இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இன எழுச்சியில் காசுமீரம், வட கிழக்கு நீங்கலாகத் தமிழ்த் தேசம்தான் எப்போதுமே முன்னணியில் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் பிரித்தானியக் காலனியாதிக்கத்தின் போதே ஒருபுறம் முற்போக்கான இந்தியத் தேசியத்தின் உறுப்பாகவும், மறுபுறம் பிற்போக்கான இந்தியத் தேசியத்தின் மறுப்பாகவும் தமிழ்த் தேசியம் முகிழ்த்தது.
இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் மொழிப் போராட்டத்தின் போது தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கம் பிறந்தது. இதுவே தமிழ்த் தேசியத்தின் முதல் அரசியல் முழக்கம். இடைக்காலத்தில் திராவிடம் என்பது தமிழ்த் தேசியத்தின் உருத்திரிந்த வெளிப்பாடாகவே இருந்தது. தமிழ்த் தேசிய இனத்தின் தன்தீர்வுரிமை (சுய நிர்ணய உரிமை), விடுதலை என்ற குறிக்கோள்களோடு பிறந்த இயக்கங்கள் பதவி அரசியலில் சிக்கி இந்தியத்திடமோ திராவிடத்திடமோ அடைக்கலமாகிப் போயின.
1965 தமிழக மாணவர்களும் மக்களும் நடத்திய ஈகஞ்செறிந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது உண்மையில் தமிழ்த் தேசிய எழுச்சியாகவே அமைந்தது. இந்த எழுச்சியலையின் விளிம்பேறித்தான் தமிழ்நாட்டின் மாநில ஆட்சியை திமுக கைப்பற்றியது. அத்தோடு தமிழ் மக்களின் தேசிய எழுச்சியும் வற்றங்கண்டது. அது மீண்டும் ஏற்றங்கண்டு எழக் காரணம் ஈழத்தின் 1983 கறுப்பு யூலைதான்.
தமிழீழத்திலிருந்து வரும் செய்திகள் எப்போதும் தமிழகத்தில் எதிரடிப்பது இயல்புதான். 1972இல் சிங்களப் பேரின மேலாட்சியத்தின் சட்ட வடிவமாகப் புதிய அரசமைப்பு இயற்றப்பட்டு சிறிலங்கக் குடியரசு அறிவிக்கப்பட்ட போது தந்தை செல்வா தமிழ்நாட்டுக்கு வந்து தந்தை பெரியாரை சந்தித்ததும் அப்போது பெரியார் “நாங்களும் அடிமையாகத்தான் இருக்கிறோம்” என்று கூறியதும் வரலாற்று வழியில் பொருள்பொதிந்த நிகழ்வுகளாகும்.
1976 வட்டுக்கோட்டை தீர்மானமும், 1977 பொதுத் தேர்தலில் தமிழீழத் தனியரசுக் குறிக்கோளுக்கு மக்கள் தந்த குடியாட்சியக் கட்டளையும் தமிழகத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்ட நிகழ்வுகள். தமிழ்மக்களின் அரசியல் வேணவாவுக்குச் சிங்கள அரசு ஆறாம் சட்டத்திருத்த வடிவில் தடை போட்டு அறப்போராட்ட வழிகள் அனைத்தையும் அடைத்துப் பூட்டி விட்ட போது ஆய்தப் போராட்டம் தவிர்க்க முடியாததாயிற்று. சிங்கள அரசின் அடக்குமுறை ஒருபுறம் 1983 கறுப்பு யூலையில் உச்சம் கண்டு அரசத் திகிலியமாக (அரசப் பயங்கரவாதமாக) முற்றியது என்றால், மறுபுறம் ஆய்தப் போரட்ட ஊழி முழுமையாக வந்து விட்டது என்பதை தமிழ்மக்களுக்கு உணர்த்துவதாகக் கறுப்பு யூலை அமைந்தது.
இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு தேசிய இனம், அதிலும் தமிழினம் விடுதலை பெறும் வாய்ப்பை இந்தியப் பேரரசால் ஏற்க முடியவில்லை. அதேபோது தெற்காசியப் பகுதியில் ஈழச் சிக்கலைத் தன் புவிசார் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆசை அதற்கு எப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. இன்னுங்கூட முகமையான ஒரு காரணி தமிழகத்தின் எழுச்சியையும் அதனால் விளையும் அழுத்தத்தையும் இந்திய அரசால் அலட்சியம் செய்ய முடியவில்லை. போராளிக் குழுக்களுக்குப் பயிற்சி உள்ளிட்ட உதவிகள், அதே போது உளவுத்துறை வழியாக ஊடுருவும் முயற்சிகள், எந்நிலையிலும் ஒன்றுபட்ட இலங்கை என்ற பெயரில் ஒற்றையாட்சிக்குப் பணிந்து போகும் கருத்தை வலியுறுத்துதல்… இந்தப் போக்கை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்தது.
1985 திம்பு பேச்சு வாயிலாக ஒன்றுபட்ட ஒற்றையாட்சி இலங்கைக்குள் ஒரு சரணாகதித் தீர்வைத் திணிக்க முயன்று தோற்றது இந்தியா. மறுபுறம் தமிழீழ அரசியலுக்கு ஒன்றுபட்டதொரு கொள்கை அடிப்படை திம்புவிலிருந்து கிடைத்தது. தமிழீழ மக்களைத் தேசிய இனமாகவும் வடக்கு கிழக்கை அவ்வினத்தின் வரலாற்றுத் தாயகமாகவும் ஏற்றுக் கொள்ளல், அம்மக்களின் தன்தீர்வுரிமையை அறிந்தேற்றல், இலங்கைத் தீவு எங்கிலும் தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகளை ஏற்றல் என்ற நான்கு சிறுமக் (குறைந்தபட்ச) கோரிக்கைகள் அடிப்படைக் கொள்கைகளாக வரையறுக்கப்பட்டன. வட்டுக்கோட்டை தீர்மானம், 1977 தேர்தல் முடிவு என்ற வரிசையில் திம்புக் கொள்கைகள் தமிழீழத்துக்கான கருத்தியல் உறுதிப்பாட்டுக்கு அளவுகோல்கள் ஆயின.
1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் உட்பட ஒவ்வொரு தீர்வுப் பொதியும் போராடும் ஆற்றல்களின் கொள்கையுறுதிக்குத் தேர்வு வைத்த போது பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மட்டுமே அந்த வரலாற்றுத் தேர்வில் வெற்றியுடன் வெளிப்போந்தனர். இந்த உண்மையைக் காலப்போக்கில் மாற்றாரும் ஏற்க வேண்டியதாயிற்று.
அமைதிப் படை என்ற பெயரில் இந்தியா ஈழ மண்ணை வன்கவர்வு செய்த போது, பொதுவாகத் தமிழக மக்கள் புலிகளிடமே பரிவு கொண்டிருந்தார்கள். இந்த ஒரு நேர்வில் மட்டுமே ஒரு போரில் இந்தியப் படை தோற்க வேண்டும் என்று தமிழக மக்கள் உண்மையிலேயே விரும்பினார்கள். இந்தியாவின் தொடர்ச்சியான பொய்ப்பரப்புரை தமிழக மக்களிடம் எடுபடவில்லை. திலீபனின் ஈடிணையற்ற ஈகம் தமிழகத்தில் கொண்ட தாக்கம் சொல்லில் அடங்காது.
