என் அப்பா ஒரு செம்படை வீரர். அவருக்குக் காலில் காயமேற்பட்டு படைவரிசையிலிருந்து பின்தங்கிவிழுந்துவிட்டார். நானும் என் அம்மாவும் செம்படை சென்ற வழி தெரியாமல் விழித்தோம். எதிர்ப்புரட்சிக்கார வெண்படைகள் மலையில் செம்படையைத் தாக்கியதால் இந்த நிலைமை ஏற்பட்டது. ஒரு வயதான மனிதன் வந்து எனது அப்பா புல்வெளிச் சரிவில் தாமரை மலைகளில் ஒரு குகையில் இருப்பதாய்க் கூறினார். இதனால் எங்கள் குடும்பம் மீண்டும் இணைந்தது. மூன்று மாத காலப் பிரிவிற்குப் பிறகு நாங்கள் அப்பாவை சந்தித்தோம். புரட்சிப் படைகள் கைப்பற்றிய பகுதியை வெண்படைகள் தாக்கியதையடுத்து நாங்கள் பிரிந்தோம்.

எனக்கு வயது ஒன்பதுதான் ஆகிறது. முதலில் நாங்கள் நன்றாகவே இருந்தோம். பிப்ரவரி மாதத்தில் சூரியன் எழுந்து புல்வெளிப் பள்ளத்தாக்கு சூடானது. நான் ஒரு உயரமான மனிதனைப் போல புல்வெளியில் தாவித் திரிந்தேன். காட்டுக்கீரைகளையும், மூங்கில் வேர்களையும் மண்ணிலிருந்து தோண்டி எடுத்தேன். மரக்கிளைகளிலிருந்து சிலநேரம் அணில் என்னைத் தனது சிறிய ஒளிவீசும் கண்களால் பார்க்கும். அந்த அணிலை ஏமாற்றுவதற்காக நான் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்வேன். சில சமயம் மலைக்குக் கீழேயிருந்து தாத்தா கண்காணிக்க வருவதுண்டு. நான் புல்வெளியில் குதித்து "யாரங்கே" என்று கத்துவேன். அதன்பின் ஓடிப்போய் அவரைக் கட்டிப்பிடித்துக் கொள்வேன். "என் சின்னஞ்சிறு நரியே! உன் அப்பா இருக்கும் இடத்தைக் காட்டு!" என்றார். நான் அவருடைய முதுகில் சவாரி செய்தவாறு குகைக்குச் செல்வேன்.

ஆனால் பிறகு நிலைமை படுமோசமாகிவிட்டது. தாத்தாவை ஐந்தாறு நாட்களாக ஆளையே காணோம். மலைக்குக் கீழேயிருந்து துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டது. பகலில் கீழேயிருந்து மூக்கைத் துளைக்கும் அருமருந்து வாசனை காற்றில் புகையாய் மிதந்து வந்தது. தீயின் சுவாலைகளும் மரண ஓலமும் இரவு முழுவதும் கேட்டது. அம்மா என் தோள்களை இறுகப்பிடித்துக் கொண்டார். அவரது முகம் என் தலையை உச்சி மோந்தது. "வெள்ளை நாய்கள்! அவர்களை நாம் கணக்குத் தீர்க்கும் நாள் வந்தே தீரும்"- அம்மா சொன்னாள்.

இரண்டு நாட்களாக எங்களுக்குச் சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. அம்மா ஒரு உடைந்த பாத்திரத்தில் காட்டுக்கீரையை அவித்து அப்பாவுக்குக் கொடுத்தார். அம்மா ஒருமுறை சமைத்த பாத்திரத்தைப் பார்த்துவிட்டு என்பக்கம் திரும்பி "சியாகு நீ சமாளித்துக் கொள்" என்றார்.

காயமடைந்த அப்பா இப்போதுதான் தேறி வருகிறார். அவருக்கு இப்போது சத்தான உணவு தேவை. "அப்பா எனக்கொன்றும் பசியில்லை" என்றேன்.

அம்மா என் முகத்தை ஆசையாய்த் தொட்டு "சியாகு நீ தூங்கு, என் மடியில் தலையை வைத்துக் கொள். நாளைக்கு வெண்படைக் கொள்ளைக்காரர்கள் போனதும் உன்னைப் பாட்டி வீட்டுக்கு அழைத்துப்போகிறேன். அங்கு இனிப்புப் பயறும், முட்டைகளும் கிடைக்கும். முட்டைகளும் நூடுல்சும் வயிறு முட்டக் கிடைக்கும்" என்றாள்.

அம்மா என்னை மூன்று வயதுக் குழந்தை போல நினைத்து இப்படி ஆசை வார்த்தை சொன்னார். தன் பையிலிருந்து ஒரு செம்பு நாணயத்தை எடுத்து எனக்குக் கொடுத்தாள். நாளை எனக்கு ஒரு இறகுப் பந்து செய்து தருவதாகச் சொன்னார். அவள் என்னை ஏமாற்றித் தூங்க வைப்பதற்காகவே இவ்வாறு பேசினாள். பின்பு என்னை அணைத்தவாறே ஏதோ முணுமுணுத்தாள். அது எனக்கு ஒன்றும் கேட்கவில்லை. நான் பசிகிள்ளும் வெறும் வயிற்றை மறந்து தூங்கத் துவங்கினேன்.

நான் அயர்ந்து தூங்குவதற்கு முன்னால் அம்மாவிடம் அப்பா சொன்னார்: "சாப்பிட ஒன்றும் கிடைக்காததைவிட நமது அமைப்போடு தொடர்பு கிடைக்காததால்தான் என்ன நடக்குமோ, தெரியவில்லை.... நாம் கட்சியையும் செம்படையையும் கண்டுபிடிக்க வேண்டும்".

