தேசிய இனங்கள் எழுச்சி கொள்ளும் காலமிது. ஈராக் நாட்டில் இருந்து குர்திஸ்தானும், ஸ்பெயின் நாட்டின் பிடியிலிருந்து கேட்டலோனியாவும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தங்கள் தனிநாடு பிரகடனத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த இந்த தேசியஇன எழுச்சி, தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தங்தளை ஒப்படைத்துக் கொண்டுள்ள போராளிகளுக்கு புத்தெழுச்சியை உண்டாக்கியுள்ளது.
தன்னோரில்லா களப் போராட்டத்தில் உலகின் கவனத்தை ஈர்த்த தமிழீழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் புதிய தேசங்களை வரவேற்று மகிழ்ந்தார்கள். சமூக வலைதளங்களில் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.
தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் மட்டுமல்லாது, சர்வதேச அரசியலாளர்களும் குர்திஸ்தான், கேட்டலோனியாவுக்கு அடுத்த தமிழீழ நாட்டை வரிசைப்படுத்தினார்கள். ஈழத்தின் விடியல் வெகுதொலைவில் இல்லை.
தமிழ்நாட்டு மண்ணில் இப்போது மீண்டும் தன்னாட்சி முழக்கம் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் இன எழுச்சியோடு களமாட அணியமாகி வருவது பாராட்டுதலுக்குரியது. பூலோகப் பரப்பு, பேசுகின்ற மொழி, நீண்ட நெடிய பண்பாட்டு கூறுகள் இப்படியாக ஒரு தேசிய அரசை நிறுவுவதற்கான அத்தனை தகுதிகளும் ஒருங்கே வாய்க்கப்பெற்றும் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருப்பதால், தமிழ்த்தேசம் இந்தியா வல்லாதிக்கத்தின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றது. மாநிலத்துக்கான அதிகாரம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டிடமிருந்த எஞ்சியிருந்த ஒரு சில உரிமைகளையும் தில்லி ஏகாதிபத்தியமும், நமது அண்டை தேசங்களும் அடித்துப் பிடுங்கியபடியே இருக்கின்றன. தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும் மீட்பார்களாக இல்லாமல் தில்லி ஏகாதிபத்தியத்திறகு குற்றேவல் புரியும் கங்காணிகளாக இருக்கிறார்கள். பதவிமேகம் அவர்களின் இன உணர்ச்சியை உயிரற்றதாக்கிவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை வடநாட்டவர்களுக்குத் தாரை வார்க்கும் வஞ்சகத்தை தாங்கி வெளிவந்துள்ளது.
சிங்களக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை அறுறூறுக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிங்களவர்களின் தாக்குதல் ஒருபுறமிருக்க, இந்தியக் கடற்படையினரும் தமிழக மீனவர்களைச் சுடத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது இழுவைக் குண்டுகளைப் பயன்படுத்தி தமிழ் மீனவர்களைக் காயப்படுத்தி தமிழர்களின் தாலியறுக்கத் தயாராகி வருகிறார்கள். முன்பு ஈழத்தமிழ்ப் பெண்களின் தாலியறுக்க, சிங்களவனுக்குத் துணை நின்ற கயவர்கள் அல்லவா இவர்கள்?
தமிழ் மன்னர்களின் அரசாட்சியும் செல்வாக்கும் தமிழ்நாட்டைக் கடந்து தென்இந்தியா, இலங்கை, வங்காளம், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா வரை நீண்டிருந்ததை வரலாறுகளின் வழியே அறிய முடிகிறது. பரந்த நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் தன்னகத்தே கொண்டு, உலகையே கட்டியாண்டு, தன்னாட்சி புரிந்தான்; தமிழன் நிலத்தை தமிழனே ஆண்டான்
நாம் வரலாற்றில் மாலிக்காபூர் படையெடுப்பைப் பற்றி படித்திருப்போம். துருக்கியைச் சேர்ந்த மாலிக்காபூர்தான,; தன் ஆளும் வசதிக்காக முதன்முதலாக தமிழ் மண்ணை தில்லியுடன் இணைத்தான். தில்லியுடனான தமிழர்களின் அடிமைப் போக்குக்கு அச்சாரமிட்டவன் அவனே.
வந்தேறிகளின் தொடர் படைப்புகள், ஆக்கிரமிப்புகளின் நீட்சியில் தமிழர் நிலத்தை ஆர்க்காடு நவாப் ஆங்கிலேயருக்குத் தாரை வார்த்தான். ஏற்கனவே கல்வி கற்றவர்களாக இருந்த பார்ப்பனர்கள், ஆங்கிலேயர்களின் கால்களை இறுகப் பிடித்து அதிகாரமிக்க பல அரசுப் பணிகளி;ல் கோலோச்சத் தொடங்கினார்கள் அந்தளவிலான அதிகார மேலாண்மையைப் பயன்படுத்தி ஆரிய - இந்துத்துவக் கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மீது திணித்தார்கள்.
