இந்தியா முழுவதும் சாதி மீறி காதலிக்கும் ஒரே காரணத்திற்காக சாதி கௌரவம் எனும் பெயரில் காதலர்கள், காதல் இணை யர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 4 ஆணவக் கொலைகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சாதி ஆணவக்கொலைகள் நடந்திருக் கின்றன. இதுவரை கொல்லப்பட்டவர்களில் பெரும் பாலானோர் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆவர். விருத்தாச் சலம் கண்ணகி - முருகேசன் (2003), தொடங்கி, திருவாரூர், மாற்றுத் திறனாளி அமிர்த வள்ளி - பழனியப்பன் - கைக்குழந்தை (2014), தருமபுரி இளவரசன் (2013), சேலம், கோகுல்ராஜ் (2015), உசிலம்பட்டி விமலா தேவி (2014), உடுமலை சங்கர் (2016), கன்னியாகுமரி சிவா-சவுமியா (2013), ஒசூர், நந்தீஸ் - சுவாதி (2018), திருநெல்வேலி இசக்கிசங்கர் - சத்யபாமா (2018), தூத்துக்குடி பேச்சியம்மாள் - சோலைராஜ் (2019), விருத்தாச்சலம் திலகவதி (2019) கோவை கண்மணி - கனகராஜ் (2019) நாகை ஜனனி (2019), கரூர் ஹரிகரன்(2019), புதுக் கோட்டை சாவித்திரி (2020) திருவண்ணா மலை சுதாகர் (2020), கன்னியாகுமரி சுரேஷ் (2021), கும்பகோணம் பிரபாகரன் (2021), கள்ளக்குறிச்சி அரிகிருஷ்ணன், நிவேதா (2021) எனவொரு நீண்ட கொலைப்பட்டியல் இதற்கு எடுத்துக் காட்டாக நீள்கிறது. இவர் களில் பெரும் பாலானோர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் என்பது மிக முக்கியம். இக்கொலைகள் அனைத்தும் தமிழகத்தையே உலுக்கிய மிகக்கொடூரமான சாதி ஆணவக் கொலைகளாகும்.
சாதி ஆணவக் கொலைகளின் பின்புலம்
சாதி ஆணவக்கொலைகள் நடப்பதற்கு முக்கியக் காரணிகளாக இருப்பது சாதி ஆதிக்கம், அகமண முறை, வர்க்கம், ஆணாதிக்க பிற்போக்குத்தனம், சாதியப் பஞ்சாயத்துகள், குடும்ப சொத்துடமை, முதலாளித்துவ வளர்ச்சி, நகர்மய மாதல் மேல் கீழ் என்ற படிநிலையான நிலவுடமை கிராமப்புற சாதியக் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள தளர்வுகள், வாக்கு வங்கி அரசியல் ஆதாயம் போன்ற காரணிகள் அடிப் படையாக இருக்கின்றன. இவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
90களுக்குப் பின்பான உலக மய, தாராளமய, தனியார்மய கொள்கைகளால் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள் இன்று சாதியின் இறுக்கத்தைத் தளர்த் தியிருக்கிறது. நடக்கும் சாதி ஆணவக் கொலைகள் என்பது மனுதர்ம வேதங்களை பாதுகாக்கும் மரபார்ந்த சாதிய நிலவுடமை பண்பாட்டிற்கும் தாராளிய முதலாளித்துவ பண்பாட்டிற்குமான முரண்பாட்டின் வெளிப்பாடு ஆகும்.