"நான் நாளைக்கு மலையிலிருந்து கீழே போய் பார்க்கிறேன்" என்று அம்மா கூறுவதைக் கேட்டேன். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே நான் தூங்கிவிட்டேன். எனக்கு நிறையக் கனவுகள் தோன்றின. செம்படை வீரர்கள் திரும்ப வந்து விட்ட மாதிரி கனவு கண்டேன். அவர்கள் என்னை மடியிலிட்டுப் பாடுவதற்குச் சொல்லிக் கொடுத்தனர். "ஆகஸ்ட் மாதத்தில் காசியா மொட்டுகள் எங்கு பார்த்தாலும் மலர்ந்துவிட்டன. செங்கொடிகளும், பதாகைகளும் உயரத்தில் அலைவீசிப் பறக்கின்றன...." குழந்தைகள் சங்கத்தைச் சேர்ந்த இளையவர்கள் என்னைக் காவலுக்கு நிற்க வைத்தனர். நாங்கள் ஒரு பெரிய மானைப் பிடித்ததும் ஆற்றுப் பக்கம் தீ மூட்டி அதை வறுத்தெடுத்தோம். காற்றில் இனிய வாசனை நிரம்பியது. பின்பு தலைவர் வாங் மற்றும் பல மூத்த சகோதரிகள், அத்தைகள், செஞ்சேனை வீரர்கள் வந்தனர். நாங்கள் ஒன்றாகப் பாடி சாப்பிட்டோம்"

கனவு கண்ட நான் திடீரென ஒரு சத்தம் கேட்டு எழுந்தேன். நான் கண்ணைத் திறந்து பார்த்த போது என் அம்மா வைக்கோலால் குகையை அடைத்துக் கொண்டிருந்தாள். அப்பா எங்கோ போயிருந்தார். வெளியிலிருந்து கொடுங்காற்று இரைச்சலுடன் குகைக்குள் வீசியது. மலையும் பள்ளத்தாக்கும் அதிர்ந்தன.

நான் எழுந்ததைப் பார்த்ததும் பருத்தியாலான தனது முரட்டு ஜாக்கெட்டை அம்மா எனது தோள் மீது போட்டுவிட்டு "சியாகு உள் அப்hவைத் தேடு" என்று கூறினாள்.

"அவர் எங்கே?"

"அவர் கொஞ்சம் கிழக்கு தோண்டி வரப்போனார். அவரைப் பார்த்ததும் உடனே திரும்புமாறு நீ கூற வேண்டும். நீங்களிருவரும் குகையிலேயே தங்கியிருங்கள். நான் மலையிலிருந்து கீழே போய்விட்டு சீக்கிரம் திரும்பிவந்து விடுகிறேன்"

"அம்மா, என்னையும் உன்னுடன் அழைத்துப்போ" -நான் அவள் கையைப் பிடித்துக் கொண்டேன்.

"வேண்டாம், முடியாது. போய் உன் அப்பாவை சீக்கிரம் தேடிக் கண்டுபிடி".

நான்கு குகையைவிட்டு வெளியேறினேன். நான் சில அடிகள் நடந்ததும் பெரும் கூச்சல் கேட்டது. வழி நெடுகிலும் வெண்படைக் கொள்ளைக்காரர்கள் ஏராளமானவர்கள் கையில் துப்பாக்கிகளோடு, ஓநாய்களைப் போல உறுமிக்கொண்டு, உடலை லேசாகக் குனிந்தவாறு வந்தனர். நான் ஒரு புதருக்குப் பின்னால் போய் திரும்ப நினைத்தபோது திடீரென என் அப்பா ஒரு மூங்கில் தோப்புக்குள் மறைவதைப் பார்த்தேன். வெண்படை அவரை நோக்கிச் சுட்டது. "அங்கே ஒரு கம்யூனிஸ்ட். அவனை உயிரோடு பிடியுங்கள்!"

நான் அதிர்ந்து போனேன். வெண்படையினர் மூங்கில் தோப்பைச் சுற்றி வளைத்து கண்டபடி சுட்டனர். நான் ஒரு கல்லை எடுத்து வெண்படையில் ஒருவனைக் குறிபார்த்து எறிந்துவிட்டு கிழக்குப் பக்கமாக ஓடினேன்.

"அவன் இங்கே இருக்கிறான்! இதோ இங்கே இருக்கிறான்! "எதிரிகள் கத்திக்கொண்டே என்னைத் துரத்தி வந்தனர். நான் ஓடி ஒரு முள்புதருக்குள் பதுங்கிக்கொண்டேன். எதிரிகள் கடந்துபோய்விட்டனர். நான் எவ்வளவு நேரம் அங்கு தங்கினேன் என்று தெரியாது. முதல் முறையாக துப்பாக்கியால் சுடுவதையும் கூச்சலையும் கேட்டேன். பின்பு மரங்களின் நடுவிலிருந்து வீசும் காற்றின் விசிலைத் தவிர ஒரு சத்தமும் கேட்கவில்லை.

நான் முட்களை விலக்கி புதரைவிட்டு வெளியே வந்தேன். கருத்த திரண்ட மேகங்கள் வானில் உருண்டன. கொடுங்காற்று வீசியதால் காய்ந்த இலைகள் நொறுங்கி உதிர்ந்தன. மலைக்குக் கீழே பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை. நான் குகையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். குகையின் நுழைவாயிலில் மூடியிருந்த வைக்கோலை காற்று சிதறிடித்துவிட்டது. அது ஒரு பக்கமாகக் கிடந்தது. குகைக்குள் இருந்த பஞ்சிலான அட்டை துண்டுகளாய் கிழிந்து கிடந்தது. ஜாடிகள் உடைந்து கிடைந்தன. கீழே விரித்திருந்த தரைவிரிப்பும் ரத்தம் தோய்ந்து சிதறிக்கிடந்தது...

நான் குகையைவிட்டு வெளியேறி கதறி அழுது கொண்டே "அம்மா! அப்பா!" என்று கூவினேன். குன்றின் ஒவ்வொரு மூலைக்கும் ஓடி அம்மா, அப்பா என்று உரத்த குரலில் கூவி அழைத்தேன்.

எனது சத்தம் காற்றோடு போனது. ஆனாலும் நான் தொடர்ந்து கத்தினேன். சுழன்றடிக்கும் காற்றும், எதிரொலிகளும்தான் எனக்குப் பதிலாய்க் கிடைத்தன. நான் எவ்வளவு நேரம் ஓடினேன் என்பது தெரியாது. ஒரு திராட்சைக் கொடியில் தடுக்கிவிழுந்து தரையில் மயங்கிக் கிடந்தேன்.

பனிபெய்ததால் நான் கண்விழித்தேன். எனக்குப் பக்கத்திலிருந்து ஒரு சிறுத்தை உறுமியது. ஒரே இருள், குளிரும் பசியும் வாட்டியது. எங்கே போவது என்று புரியவில்லை. மூக்கைச் சீந்தினேன். நான் எழுந்து நிற்க முயற்சித்தேன். பலவீனமாக இருந்ததால் எழமுடியவில்லை. என் கண்களில் நீர் மல்கியது. என் அம்மா எங்கே? என் அப்பா எங்கே?

