சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் என்று தெரிகிறது. ஒருபுறம் நெற்பயிர் புடைவிட்டு பருவமடைய காத்திருக்கும் பெண் போல் நிற்கிறது. வாழைகள் ஒருபக்கம் சொட்டு நீர்ப்பாசனம் பெற்று குலைதள்ளிக்கொண்டு நிறைமாத கர்ப்பிணி போல் நிற்கின்றன. வாழைத்தார் விலைபேச வியாபாரிகள் பெரிய பண்ணையாரிடம் பேசிக்கொண்டுள்ளனர். "மகன் அவசரமா வெளிய போயிருக்கான். வரட்டும் பேசி முடித்துக்கொள்ளலாம்" என்றவர் "யாரது? ஏம் புள்ள இவங்களுக்கு டீ போட்டுக்கொண்டு வந்து குடுங்க" என்றபடி மாட்டுக் கட்டுத்தரையை பார்வையிட அடியெடுத்து வைக்கிறார். கட்டுத்தரையை ஒட்டி கரும்பு பயிர் வளர்ந்து, ஆலை நிர்வாகத்தால் வெட்டப்படாமல் பனிரெண்டுமாதமாக வெட்டையாய் ஆகிக்கொண்டு வருகிறது. "ஏண்டாப்பா! இந்த பேக்டரிக்காரங்க கரும்பு வெட்ட எப்ப வருவாங்கன்னு கேட்டுச்சொல்லு; இல்லையின்னா வெளிய யாருக்காவது வெட்டக் குடுத்தரலாம். எடை குறைஞ்சா யாருக்கு நஷ்டம்?" என்று கடிந்தபடி மகன் மீது இருந்த கோபத்தை வெளிக்காட்டாமல் கட்டுத்தரைக்குள் நுழைந்தார். 

மேட்டாங்காட்டு வெள்ளாமையாய் வந்த பச்சைப்பயறு, தட்டைப்பயறு, அவரை போன்றவற்றை குட்டாளம் போட்டு களத்தில் மூடி வைத்திருந்தவற்றை நான்கு கூலிக்கார பெண்கள் புடைக்கத் துவங்கினர். "அளே மங்கா!போசியை எடுத்துக்கிட்டு வந்து டீயை வாங்கிட்டுப்போய் குடிச்சிட்டு வேலை செய்ங்க!" 

என்றாள் பெரிய பண்ணையக்காரிச்சியம்மாள்.  

"ஏனுங்க பண்ணையகாரிச்சி, பேரன் பள்ளிக்கூட லீவுக்கு வருவாங்கன்னு சொன்னீங்க, இன்னும் காணாமே?" என்றால் மங்கா.  

"நேத்து போய் கூட்டீட்டு வந்துட்டாங்க, இன்னும் தூங்கீட்டு இருக்கான்! பள்ளிக்கூடத்தில என்ன சொல்லித்தரானுங்களோ! ஆறாவது படிக்கிற பையன் நேரங்காலத்தில எந்திரிக்க வேண்டாமா?" என நொந்து கொண்டாள் பாட்டி. 

அப்போது காரில் வந்து இறங்கிய சின்னப்பண்ணையக்காரர் எதையும் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்தவர் "சுசீ...! சுசீ...!" எனச் செல்லமாக அழைத்தார் தன் மனைவியை. இவரைவிட பணக்கார வீட்டுப்பெண் அவள்; கல்லூரி போய் பட்டம் பெற்றவள். விடுதியிலேயே தங்கிப்படித்தபெண். அவளுக்கு இந்தக் கிராமத்துப்பழக்க வழக்கங்கள், விவசாய வேலைகள் எதுவும் பிடிப்பது இல்லை. பையனைப் படிக்க வைக்க, நகரத்திலேயே ஒரு பங்களாக்கட்டி குடியிருக்க வேண்டும் என கணவனை தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தாள். பெரிய பண்ணையம், தோட்டத்திற்கு நடுவில் எல்லா வசதிகளும் உள்ள பண்ணை வீடு. ஒரே மகன் என்ஜினியரிங் படித்தும் தொழிலுக்குப் போக முடியாமல் பண்ணையத்தைக் கவனித்து வருகிறார். 

தன் பையனுடன் தூங்கிக் கொண்டிருந்த சுசீலா, "ஏங்க டிஸ்டர்ப் பண்றீங்க! நானும் பையனும் நல்லா தூங்கிட்டிருக்கிறோம். சமையல்காரம்மாவை தோசை போட்டு தரச்சொல்லி சாப்பிட்டுக்குங்க! ப்ளீஸ்!" என்றாள். என்னவோ மனைவியிடம் பேச வந்தவர் பேசாமலேயே காலைக் குளியலுக்குச் சென்றுவிட்டார். 

