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்துவிடமாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினைக் கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினைக் கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்கவிடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விடவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்” (பெரியார், சென்னை சைதாப்பேட்டை சொற்பொழிவு, 27.11.1950).

அடுத்த தலைமுறையை அவர் அதிகம் நம்பிவிட்டார் என்று தோன்றுகிறது. கிழவனாகிய தான் வாயளவில் கேட்பதை, இளைஞர்களாகிய அடுத்த தலைமுறை கையில் கருவிகளோடு களத்தில் நின்று கேட்கும் என்று நம்பினார். ஆனால் அடுத்த தலைமுறை பின்னோக்கி தலைதெறிக்க ஓடும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

1973இல் இறப்புக்கு முன்பும் பெரியார் பார்வை இதுதான்

“நாம் உடனடியாக விடுதலை பெற்று, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்தரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சியில் இன்றைய திமுக ஆட்சி இணங்கும் என்று கூறமுடியாது. ஏனெனில் அது இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்துக்கு உட்பட்ட மாகாண சுயாட்சியை விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ளமுடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது” -(95வது பிறந்தநாள் மலரில் பெரியார்).

“எங்களை ஆள எங்கள் நாட்டில் அறிவாளிகள் உண்டு. எங்கள் நாட்டில் எங்களைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த போர்வீரர்கள் உண்டு. நாங்கள் ஆண்ட இனத் தைச் சேர்ந்தவர்கள். ஆதலால், எங்களுக்குத் தனித்திருக்கச் சகல வசதிகளும் உண்டு.

ஆகவே, ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் கூப்பாடு போடுகிறதாம்' என்பதுபோல, நீங்கள் எங்களுக்காகப் பரிதாபப்படாமல் பிரித்துக் கொடுத்துப் பாருங்கள்! (பெரியார், ஆழியூர் சொற்பொழிவு, 10.1.1948).

நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தமிழ்த்தேசிய இலக்கு

தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் பகை சக்தி என்பது இந்தியமும், இந்தியாவும் தான் என்பதை பெரியார் மிகத் தெளிவாகக் கூறினார். நம்மை இந்து என்றும் இந்தியர் என்றும் கூறிக்கொள்ளும்வரை நம்முடைய இழிவு நீங்கப் போவதில்லை என்று தெளிவுபடுத்தினார்.

பெரியார் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் விடுதலைக் கருத்தியலை பாவலரேறு பெருஞ்சித்திரனார் முழுமையாகப் பேசினார். அவரே விடுதலைக்கான களப் போராட்டத்திற்கும் வழிவகுத்தார்.

1970களில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் களமாடிய புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்டோர், 1980களில் தமிழ்த் தேசிய விடுதலைக்கான கருவிப்போரைத் தொடங்கினர்.

இவ்வாறு கருத்தியல் ரீதியாகவும், களப் போராட்ட மாகவும், கருவி போராகவும் முன்னமே தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போது அவற்றை யெல்லாம் புறந்தள்ளிவிட்டு இந்தியத்துக்கு இணக்கமாக, இந்திய அரசியல் சட்டத்துக்குள் தம்மை ஒடுக்கிக்கொண்டு, மாநில அளவில் கங்காணி அரசுகளை அமைத்தாலே போதும் என்று நம்முடைய வேலைத்திட்டத்தைக் குறுக்கிக் கொள்ளும் அரசியல் என்பது ஒரு பின்னோக்கிய பயணம் ஆகும்.

பெரியாரிடத்தில் ஏற்கமுடியாத பிற்போக்குத்தனமான கருத்துகள் இருக்குமானால், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, ஏற்க வேண்டியவற்றை ஏற்றுக்கொண்டு, தோழர் தமிழரசன் உள்ளிட்டோரின் பாதையில் செப்பம் செய்ய வேண்டியவை இருந்தால் அவற்றை செப்பம் செய்து, தவிர்க்க வேண்டியவை இருந்தால் தவிர்த்துவிட்டு, தமிழ்த் தேசிய விடுதலைப் போரை முன்னோக்கிச் செலுத்துவது என்பதே சரியான பார்வையாகும்.