இறுதியாக என் பலம் முழுவதையும் திரட்டி பக்கத்திலிருந்த ஒல்லியான மரத்தைப் பிடித்து எழுந்தேன். ஆனால் நான் எங்கே போவது? நான் மீண்டும் குகைக்கே போய் எனது பெற்றோரைக் காண்பது எனத் தீர்மானித்தேன். அவர்கள் எனக்காக அங்கே காத்திருப்பார்கள். அவர்களைப் பார்க்க முடியாவிட்டால் நான் தென்திசைக்குப் போவேன். அங்கு செம்படை முன்னேறிக் கொண்டிருக்கிறது.

நான் சில அடி தூரம் நடந்ததும் இரண்டு கரும்பச்சை நிற விளக்குகளைப் போல இருளில் தெரிந்தது. உறுமலோடு புள்ளிச்சிறுத்தை என்னைத் தாண்டிக் குதித்தது. நான் ஒரு பைன் மரத்தைக் கெட்டியாகப் பிடித்து எனது நடுங்கும் கால்களோடு முணுமுணுத்தேன்.

"சிறுத்தையே! சிறுத்தையே! நான் என் அம்மா அப்பாவைத் தேடுகிறேன். என்னை அப்படிப் பார்க்காதே..." நான் நீண்ட நேரம் கவனித்தவாறு காத்திருந்தேன். குன்று முழுவதும் பனி பெய்தது. சிறுத்தை ஓடிவிட்டது. எனது தைரியம் முழுவதையும் திரட்டிக் குகையை அடையும் வரை நிற்காமல் ஓடினேன். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. பயத்தால் என்கால்கள் செயலிழந்து விட்டன. நடுங்கும் குரலில் நான் அம்மா, அப்பாவை அழைத்தேன்.

குகை எனது வார்த்தைகளை எதிரொலித்தது. நான் மீண்டும் அழைத்தேன். ஆனால் பதில்தான் இல்லை. இருளில் கண் தெரியாமல் சுவரைப்பிடித்தவாறு அங்குலம் அங்குலமாக குகைக்குள் நுழைந்தேன். இங்கே இருந்தால் என்னை ஆரத்தழுவிக் கொள்வாள். ஆனால் இங்கே ஒருவருமில்லை.

நான் வைக்கோல் மீது உட்கார்ந்தேன். எனது பெற்றோர் எனது கெட்டிக்காரத் தனத்தைப் புகழ்ந்தனர். ஆனால் பிறகு நான் மரப்பாச்சி பொம்மை போலானேன். என்னால் சிந்திக்கவோ அசையவோ முடியவில்லை. அம்மா பொடுத்த செம்புக்காசை எடுத்து வாயில் போட்டு சுயநினைவின்றி ஊறும் எஞ்சிலை விழுங்கினேன்.

ஆனால் திடீரென யாரோ என்னைப் பெயர் சொல்லி அழைத்தனர். முதலில் என் காதுகள் ஏமாற்றுகிறதோ என்று நினைத்தேன். ஆனால் அந்தக்குரல் வரவர நெருங்கியது. "சியாகு! சியாகு".

அது என் அப்பாதான். நான் குகையை விட்டு வெளியே வந்தேன். அந்தச் சத்தம் என் தலைக்கு மேலே வந்தது. திரும்பியதும் ஒரு நிழல் பாறையிலிருந்து இறங்குவதைப் பார்த்தேன். நான் எனது கண்களைத் துடைத்துவிட்டு நன்றாகப் பார்த்தேன். "அப்பா" என்று அலறிவிட்டேன்.

அப்பா கீழே குதித்தார். அவரது கால்களும் கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன. "என் மகனே!" என்று அழைத்துவிட்டு மௌனமானார். நான் அவரைக் கட்டிப் பிடித்தேன். பேசவாய்வரவில்லை. "அம்மா எங்கே?" என்று கேட்டேன்.

அப்பா பதில் ஒன்றும் சொல்லவில்லை. பயமும் ஆர்வமும் மேலோங்க மீண்டும் அவரது பதிலுக்காகக் காத்திருந்தேன். திடீரென அப்பா குமுறிவெடித்தார்: "உன் அம்மா எதிரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறாள்"

குகையில் கிடந்த வைக்கோலில் சிந்தியது அம்மாவின் ரத்தம்தான் என்று புரிந்துகொண்டேன். அழுது கொண்டே அப்பாவைக் கட்டிப்பிடித்தேன். அவர் "நாம் இனிமேல் இங்கே தங்கக்கூடாது மகனே, உடனே புறப்படுவோம்" என்றார்.

"எங்கே அப்பா? செம்படையைப் பார்க்க போகலாமா?"

"அதுதான் சரி. நாம் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். செம்படை இல்லாமல் உன் அப்பா வாழ முடியாது, அம்மா விடுதலையாக முடியாது. செம்படை இல்லாமல் புரட்சி வெற்றியடையாது. ஏழை மக்கள் மேம்பட முடியாது".

"வேகமாப் போவோம் அப்பா. செம்படை எங்கே இருக்கு?"

"எப்படியும் கண்டுபிடித்துவிடுவோம் குழந்தாய். ரத்தக்கடனை மறக்க முடியாது...."

"ஆமாப்பா, நான் ஒரு போதும் மறக்கமாட்டேன்" நான் அழுவதை நிறுத்தினேன். கடும்பனியை எதிர்த்து பேசியவாறு நடந்தோம். தாமரைப் பூமலையிலிருந்து கீழே இறங்கினோம். எங்களை பனி மூடியிருந்தது. உடல் வெப்பத்தில் உருகிய பனி முதுகிலும் கழுத்திலும் வழிந்தோடியது. பனியில் உதடுகள் கறுத்துவிட்டன.

நாங்கள் இருபது அல்லது முப்பது மைல் நடந்திருப்போம். பொழுது விடிந்துவிட்டது. எங்கள் பாதையில் உள்ளூர் ஆட்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. வெண்படைகளையும் எதிர்கொள்ளவில்லை. சில நேரம் குடல்வெளியே வந்து கிடந்த பிணங்கள் பனியில் கிடப்பதைப் பார்த்தோம். சிலரைக் கொன்று உடல்களை மரங்களில் தொங்கவிட்டிருந்தார்கள்.

இந்த பயங்கரக் காட்சிகளைக் கண்டு அப்பாவுக்குப்பின்னால் அவரது ஆடையைப் பிடித்தவாறு ஒளிந்து கொண்டேன். நான் பயப்படுவதைப் பார்த்து அப்பா "சியாகு! பயப்படாதே! நீ வெறுக்கப்பழகணும்" என்றார். எனினும் நான் பயந்தேன். அப்பா என்னைக் கேட்டார்: "சியாகு! இந்த மாமாக்களையும் அத்தைகளையும் கொன்றது யார்?