மணி பதினொன்று இருக்கும். மங்காவின் பேரன் பாட்டியைப் பார்க்க வந்தவன், பாட்டியோடு உட்கார்ந்து பாட்டியின் வேலைக்கு உதவிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சின்னப்பண்ணையக்காரர் மகன் கார்த்திக் "அம்மா, நானும் இந்தப் பையனும் ரிவரை(ஆறு) பார்த்துட்டு வரோம்மா!" எனக்கேட்க "அங்க போனா நீ தண்ணீல விளையாடுவே! வேண்டாம்" என்றாள் அம்மா. 

"சத்தியமா தண்ணீல இறங்க மாட்டேம்மா!" அவன் அப்படிக் கெஞ்சவும் அம்மா மனம் இளகி சரி போய் வா என்றவள் "ஏண்டா தம்பி நீ யாரு பையன்?" என்றாள். 

"சாமி இவன் என் பேரன்தானுங்க! நம்மூரு பள்ளிக்கூடத்துல ஆறாவது படிக்கிறானுங்க! அன்னிக்கு சின்னப் பண்ணையக்காரருக்கு பத்தாத துணிய எல்லாம் தந்தீங்களே, அது இவனுக்கு தானுங்க!" என்றாள் மங்கா. 

சுசீலா அவனிடம் "உன் பேர் என்னடா?" என்று கேட்டதும் "வீராசாமிங்க" என்றான் மங்காவின் பேரன். 

"சரி சின்னப்பண்ணையக்காரரை கூட்டீட்டுப்போய் ஆத்தைக் காட்டிட்டு சீக்கிரமா வந்தறணும்! தெரிஞ்சுதா?" என சுசீலா கட்டளையிட்டாள். 

ஆற்றிற்கு போன இருவரும் தங்களது பள்ளிக்கூட அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஆழம் அதிகமுள்ள இடங்களில் அமைதியாக நதி நகர்ந்தோட, பெரிய மீன்கள் வாலை ஆட்டிக்கொண்டு வலம்வர, கூட்டம் கூட்டமாக சிறிய மீன்கள், பெரிய மீன்களிடம் சிக்காமல் வேகமாக சென்று கொண்டிருந்தன. ஆழமில்லாத இடங்களில் கூழாங்கற்கள் மீது தண்ணீர் சலசலவென சத்தமிட்டுக் கொண்டே நெளிந்து வளைந்து தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. 

ஆற்றை ஒட்டிய தோட்டத்தில் வெள்ளரிக்காய் பயிர் செய்யப்பட்டிருப்பது கார்த்தியின் கண்ணில் படவே, "டேய்! வீராசாமி! இங்கப்பாரு! வெள்ளரிக்காய்! வா போய் பறிச்சு திங்கலாம்" என்றான். அதற்கு வீராசாமி, "வேண்டாமுங்க, அந்தப்பண்ணையக்காரரு பாத்தா கட்டி வெச்சு அடிப்பாரு" என்றான். போடா பயந்தாங்குளி! இங்க யார்டா இருக்காங்க? அப்படியே பாத்தாக்கூட நான் எங்க தாத்தா பெயரைச் சொன்னா, கும்பிடுபோட்டு, போயிட்டு வாங்கன்னு சொல்லீருவாங்க. நீ ஏண்டா பயப்படறே? நான் இருக்கேன்" என்றான் கார்த்திக். 

கையில் பிடிபட்ட புறாவின் இதயம் பயத்தில் படபடத்து அடிப்பது போல் வீராசாமியின் நெஞ்சு படபடக்கத் துவங்கியது. கார்த்திக் வீராசாமியின் கையைப் பிடித்து தோட்டத்திற்குள் அழைத்துச்சென்றான். இருவரும் தோட்டத்திற்குள் சென்று வெள்ளரி பறித்துக் கொண்டிருக்கும் போது, அந்த தோட்டத்து பண்ணையக்காரர் அங்கு வந்துவிட்டார். இருவரையும் கையும் களவுமாக பிடித்தஅவர்," ஏண்டா என்ன தைரியமிருந்தா என்னோட தோட்டத்துக்குள்ளேயே வந்து வெள்ளரிக்காய் திருடி திம்பீங்க?" என சத்தம்போட்டுவிட்டு விசாரிக்க இருவரும் சொன்னார்கள். உடனே அவர், "பன்னியோட சேந்தா பசுவும் பீ திங்குமாம்!" எனக்கூறி கார்த்திக்கைப் பார்த்து, "டேய்! நீ போடா! நான் உங்க அப்பாகிட்ட பேசிக்கிறேன்" என்று கூறி அவனை அனுப்பிவிட்டார். 

