பேயடித்த முகம் போல் ரத்தினபுரிவீதிகள் முகம் தொங்கிப் போய் வெறிச்சோடிக் கிடந்தது. தெருவில் நடமாடும் ஒன்றுரெண்டு பேரும் எதிரெதிரே வந்தாலும் நின்று பேசாமல் கடந்து போயினர். சலீம் கடையின்முன்பு பொருட்கள் சிதறிக் கிடந்தது. கடைக்குள் வைத்து யாரோ சமையல் செய்ததுபோல் புகை படர்ந்து கருப்பப்பி இருந்தது. நெருப்பில் கருகிய அரிசியைத் தின்று வயிறு வீங்கி கடையின்முன்பு செத்துகிடந்த மூன்று ஆடுகளை மாநகராட்சி ஊழியர்கள் வந்து எடுப்பார்கள் என பார்த்துப்பார்த்து கடைசிவரை யாரும் வராததால் நாத்தம் தாங்காமல் சலீம் கடை எதிரேயிருந்த நாகராஜும் அவனது நண்பர்களும் சாக்குப்பையில் திணித்து ஏரிமேட்டில் வீசி வந்தார்கள். சலீம் எங்கு ஓடிப்போனான் என்று யாருக்கும் தெரியவில்லை. அநேகமாய் அவன் சொந்த ஊருக்கே “போய்க்கோலினடா மயிரு நீங்களும் நீங்களுட நாடும்” என்று அவன் மொழியில் சபித்தபடியே கேரளா போயிருப்பான். இனிமேல் இடியே விழுந்தாலும் இந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டான்.

தினமும் சலீம் கடைவாசலை கூட்டிப் பெருக்கும் சொர்ணம்மாள் சலீம் வந்துவிட்டானா என்று எட்டிப்பார்க்க வந்தாள், கடையின்முன்பு அவன் தினமும் போடும் நொறுக்குத் தீனியைத் தின்று பழகிய தெருநாய் மட்டும் படுத்திருந்தது. சொர்ணம்மாள் சுருங்கிய முகம் குள்ளமான தோற்றம் நரைத்த முடியுடன் தளர்ந்துபோய் இருந்தாள். அவன் வரவில்லை என்பதற்கு அடையாளமாய் சிதறிய பொருட்கள் அய்ந்தாம் நாளும் அப்பிடியே கிடந்தது. மனசு தாங்காமல் எடுத்து ஒதுங்க வைக்கலாம் என்று நேற்று எடுக்கப் போனவளை அவர்கள் வந்து “இது வேண்டாத வேல எடத்தக் காலி பண்ணு” என்று நேற்றே மிரட்டினார்கள். அடி வாங்கிய பயம் இன்னும் அவளுக்கு இருந்தது. முன்பைப் போல் யாரிடமும் துணிந்து சண்டைபோட முடியாத உடல்வலு அவளை வெட்கப்பட வைத்தது. கவர்மென்ட் ஆஸ்பத்திரி முன்பு இட்டிலிகடை போடும் அந்நாளில் சொர்ணம்மாவை யாரும் ஏமாற்ற முடியாது ஏறிவிட்டு வந்து விடுவாள், ஆனால் தற்போது வலு அனைத்தும் இழந்த சக்கையாய் இருந்தாள்.

கலவரம் முடிந்து அய்ந்து நாட்கள் ஆகியிருந்திருந்தது. சலீம் கடை எதிரேயிருந்த சிக்கந்தர் வீட்டில் பெரிய பூட்டோடு தாழ் தொங்கியது. துருதுருவென்று ஓடிக் கொண்டிருக்கும் அமீரின் சத்தமில்லாமல் அந்த வீடு சொர்ணம்மாவுக்கு என்னமோபோல் இருந்தது.