"வெண்படைக் கொள்ளைக்காரர்கள்"

"உன் அம்மாவைக் கைது செய்தது யார்?"

"வெண்படைக் கொள்ளைக்கார்கள்தான்"

"அவர்களை நீ வெறுக்கிறாயா?"

"ஆமாம்"

"அவர்களை நீ வெறுப்பது உண்மையானால் நீ பயப்படக்கூடாது'. இப்போது மகனே, உன் தொப்பியை எடு"- அப்பா ஏற்கெனவே தன் தொப்பியை எடுத்துவிட்டார். நானும் எடுத்தேன். தொப்பி இருந்த கையை அப்பா கீழே இறக்கினார். நானும் கையைத் தாழ்த்தினேன்.

"சியாகு! நான் சொல்வதைத் திரும்பச் சொல்"

நானும் சொன்னேன்: "கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி"

இறந்து கிடந்தவர்களைப் பார்த்துக் கொண்டே அப்பா சொன்னார்:

"நாம் செம்படையைக் கண்டுபிடிக்க வேண்டும்"

"நாம் செம்படையைக் கண்டுபிடிக்க வேண்டும்" நான் திரும்பச் சொன்னேன்.

"நமது மக்களுக்காகப் பழிவாங்குவோம்"

"நமது மக்களுக்காகப் பழிவாங்குவோம்"

"வெண்படையை உருவாக்கிவிட்ட பழைய உலகை நொறுக்குவோம்"

"வெண்படையை உருவாக்கிவிட்ட பழைய உலகை நொறுக்குவோம்"

"இன்னும் நீ பயப்படுகிறாயா?" அப்பா கேட்டார்.

"கொஞ்சம் கூட பயமில்லை!"

"வா, இறந்தவர்களுக்கு மரிய1hதை செய்வோம்" அப்பா சொன்னார். ஒரு பழைய வைக்கோல் பாய் கிடந்தது. அதை வைத்து இறந்த உடல்களை மூடினோம். அப்பா அமைதியாக நடந்தார். நானும் பின் தொடர்ந்தேன்.

நாங்கள் சாப்பிட்டுப் பல நாட்களாகிவிட்டன. அதைவிட பனியின் கொடுமையால் எனது கையும் பாதங்களும் உறைந்து போய் வலியெடுக்கிறது. அம்மாவோடு நான் இருந்திருந்தால் கொஞ்சம் ஓய்வுகிடைத்திருக்கும். அப்பா கோபக்காரர். அதனால் அவர் என்னைத் தூக்கிக் கொள்ளமாட்டார். அவர் புரட்சியில் சேரும் முன் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. உள்ளூர் கொடுங்கோலன் வாடகைக்காக வசூல் செய்பவனை என் அப்பாவிடம் அனுப்பினான். அவனிடம் பதில் பேசாமல் முகத்தில் அறைந்துவிட்டார்.

புரட்சிக்காலத்தில் என் அப்பா தன்னந்தனியாக அந்தக் கொடுங்கோலனின் வீட்டுக்குள் நுழைந்து அவனது மூன்று காவலர்களைக் கொன்றார். அம்மா மட்டும் தான் அப்பாவோடு முரண்பட முடியும். எனது சித்தப்பாக்களும் ஒதுங்கிவிடுவார்கள். அப்பா எச்சரிக்கையாகத்தான் வார்த்தைகளைப் பேசுவார். அவர் செம்படையில் சேர்ந்தபிறகு அவரது கோபம் குறைந்தது. ஆனால் எனக்கு இன்னும் அப்பாவிடம் பயம்தான். அப்பா ஒன்றும் இதுவரை சாப்பிடவில்லை. அவரது காலில் உள்ள காயம் இன்னும் ஆறவில்லை. இத்தனை துயரங்களோடு அவர் செம்படையைத் தேடியலைகிறார். நானும் அவருடன் சேர்ந்து இருவரும் நடந்தோம்.

திடீரென இருபது பேர் வாழும் ஒரு கிராமம் எங்கள் கண்ணில் பட்டது. அப்பா ஒரு நிறுத்தத்தில் வந்து நின்றார். கிராமத்தின் முன்னால் ஒரு தனித்துவிடப்பட்ட வீடு இருந்தது. "சியாகு, இந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள். நாம் ஏன் சிறிது நேரம் அங்கு தங்கக்கூடாது? பகலில் வெளிச்சத்தில் நாம் போக முடியாது. வெண்படையிருக்கும் பகுதிக்குள் நாம் ஓடினால் நாம் எப்படி அவர்களைஎதிர்க்க முடியும்?"

அப்பா இப்படித்தான் கூறுவார் என்றுநான் நம்பினேன். எங்காவது ஒரு அறையில் போய் நெருப்பின் அருகே அமர்ந்து சிறிது வறுத்த உருளைக்கிழங்கும் அரிசி சூப்பும் சாப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் நாங்கள் வீட்டை நெருங்கியதும் அப்பா திடீரென என்னைப் பின்னுக்கு இழுத்து வாயைப் பொத்தினார். நன் சுவர்பக்கம் ஒண்டினேன். அப்பா கதவில் காதை வைத்துக் கேட்டார். சுவரிலிருந்த பிளவு வழியே அறையை நோட்டமிட்டேன். ஒரு எண்ணை விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. சுவரில் ஒரு ரிவால்வர் உறை மட்டும் தொங்கியது.

"ஒரு பிஸ்டல்" என்று நான் வாயைத் திறந்ததும் அப்பா என்னை மீண்டும் வாயைப் பொத்தி என்னை மௌனமாக இருக்கும்படி கூறினார்.

அப்பா தலையைச் சொறிந்துகொண்டே" என்ன விசயம்? இது பகைவரின் இடமா?" என்று கூறிவிட்டு என்னை வீட்டுக்கருகிலுள்ள ஒரு மறைவிடத்தில் இருக்க வைத்தார். வீட்டைச் சுற்றி வந்தார். அவர் கன்னத்தில் கை வைத்தவாறு யோசித்தார். கிராமம் அருகிலிருந்தது. எல்லாம் அமைதியாய் இருந்தது.

'அவனைக் கொல்லணும்' அப்பா தனக்குள் சொல்லிக் கொண்டார் 'இந்த அயோக்கியர்கள் என்னைக் கிறுக்கனாக்கப் பார்க்கிறார்கள். நமது படைகள் எல்லாம் போய்விட்டன என்று அவர்கள் நினைக்கிறார்கள்'

"சியாகு, உனக்குக் கைத்துப்பாக்கி வேணுமா?"