தப்பித்தால் போதும் என்ற உணர்வோடு வீராசாமியைப் பற்றி நினைக்காமல் வீட்டைநோக்கி ஓட்டம் பிடித்தான் கார்த்திக்! 

சிக்கியிருந்த வீராசாமியிடம், "ஏண்டா... நீ யாரு? அவன் யாரு? அவனோட உனக்கென்ன சேர்க்கை? இந்த ஊர்லயே பெரிய பண்ணையக்காரர், எங்க குலத்துக்கே அவர்தான் தலைவர், அவர் பேரனுக்கே திருட கத்துக்குடுத்திட்டயா?..." என்று அருகில் கிடந்த ஊஞ்ச விளாரால் அவனை நையப்புடைத்துவிட்டு" இதோட இத விட்டுடு! யாருகிட்டயாவது சொன்னே உங்குடும்பமே இருக்காது! ஊருக்கட்டுப்பாடு போட்டு சோறு தண்ணியில்லாம செய்திடுவேன்!" என வீராசாமியை மிரட்டி விரட்டியடித்தார். 

அன்று மாலை ஒரு ஆள் ஒரு கூடை நிறைய வெள்ளரிக்காயை சுமந்து வந்து பெரிய பண்ணையக்காரரிடம், "சாமி, செட்டி தோட்டத்து பண்ணையக்காரர் இத குடுத்து விட்டாருங்க. நம்ம பேரன் அந்தப்பக்கம் போனப்ப ஆசையா கேட்டாங்களாமா!" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டு போனான். இதை உள்ளேயிருந்து கவனித்த கார்த்திக். "தாத்தா, நான் காலையில ஆத்தை பாக்கப் போயிருந்தேன். அப்ப கேட்டேன். அதான் குடுத்து விட்டுருக்காங்க! ரொம்ப நல்லவரு அவரு!" என்றான். 

பாவம் வீராசாமி அடிபட்டது கார்த்திக்கு தெரியாது. 

மங்கா பக்கத்தில இருந்த ஒரு பெண்ணிடம், "சொந்தபந்தம் எவ்வளவு உறவோட இருக்காங்க பாத்தியா?" என்று கூறினாள். 

இரவு சுமார் ஒரு மணியிருக்கும் மங்காவின் பக்கத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த வீராசாமி, "சாமி, அடிக்காதீங்க! நான் திருடலீங்க! சத்தியமா நான் திருடலீங்க!" என அலறியபடி விறுக்கென்று தூக்கத்தில் இருந்து எழுந்து உட்கார்ந்தான். பதறிப்போன மங்கா, தன் பேரனை மடியில் படுக்க வைத்துக்கொண்டு நடந்ததைக் கேட்டாள். அவள் கை பேரனின் உடம்பில் தடவியது. பட்டைபட்டையாய் தடிப்புகள் கருத்த உடம்பில் வரிவரியாய் வரிந்து தள்ளப்பட்டிருந்தன. முதல்நாள் மாலை பண்ணையக்காரர் வீட்டிற்கு வெள்ளரிக்காய் வந்திறங்கியதை பார்த்தவளாயிற்றே மங்கா! 

அவளுக்கு தன் பேரனை சாதியச் சொல்லி அடித்ததைப் பற்றிக்கூட கவலையில்லை. அந்தத் தோட்டத்திற்கு போக வேண்டாம் என்று சொன்ன பேரனைப் பார்த்து 'பன்னிகூட சேர்ந்தா பசுவும் பீ திங்கும்' என்று சொன்ன அந்த வார்த்தைதான் அவள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து வாட்டியது; கண்ணீரும் தாரைதாரையாய் வடியத் தொடங்கியது. இந்தச் சாதியிலே பிறந்ததால்தானே இத்தனை வேதனை என எண்ணிக் குமுறினாள். யார் பன்னி? யார் பசு? என உள்ளம் கேட்க தனக்குள்ளே பேசிக் கொண்டு காறி உமிழ்ந்தாள்! 

- கே.துரைராஜ்

Pin It