இடையில் நடந்த இராசிவ் கொலை என்னும் அந்தத் துன்பியல் நிகழ்ச்சி தமிழகத்தில் தமிழீழ ஆதரவு இயக்கத்துக்கு மட்டுமின்றி, பொதுவாகத் தமிழ்த்தேசிய இயக்கத்துக்கே பெரும் பின்னடைவைத் தோற்றுவித்தது. இன்றளவும் நம் இனப் பகைவர்கள் இராசிவ் பெயரைச் சொல்லி அரசியல் செய்வது முடியவில்லை. இராசிவ் கொலைக்குப் பின் பொய்யான காரணங்களுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை (இன்றளவும்) தொடர்ந்த போதிலும் இந்தத் தடையையும் மீறித் தமிழக மக்கள் ஈழ விடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தே வந்தார்கள். 2002 முதலான போர்நிறுத்தக் காலத்தில் தமிழகத்துக்கும் தமிழீழத்துக்குமான உறவுகள் வலுப்பெற்று நம்மையெல்லாம் உவகை கொள்ளச் செய்தன.
ஆனால் சிங்கள ஆட்சியாளர்களும் இந்திய ஆட்சியாளர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் முன்னணிப் படையாகிய விடுதலைப்புலிகளையும் நசுக்கியழிக்கத் திட்டமிட்டு அணியமாகிக் கொண்டிருந்தார்கள். 2008-09இல் இராசபட்சே நடத்திய இனவழிப்புப் போர் குறித்துச் சொல்ல வேண்டியதனைத்தும் சொல்லியாகி விட்டது. ”போரை நிறுத்து!” என்ற ஒற்றைக் கோரிக்கைக்காகத் தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் கிளர்ந்தெழுந்து போராடினார்கள். வீரத்தமிழன் முத்துக்குமார் தொடங்கி 18 தமிழர்கள் தீக்குளித்து மாண்டார்கள். இந்திய அரசு அசைந்து கொடுக்கவே இல்லை என்பது மட்டுமல்ல, சிங்கள அரசுக்குப் பின்னாலிருந்து போரையே நடத்தியது. மாநில அரசு போரை நிறுத்தக் கோரும் தமிழ்மக்களின் போராட்டங்களை அடக்கி ஒடுக்கியதோடு, அன்றைய மாநில முதல்வர் நயவஞ்சகமாக நாடகமாடி சிங்கள, இந்தியக் கொலைகாரர்களுக்கு உடந்தையாகவும் இருந்தார்.
முள்ளிவாய்க்கால் முன்னும் பின்னும் என்ற தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு குறுநூல் 2010இல் எழுதினேன். முள்ளிவாய்க்காலில் தமிழீழத்துக்கான வரலாற்றுத் தேவை மூழ்கிப் போய் விடவில்லை. பார்க்கப் போனால் அந்தத் தேவை பன்மடங்கு பெருகியே உள்ளது. ஆனால் அந்தத் தேவையை நிறைவு செய்வதற்கான அடிப்படை ஆற்றலாகிய தமிழீழ மக்கள் இனவழிப்பால் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கும் நிலையைச் சுட்டி இந்த முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பது குறித்து அந்நூலில் விவாதித்திருந்தேன்.
கடந்த பத்தாண்டு காலத்தில் இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரும் போராட்டத்தில் நாம் எந்த அளவுக்கு முன்சென்றுள்ளோம்? ஐநாவோ உலக நாடுகளோ நடந்தது இனவழிப்பு என்ற உண்மையை அறிந்தேற்கவே இல்லை. தமிழக மக்களாகிய நம்மால் இந்திய அரசைக் கூட இவ்வகையில் நெருக்கியழுத்தி இனவழிப்பு என்ற உண்மையை ஏற்கச் செய்ய முடியவில்லை. இப்படிப் பார்த்தால் இது தோல்விதான். ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் நீதிக்கான போராட்டம் எளியதன்று. அது மலையேற்றம் போல் கடினமானது. அரும்பாடுபட்டு சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம். ஐநா மனிதவுரிமைப் பேரவையின் 2009, 2012 அமர்வுகளுக்குப் பின் 2013 அமர்வின் போது தமிழகம் விழித்துக் கொண்டது. பாலச்சந்திரன், இசைப்பிரியா படங்களோடு மாணவர்கள் இளைஞர்கள் தெருவிலிறங்கிப் போராடினார்கள். இந்தப் போராட்டங்கள் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களோடு சேர்ந்து தாயகத்திலும் மக்கள் போராடுவதற்கு வழியும் வெளியும் அமைத்துக் கொடுத்தன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றக் கோரி நடத்திய கையொப்ப இயக்கத்தில் உலகெங்கும் 14 இலட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் மட்டும் பத்து இலட்சம்!