அவ்வாறின்றி, ஏனைய தேர்தல் கட்சிகளைப் போலவே முளைவிடும் கட்சிகளும் இந்தியத்துக்குள் இணக்க அரசியல் செய்ய முனைவது என்பது தமிழ்த்தேசிய இனத்தின் அடிமைத்தனத்தை மேலும் உறுதிப்படுத்தும் முயற்சியே ஆகும். தமிழ்த்தேச விடுதலைக்காகப் பலர் தங்கள் வாழ் நாள் முழுவதையும் செலவிட்டிருக்கும் நிலையில், அவர்கள் நிர்ணயித்த இலக்கை விடவும் சிறியதாக ஒன்றைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆர்ப்பரிப்பது அவமானகர மானதாகும்.

கட்சிகளின் பின்னோக்கியப் பயணம்

பெரியார், அறிஞர் அண்ணா வாழ்ந்த காலத்தை விட, இந்திய அரசின் இந்தி சமஸ்கிருத மொழிவெறியும், இந்துத்துவ-பார்ப்பனீய மேலாண்மை வெறியும், வருண தர்மத்தை நிலைப்படுத்தும் இந்து ராஷ்டிரா படைப்பதற்கான வேகமும், தமிழ் மொழி அழிப்பு வேகமும், தமிழ்நாட்டின் தொழில் ­வணிக வாய்ப்புகள் பறிப்பும், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் சூறையின் வேகமும், பல நூறு மடங்கு அதிகரித்துள்ளன. பெரியார், அறிஞர் அண்ணா காலத்திலேயே தனிநாடு கோரிக்கைக்கான காரணங்கள் மறுக்கவியலாதபடி வலுவாக இருந்ததாக அவர்கள் கருதினார்கள் என்றால், இப்போது அதற்கான காரணங்கள் மேலும் வலுவடைந்து உள்ளன. இந்நிலையில் பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், புலவர் கலிய பெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்டோர் உயர்த்திப் பிடித்த இலக்குகளிலிருந்து பின்னோக்கித் தலைதெறிக்க ஓடுவது என்றால், அதற்கான காரணத்தை இப்படிப் புரிந்து கொள்ளலாம். விடுதலை அரசியல் நடத்துவது ஆபத்தானது; இளைஞர்களுக்கு உணர்ச்சியை ஊட்டி அதேசமயம் இந்தியத் துக்கு இணக்கமாக, நோகாமல் அரசியல் நடத்துவது கொஞ்சம் எளிதானது மற்றும் வசதியானது என்ற பார்வையும், வாழும் காலம் வரை கொஞ்சம் வெளிச்சத்தில் மற்றும் வசதியோடு வாழ்ந்து விட்டுப் போகலாம் என்கிற பிழைப்புவாத அரசியலில் உள்ள ஈடுபாடும் மட்டுமே என்று எளிதாகக் கூறி விடலாம்.

பரிணாம வளர்ச்சியைப் புரட்டுவதா? மனிதனை மீண்டும் குரங்கு ஆக்க முயற்சிக்கலாமா?

ஒன்றை உணர வேண்டும். குரங்கிலிருந்து மனிதன் பிறந்துவிட்டான். பிறந்த மனிதனை மீண்டும் குரங்காக்க முயற்சிக்கக்கூடாது. கடந்த தலைமுறை தலைவர்கள் நிர்ணயித்த இலக்கை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதுதான் தமிழ்த் தேசியத்தின் அரசியலாக இருக்க வேண்டும். அவ்வாறின்றி ஆரியத்தின் அரசியல் வடிவமான இந்தியத்தின் கீழ்நிலைப் பங்காளியாக அரசியல் நடத்த முயற்சிக்கக் கூடாது.

தந்தை பெரியாரின் பிறந்த நாளில், அவர் பேசிய விடுதலைச் சிந்தனைகள் தமிழ் மக்களின் சிந்தையைத் தொடட்டும்!

- பேராசிரியர் த.செயராமன், நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்

Pin It