பாவமறியாத சலிமை நினைத்து நெஞ்சு மறுவியது. “எப்பிடியாப்பட்ட புள்ள அது யாரோட வம்பு தும்புக்கும் போகாத புள்ளைய இப்படி முடுக்கிட்டாங்களே, அவுனுங்க புள்ளகுட்டி உருப்புடுமா நாசமத்துப் போனவங்கே” முனுமுனுத்தபடியே சலீம் கடை எதிரே இருந்த புங்கமரத்தடியில் சொர்ணம்மா உட்கார்ந்தாள், சலீம் கடை பார்க்கப் பார்க்க அவள் வயிறு பற்றியெறிந்தது. அந்த கடையைப் பெரிதாக்க சலீம் பட்ட துன்பத்தை எல்லாம் அருகில் இருந்து பார்த்தவள் என்பதால் அவளுக்குக் கூடுதல் வலி இருந்தது. பால்பாக்கெட் போடும் முருகேஷ் அவனுக்கு வரவேண்டிய நூறுபாய் கிடைக்காமல் போய்விடுமோ என்று இன்றும் வந்து எட்டிப் பார்த்தான் “என்ன கண்ணு வேணும்?” என்று சொர்ணம்மாள் கேட்டாள். “இல்ல ஆத்தா சலீம் அண்ணே வந்துருச்சான்னு பாக்கவந்தே எனக்கு நூருவா பால் கணக்கு வரணும்” என்று ஏக்கமாய் கேட்டான். இல்லை என்று சொர்ணம்மாள் தலை ஆட்டினாள். அவளின் பதில் முருகேசுக்கு பெரும் சோகமாயிருந்தது.

சலீம் கடைக்கு வரும் பால்பேக்கட்டுகளைத் தினமும் காலையில் ஒவ்வொரு வீடாய் போடும் முருகேசுக்கு கமிசன் மாதிரி சலீம் மாதச் சம்பளம் கொடுப்பான். அப்பிடி சேர்த்து வைக்கும் பணம்தான் முருகேசுக்குப் படிப்புச்செலவு. ரத்தினபுரி அரசு பள்ளிக்கூடத்தில் பத்தாவது படித்து வந்தான். நூறு ருபாய் என்பது முருகேசுக்கு ஓர் ஊரை வாங்கும் பணமது. மாதம் இருபது ருபாய் என்று கமிசன் வாங்கும் அவன், காசு வாங்கினால் செலவாகிடும் என்று கணக்கு மட்டும் வைத்துக் கொண்டு வந்தவன், அய்ந்து மாதச் சம்பளம் போனதில் முகம் தொங்கிப் கடையையே சுற்றிச் சுற்றி வந்தான்.

அவ்வீதியில் இருந்த எல்லோருக்கும் ஒரு குற்றவுணர்வு இருந்தது. நம்மப்வீட்டு புள்ளமாறி பழக்கமா இருந்த புள்ளைய அவுனுங்க அடிக்கும்போது நாமே ஏன் தடுக்குலே? தடுக்காமப் போனதற்கு என்ன காரணம்? அவனா குண்டு வச்சான்? எவனோ வச்சதுக்கு இவனஅடுச்ச போது ஏன் தடுக்கமுடியல” என்று குற்றவுணர்வு அவர்களை வாட்டியது. சலீம்பற்றிய நினைவுகள் சொர்ணம்மாவை இம்சை செய்து கொண்டிருந்தது. ஊருக்குத்தான் சலீமின் கடைவாசலை பெருக்குபவள். ஆனால், அந்தக் கடையின் முதலாளிபோல் நடந்து கொள்ளும் அவளின் பவுசு இனிமேல் வாய்க்குமோ என்று உறுத்தலாகவே இருந்தது. காலை கடை திறக்கும்முன்பே கடைவாசல் கூட்டித் தண்ணிர் தெளித்து பளிச்சென்று வைத்துவிடுவாள். கடையில் அப்பப்போ கிடைக்கும் காய்கள், பண்ணு, இன்னும் மிச்சமான ஒன்னு ரெண்டு என்று கணக்குப் பாக்காமே கொடுக்கிற புள்ள அது” என்று உள்ளுக்குள் பொருமினாள், எந்தக் கவலையும் இல்லாமல் காலத்தை ஓட்டிவிடலாம் என்று இருந்தவளுக்கு சலீமின் ஓட்டம் பெரும் இடியாய் இருந்தது. கேரளா கொழிஞ்சாம் பாறையிலிருந்து பிழைப்புக்காக வந்தவன் உயிர்பிழைத்தால் போதுமென்று தலைதெறிக்க ஓடிவிட்டான்.