அகமணமுறை
சாதிய ஆணவக்கொலைக்கு அடிப்படை சாதியும் அகமணமுறை என்ற ஆணாதிக்கக் குடும்ப இரத்த உறவுமுறைதான் பிரதான பங்கு வகிக்கிறது. அதனைப் பாதுகாத்திட பெண்ணைக் கட்டுப்படுத்துகிறது. தன் குடும்ப பெண் பள்ளர், பறையர் அருந்த தியர் போன்ற சாதியிலுள்ள இளைஞர்களை திருமணம் செய்துவிடக்கூடாது என்று எச்சரிக் கையாக இருக்கிறது. சாதியும் ஆணாதிக்க கருத்தியலும் ஒரு பெண் யாருடன் படுக்க வேண்டும், யாருக்கு பிள்ளை பெற்றுக் கொடுக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எந்த சாதியில் அவற்றில் எந்த வர்க்கத்தில் என்ற வரையறையை வலியுறுத்துகிறது படி தாண்டா பத்தினி என்ற பட்டத்தைச் சூட்டி கட்டுக்குள் இருக்க போதிக்கிறது மனுதர்ம சாஸ்திரங்கள். கணவன் இறந்தால் மனைவியும் உடன் கட்டை ஏற வேண்டும் என பெண்ணை உயிரோடு எரித்தும் கணவன் இறந்தால் பூ,பொட்டு, தாலி, மஞ்சள் குங்குமம் அனைத்தையும அழிக்க வேண்டும் என்கிறது. பெண்கள் வேலைக்கு சென்றால் அவள் விபச்சாரி என்றும் கூறும் இழிவான பண்பாட்டைத்தான் இன்றைய மோடி ஆர்எஸ்எஸ் கும்பலும் சாதிய பிற் போக்கு வாதிகளும் தூக்கிப்பிடிக்கின்றனர். இதனை உடைத்து பெண் உரிமையை தனக்கான சுயமான திருமண வாழ்க்கையை தேர்வு செய்யும்போது தடுக்கப்படுகிறாள். காதலித்த தலித் இளைஞன் கொல்லப் படுகிறான்.
பிறப்பிலியே இழிவாகப் பார்க்கப்படும் இரு பிரிவினர் இச்சாதிய சமூகத்தில் பிறப் பிலேயே பால் பாகுபாட்டுடனும் தீண்டா மையுடனும் ஒதுக்கப்படும் இரு பிரிவி னர்கள் யார் என்றால் ஒன்று தலித்கள், இரண்டாது பெண்கள். அடுத்து மக்கள் தொகையில் குறைந்தளவே உள்ள பழங்குடிகள், குறவர்கள், வண்ணார்கள், புதிரை வண்ணார்கள் போன்ற பிரிவினர் என சொல்லலாம். ஆனால், காதல் மறுத்த சாதி ஆணவக்கொலைகளை எதிர்ப்பதிலும், இச்சமூகத்தின் சாதியக்கட்டு மானத்தை உடைப்பதிலும், ஒரு ஜன நாயகப் போராட் டத்தை நடத்துவதில் தலித் மக்களும் பெண்களுமே முன்னணி சக்தியாக திகழ்வர். காரணம் சாதி குடும்ப உறவாக இயங்குகிறது. அது இரத்த உறவை பாதுகாக்கிறது. புறமண முறைக்கு எதிராக இருப்பதால் இயல்பாகவே இந்தக் கட்டுப்பாட்டை உடைப்பது காதலாக இருக்கிறது. மனித உறவுகளை விரி வடையச் செய்கிறது. ஆதலால்தான் சாதிய மனுதர்ம வாதிகள் கொதிக்கிறார்கள். பாமக தலைவர் இராமதாசு போன்ற சாதியவாதிகள், தேர்தல் நலனுக்காக சொந்த சாதியை வளர்க்கும் அரசியல் கட்சிகள் சாதியின் இருத்தலுக்கு வேலை செய்கிறார்கள். பெண்ணுக்கு திருமண வயது 21 என சட்டம் கொண்டுவர வேண்டும் என்று குரலெழுப்புகிறார்கள். இதன்மூலம் காதல் திருமணங்களை, சாதிமதம் மறுத்த வாழ்க்கைத் தேர்வை தடுத்திட எண்ணுகிறார்கள்.
