"நீ எழுதியிருந்த கடைசிக் கவிதை நல்ல கருத்துள்ளதாக இருந்தது சாருமதி"  

நான் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தேன். அவை வெளிர் பழுப்பு நிறமாக மாறி அமைதியாகவும், சிரிப்பதைப் போலவும் காணப்பட்டன. 

"நன்றி சங்கர்! நீ கவிதைகள் படிக்க விரும்புவாயென்று எனக்குத் தெரியாது" என்று இருதயம் படபடவென அடித்துக் கொண்டிருந்தாலும், மனதை அமைதிப்படுத்திக் கொண்டு கூறினேன். 

"நான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாகும் வார இதழ்களில் உன் கவிதைகளை ரசித்தப் படிப்பதுண்டு. உனது எண்ணங்களெல்லாம் உனது முகத்தைப் போல அழகாக இருக்கின்றன" என்று கூச்சத்துடன் கூறினான். 

"ஒரு கப் காப்பி சாப்பிடலாம் வருகிறாயா? சாருமதி" என்று அவன் நட்புக் கலந்த புன்சிரிப்புடன் அழைப்பது போலிருந்தது. 

"இன்று வேண்டாம் சங்கர். இன்னொரு சமயம் வைத்துக்கொள்ளலாம்" என்று ஒவ்வொரு சமயத்திலும் கூறி அவனிடமிருந்து தப்பிவிடுவேன். 

சங்கர் ஒரு நல்ல மனிதன். என்னுடைய அலுவலகத்தில் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறான். நான் அவனை மதிக்கிறேன். அதனால் தான் தூரத்தில் நான் வசிக்கும் சிறிய வீட்டுக்கு அவனை அழைக்க விரும்புவதில்லை. 

ஏனென்றால் அவனுடன் நெருங்கிப் பழகினால் பின்னால் வருந்தவேண்டி நேரிடுமோ என்பதால்தான். எனது 25வது வயதில் நான் அழகாகவும், உலக ஞானம் அறிந்தவளாகவும் இருந்தேன். என் வாழ்க்கை பூராவும் ஒரு காதல் கீதம் இசைத்துக் கொண்டேயிருந்தது. எனக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். எப்பொழுதும் அவர்களுடன் சுற்றிக்கொண்டே இருப்பேன். 

வைரஸ் கிருமி என்னைப் பற்றிக் கொண்டு போலியோவினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற பெண் காதலிக்க விரும்பினாலும் பதிலுக்கு அவளை யார் காதலிப்பார்கள்? போலியோவினால் பாதிக்கப்படுவதற்கு முன் என் நண்பர்கள் எல்லோருமே என்னுடன் நன்றாகவே பழகிக் கொண்டிருந்தார்கள். 

போலியோவுக்குப் பிறகு நான் அவமதிக்கப்பட்டேன். மற்றவர்களிடமிருந்து அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அவர்களில் ஒருவராக என்னை எண்ண வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் நான் தனிமையில் விடப்பட்டேன். பரிதாபப்பட்டார்கள். அனுதாபப்பட்டார்கள். அழகிய பூந்தோட்டமாக இருந்த என்வாழ்க்கை திடீரென முள்நிறைந்த காடாக மாறிவிட்டது. 

எனது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு ஒரு அலுவலகத்தில் செக்ரடரியாக பணியில் அமர்ந்தேன். முன்னால் நடந்தவைகளையெல்லாம் மறக்க என் வேலையில் முழு கவனம் செலுத்தினேன். இளம் தம்பதிகள் யாராவது கைகோர்த்துக்கொண்டு போவதைப் பார்த்தால் மறுபக்கம் திரும்பிக்கொள்வேன். என்னுடன் கல்லூரியில் நன்றாகப் படித்த சூரியாவை விரும்பினேன். அவன் எப்போதும் எனக்குத் துணையாகவே இருந்து வந்தான். ஆனால், போலியாவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை அவன் மனைவியாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதனால் அவன் என் வாழ்க்கையிலிருந்து விலகிக்கொண்டான். 

"கவலைப்படாதே! ஒருநாள் யாராவது வந்து நமது சாருவை திருமணம் செய்து கொண்டு அழைத்துப் போய் விடுவார்கள். ஒவ்வொரு மலருக்கும் அதனது வாசனை உண்டு. நமது சாருவுக்கு கடவுள் நல்ல குணங்களைக் கொடுத்திருக்கிறாhர்" என்று ஒரு சமயம் என் தந்தை என் தாயாரிடம் கூறியதைக் கேட்டேன். 

என் கண்கள் கலங்கி கண்ணீர் வடிந்தது. ஆனால் நான் அமைதியாகவே இருந்தேன். அதுதான் நான் அழுத கடைசி நாளாக இருக்கும். நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதனால் வாழ்க்கையில் ஏமாற்றம் தான் ஏற்படும். 