"கைத்துப்பாக்கியா!"

"நம்மிடம் ஒரு கைத்துப்பாக்கி மட்டும் இருந்தால் வெண்படையினரைச் சந்திக்கும் போது சண்டையிட முடியும்". அப்பா என்னை வீட்டுக்கு அழைத்துப் போனார். சுவரில் ஒரு ஓட்டை வைக்கோல் திணித்து அடைத்திருந்தது. "அந்த அயோக்கியர்கள் உள்ளே கதவைப்பூட்டியிருக்கிறார்கள். நீ ஓட்டையில் நுழைந்து போய் கதவைத் திறக்க முடியுமா?"

"சரி அப்பா" என்றேன். ஆனால் ஓட்டை சிறிதாக இருந்தது.

"நல்லது, சத்தம் போட்டு உள்ளே இருப்பவர்களை எழுப்பிவிடாதே". உள்ளே போய் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்று அப்பா சொன்னார். பின்பு ஓட்டையை அடைத்திருந்த வைக்கோலை வெளியே எடுத்தார். "சியாகு, பயப்படாமல் போ, எதிரிகளை வெறுக்கப் பழகு" என்றார்.

அப்பா என் சட்டையைக் கழற்றினார். என தலையை துவாரத்தில் நுழைத்தேன். உள்ளே இரண்டு அறைகள் இருந்தன. உள் அறையில் ஒரு விளக்கு இருந்தது. வெளி அறை மேசையில் ஒயின் கோப்பைகள் இருந்தன. அப்பா காத்திருக்காமல் என்னை வீட்டுக்குள்ளே தள்ளினார். நான் கதவைத் திறந்தபின் அப்பா உள்ளே நுழைந்து எதிரிகளைக் கொல்வார். நான் கதவைத் திறந்ததும் அப்பா கதவைத் தள்ளினார். உள்ளே கட்டிலில் படுத்திருந்தவன் புரண்டு படுத்தான். அவன் தலையணைக்கீழே இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அப்பா அவனை நோக்கி நீட்டி "அசையாதே" என்றார்.

மெத்தைக்குள்ளிருந்து ஒரு மொட்டைத் தலையன் தலையை வெளியே நீட்டினான். "அட நீயா! மொட்டைத் தலையா" அப்பா கோபத்தோடு தீக்கணப்பு அருகில் நின்றவாறு அவன் மொட்டைத் தலையைப் பார்த்துச் சுட்டார். அவன் சத்தமின்றிக் கீழே விழுந்தான்.

பகைவனை அப்பா கொல்லும்போது நான் கதவருகே நின்றேன். எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அப்பாவின் வீரத்தைப் பற்றி ஏற்கெனவே நான் கேள்விப்பட்டிருந்தாலும் அதை நேரடியாக இன்று பார்த்தேன். குளிரும், பசியும் வாட்டினாலும் இந்த சம்பவம் மகிழ்ச்சியூட்டியது.

அப்பா சொன்னார் "சுட்டுக் கொல்லப்பட்ட மொட்டைத் தலையன் ஒரு இரண்டாம் நிலை அதிகாரி. குற்றச்செயல்கள் புரிவதிலேயே குறியாய் இருப்பவன். ஏராளமான அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தவன். அவனுடைய அக்கிரமச் செயல்களுக்காக இந்த வீட்டைப் பயன்படுத்திக் கொண்டான். துப்பாக்கி கிடைத்ததால் நமது வேலை எளிதாகிவிட்டது.

விடிந்ததும் நாங்கள் ஒரு பாறை மறைவில் இருந்தோம். அசதியில் நான் அப்படியே தூங்கிவிட்டேன். எனது கனவில் செம்படை வீரரும் அம்மாவும் வந்தனர்.

நான் எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. அப்பா என்னை உலுக்கி எழுப்பினார். அப்பா ஏழெட்டு மூங்கில் குருத்துக்களை நெருப்பில் சுட்டு வைத்திருந்தார். வெளியே இருட்டாகிக் கொண்டிருந்தது. வெளியே பனிகுறைந்தது. வானத்தில் கனத்த மேகங்கள் திரண்டன.

"சியாகு, சாப்பிடு. அவை சூடாக, மொறுமொறுப்பாக, ருசியாக உள்ளன".

நான் ஒன்றை எடுத்து வாயில் வைத்தேன். அவை பாதாம் பருப்பைவிட ருசியாக இருந்தது.

"நாம் நமது பயணத்தைத் தொடர வேண்டும் மகனே" நாங்கள் சாப்பிடும் போது அப்பா சொன்னார். நான் தலையை ஆட்டினேன்.

"நாம் நமக்கு ஆதரவான கிராம மக்களைச் சென்நடைய வேண்டும் என் மகனே! அவர்களை விட்டால் நாம் தலையில்லாத குருட்டு ஈக்களைப்போல எங்கும் போக முடியாது!" அப்பா தொடர்ந்தார். சிறுவனான நான் வளர்ந்து பெரியவனாகிவிட்டதைப்போல நினைத்து அவர் என்னிடம் பேசினார். எனக்கு அவை புரியாவிட்டாலும் அவர் சொல்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நான் ஏற்றுக்கொண்டேன்.

இருட்டிவிட்டதால் நாங்கள் கிளம்பினோம். சாலை பனியில் உறைந்து வழுக்கியது. ஒருமைல்தூரம் போவதற்குள் நான் பலமுறை கீழே விழுந்து எழுந்தேன். எனது காலணியில் அப்பா கொஞ்சம் வைக்கோல் பிரியைச் சுற்றும்வரை நான் விழுவது தொடர்ந்தது.

நாங்கள் சிறிது தூரம் சென்றதும் எங்களுக்கு முன்னாலிருந்து யாரோ "யாரது?" என்று கேட்டனர்.

நாங்கள் இருவரும் திடுக்கிட்டோம். வெண்பனியின் ஒளியில் சாலை ஒரத்திலிருந்த ஒரு கொட்டகைக்கு முன்னால் பல மனிதர்கள் நின்றதைப் பார்த்தோம். திடீரென அவர்கள் கைகளில் துப்பாக்கிகளோடு எங்களை நோக்கி முன்னேறினர்.