ஆணவக் கொலையில் ஈடுபடும் சாதிகள்
தமிழ்நாட்டில் சாதி மறுத்த திருமணங்கள் முன்பைவிட அதிகரித்து வருகிறது. சாதி மாறிய காதல் இணையர்களை ஆணவக் கொலை செய்யப்படுவது மூன்று சாதிகளில் அதிகம் நடக்கிறது. குறிப்பாக மேற்கு மாவட் டங்களில் வெள்ளாளக் கவுண்டர் சாதியிலும் தென் மாவட் டங்களில் முக்குலத்தோர் என்று சொல்லப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் சாதிகளிலும் வட மாவட்டங்களில் வன்னியர் சாதியிலும் நடக்கிறது. மற்ற சிறுபான்மை சாதிகளிலும் சிற்சில நடக்கிறது. ஆணவக் கொலைக்கு சாதிய ஆதிக்கமும் சிந்தனை யுமே அடிப்படை என்றாலும் அவற்றிலும் வர்க்க அந்தஸ்து தீர்மானிக்கிறது. அடித்தட்டு வர்க்கங்களுக்குள் சாதி ஆணவக் கொலைகள் நடப்பதில்லை (ஒரு சிலவற்றைத் தவிர). அதேபோல் வசதி படைத்த வர்க்கத்திற்குள்ளும் நடப்பதில்லை. ஆணவக்கொலைகள் அதிகம் நடப்பதே வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தில்தான். முதலில் கீழ்சாதி என்ற வெறுப்புணர்வும் பணக்காரன் - ஏழை என்ற வர்க்க ஏற்றத் தாழ்வும் செல்வாக்கு செலுத்துகிறது. இதற்கு மாறாக, ஒரே சாதியாக இருந் தாலும் அங்கு வர்க்க அந்தஸ்து பார்க்கப்பட்டு பெண் கொடுப்பது மறுக்கப்படுகிறது. இன்னொன்று வேறு வேறு சாதியாக இருந் தாலும் சாதி, மதம் பார்க்காது மாற்றத்தை ஏற்றுக்கொண்டு பல குடும்பங்கள் அங்கீகரிப்பதும் நிகழ்கிறது. ஆதலால்தான் சாதி மறுத்த திருமணங்கள் முன்பைவிட அதிகரித்திருக் கிறது. இவை அதிகரிப்பதன் விளைவே ஆணவக் கொலைகளும் நடக்கிறது. இது சாதிய சங்கங்களால் நடத்தப்படுகிறது.
வாக்குவங்கி சாதித் திரட்சிக்காக செய்யப்படும் ஆணவக் கொலைகள்
தமிழ்நாட்டில் நடந்துவருகிற பல ஆணவக் கொலைகள் எதேச்சையாகவோ உணர்ச்சி வயப்பட்டோ நடப்பதில்லை. முன்பெல்லாம் குடும்ப மானம் போகுதே என்ற ஆத்திரத்தில் சில குடும்பங்கள் கொலை செய்வார்கள். அது அரசியலாக்கப் பட்டதில்லை. குறிப்பாக 70-80 காலகட்டங்களில் இப்படி வன்முறையை நிகழ்த்தும், ஆணவக் கொலைகளை கையி லெடுக்கும் சாதி சங்கங்களும் இல்லை. குறிப்பாக 2013ல் பாமக நாடகக் காதல் என்று சொல்லிக் கொண்டு தலித் விரோத அரசியலைக் கையிலெடுத்தபின் தமிழகம் முழுதுவதிலும் சாதிமீறிய காதலர்கள், இணையர்கள் கொல்லப்படுவது, அச்சுறுத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக சாதி சங்கங்கள் இதற்கு காரணமாகின்றன. அரசியல் ஆதாயத்திற்காகப் பிற்போக்குத் தனமான சாதிவெறி உணர்வுக்கு தீணி போட்டு பல இடங்களில் தலித் மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது.
தருமபுரியில் 3 கிராமங்கள் எரிக்கப்பட்டதும் நீதி மன்றம் சாதிய மன்றமாகியதால் திவ்யா, இளவரசன் பிரிக்கப்பட்டு, இளவரசன் கொல்லப்பட்டதும், உடுமலை சங்கர், சேலம் கோகுல் ராஜ், கரூர் ஹரிகரன் (நாவிதர்), பொன்னேரி கௌதமன் (வன்னியர்) எனப் பெற்ற பிள்ளையையே துடிதுடிக்க கொல்லும் சாதிய வன்மங்கள் தற்போது வளர்ந்திருப்பதே ஆபத்தானது. கொலை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் கொலையைத் தூண்டி ஆதாயம் அடையும் சாதியக் கும்பல் குற்றத்திலிருந்து தப்பித்து விடுகிறது. அந்தந்த சாதிகளின் கல்வி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட சாதி சங்கங்கள் இருந்ததொரு காலம், ஆனால் இன்றோ அருகில் வாழும் விளிம்புநிலை மக்களை சாதியின் பெயரில் தாக்குவதன் மூலம் அவர்களின் சொத்துக்களை அழித்து தங்களை தக்க வைத்துக் கொள்ளவே நினைக்கிறார்கள் சாதி சங்கத் தலைவர்கள். அதேபோல் இன்று பாஜக இந்து முன்னணி போன்ற மதவெறி அமைப்புகளும் இணைந்து ஆணவக் கொலைகளை சாதி திரட்சியை செய்து வருகின்றன.
