புதுக்காலனிய ஆதிக்கம் பொருளாதாரச் சுரண்டலையே இலக்காகக் கொண்டிருக்கிறது. அதன் விரிந்த செயல்பாடுகளை இந்த சிறிய தொகுப்புகளுக்குள் காண்பது இயலாது. சுரண்டலைப் பற்றிய அடிப்படைகளை கோடிட்டு மட்டுமே காட்ட இயலும்.
இன்று பொருளாதார அரங்கில் காணப்படும் இந்த கொடூரச் சுரண்டல் முறை சோசலிச முகாமின் வீழ்ச்சியால் மக்களுக்கு ஏற்பட்ட துயரம் என்று சொல்லலாம்.
இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், இந்திய முதலாளிகளின் தேவைக்காகவும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமான நிலங்களை 'வளர்ச்சி' என்ற பெயரில் பறித்து வருகின்றது.
கெயில், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், துறைமுகங்கள், விமான நிலையங்கள் விரிவாக்கம், மின்பாதை அமைத்தல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என பட்டியல் விரியும். இதில் பல திட்டங்களை தமிழக அரசு மிகக் கடுமையாக எதிர்த்தும், தடை செய்து ஆணைகள் போட்டும் கூட டெல்லி அரசு கேட்பதாக இல்லை.
கெயில், ஸ்டெர்லைட் போன்ற நிகழ்வுகளில் மக்களின் எதிர்ப்பைக் கவனத்தில் கொண்டு மாநில அரசு தடை போட்டது. ஆனால் அந்த நிறுவனங்கள் அதை ஏற்கவில்லை.
வரலாற்றுக் காலந்தொட்டு நெற்களஞ்சியமாக இருந்து வருகிறது தஞ்சை வடி நிலப்பரப்பு. உணவுத் தேவையின் மையக்கண்ணியாக இருக்கும் இந்த வயல்வெளியை வேதந்தா நிறுவனத்திற்கு தாரைவார்த்து விட்டது டெல்லி அரசு. தமிழக அரசைக் கலந்து பேசாமலே தமிழர் தாயகத்தில் வேளாண்மண்டலத்தின் பத்துலட்சம் ஏக்கர் பரப்பை நிலம், கடல் என இருபகுதிகளிலும் சேர்த்து ஒரு மார்வாடியின் பன்னாட்டு நிறுவனத்திற்கு டெல்லி அரசு ஒப்படை செய்துவிட்டது.
வேதந்தா நிறுவனம் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி அந்தப் பகுதியை அரபுப் பாலைவனம் போல மாற்ற உள்ளது.
எட்டுவழிச்சாலையை இராணுவத் தளவாட மண்டலத் தேவைக்காகப் போடத் துணிந்துள்ளது. இந்த இராணுவத் தளவாட உற்பத்திமண்டலத்திற்கு தேவையான சாலை அமைக்க தமிழக உழவர்களின் வாழ்வாதாரமான நிலத்தை துப்பாக்கி முனையில் பிடுங்க முயற்சி நடக்கிறது.
சொந்த நிலத்தை விட்டு விரட்டப்படும் விவசாயிகள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதைக் கூட அனுமதிக்க மறுக்கிறது தமிழக எடுபிடி அரசு.
இவ்வாறு தமிழக மக்களின் சொந்த நிலங்களைப் பறித்து அவர்களை உள்நாட்டு அகதியாக மாற்றுகிறது. தமிழகத்தில் செழிப்புற்றிருந்த சிறுதொழில் நிறுவனங்கள் நசிந்து அழிந்து வருகின்றன. இவைகளை முறைசாரா தொழில்கள் என துடைத்தழிக்கிறது டெல்லி அரசின் நடவடிக்கைகள்.
'இந்திய தேசிய அரசு' உண்மையான தேசிய அரசாக இருந்திருந்தால் அது ஏகாதிபத்திய மூலதனத்துடன் இப்படிக் கூட்டணி போட்டிருக்காது. மாறாக தரகு முதலாளிகளின் அரசு என்பதால்தான் ஏகாதிபத்திய மூலதனம் இந்தியா முழுவதும் உள்ள வளங்களைச் சூறையாட துணை நிற்கிறது. இன்னொரு புறம் தமது வாழ்வாதரமான நிலங்களைப் பாதுகாக்கப் போராடும் சொந்தநாட்டு மக்களை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கி வருகிறது.