ஆஸ்பத்திரி முன்பு புதுஹோட்டல் வந்ததால் போலீஸ் இட்லிக்கடை வைக்க தொடர்ந்து தொல்லை செய்ததாலும், முன்பைப்போல் எல்லாவற்றையும் சுமந்துக்கொண்டு கடைவைக்க தெம்பு இல்லாததாலும் அடுத்து வாழ்க்கை ஓட்ட என்ன செய்யலாம் என இருந்தபோதுதான் சலீம் இரத்தினபுரியில் கடை வைத்தான். “தம்பி தினமும் வாசல் எல்லாம் கூட்டிப் பெருக்கிறேன். ஏதாவது மாசமனா கொடு சாமி” என்று வம்படிக்குப் போய் வேலைவாங்கினாள். எந்த மறுப்பும் சொல்லாமல் அவன் தலையாட்டினான். யாருமில்லாத தனக்கு ஒத்தாசையாக சலீம் இருப்பது பலநேரம் அவளுக்கு ஆறுதலாய் இருந்தது. அவன் இங்கு வந்து சேர்ந்த பழைய நினைவு அவளை வாட்டியது.

 பத்து வருடத்திற்குமுன்பு கேரளாவிலிருந்து “கோயமுத்தூர் போனால் கடைவைத்துப் பிழைக்கலாம்” என்று டவுனுக்குள் மளிகைக்கடை வைத்திருந்த அவன்மாமா சொல்லி இங்கு வந்தவன். அவனின் இந்தப் பத்து வருட வாழ்வில் ஒருமுறைகூட யாரிடமும் முகத்தைக் காட்டியதில்லை “அங்கே எங்கூட வந்து கொஞ்ச நாள் கடையப் பாத்துக்கோ, வியாபாரம் பழகி அங்கேயே நல்ல இடமா பாத்து கடய வையு” என்று சொல்லி அவன் மாமா அழைத்துவந்தார்.

இந்நகரத்தில் பெரும்பாலுமுள்ள மளிகைக்கடைகள் கேரளாக்காரர்களின் கடையாகத்தான் இருந்தது. ஒன்று ரெண்டு கடைகள் அண்ணாச்சிகள் வசம். பேக்கரி என்றால் அது முழுக்க முழுக்க சேட்டன்கடையாகவே இருந்தது. இந்நகரத்திற்கும் கேரளாவிற்கும் நெருங்கிய பந்தமிருந்தது. ஊரில் பொண்ணு கிடைக்காத தெல்லவாரிகள் எல்லோருக்கும் புகலிடம் கேரளாதான். இங்கே செய்யும் பொறுக்கித்தனம் எல்லாம் தெரியாமல் பொண்ணு கொடுத்து கொஞ்சநாளில் பெண்ணைத் திரும்ப அழைத்துப் போன கதைகள் ஏராளம் இங்கே, ஒரு கட்டத்தில் எந்த ஊருக்கு வேணுமுனாலும் பொண்ணு கொடுங்க அந்த கோயமுத்தூர்க் காரனுங்களுக்கு மட்டும் கொடுத்துடாதீங்க என்று சொல்லுமளவுக்கு நிலைமை இருந்தது. தெருவுக்குப் பத்து வீடுகள் மலையாளக் குடும்பமாகக் குட்டி கேரளாவாக இந்நகரம் இருந்ததால் நம்பி வந்த சலீம் வெம்பிப் போய்விட்டான்.

சலீம் ஓடிப்போனதில் கடன் சொல்லி வாங்கிக் குவித்த மளிகைக்கு இனிப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை என்ற மகிழ்ச்சியும், அவசரத்துக்குக் காசு இல்லாட்டியும் கடன் கொடுக்கிற சேட்டான் இல்லையே என்ற வருத்தமும் ஒருசேர தெருவில் இருந்தது. சலீம் ஒரு முஸ்லீம் என்று அந்தத் தெருவாசிகள் எப்போதும் நினைத்தது கிடையாது. அப்பிடியான எந்தச் சிந்தனையும் இல்லாத தெருவில் புதிய சிந்தனைக்கு விதையாய் சலீம் கடை எரிக்கபட்டது.

கலவரத்தைப் பற்றியே கேள்விப்படாத அந்நகரத்தில் அந்த அனுபவம் எல்லோருக்கும் புரியாத புதிராகயிருந்தது. சலீம் கடை எரிக்கப்பட்ட கொஞ்ச மாதங்களுக்கு முன்னதாகவே முக்கோண வடிவிலிருந்த கொடிகள் ரத்தினபுரி வீதிகளில் அடிக்கடி கண்ணில்பட்டது. சில இளவட்டங்கள் நெற்றியில் இழுக்கப்பட்ட பொட்டுகளோடு பால் மாரியம்மன் கோவில் மைதானத்தில் மாலை நேரத்தில் கூடி இரவு வரை வட்டமாய் உட்கார்ந்து பேசிக்கலைவதும், இடையிடையே உடற்பயிற்சி செய்வதும் “ஆ ஊ” என்று கத்திக்கொண்டு கராத்தே பயிற்சி செய்வதும் புதியதாக அவ்வீதியில் முளைத்திருந்தது. இதற்காகவே மாஸ்டர் ஒருவர் வந்திருந்தார். தெருவில் இருந்த பள்ளிக்கூட பொடுசுகள் “ப்ரீ கராத்தே கிளாஸ்” என்று அதுகளும் “ஆ....ஊ....” என்று அந்த மைதானத்தில் கத்திக்கொண்டிருந்தனர். இருட்டும்போது பயிற்சி முடிந்தது என்று பொடுசுகளை மட்டும் அனுப்பிவிட்டு இளசுகளிடம் வட்டமாக உட்காரப் வைத்து பேசுவார் அந்த மாஸ்டர்.