கொலைகள் தற்கொலைகளாக மாற்றப்படுதல்
அண்மையில் நடக்கும் ஆணவக் கொலை களில் பல கொலைகள் தற்கொலைகளாக மாற்றப்படுவது நடக்கிறது. அவற்றிலும் தலித் இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத் தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளம்பெண்களே அதிகம். தற்கொலையாக மாற்றப்படும் இத்தகைய வழக்கிற்கு குடும்ப உறவினர்கள், காவல் துறை அதிகாரிகள், சாதி சங்கங்கள் முதன்மைக் குற்றவாளிகளாக இருக்கி றார்கள். உதாரணம், கடலூர் அரிபரந்தாமன், தருமபுரி இளவரசன், விருத்தாச்சலம் திலகவதி, விழுப்புரம் சரசுவதி, பொன்னேரி கௌதமன் போன்ற ஏராளமானோரின் கொலைகளாகும். இவை தற்கொலைகளாக வழக்குப் பதிவு செய்யப்படுகின்றன. நடக்கும் ஆணவக் கொலையை மூடி மறைப்பதிலும் குற்றவாளி களைப் பாதுகாப்பதிலும் சட்டமும் காவல் துறையும் சாதிவெறிக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. சட்டம் வயதுவந்த இருவரின் திருமண உரிமையை வலியுறுத்தினாலும் அதனை நடைமுறைப்படுத்தும் நிர்வாக அதிகாரிகளின் சாதிய சிந்தனைப் போக்கால் சட்டமும் சனநாயகமுமே கேள்விக் குறியாகிருப்பதன் விளைவே ஆணவக் கொலைகள் அதிகரித்து இருப்பதாகும்.
இதுபோன்ற சாதி சங்கங்கள், சாதிக் கட்சிகள் வளருவதால் ஏற்படும் இன்னொரு ஆபத்தான போக்கு என்னவென்றால், சாதி மறுத்த இணையர்களை ஏற்றுக் கொள்ளும் இருதரப்புக் குடும்பங்களை துன்புறுத்துவது, ஊர் பஞ்சாயத்துகள் மூலமும் சாதி சங்கங்கள் மூலமும் ஒதுக்கி வைப்பது, மிரட்டுவது, தற்கொலைக்கு தூண்டுவது போன்ற சாதி வெறுப்புக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. சமூக மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வாழும் சனநாயக குடும்பங்களை வாழ விடாமல் சித்ரவதை செய்யும் இத்தகைய சாதியக் கும்பல் எந்த இடத்திலும் தண்டிக்கப் படுவதில்லை.