சுருக்கமாக நம்மால் இப்படிக் கூறமுடியும்.
இந்தியாவில் 1947 ல் நடந்தது விடுதலை அல்ல. புதிய காலனிய காலகட்டத்திற்கான ஒரு அரசுதான் டெல்லியில் நிறுவப்பட்டது. அது இந்தத் துணைக் கண்டம் முழுவதுமுள்ள பல்வேறு தேசிய இனமக்களையும் அடக்கி ஒடுக்கி ஏகாதிபத்திய மூலதனத்திற்கு பலியிட்டுள்ளது. பார்ப்பனியத்தின் கொடூர சாதிய, இன ஒடுக்குமுறைக்கும் பலியிட்டுள்ளது.
பண்பாட்டு அரங்கில்...
அரசியல், பொருளியலின் செறிந்த வெளிப்பாடாக பண்பாட்டுத் தளம் இருக்கும். ஏகாதிபத்திய நுகர்வு வாழ்க்கை முறை, பார்ப்பனிய சாதிஆதிக்கம், தமிழினத்தின் மீதான ஒடுக்கு முறை இதுதான் கடந்த எழுபது ஆண்டுகளாக கட்டமைப்பக்கப் பட்டிருக்கும் பண்பாட்டு உளவியலாகும்.
திராவிட இயக்கத்தின் சமரசப் போக்கு, இ.பொ. இயக்கத்தின் இந்திய தேசியப்பார்வை, ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களின் இடஒதுக்கீடு எனும் சட்டவாதப் போராட்டம், அரசியலில் நிலவிய இந்தக் குறைபாடுகளால் இந்த இயக்கங்கள் மக்களை ஒரு சமூக மாற்றத்திற்கு தயாரிக்கவில்லை. எனவே ஏகாதிபத்தியத்தின் ஆங்கில மேலாண்மைக் கல்வியும், பார்ப்பனிய இந்துமதத்தின் புனிதம் போற்றும் இலக்கியங்களுமே செல்வாக்கு செலுத்தி வருகிறது.
தாய்மொழியில் பயில்வது இழிவானது, ஆங்கில வழியே அறிவுக்குத் திறவுகோல் என தமிழக மக்களை ஏற்கச் செய்துவிட்டனர். எனவே இன்றைய கல்விப் புலத்திலிருந்து சுயமான படைப்பாற்றல் கொண்ட இளைய தலைமுறை உருவாகவில்லை. மாறாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்து கொடுக்கும் சுயசிந்தனை இல்லாத ஒரு அடிமை மனிதனே உருவாக்கப்படுகிறான்.
கல்வியில் ஆங்கில மேலாண்மையும், பார்ப்பனிய மேலாண்மையும் இருப்பதால் தமிழின வரலாறும் பண்பாடும் மறைக்கப்பட்டுவிட்டது. தனது சொந்த வரலாறு தெரியாத ஒரு தலைமுறை உருவாக்கப்பட்டுவிட்டது. தனது மொழி, இலக்கியம் இதன் மரபுகளைத் தெரிந்து கொள்ளாதவர்கள் பண்பாட்டு அடிமைகளாக இருப்பது வியப்பல்ல. முழுக்க நுகர்வியமே வாழ்க்கை என சந்தைக்கான உளவியல் உருவாக்கப்பட்டுள்ளது.
சாதிய ஆதிக்கம் நியாயப்படுத்தப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை பாரம்பரியத்தின் பெயரால் நிகழ்த்தப்படுகிறது.
காட்சி ஊடகங்கள் ஆங்கிலம், சமக்கிருத ஆதிக்கத்தில் இயங்கி வருகின்றன. மூடநம்பிக்கைகளையும், பாலியல் வக்கிரங்களையும் பரப்புவதே ஊடகங்களின் வேலையாக உள்ளது.