அப்பா என்னை இழுத்து, நாங்கள் இருவரும் ஒரு சரிவில் வழுக்கி இறங்கினோம். என் தலையெல்லாம் முள் குத்திக் கிழித்துவிட்டது. ரத்தம் என்முகமெல்லாம் வழிந்து பனியில் உறைந்துவிட்டது. இதையெல்லாம் சகித்துக்கொண்டு அப்பாவை பின்தொடர்ந்தேன். மேலேயிருந்து வெண்படையைச் சேர்ந்தவர்கள் "உங்களைப் பார்த்துவிட்டோம். வெளியே வாருங்கள்" என்று கத்தினர்.

நானும் அப்பாவும் ஒரு கல் சுவருக்குப் பின்னால் அசையாமல் ஒளிந்து கொண்டோம். எங்களை முட்டாளாக்கி வெளியே கொண்டுவர எதிரிகள் செய்த சூழ்ச்சி வெற்றியடையவில்லை. இறுதியில் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

நமக்கு முன்னால் இரண்டு வழிகள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அப்பா கூறினார். மூன்றாவது ஒரு பெரிய பாதையும் உள்ளது என்றும் அதன் வழியே போவது கடினம் என்றும் கூறினார்.

அப்பா கவலைப்பட்டார். கைத்துப்பாக்கியை உறையிலிருந்து எடுத்து அதைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் உறையிலிட்டுவிட்டு "நாம் மலையின் உயரத்தை நோக்கி நேராகப்போவோம்" என்றார்.

"மலை மேலேயா?"

அப்பா பதிலேதும் சொல்லாமல் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பாதையைவிட்டு விலகி மலைமீது ஏறத் தொடங்கினார். ஒரு குன்றைத் தாண்டியதும் இடையில் ஏழெட்டு வீடுகள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. அந்த வீடுகளுக்கிடையில் விளக்குகள் எரியும் பரந்த வீடு ஒன்று இருந்தது. மலை உச்சியில் எதிரி காவலிருந்தான்.

"எதிரி இங்கே இருப்பது கெடுதல்தான். எனினும் நாம் மேலே போவோம்"

"அப்பா" - நான் மெதுவாக முனகிவிட்டு உட்கார்ந்தேன். எனக்கு மேலே போக மனசில்லை என்பதில்லை. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் என் கால்கள் வீங்கியிருந்தன. கால்களைத் தொட்டுப்பார்த்தேன். அதில் எந்த உணர்ச்சியுமில்லை. அப்பா என் காலைச் சோதித்தபின் என்னை ஒன்றும் பேசாமல் பார்த்தார். பிறகு எங்களுக்கு அருகிலிருந்த பழைய வீட்டைப் பார்த்தார். வீட்டின் சுற்றுச்சுவர் பாதி இடிந்திருந்தது. வீட்டில் வெளிச்சம் இல்லை.

அப்பா என்னை விட்டு விலகி மூங்கில் புதரில் மறைவதற்குப் போனார். சிறிதுநேரம் எனக்கு கஷ்டமாக இருந்தது. அப்பா வெண்படையினரை எதிர்கொள்வாரா, அவரால் என்ன செய்ய முடியும்? யோசிக்க யோசிக்க எனது கவலை கூடியது. என்னால் இனியும் தாமதிக்க முடியாது. என் கையுறைகளைக் கழற்றிக் கைகளை மூடிக்கொண்டு அப்பா சென்ற பாதையில் கிளம்பினேன்.

கடைசியில் நான் அந்த வீட்டின் கதவருகே சென்றேன். அங்கே ஒரு பாட்டி அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். "நல்லது நடக்கட்டும், உன்னை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. செம்படை எப்போது திரும்பி வரும்? என் பிள்ளைகள், என் மருமகன்கள் இருந்தால்..." அவளது வார்த்தைகள் ஒடுங்கி அழுகையானது.

"கவலைப்படாதீங்க அத்தை, பிற்போக்காளர்களின் நாட்கள் எண்ணப்படுகின்றன." - அப்பா அவளைத் தேற்றுவதைக் கேட்டேன்.

"நீ மட்டும் தனியாயிருக்கியா?"பாட்டி கேட்டாள். "எனக்கு காயம் பட்டதால் நான் பின்தங்கிவிட்டேன். என் மனைவியை எதிரிகள் கைது செய்துவிட்டார்கள். அவள் இப்போது உயிரோடு இருக்கிறாளா என்று தெரியாது. என் மகன் மட்டும் என் கூட இருக்கிறான்"

"நல்லதே நடக்கட்டும். எங்கே அவன்? என்ன உலகமிது?" இதைக் கேட்டதும் நான் கதவருகே தவழ்ந்துபோய் "அப்பா, அப்பா" என்று அழுதேன்.

கதவு வேகமாய் திறந்தது. அறையில் ஒரு எண்ணெய் விளக்கு ஏற்றப்பட்டது. ஜன்னல் கதவுகள் வெளியே வெளிச்சம் கசிந்து விடாதபடி இறுக மூடப்பட்டது.

பாட்டி என்னைக் கட்டிப்பிடித்துத் தூக்கினாள். "ஓ குழந்தையே! நீ குளிர்ந்து போனாய்!" என்று மீண்டும் மீண்டும் கூறினாள்.

நாங்கள் நீண்ட காலம் இங்கு தங்க முடியாது என்று எங்களுக்குத் தெரியும். எல்லாப் பதைகளும் எதிரிகளால் மூடப்பட்டுள்ளது என்றாள் பாட்டி, கிராமவாசிகள் சீர்திருத்த முகாமில் வைக்கப்பட்டிருந்தார்கள். தினசரி மலை மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் கொன்றனர். பாட்டிக்கு செஞ்சேனை பற்றியோ, கொரில்லாக்கள், செந்தொண்டர் பற்றியோ ஒன்றுமே தெரியாது.

எதைப்பற்றியும் ஒன்றுமே தெரிந்துகொள்ள முடியாததாலும் அப்பாவின் பழைய காயம் மிகவும் மோசமடைந்ததாலும் கொஞ்சம் இங்கு தங்கி விட்டுப்போகலாம் என்று அவர் தீர்மானித்தார். நள்ளிரவில் பாட்டி கொஞ்சம் தானியக் கஞ்சியும், மான்கால் உப்புக்கண்டமும் கொடுத்தாள். அத்துடன் ஒரு சட்டியும், கத்தரிக்கோலும், இரண்டு பேரும் படுப்பதற்கான வைக்கோலும் கொடுத்தாள். அவள் கூறியபடி ஒரு தேயிலைச் செடிப்புதரில், ஒளிந்துகொள்ளச்சென்றோம்.