சாதி ஆணவக் கொலைகள் என்பது முன்பு தலித் மற்றும் தலித் அல்லாத சாதிகளுக்கிடையில் நடந்தது. தற்போது பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. சில ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் ஒடுக்கப்பட்ட சாதிகளான பள்ளர் பறையர், அருந்ததியர் சாதிகளுக் கிடையிலும் நடக்கின்றன. காரணம் மக்க ளிடம் செல்வாக்கு இழந்த கட்சிகள் தங்களுக் கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ள பிற்போக்குத்தனமான சாதியை கையிலெடுக் கிறார்கள். புதிய புதிய வட்டார அளவிலான சாதி சங்கத் தலைவர்கள் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் பல வன்முறைக் கலவரங்களை நடத்துவது அரசியல் பேரத்திற் காகவும் சாதி வலிமையை காட்டி சீட்டு வாங்கவுமே சுய நலமிக்க பிழைப்பு வாதிகள் தலித் மக்கள் மீதான தாக்குதலை, சூறை யாடலை, ஆணவக் கொலையை நடத்துகி றார்கள். அரசு இதனை வேடிக்கைப் பார்க்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத் தீர்ப்புகள்
தமிழ்நாட்டில் நடந்த ஆணவக் கொலை களில் ஒரு சில கொலைவழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டி ருக்கிறார்கள். பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக கண்ணகி முருசேகன் மற்றும் கோகுல்ராஜ் சாதி ஆணவக்கொலை வழக்குகளில்தான் காவல் அதிகாரிகளும் சாதி சங்க தலைவன் யுவராஜூம் தண்டிக்கப்பட்டிருப்பது நடந்துள்ளது. இவை வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த தீர்ப்புகளாகும். இதுபோன்ற பல ஆணவக்கொலை வழக்குகளை விரைவாக நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் குற்றங்களை கட்டுப்படுத்திட முடியும். அரசு அதற்கு முனைப்புக் காட்டுவதில்லை. பாதிக் கப்பட்ட மக்கள் போராடினால் உடனடியாக 144 தடை உத்தரவை விதித்து அடக்கு முறையை ஏவுகிறது. ஆனால் வன்முறை செய்யும் சாதிய மதவாதிகளுக்கு எந்தக் கட்டுபாட்டையும் விதிப்பதில்லை. அரசே சாதிய சார்பாகத்தான் நடக்கிறது. நீதியை மக்கள் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது.
சிறப்புத் திருமணச் சட்டம் 1954
சிறப்புத் திருமணச் சட்டம் 1954 (Special Marriage Act, 1954) இல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய அம்சமான சாதி, மதம் கடந்து திருமணம் செய்து கொள்ள விரும் புபவர்கள் இச்சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். இன்றும் நூற்றுக் கணக்கான சாதி மறுப்புத் திருமணங்கள் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
சுயமரியாதைத் திருமணச்சட்டம்: தமிழ் நாட்டில் சடங்குகள், புரோகிதர், தாலி, அக்னி, சப்தபதி இல்லாத சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என்று அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது 1967ல் இச்சட்ட வரைவு கொண்டுவந்து பின் 1968ல் அதனை சட்ட மாக்கினார்.
இராஜஸ்தான் மாநில அரசு இயற்றிய சிறப்புச் சட்டம் -2019
கடந்த 2019ஆம் ஆண்டு, இராஜஸ் தான் மாநில காங்கிரசு அரசு, “THE RAJASTHAN PROHIBITION OF INTERFERENCE WITH THE FREEDOM OF MATRIMONIAL ALLIANCES IN THE NAME OF HONOUR AND TRADITION BILL, 2019” திருமண விருப்பங்களின் சுதந்திரத்தில், பெருமை, பாரம்பரியத்தின் பெயரால் தலையிடுவதைத் தடை செய்யும் ராஜஸ்தான் அரசின் சட்டம் 2019 என்கிற சட்டத்தை இயற்றியுள்ளது. இந்தியாவிலேயே ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றிய மாநிலம் ராஜஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய கொடூர ஆணவக் கொலையை சாதி வெறுப்புக் குற்றங்களைத் தடுத்திட தமிழக அரசு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். சமூக நிதி, சாதி எதிர்ப்பு, தமிழர் உரிமை போன்ற போராட்டங்களின் அடை யாளமாக திகழும் தமிழ்நாட்டில் சாதி மாறி காதலித்த காரணத்திற்காகவே கொல்லப் படுவது வெட்கப்பட வேண்டிய ஒன்று. பின்னோக்கி நகரும் சாதிய மனோபாவத்தை மடைமாற்றிட வேண்டும். அழுத்தமான கருத்தியல் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அனைத்து சாதியும் கலப்புச் சாதிகளே என்பதை உரக்கப் பேசுவோம். சமத்துவத்தை சாதி மறுத்த தமிழர் ஒற் றுமையை உருவாக்க வேண்டுமென்றால் சாதி தீண்டாமை எதிர்ப்பை, சாதி ஒழிப்பை உரக்கப் பேசியாக வேண்டும். அதற்கு அணியமாவோம்.
- வ.இரமணி