சாராம்சத்தில் ஒரு சமூக மனிதனை சந்தை மனிதனாக மாற்றிவிட்டது. நுகர்வும், துய்ப்பதும் வாழ்வின் நோக்கமாக மாறிவிட்டது. இவ்வாறு பண்பாட்டு வகையில் ஒரு அடிமை மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் இன்று நாம் பண்பாட்டு அரங்கில் எதிர்கொள்ளும் நெருக்கடியாகும்.
தமிழ் தேசிய இனத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டியல் வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமை வேண்டும்.
இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் சிலர் நினைக்கலாம் அந்த உரிமைகள் தமிழ் தேசிய இனத்திற்கு இல்லையா என. ஆம் தமிழ் தேசிய இனம் ஒரு அடிமை தேசிய இனமாக உள்ளது.
இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களுமே அடிமை தேசிய இனங்களாகவே உள்ளன. இந்திய ஏகாதிபத்தியத்தின் தேர்ச்சக்கரத்தில் அனைத்து தேசிய இனங்களும் பிணைக்கப்பட்டுள்ளது.
ஏழரைக் கோடி பேராக தமிழ் மக்கள் இருந்தும் நமது வாழ்வையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் உரிமை அதாவது இறையாண்மை உரிமை நமக்கு இல்லை. ஒன்றரைக் கோடி பேர் உள்ள சிங்களர்கள் இறையாண்மை கொண்ட தேசிய இனாக இருப்பதால் அவர்கள் தமக்கான ஒரு அரசை நிறுவிக் கொண்டுள்ளனர்.
தமிழகத்திலுள்ள மாநில அரசு டெல்லியின் எடுபிடி அரசே ஆகும். இந்த மாநில அரசுக்கு இறையாண்மை அதிகாரம் கிடையாது.
இந்தியக் குடியுரிமை என்ற பெயரில் வட இந்திய மார்வாரி, சேட் உள்ளிட்ட பார்பன, பனியாக் கும்பல் தமிழகத்திற்குள் பெருமளவு நுழைந்து தொழில், வணிகம் நிதித்துறைகளைக் கைப்பற்றியுள்ளனர். தமிழகத்தின் இயற்கை வளங்களை தமிழக அரசின் ஒப்புதலின்றியே டெல்லி அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து வருகிறது. நீட் தேர்வு போன்ற அகில இந்தியத் தேர்வு முறைகள் மூலம் தமிழகத்தின் கல்வி உரிமையை முற்றாகப்பறித்து விட்டது.
வேளாண்மையிலும் தமிழகம் தனக்கான எதையும் தீர்மானிக்க முடியாது.
கீழடி போன்ற தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் அகழாய்வுகளை முடக்க சதி வேலைகள் செய்கின்றனர்.
எங்கும் சமக்கிருத-இந்தி மேலாண்மை நிறுவப்படுகிறது.
தமிழக சட்டமன்றம் டெல்லியின் 356 பிரிவு எனும் தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டுள்ளது.
டெல்லி அரசின் முழு அதிகாரத்தின் கீழ் மாநில உரிமைகள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிலர் எம். ஜி. ஆர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்று கூப்பாடு போடுகின்றனர்.
இன்னும் சிலர் தமிழ்நாட்டை தூய தமிழன் ஆளவந்தால் தற்போது தமிழகம் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை தீர்க்க முடியும் என்கின்றனர். தமிழகத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டியல் வாழ்வை தீரமானிக்கும் இறையாண்மை கொண்ட ஒரு தமிழ் தேசிய அரசு இல்லாமல் யார் முதல்வரானாலும் துரும்பைக் கூட அசைக்க முடியாது.
ஏகாதிபத்தியம், பார்ப்பனியம் இரண்டு ஆதிக்க சக்திகளின் அதிகாரக் கட்டமைப்பாக இந்த இந்திய அரசு இருக்கிறது. தமிழக மக்களின் எதிர்காலம் இந்திய ஆட்சியாளர்களிடம் இல்லை . இதை எழுபதாண்டு கால வரலாறு காட்டுகிறது.
தமிழ்த் தேசிய குடியரசை நிறுவும் இலக்கோடு முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும்.
- கி.வே.பொன்னையன்