இந்தியத் துணைக்கண்டத்தை ஆண்டுவந்த ஆங்கிலேயர்கள் 1973-ஆம் ஆண்டு “ஒழுங்குமுறைச்சட்டம்” என்றொரு சட்டத்தைக் கொண்டு வந்து சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய ஆளுநர் ஆட்சிப் பகுதிகளை ஒன்றிணைந்து கல்கத்தா ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். இந்த நிலை நீடித்தது 1911 வரை. பிறகு தலைநகரை தில்லிக்கு இட மாற்றினார்கள். இவ்வாறாக தமிழ்நாடு அன்றிலிருந்து இன்றுவரை தில்லி வல்லாதிக்கத்தின் கட்;டுப்பாட்டுப் பகுதியாக இருந்து வருகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக நலனுக்காக பல்வேறு தேசிய இனங்களை இணைத்து “இந்தியா” என்ற வளையத்திற்குள் கொண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை விட்டு அகன்ற பின்பு பல்வேறு சமஸ்தானங்களை பலவந்தமாக இணைத்து செயற்கையான “இந்தியாவை” ஆயுதமுனையில் உருவாக்கினார்கள். வரலாற்றில் இதற்குமுன் “இந்தியா” என்றொரு நாடு இருந்ததில்லை.
முன்பு ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த தமிழன் 1947-க்குப் பிறகு இந்தியாவிற்கு அடிமையானான். எனவே இந்தி திணிப்பிற்கும், வட இந்திய பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கும் ஆளாக்கப்பட்டான். தமிழ்நாட்டுக்கான தன்னுரிமைக் கோரிக்கையும், தனிநாடு கோரிக்கையும் வலுப்பெறும் போதெல்லாம், அப்படியான அரசியலை தீவிரமாக முன்னெடுக்கும் தோழர்களை “தேச துரோகி”(?) என்று குற்றஞ்சாட்டி, தனது அதிகாரத்தை பலத்தை பயன்படுத்தி படுகொலை செய்தது இந்திய ஆளும் வர்க்கம். அப்படித்தான் தோழர் தமிழரசன் உள்ளிட்ட தமிழ்த்தேசப் போராளிகளைக் கொன்றொழித்தார்கள்.
இப்படியாக தமிழன் ஆளுமை உரிமை, கல்வி உரிமை, ஆற்றுநீர் உரிமை, வாழ்வுரிமை என அனைத்து வகை உரிமைகளையும் இழந்து அநாதையாக நிற்கிறான். இவ்வாறாக உரிமைகள் அனைத்தையும் பறிக்கொடுத்தாலும் அவற்றை உணராத வகையில் சாதி அவனின் முளைப்பரப்பைச் சூழ்ந்து, தழிழர் நலனைக் சூனியமாக்கி வருகிறது. தமிழன் சாதி தரும் போதையில் மயங்கிக் கிடக்கிறான். சாதிப் பெருமிதத்துடன் உழன்று தருக்கித் திருகிறான்.
இத்தகைய கொடிய தன்மையுள்ள சாதியின் தோற்றம் குறித்து அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
பண்டையக் காலத்தில் நிலவிய தொழில் அடிப்படையிலான பிரிவுகளே பின்னாளில் சாதிப்பிரிவினையாக பரிமாணம் அடைந்திருக்கிறது. தனித்திறன் கருதி தொழிலைச் சிறப்புறச் செய்யும் வகையில் நிகழ்ந்த அகமணத்திருமணங்களே தற்போதைய சாதி இறுக்கத்திற்கும், நீடித்த தன்மைக்கும் முதன்மைக் காரணமாகின்றன. எனவேதான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் “அகமணச் செயல்பாட்டின் தோற்றமே சாதியின் தோற்றம”; என்று வரையறை செய்கிறார்.