சிங்கள அரசு பொறுப்புக் கூறலுக்கோ மீளிணக்கத்துக்கோ சிறிதளவும் முன்வரவில்லை என்பதை உலகம் கண்டது. 2014இல் முகமையான ஒரு முன்னேற்றம் காண முடிந்தது. ஐநா மனிதவுரிமை உயராணையர் அலுவலகம் சிறிலங்கா குறித்துப் புலனாய்வு செய்யப் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்தப் புலனாய்வில் விளைந்த அறிக்கை (OISL Report எனப்படுவது) தமிழர்களின் போராட்டத்தால் கிடைத்துள்ள அருமையானதொரு படைக்கலன்! நீதிக்கும் விடுதலைக்குமான படைக்கலன்!
இந்த அறிக்கைக்குப் பிறகு பன்னாட்டு அரங்கில் நடந்திருப்பவை மிகவும் அண்மைய வரலாறு என்பதால் விரிவஞ்சித் தவிர்க்கிறேன், ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் சிறிலங்காவின் நிலை புதைச்சேற்றில் கால்வைத்த யானையின் நிலையைப் போன்றது. தன்னை ஒப்புக்குக் குறை சொல்வது போன்ற தீர்மானங்களைக் கூட எதிர்த்து வாக்களித்து வந்த அந்நாடு 2015 அக்டோபர் தொடங்கி தானும் மற்ற அரசுகளோடு சேர்ந்து கூட்டாகத் தீர்மானமியற்றுவது (co-sponsor) என்ற வழியைக் கையாளத் தொடங்கிற்று. இப்படித்தான் 2015 அக்டோபர் தீர்மானத்தில் ”நிலைமாற்ற நீதிப்பொறிமுறைகளில் காமன்வெல்த் உள்ளிட்ட அயல்நாட்டுப் பங்கேற்பை” ஏற்றுக் கொள்ள உறுதியளித்தது. ஆனால் அது இந்த வகையில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதற்கு ஒவ்வொரு முறையும் ஐநா மனிதவுரிமை உயராணையர் அளித்துள்ள அறிக்கைகளே சான்று. இப்போதைய உயராணையர் மிசேல் பசலே ஜெரியா அம்மையார் கடைசியாக இந்த ஆண்டு அளித்த அறிக்கையை மதிக்காமல்தான் உலக நாட்டாமைகளான வல்லரசுகள் சிறிலங்காவுக்கு முட்டுக் கொடுத்துள்ளன. சிறிலங்கா தானும் சேர்ந்து கூட்டாகத் தீர்மானம் கொண்டுவருவதால் அதை மதித்து நடக்கும் என்று கருதவேண்டாம். இதை ஐநா மனிதவுரிமைப் பேரவையிலேயே அந்த நாட்டின் அயலுறவு அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்கிறார், ஏனென்றால் பன்னாட்டுப் பங்கேற்புடனான நீதிப்பொறிமுறைக்கு சிறிலங்காவின் சட்ட அமைப்பில் இடமில்லையாம். இனவழிப்புச் செய்வதற்கும் போர்க்குற்றங்கள் புரிவதற்கும் குழந்தைகள் உள்ளிட்ட சரணடைந்தவர்களைக் காணாமலடிப்பதற்கும் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வதற்கும் அந்தச் சட்ட அமைப்பில் இடமுண்டா என்று கேட்க அந்தப் பேரவையில் ஒரு நாதியில்லை.