சலீம் கடைக்கு எதிரேயிருந்த சிக்கந்தர் பையன் அமீரும் கராத்தே கிளாஸ் போனான். அய்ந்தாம் வகுப்பு படிக்கும் அமீர் உற்சாகமாய் போய்க் கொண்டிருந்த கொஞ்ச நாளில் எந்தக் காரணமும் இல்லாமல் மாஸ்டர் வர வேண்டாம் என்று கூறிவிட்டார். அதற்கு மாஸ்டர் சொன்ன காரணம் “இன்னும் கொஞ்சம் பெரியவனானால் தான் உனக்கு நல்ல வரும் இப்போ சரியா வர மாட்டிங்குது” என்று, ஆனால் அவன் சோட்டுப் பொடுசுகளை மட்டும் அந்த மாஸ்டர் வேண்டாம் என்று சொல்லவில்லை. “நானும் நல்லாத்தானே செய்தேன் அப்புறம் ஏன் எனக்கு சரியாக வரலைனு மாஸ்டர் சொல்றாருன்னு” அமீர் மண்டை குழம்பிக் குழம்பி யோசித்தான். அந்தக் குட்டி மூளையில் எதுவுமே விளங்கவில்லை, ஒருவாரம் அந்த மைதானத்திலேயே உட்கார்ந்திருந்த அமீர் எப்படியும் மாஸ்டர் கூப்பிடுவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கிப் போனான், ஏக்கம் தாங்காமல் இருந்த அமீரை அவள் அம்மா அந்தப் பக்கமே போகாதேன்னு கண்டிப்பா சொல்லிவிட்ட பின்புதான் அங்கு போவதையே நிறுத்திக் கொண்டான். இருந்தாலும் மனசுக்குள் “ஆ ஊ“ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அதற்குள் பட்டம் சீசன் வந்ததால் பட்டம் கராத்தே ஏக்கத்தை வானத்திற்குக் கொண்டுபோய் மறக்கடிக்க வைத்தது. அனைத்தையும் இழுத்துக் கொண்டு போகும் பெரும் அலை போல பட்டம் எல்லாப் பொடுசுகளையும் அள்ளிக் கொண்டு வந்து தெருவில் கிடத்தியது. “ஆ... ஊ” சத்தம் போய் என்னோடது மாஞ்சா நூலு? உன்னோடது மாஞ்சா நூலா? யாரு பட்டம் அருக்குதுன்னு பாத்துகலாமா” என்ற முக்கிய பிரச்னைதான் சிறிசுகளிடம் இருந்தது. மைதானத்திலும் இளசுகளின் வட்டம் சுருங்கியிருந்தது ஆனால் கரையவில்லை.

மாலைப்நேரப் பயிற்சிவகுப்பில் புதிய இளவட்டங்கள் கொஞ்சம் சேர்ந்திருந்தார்கள். பக்கத்துத் தெருவில் உள்ளவர்களுக்கும் அவ்விடம் பயிற்சிவகுப்பாக மாறியது. கொஞ்சநாளில் சில இளவட்டங்களை மட்டும் தேர்வு செய்து எங்கோ அரசியல் பயிற்சிவகுப்பு நடக்கிறது என்று அழைத்துச்சென்றார் மாஸ்டர். அழைத்துச் சென்ற இளசுகள் தெளிவுபெற்ற அறிவாளிகள்போல் மாஸ்டர் இல்லாத நேரத்தில் மாஸ்டராக இருந்து வகுப்பை நடத்தினார்கள். தீவிரமாய் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

விநாயகர் விழாவுக்கு நன்கொடை கேட்டு மைதான இளவட்டங்கள் மாஸ்டர் தலைமையில் சலீம் கடைக்கு வந்தபோது பணத்துடன் “பொங்கல் வைத்தால் கொடுங்கள்” என்று பையில் கொஞ்சம் வெல்ல உருண்டைகளையும் போட்டுக் கொடுத்தான். கடைவீதியில் உள்ள மாமாகடையில் வேலை பார்த்த போது பக்கத்திலிருந்த மாரியம்மன்கோவில் பொங்கல் சாப்பிட்டு பழகிய நாக்கு இன்னும் கோவில் பொங்கலுக்கு அலைந்தது.