தேயிலைப்புதர்கள் எல்லையற்று அடர்ந்து படர்ந்து கிடந்தது. மலையை நோக்கியும், கீழே வயல் வெளிகள் வரையிலும், அநேக சிதைந்த மூங்கில் புதர்கள் வரையிலும் அந்தப்புதர் நீண்டிருந்தது. அது ஒளிந்துகொள்ளப் பாதுகாப்பாக இருந்தது.

தரை உலர்ந்த இடத்தில் வைக்கோலால் சிறிய கூடாரம் அமைத்தோம். இதை செய்து முடிக்கவும் விழுந்துவிட்டது. பனி மூடிய மலையுச்சியில் வெயிலடித்தது. மலைகளுக்கு மேலே பஞ்சுப் பொதிகளைப் போல வெண்மேகங்கள் அலைந்தன. காற்று வீசும்போது பைன் மரக்காடுகளிலிருந்து விசில் சத்தம் கேட்டது. செங்கொண்டைக் குயில் பறவையின் இனிய கூவல் சத்தம் எனக்குக் கேட்டது.

அப்பா நிம்மதியற்று இருந்தார். வைக்கோலில் படுத்துக்கொண்டே "குயில் பறவை பாடுவது வசந்தத்தின் வருகையைக் குறிக்கிறது" என்றார்.

எனது வீங்கிய பாதங்களைத் தொட்டுப்பார்த்தேன். அவை பயங்கர வேதனையும் எரிச்சலுமாய் தாங்க முடியாமல் வலித்தது. பறவையின் கூவல்கூட எனக்கு சோகமாய் ஒலித்தது. நான் அப்பாவைப்பார்த்து "அப்பா எனக்கு அம்மா வேணும், அம்மா வேணும்" என்றேன். நான் வைக்கோலில் தலையைப் புதைத்துக் கொண்டு "அம்மா, அம்மா" என்று கதறி அழுதேன். நான் அழுக அழுக என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பெரிதாகி சத்தம் பலமாகிவிட்டது.

அப்பாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. "அழுதது போதும், நிறுத்து" என்று அப்பா சொல்லும் வரை நான் அழுது கொண்டிருந்தேன்.

அப்பாவைப் பார்த்தேன். அவரது முகம் பயங்கரமாக வெளிறிப்போய் கண்கள் சிவக்க அழுதார்.

குயில் பறவை தொடர்ந்து பாடிக் கொண்டேயிருந்தது. அப்பா கொஞ்சம் குப்பையை அள்ளி அந்தப்பறவை மீது வீசிவிட்டு மேற்குப்பக்கமாகத் திரும்பிக் கொண்டார். அப்பா அம்மாவையும் செம்படையையும் தவறவிட்டதை நான் அறிவேன். அவரைப் பின்னால் நின்று பார்த்தேன். அவரை அமைதிப்படுத்த விரும்பினேன். பின்பு அவர் என்பக்கம் திரும்பி "என் மகனே, பறவைகளின் சங்கீதத்தைக் கேட்க இது சரியான நேரமல்ல. எழுந்திரு. சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று முயற்சிப்போம்" என்றார்.

மஞ்சள் புல்வெளிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்ததைப் போல இங்கு நாங்கள் வாழத் துவங்கினோம். பூமியில் தோண்டி எடுத்த கிழங்குகளையும், கீரைகள், மரத்திலிருந்து உரித்த பட்டைகள், மூங்கில் குருத்துக்களையும், புற்கள், மூலிகைகள், ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைத்தோம். பாட்டி கொடுத்த தானியத்தையும் கொஞ்சம் அதில் சேர்த்து அம்மா போடுவதைப் போல உப்பையும் போட்டோம். அப்பா ஒரு திட்டத்தை யோசித்தார். அடுப்பு எரியும் போது புகை வந்தால் எதிரிகளுக்குத் தெரிந்துவிடும். ஆகவே நான் அணிந்திருந்த பழைய கோட்டை அவிழ்த்து புகைவராமல் விசிறி புகையைப் பனி மூட்டத்தோடு கலந்துவிடச்செய்தேன்.

பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களுக்குப் பிறகு எனக்குப் பாதங்கள் ஆறிவிட்டன. அப்பாவின் காயமும் ஆறியது. அப்பா தினசரி சுனை நீரில் குளித்து, வெயில் காய்ந்து நோய் தொற்றி விடாமல் பாதுகாத்தார். பனிரெண்டாம் நாள் அப்பாவும் நானும் தூங்கி எழுந்தபோது மலை நடுவே இருந்த கிராமங்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுவதைப் பார்த்தோம். தீயின் சுவாலைகள் எரிந்தன.

பகைவர்கள் எல்லா இடங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர். எரியும் தீச்சுவாலைகளின் நடுவில் எங்களுக்கு உதவிய பாட்டியை நினைத்தோம். அவள் இப்போது எங்கே இருக்கிறாள்?

விடிந்ததும் அப்பா என்னை எழுப்பினார். என் தலையை மென்மையாய்க் கோதியவாறு, "மகனே, உன் அம்மாவுக்காக எதிரிகளைப் பழிதீர்க்க விரும்புகிறாயா?" என்று கேட்டார்.

"நிச்சயமாய். வெள்ளையர்களை நான் பிடித்தால், நான்..."

"ஆனால் எப்படி அம்மாவுக்காகப் பழிவாங்குவாய்?"

"நான் போய் செம்படையைக் கண்டுபிடிப்பேன்" என்று பதிலளித்தேன். இதுபோன்ற விவாதங்களை நாங்கள் பலமுறை நடத்தியிருக்கிறோம். ஆனால் இந்தமுறை அவர் உறுதியாக நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார்.

"அப்பா, இப்போது நான் என்ன செய்யணும்?"-நான் கேட்டேன்.

"நீ கிராமத்துக்குப்போய் ஏதாவது செய்திகள் கண்டுபிடி. நான் இந்த நீண்ட முடியோடு போனால் என்னைக் குற்றவாளி என்று கொண்டு போய்விடுவார்கள்...நீ.."

"எப்போது போக வேண்டும் அப்பா!" நான் மகிழ்ச்சியோடு குதித்துக்கொண்டே அவர் முடிக்கும் முன்பே கேட்டேன்.

"பொறுமையில்லாமல் இராதே. ஒரு வேளை நீ கைது செய்யப்பட்டால் நீ என்ன செய்வாய்?" என் தோள் மீது கைவைத்தவாறு அப்பா கேட்டார்.

"நான் அவர்களோடு சண்டைபோடுவேன்!"