இனவழிப்புச் செய்தும் போர்க்குற்றங்கள் புரிந்தும் நிலம்பறித்தும் போர்க்கைதிகளை சிறையிலடைத்தும் பிடிபட்டவர்களையும் சரணடைந்தவர்களையும் காணாமலடித்தும் படைகளைக் குவித்து வைத்தும் சிங்கள அரசு சாதித்தது என்ன? தமிழ் மக்கள் போராட்டத்தை ஒடுக்க அதனால் முடிந்ததா? இல்லை. இல்லவே இல்லை. தமிழ்த் தலைமைகளை வேண்டுமானால் தன்னக்கட்டலாம், தமிழ் மக்களைத் தன்னக்கட்ட முடியாது என்பதை ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். தாயகமாகவும் புலம்பெயர் தமிழுலகமாகவும் பிரிந்து கிடக்கும் தமிழீழத் தேசம் விடாமல் போராடி வருகிறது. புதிய சூழலுக்கேற்ற புதிய குடியாட்சிய (ஜனநாயக) அமைப்பு வடிவங்களை அது வார்த்துக் கொண்டுள்ளது. தமிழகம் தக்க புரிதலோடு இந்தப் போராட்ட முயற்சிகளில் தோழமை கொண்டு நிற்கிறது.
சிறிலங்காவை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றும் கோரிக்கை அடைய முடியாத இலக்கன்று. ஐநாவின் கையிலிருக்கும் சான்றுகள் உலகம் தன் மடியில் கட்டி வைத்திருக்கும் குண்டுகளைப் போன்றவை. அடிமேல் அடிகொடுத்துப் போராடும் உறுதியும் தெளிவும் நமக்கிருந்தால் போதும் நீதிக்கான போராட்டம் வெற்றி நோக்கி முன்னேறும்.
போராட்டங்களை இல்லாமற்செய்ய முடியவில்லை என்பது சிங்கள அரசின் முதல் தோல்வி என்றால், ஏற்புடைய அரசியல் தீர்வு எதையும் முன்வைக்க முடியவில்லை என்பது இரண்டாம் தோல்வியாகும். இருபெரும் சிங்களக் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைத்து விட்டதால் அரசியல் தீர்வு இதோ தொட்டு விடும் தூரம்தான் என்று வித்தை காட்டியவர்கள் ஏமாந்தே போனார்கள். புதிய அரசமைப்புவழி ’சமஷ்டி’த் தீர்வு என்பதெல்லாம் பகற்கனவாகவே கரைந்து போய் விட்டது. சிங்கத்தின் வாலை நிமிர்த்த முடியாது என்று மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. ஈழம் தவிர எல்லாம் தருவதாகச் சொன்னவர் இரணசிங்க பிரேமதாசா. அவராலும் சரி, எந்த சிங்களத் தலைவராலும் தமிழ்மக்கள் ஏற்கும் படியான எந்தத் தீர்வும் தர முடியவில்லை. தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற முப்பெரும் தூண்களை விடுத்து வேறு ஏதேதோ ’நான்கு தூண்’ கொள்கை பேசியவர்கள் காணாமல் போய் விட்டார்கள்.
இப்போது இந்தியாவின் தயவில் தீர்வு விரைவில் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆசை காட்டுகிறார். எது தீர்வு என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்தட்டும். அதை இந்தியா எப்படி எங்கே வாங்கிக் கொடுக்கும் என்பதையும் விளக்கிச் சொல்லட்டும். அரசதந்திரம் என்பதன் பொருள் வல்லரசுகளைக் காக்காய் பிடிப்பதன்று. இலங்கை இந்தியப் பெருங்கடலின் நடுவில் உள்ளதென்றால் தமிழீழமும் தமிழகமும் கூட அதே இடத்தில்தான் உள்ளன. தெற்காசியாவில் எவரின் ஞாயமான புவிசார் அரசியல் நலனுக்கும் தமிழீழத்தால் கேடில்லை என்கிறோம். பொறுப்புக்கூறலும் நீதியும் சார்ந்த மீளிணக்கத்துக்குத் தமிழ்மக்கள் எதிரானவர்கள் அல்ல. இனவழிப்பின் வழியிலன்று, இனவழிப்புக்கு நீதி கிடைக்கச் செய்வதன் வழியில்தான் உண்மையான மீளிணக்கமும் அமைதியும் வயப்படும்.