பத்து வருட கோவை வாழ்க்கையில் சலீம் நன்றாய்த் தமிழ் பேசக் கற்றிருந்தான். சலீம் கடை எல்லோருக்கும் அடையாளம் சொல்லுமளவுக்குப் பரவியிருந்தது. அதற்கு அவனின் உழைப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல. காலையில் ஆறுமணிக்குக் கடைதிறந்தால் இரவு எல்லாம் எடுத்து வைக்கப் பதினொன்று பன்னிரென்டு ஆகிவிடும், எந்த நல்லது கெட்டதிற்கும் போகாமல் கடையையே கட்டிக்கொண்டு அழுதவனுக்கு ஆய்சா நல்ல சோடியாக இருந்தாள். கூடமாட ஒத்தாசி செய்து அவளும் சேர்ந்தே உழைத்தாள், ஒருமுறை கடைக்குள்ளேயே மயக்கமானவளைச் சொர்ணம்மாதான் தாங்கிப் பிடித்து கண்ணையும் நாடியையும் பார்த்துப் புள்ளதாச்சியா இருக்கேன்னு வாயில் சர்க்கரை போட்டாள். அப்போதிலிருந்து ஆய்சாவை எந்தவேலையும் செய்யவிடாமல் அனைத்தையும் அவனே செய்தான். கூட்டிப் பெருக்குற வேலையையும் தாண்டி சொர்ணம்மாள் கடையின் சின்னச்சின்ன வேலையைத்தானே எடுத்துக் கொண்டாள். அது அவனுக்குக் கொஞ்சம் தோதுவாக இருந்தது. பாட்டிவைத்தியம்போல் அப்பப்போ ஆய்சாவுக்கும் மருத்துவக் குறிப்புகள் சொல்லுவாள். சொர்ணம்மாள் அசைக்க முடியாத இடத்தை வைத்திருந்தாள். வயிறுபெருத்த ஆய்சா பொறுமையாகப் பிரசவம்பார்க்க ஊருக்குப் போகிறேன் என்றாள். “இது விளையாட்டுக் காரியமில்ல ரெண்டு உசுரு” என்று சொர்ணம்மா திட்டி, சலீமிடம் சொல்லிப் போனமாதம்தான் தன் மனைவியைப் பேத்துக்காக ஊரில் விட்டு வந்திருந்தான்.

கடையும் வீடும் ஒன்றாக இருந்ததால் அவன் எங்கும் போகவேண்டியது இல்லை. ஆய்சா இல்லாததால் வாய்க்கு ருசியாய் எதாவது செய்யும்போது சொர்ணம்மாள் மறக்காமல் சலீமுக்கும் கொண்டு வருவாள் அதனால் சொர்ணம்மாளின் மீது தனி அக்கறையும் அவனுக்கு உண்டு.

முந்தைய கலவரத்தின் போது பல கடைகள் அடித்து நொறுக்கிய போதும் சலீம் கடை தப்பிக்க காரணம் யாரிடமும் முகம் காட்டாத அவன் குணம். இம்முறை திட்டமிட்டுத் தாக்கப்பட்டது. எவனோ நகரத்தில் குண்டுவைத்ததாகச் சொல்லி இவனின் கடை சின்னாபின்னமானது.

அன்று மதியம் சொர்ணம்மாள் கொண்டுவந்த கருவாட்டுக் குழம்பு வாய்க்கு வக்கணையாய் இருந்தது. பசியோடு இருப்பதை அவன் முகமே காட்டியது, கடையில் சொர்ணம்மாவை உட்கார வைத்துவிட்டு உள்ளறையில் எச்சில் ஊற இரண்டு வாய் எடுத்துச் சாப்பிட்ட நேரம் பிஸ்கட் அடுக்கி வைத்திருக்கும் பெரிய பாட்டில் “படீர்” என்று உடைத்து சிதறிய சத்தம்கேட்டு எச்சில் கையோடு ஓடி வந்தான். மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த பக்கத்துத் தெரு இளவட்டங்கள் சலீம் கடையை நொறுக்கிக் கொண்டிருந்தனர். கடையை எதற்காக அடிக்கிறார்கள் என்று புரியாமல் சலீம் தடுத்தான். அவனின் பத்து ஆண்டு உழைப்பை நொறுக்கித் தள்ளுவதை அவனால் தாங்க முடியவில்லை.