இரண்டு தினங்களுக்குப் பிறகு நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகத் தயாரானேன். அப்போது சங்கர் என்னிடம் வந்து "இத்தனை நாளாக தடங்கலாகிக் கொண்டு வந்த ஒரு கப் காப்பியை இன்று சாப்பிடப் போகலாமா?" என்று தனது இனிய குரலில் மெதுவாகக்கேட்டான். இந்த தடவை என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை. சம்மதித்தேன். 

"இத்தனை நாளும் என்னுடன் காப்பி சாப்பிட வர ஏன் மறுத்தாய்? சாருமதி!" காப்பி வந்ததும் சங்கர் கேட்டான். 

"ஒன்று போனால் ஒன்று ஏதாவது வேலை வந்துகொண்டிருந்தது. அதனால் வர முடியவில்லை" என்றேன். இது அப்பட்டமான பொய்தான். என்ன செய்வது உண்மையைச் சொல்லியிருக்கலாம். 

திடீரென சமாளித்துக்கொண்டு "இல்லை சங்கர், அது ஒரு பொய். நான் அதை விரும்பவில்லை என்பதால்தான் வரவில்லை" என்று கூறினேன். 

"விரும்பவில்லையா? எதை?"- குழப்பத்துடன் அவன் கேட்டான். 

"உங்களுடனோ! அல்லது அந்த விஷயத்துக்காக வேறு மனிதர்களுடனோ!" என கண்களைச் சிமிட்டிக் கொண்டு நான் பதிலளித்தேன். 

"நான் உன்னுடன் விளையாட விரும்பவில்லை. இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. உன்னிடமிருந்து உண்மையை அறிய விரும்புகிறேன். பரிதாபப்பட்டல்ல..." 

"ஆ! அப்படியா?" நான் சிறிதுநேரம் அமைதியாக இருந்தேன். நாங்கள் காப்பியை மெதுவாகக் குடித்தோம். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்காக நான் வெட்கப்படவில்லை. 

நாங்கள் இருவரும் பேசுவதற்கு ஏதுமில்லை என்றபோது சிறிதுநேரம் கழித்து "நாம் போகலாமா?" என்றேன். 

"ஓ! அப்படியே! " அவன் பில்லுக்குப் பணம் கொடுத்தான். நாங்கள் கிளம்பினோம். 

வெளியே வந்ததும். சங்கர் என் கையைப் பிடித்துக்கொண்டான். என் முதுகுத் தண்டில் புதிய அலை ஓடுவதை உணர்ந்தேன். நான் குதி உயர்ந்த போலியோ ஷூ போட்டுக்கொண்ட நாளிலிருந்து யாரும் என் கையைப் பிடிக்க முயற்சிக்கவில்லை. சூர்யா கூட. இப்போது உலகமே பார்க்கும்படியாக சங்கர் என் கையைப் பிடித்துக்கொண்டிருந்தான். அதற்காக நான் கூச்சப்படவில்லை. 

"நான் உனக்குத் தொந்தரவு கொடுத்திருந்தால் அதற்காக வருந்துகிறேன் சங்கர்" என்று மெதுவாகக் கூறினேன். 

அவன் என்னைப்பார்த்து புன்னகைத்தான். இருவரும் அவனது காரில் ஏறினோம். அவன் ஒன்றும் பேசாமல் காரை நகரத்தைத் தாண்டி ஓட்டிச் சென்று ஒரு மரநிழலில் நிறுத்திவிட்டு என்னைப் பார்த்து-  

"நான் உன்னிடம் நேரடியாகவே சொல்கிறேன். சாருமதி நான் உன்னைக் காதலிக்கிறேன். கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ என்னை நம்புகிறாயா?" என்று என்னிடம் வெளிப்படையாகவே கூறினான். எதிர்பாராத ஒளி என்னுள் புகுந்தது. நான் கண்களை மூடிக்கொண்டேன். உலகம் என்னைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. நீண்ட நாட்களாக அடக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணீர் திடீரெனப் பீறிட்டு வந்தது. 

"நீ என்னைக் காதலிக்க வைத்துவிட்டாய் சாரு" என்று கைகளைப் பிடித்துக் கொண்டு காதில் குசுகுசுத்தான், அவன் என் முகத்தை அவன் முகத்துக்கு நேராகத் திருப்பினான். அந்தக் கண்களின் ஆழத்தில் என் வாழ்க்கையே அடங்கியிருப்பதைக் கண்டேன். 

என் தகப்பனார் கூறியதுபோல "ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு" என்பதை என் வாழ்க்கை மூலம் அறிந்து கொண்டேன். 

நன்றி: "Mirror" ஜனவரி, 1977

ஆங்கிலத்தில் : தர்ட்டி இ.பருச்சா

தமிழில் : சொ.மு.முத்து 

Pin It