இன்றைய நாட்களில் சாதிய ஆணவப் படுகொலைகள் அவ்வப்போது நம் செவியை எட்டும் செய்திகளாகிவிட்டது. தந்தையானவன் தான் கொஞ்சி வளர்த்த மகளையே கொலை செய்கிறான் என்றால் எதற்காக…? சாதிய கௌரவத்;தைக் காப்பதற்காக … சாதிமாறி மணம் செய்து கொள்வதால் சாதியம் தகர்ந்து விடும் என்று கருதுகின்றான். எனவேதான் “சாதிப்புனிதம்”; கெடுத்த தம் மகளைத் தயக்கமின்றி பலி கொடுக்கிறான். இங்கே உயிரை விட சாதியம் பெரிதெனக் தெரிகிறது உயிர்மநேயமற்ற உதிரிகளுக்கு…
இதைத்தான், சாதியத்திற்கு எதிராக வாழ்நாள் பாடாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், “சாதி தெய்வீகத் தன்மை கொண்டதாக இருக்கிறது. எனவே சாதிக்குத் தரப்பட்டுள்ள புனிதங்களையும், தெய்வீகத்தையும் ஒழித்தாக வேண்டும்”; என்று தமது “சாதியொழிப்பு” நூலில் அன்றே குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் நவீன சமூக அமைப்புக்கு ஏற்றாற்போல சாதியும் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. சாதி கூட்டு உறவு, கூட்டு உணர்வு மனப்பான்மைக்கு நேர் எதிரானதாக இருக்கிறது. எனவேதான் கிராம கோவில்களில் நடக்கும் பாரம்பரியமான வழிபாடு, திருவிழாக்களில் நிகழும் சாதிய மோதல்களை அமைதிக்கூட்டங்கள் பல நடத்தியும் தடுக்கவில்லை. தேவகோட்டைக்கு அருகிலுள்ள உஞ்சனை கிராமத்திலுள்ள கழனி அய்யனார்கோவில் புரவி எடுப்பு விழாவின் போது நடந்த மோதலில் தேவேந்திரகுலமக்கள் ஐவர் கொல்லப்பட்டது வரலாற்றில் இரத்தக்கறை படிந்த நிகழ்வுகளில் ஒன்று.
தமிழ்ச்சமூக பண்பாட்டு விழுமியங்களைச் சுமந்து நிற்கும் கோவில் திருவிழாக்களின் ஒரு பகுதியாக நடக்கும் தேர் வடம் பிடித்தல், பரிவட்டம் கட்டுதல் இன்னபிற நடைமுறைகளின் போது நடக்கும் சாதிய மோதல்கள் தமிழ் மண்ணில் நடந்தேறும் அவ்வப்போதைய அவலங்கள். பொது சமூகம் பயந்து நடுங்கும் கோவில், கடவுள் போன்ற பிம்பங்களுக்கே அஞ்சாது சாதிவெறியோடு கலவரமுகாமிடும் சாதியவாதிகள், பிறகெப்படி தேசிய இன உணர்வோடு இதர சமூக மக்களோடு ஜக்கியப்படுவார்கள்? இதனையெல்லாம் உணர்ந்தெண்ணி அதற்கேற்றாப்போன்று தமிழ்த்தேசியத்தின் கள உத்தியை மாற்றியமைக்க வேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும்.
சாதியம் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானது எனத் தெரிந்தும் ‘கற்றறிந்த’ சிலரே கிராமத்தில் நிலவும் சாதிய சிக்கல்களுக்கு மூலதாரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சமீபகாலமாக சாதியப் பெருமித ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். ஆண்ட சாதிப் பெருமை அவர்களின் மூளையை முனை மழுங்கச் செய்து வருகிறது. இத்தகையோர் தத்தம் சாதியினருக்கு ஏற்படும் சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். அவர்களுடைய ஒரே இலக்கு சாதிப்பெருமை தேடி நாயாய் அலைவது.
தூய தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோர் சாதியின் அடிப்படையில் மட்டும்தான், தமிழ்நாட்டின் மரபார்ந்த மண்ணின் மைந்தர்களை அடையாளம் காண முடியும் என்ற அபத்தமான அரசியலை முன்னெடுத்து, தமிழர்களைச் சாதியாய் கூர்மைப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் தமிழ்த்தேசியம் பயணிக்கும் திசைவழியை மறிக்கும் தடைக்கற்களாவார்கள்.
சாதியச் சார்புடையோர்களும், சாதிச் சங்கத்தலைவர்களும் தங்கள் சாதிச்சங்க வேலைத்திட்டத்தினூடாக தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களில் முகம் கொடுப்பதுகூட சொந்த சாதி மக்களிடத்து தங்கள் செல்வாக்கை விரிவாக்கம் செய்து கௌ;வதற்காகவே. இப்படித்தான் தமிழக அரசியலில் தங்கள் முகவரியை இழந்தவர்கள்கூட சாதியத் தீப்பந்தத்தைக் கையிலேந்தி சக தமிழர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் சாதிவெறி ததம்பப் பேசியும் தம் சாதி மக்களின் சாதிய மயக்கத்தில் அரசியல் செய்து வருகிறார்கள். இவர்கள் தமிழ், தமிழர்நலன் குறித்து வாய் கிழிய பேசி வருவதை நாம் கவனிக்க வேண்டும்.