தமிழீழத்துக்கு மாற்று என்று எதையும் முன்னிறுத்துவதில் சிங்களத் தலைமை தோற்று விட்ட நிலையில் தமிழ்த் தேசிய இனம் தன் வாழ்வைத்தானே தீர்வு செய்து கொள்ளும் தன்தீர்வுரிமையைப் பயன்படுத்தி ஒரு பொதுவாக்கெடுப்பின் ஊடாகத் தனக்கு வேண்டிய அரசியல் தீர்வை தானே அடைந்து கொள்ளப் பன்னாட்டுலகம் வழி செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைக்கான போராட்டத்தை பாக்கு நீரிணையின் இரு புறமும் மட்டுமன்று, தமிழர் வாழும் புவிப் பரப்பெங்கும் முன்னெடுப்போம்.
தமிழீழம் மட்டுமன்று, உலகெங்கும் அரசுகளற்ற தேசங்கள் இறைமை மீட்புக்காகப் போராடி வருகின்றன. இந்தியாவில் தமிழகமும் அந்த வரிசையில்தான் வருகிறது. ஆற்றுநீர் உரிமை, காற்றுத் தூய்மைக்கான உரிமை, கல்வியுரிமை, சமூக நீதியுரிமை, மொழியுரிமை, பண்பாட்டுரிமை… ஒவ்வொன்றுக்காகவும் ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழீழம் பற்றி நாங்கள் தெரிந்து வைத்திருப்பது போல் தமிழகம் பற்றி நீங்கள் தெரிந்து வைத்துள்ளீர்களா? என்று ஈழத்தமிழர் ஒவ்வொருவரிடமும் கேட்பேன். தமிழகம் என்பது வெறும் திரையுலகம் அன்று, தமிழகம் என்பது வானத்தையே வில்லாக வளைக்கும் சொல்வித்தைக்காரர்களின் தேர்தல் அரசியல் களம் மட்டுமன்று. கூடங்குளமும் நெடுவாசலும் கதிராமங்கலமும் தூத்துக்குடியும் தமிழகத்தில்தான் உள்ளன. நாங்கள் கோப்பப்பிலவு போராட்டம் பற்றி அறிவோம். நீங்கள் கூடங்குளம் போராட்டம் பற்றி அறிவீர்களா?
தமிழீழமும் தமிழகமும் ஒரே தமிழ்க்கொடியில் பூத்த இரு மலர்கள். இரண்டுமே கனல் மணக்கும் பூக்கள். இந்த நூற்றாண்டின் முதல் இனவழிப்புக்கு நம் தமிழினம் முகங்கொடுத்துள்ளது, இனியோர் இனவழிப்பு இப்புவியில் நிகழக்கூடாது என்பதை உறுதிசெய்யும் பெருங்கடன் பட்டு நிற்கிறோம். இவ்வகையில் புவியுலகிற்கே புதுவழி காட்ட நம்மிரு தேசங்களுக்கும் வாய்த்துள்ளது. நமது தோழமை என்பது பூங்காவில் காற்று வாங்கும் தோழமையன்று, போராட்டப் புயல் வீச்சில் கைகோத்துச் செல்லும் தோழமை. நாம் ஒரு கூட்டுச் சாலையில் நிற்கிறோம். இங்கே நம்முன் இருவழிகள்: நீதிக்கும் விடுமைக்குமான போராட்டம் ஒரு வழி. ஆண்டைகளிடம் அடைக்கலமாகி இடுகாட்டின் அமைதியைத் தழுவிக் கொள்வது மறுவழி. என்ன செய்யப் போகிறோம்?
- தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்