விழிகளின் வழி கசிகிறது நம்பிக்கையின்மை
இதயத்திலிருந்து கசிகிறது குருதி வேதனையால்
ஊர்ந்துவருகிறது தனிமை அமைதியும் உடன் வருகிறது
மங்கி மறைகிறது கடந்தகாலம்
மங்கலாகத் தெரிகிறது நிகழ்காலம்
வெடிப்புக்கள் வழியே பார்வையை வீசிச் செல்கிறது எதிர்காலம்
தானே விலகுகிறது மர்மம்
அனைத்து மோசடிகளையும் உண்மை வெளிப்படுத்துகிறது
மோதல் தளர்கிறது உடன் வருகிறது அமைதி
புயல் ஓய்கிறது விண்ணில் வானவில் ஒளிர்கிறது
தென்றல் ஆரவாரத்தை அடக்குகிறது
உடன் வருகிறது அமைதி
கோபம் அகலுகிறது நெஞ்சிலிருந்து
மன்னிப்புக்கான அறைகூவல் வெளிவருகிறது
இதயம் தணிகிறது உடன் வருகிறது அமைதி
மனம், உடல், ஆன்மா எங்கும் வலி நிறைந்துள்ளது
சண்டையிடும் மனஉறுதி தளர்கிறது
உடன் வருகிறது அமைதி
வெறுப்பு எங்கும் ஆட்சி செய்கிறது
பிசாசு தன் விளையாட்டைத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது
தேவதைகள் தோற்பதில்லை
தற்காலிக ஓய்வைக் கொண்டுவருகின்றன
உடன் வருகிறது அமைதி
எனது இரத்தக்குழாய்களை உறையச் செய்கிறது குளிர்
கரம் ஒன்று நீள்கிறது நெருக்கமாகப் பற்றிக்கொள்கிறது என்னை
ஆற்றுப்படுத்துகிறது உடன் வருகிறது அமைதி
அதிகரிக்கிறது கொந்தளிப்பு சோர்வடைகிறது எனது மனம்
பொறுமையுடன் செவிமடுக்கிறது அக்கறைகொண்ட ஒரு குரல்
உடன் வருகிறது அமைதி
எனது இதயத்தைப் பிளக்கிறது வேதனை
இளம் செம்பழுப்பு நிற விழிகள் வேதனையைத் தணிக்கின்றன
காயத்தை ஆற்றுகின்றன உடன் வருகிறது அமைதி
வீணென்று தெரிகிறது வாழ்க்கை, வாழும் ஆசை அகல்கிறது
மென்குரல் ஒன்று என்னை வேண்டுகிறது
உடன் வருகிறது அமைதி
தேய்கிறது பகல் வானிலிருந்து இறங்குகிறது இருள்
புதிய விடியல் பிறக்கிறது
உடன் வருகிறது அமைதி
எப்போதும் வருகிறது அமைதி, அது ஒருபோதும் தவறிழைப்பதோ
காட்டிக் கொடுப்பதோ இல்லை
அது ஒருபோதும் தோற்பதும் இல்லை கைவிடுவதும் இல்லை
அமைதி எப்போதும் வருகிறது.
- சமினா சலிம்
தமிழில்: நிழல்வண்ணன்