பொதுவுடைமைச் சமூகம் படைக்கப் கிளம்பிய வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகளும், சாதி, தீண்டாமை ஒழிப்பு குறித்து தமிழக வீதிகளில் வாழ்நாள் பரப்புரை செய்த தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தியிருந்து கிளைத்த திராவிட முன்னேற்றக் கழகமும்கூட, சம்மந்தப்பட்ட தொகுதியின் சாதிப் பெரும்பான்மை மக்களின் திரளின் எண்ணிக்கையைப் பொருத்தே வேட்பாளரை நிறுத்தி சாதியத்தைப் பாதுகாக்கும் “சாத்திரப் பணி” செய்து வருகிறது.
மேலும் மாணவர்களிடையே சாதியுணர்ச்சி வளர்ந்து வருவது மிகவும் ஆபத்தானது. எனவே மாணவர்களுக்கு சாதியத்தின் தோற்;றம், சாதியத்தால் பொது சமூகத்தில் எழும் சிக்கல்கள், சாதி எதிர்ப்புப் போராட்ட வரலாறு, சாதி ஒழிப்பின் அவசியம் ஆகிய கூறுகளை முதன்மைப்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைப்பு செய்து, சரியான ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தச் செய்தல் வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கரின் “சாதியொழிப்பு” நூலை கல்லூரி பாடத்திட்டத்தில் இணைத்தல் வேண்டும். இது சாதி குறித்து ஆசிரியர்களுக்கும் புரிதலை எற்படுத்திக் கொள்ள உதவும். ஏனெனில் “சாதிய நோய்” பள்ளி, கல்லூரி எனப் பரவி, மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியப் பெருமக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது.
சாதியத்தில் தளர்வை உண்டாக்க சாதி மறுப்புத் திருமணங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் நிலவும் சாதிய வன்கொடுமைச் சம்பவங்களுக்கு எதிரான கண்டனக் குரல்கள் மட்டும் சாதியொழிப்புக்கு வழிவகை செய்யாது. தேவை சாதியத்தை நிர்மூலமாக்குவதற்கான ஒரு போர்ப்பிரகடனம். சாதி ஆதிக்கத்தை எவ்வித நிபந்தனையமின்றி எதிர்ப்பதும், சாதிமறுப்பு மணம் புரிந்தோர்க்கு அரணாக நிற்பதும், தழிழ்த்தேசிய இயக்கங்களின் செயல்திட்டங்களாக வகுக்கப்பட வேண்டும்.
சாதிமறுப்பு மணம் செய்து கொண்டோரின் குழந்தைகளை சாதியற்றோர் என்ற புதுப்பட்டியலின் கீழ் கொண்டு வரவும், அரசின் வேலை நியமனங்களில் அவர்களுக்கு பகுதி அளவிலான இடங்களை ஒதுக்கீடு செய்து தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் போராட வேண்டும்.
“தலித் தோழர்” என்ற பதத்தையும், தலித் இயக்கங்களின் தேவையையும் இல்லாதொழிக்கும் வகையில் தமிழ்த் தேசிய அரசியலும், தமிழ்த் தேசிய இயக்கங்களும் முற்போக்கானதான கட்டமைக்கப்பட வேண்டும்.
பேராசான் மார்க்சின் இயக்கவியல் கொள்கை, “சாதி ஒழிப்பும் தனித்தமிழ் நாடும்தான் என் உயிரினும் மேலான கொள்கைகள்” என முழுங்கிய தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை, புரட்சியாளர் அம்பேத்கரின் வருண சாதிஒழிப்பு கோட்பாடு இவைகளை அடிக்கட்டுமானமாகக் கொண்டு தமிழ்த்தேசியம் எழுப்பப்பட்டால்தான் அது தமிழர்களின் அறம் போற்றக்கூடியதாக இருக்கும.; அதற்கு உழைக்கும் தமிழ்ச் சமூக மக்களை கூறு பிரிக்கும் சாதியத்தையும், வருணசாதி ஆதிக்கத்தை தத்துவநெறியாக்கிய மனு (அ)தர்ம - இந்துத்துவத்தையும், இந்துத்துவத்தை அரணாய்ப் பாதுகாக்கும் இந்தியத்தையும் வீழ்த்தியாக வேண்டும். சாதியம் - இந்துத்துவம் - இந்தியம் இவைகளால் தருவிக்கப்பட்ட கூண்டுக்குள்தான் தமிழ்த்தேசியம் அகப்பட்டுக் கிடக்கிறது. “சாதியம் - இந்துத்துவம் - இந்தியம்” இவற்றாலான எக்குக் கோட்டைகளைத் தகர்த்தெறியாமல் தமிழ்த்தேசியம் முகிழ்ந்தெழாது!
தமிழ்த்தேசியத்தை வென்றெடுப்போம்-அதற்கு
சாதியொழிப்பை முன்னொடுப்போம்!
- தங்க.செங்கதிர்