“டே ஏன்டா கடையே ஒடக்கிறீங்கே நிறுத்துங்கட, நிறுத்துங்கட அந்த புள்ள பாவம் டா” சொர்ணம்மாள் அழுது அழுது தடுத்தாள். அவர்களின் காதில் எதுவுமே விழவில்லை.

அதில் ஒருவன் பெட்ரோலால் நிரப்பப்பட்ட பாட்டிலை திரிக்கிள்ளி பற்றவைத்து கடைக்குள் தூக்கி அடித்தான். அது நெருப்புமிழ்ந்து கடையைக் கருக்கியது. விநாயகர் விழாவுக்கு சலீம் கையில் காசுவாங்கிய கராத்தே மாஸ்டரின் கைவிரல்கள் சலீம் கண்ணத்தில் கோடுகளாய் பதிந்தது. அலறிய சலீம் “அடுச்சாலும் பரவால்ல என்கடையே விட்டுடுங்க அண்ணே” மாஸ்டரின் காலைப் பிடித்துக் கதறினான். அவன் நெஞ்சின் மீது ஓங்கி உதைத்தபோது நிலைகுலைந்து கீழே விழுந்தான்.

இன்னொருவன் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் அவன் காலில் ஓங்கி அடித்தான். “அம்மே! அம்மே!” வலியில் அலறினான். சொர்ணம்மா கடையைக் காப்பதா இல்லை மகனாய்ப் போன புள்ளையைக் காப்பதா என்று தெரியாமல் இங்கும் அங்கும் ஓடினாள். அவளையும் நெட்டித்தள்ளி

 ரெண்டு அடி விட்டார்கள். தடுமாறிக் கீழே விழுந்தாள். தனது கடையை எதற்கு அடிக்கிறார்கள் என்று எதுவுமே புரியாமல் சலீம் தடுத்துத் தடுத்துப் பார்த்தான். ஒவ்வொரு முறையும் அவுனுக்கு அடிவிழுந்தது. முகம், கை, கால், முதுகு எனச் சகட்டுமேனிக்கு விழுந்த அடியில் நிலைகுலைந்துபோன அவனின் சிவந்த உடலில் சிவந்த பாம்பாய் ரத்தம் ஊர்ந்தது. பித்துப் பிடித்தவனைப் போல் அடித்து நொறுக்கும் கடையைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். தினமும் காலையில் வீசியெறியும் வருக்கியை லாவகமாய்ப் பிடித்து நொறுக்கும் தெருநாய் மட்டும் சலீமையும் கடையையும் மாறிமாறிப் பார்த்துக் குறைத்துக் கொண்டேயிருந்தது. இவர்களைத் தடுக்க முடியாது உயிராவது மிஞ்சட்டும் என்று தடுமாறி எழுந்தவன் கிழிந்த சட்டையோடு கைலியைத் தூக்கிக் கட்டி பிச்சகாரனைப் போல் அடிபட்ட காலைத் தூக்கி வைக்க முடியாமல் இழுத்துயிழுத்து அழுது கொண்டே போனான்.

அவன் போன கோலம் இன்னும் சொர்ணம்மாவின் கண்ணில் அகலாமல் அப்பிடியே இருந்தது. ஒருவாய் நிம்மதியாகக்கூட சாப்பிடாமல் ரத்தம் வழிந்த சோற்றின் எச்சில் கையோடுபோன முகம் அவளை அழ வைத்துக் கொண்டேயிருந்தது. தலையுயர்த்தி புகையடித்த கடையைப் பார்த்த அவளுக்குத் தாங்க முடியாத மனவலி கண்ணத்தில் நீர்க்கோடுகளாய் வழிந்தோடியது, அழுகையில் நெஞ்சு விம்மியது. தனது நெஞ்சின்மீது யாரோ உட்காருவதுபோல் அவளுக்குப் பாரம் அழுத்தியது. தலைவைத்துச் சாய்ந்திருந்த புங்கமரத்திலிருந்து பூக்கள் அவள் மீது விழுந்து கொண்டிருந்தது.

- அ.கரீம்

Pin It