அப்பா கம்பீரமாய், "இல்லை, நீ சண்டையிட்டால் ஒரு அடிகூடத் தாங்க முடியாது" என்றார்.

"பிறகு...?"

"ஒரு வேளை நீ கைது செய்யப்பட்டால், நீ ஒரு பிச்சைக்காரன் என்றும், பாட்டியைத் தேடுவதாகவும் சொல். அவர்கள் உன்னைக் நெருக்கிக்கேட்டாலும் நான் இருக்குமிடத்தைச் சொல்லி விடாதே"

"அப்பா, நான் ஒன்றும் முட்டாள் அல்ல."

"ஒரு வேளை நீ அவர்களோடு இழுக்கப்பட்டால் போ. ஆனால் ஒவ்வொரு வாய்ப்பையும் நீ தப்பி ஓடுவதற்குப் பயன்படுத்த வேண்டும். தப்ப முடியாவிட்டால் அப்பா என்னை விடுவிக்க வழிசெய்வேன்"

"சரி அப்பா" - நான் மகிழ்ச்சியோடு சொன்னேன்.

"நீ முதலில் அந்தப்பாட்டியைப் போய்ப்பார். செம்படை பற்றி ஏதாவது செய்தி கிடைத்ததா என்று கேள். அவளைப்பார்க்க முடியாவிட்டால் திரும்பிவிடு. உஷாராயிரு. எதிரிகளிடமிருநது விலகியே இரு. புரிந்ததா?"

"நான் தலையாட்டினேன்" எனக்கு மேலும் சில அறிவுரை கூறிவிட்டு என் பூட்சுக் கயிறுகளையும் இடுப்புப் பெல்ட்டையும் இறுக்கிக்கட்டினார். என் தோளைத் தட்டிக்கொடுத்தார். எனது பணி நோக்கி ஓடினேன்.

நான் கிராமத்தை அடைந்ததும் ஒரு அடர்ந்த மரக்கூட்டத்தின் பின்னால் நின்று நோட்டம் பார்த்தேன். ஆனால் கிராமத்தில் நடப்பதை சரியாகப் பார்க்க முடியவில்லை. நேற்று இரவு தீ எரிந்தது எங்கு என்றும் தெரியவில்லை. எனவே நேரில் போய் பார்க்க முடிவு செய்தேன். ஒரு குழந்தையான உன்னை அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைத்தேன்.

அந்தப்பாட்டியின் வீட்டைத் தவிர கிராமத்திலிருந்த எல்லா வீடுகளும் சாம்பலாகிக்கிடந்தன. சுவர்கள் கருகி புகை கிளம்பி காற்றில் வந்த வாசனை குமட்டியது. அங்கு யாருமில்லை என்ற நம்பிக்கையில் நான் முன்னேறினேன். ஆனால் திடீரென ஒரு மரத்தின் பின்னாலிருந்து ஒரு வெண்படைக் கொள்ளைக்காரன் கையில் துப்பாக்கியுடன் வந்து என்னிடம் "அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய், குட்டி சிவப்பு அயோக்கியனே?" என்று கேட்டான்.

நான் இனி தப்புவது கடினம். நான் தைரியமாகப் பதிலளித்தேன். "என் பெயர் சியா மாவோ. என் பாட்டியைப் பார்க்க வந்தேன்".

"என்ன! பாட்டியைப் பார்க்க வந்தியா? எங்களை முட்டாளாக்கப்பார்க்காதே" என்று கூறிவிட்டுச் சிரித்தான். அவன் என் தோளைப்பிடித்து இழுத்து என்னோடு வா என்று உத்தரவிட்டான்.

நான் ஒரு குழந்தையைப் போல கீழே விழுந்து புரண்டு நடிக்க முடிவு செய்தேன். நான் அழுது கத்தினேன். "பாட்டி! பாட்டி, வேகமா வாங்க" உரத்தக்குரலின் உச்சத்தில் கத்தினேன். சத்தம் கேட்டு என்னை மீட்க வரலாமென எதிர்பார்த்தேன்.

பாட்டிக்குப் பதிலாக நிறைய வெள்ளைக்கொள்ளையர் தோன்றினர். அவர்கள் என்னைச் சுற்றி வளைத்து நின்று கொண்டு முரட்டுத்தனமாய் கேள்வி கேட்டனர். என்னை முதலில் பிடித்த மனிதன் "இந்த அயோக்கியப்பயல் செம்படையினர் அனுப்பிய உளவாளியாக இருக்கும். பாட்டியைத் தேடுவதாக நாடகமாடுகிறான்" என்றுகூறிவிட்டு என்னை உதைத்தான். நான் கீழே விழுந்தேன். அவன் மீண்டும் என் வயிற்றில் உதைத்து "சொல்லுடா! உன்னை இங்கே யார் அனுப்பியது?"

நான் நினைவிழுந்து கீழேயே கிடந்தேன்.

"அவனைப் போகச்சொல். இங்கேசிவப்பர்கள் யாரும் இல்லை. ஆகவே அவனை யாரும் உளவுபார்க்க அனுப்பியிருக்க முடியாது" என்று மற்றொரு வெள்ளைக்கொள்ளையன் சொன்னான்.

"உன் பாட்டியை தாபெங் மலையிலுள்ள சீர்திருத்த முகாமுக்கு அனுப்பிவிட்டோம். ஓடி விடுவையா" - மற்றொருவன் சொன்னான்.

என்னைப்பற்றி அவர்கள் திருப்தியடைந்து விட்டார்கள் போலும். நான் உட்கார்ந்து கண்களைக் கசக்கிக்கொண்டே வேகமாய்ப் போவது பற்றி யோசித்தேன்.மீண்டும் நான் யோசித்தேன். நான் ஒரு தகவலும் தெரியாமல், செம்படை இருக்குமிடம் தெரியாமல் அப்பாவிடம் எப்படிப் போவது என்று புரியாமல் தவித்தேன். வீட்டுக்குள் போனால் ஏதாவது செய்தி கிடைக்கலாம். நான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு "நாள் முழுக்க நான் எதுவுமே சாப்பிடவில்லை. எனக்குக் கடுமையான பசி. நான் பாட்டியைப் பார்த்தாகணும். அவளை எங்கே அனுப்பினீர்கள்?" என்று கூறிக்கொண்டே வீட்டுக்கு ஓடினேன்.

நான் வீட்டை அடைந்ததும் ஒரு வெள்ளையன் கதவைத் திறந்து வெளியே வந்தான். அவனிடம் கைத்துப்பாக்கி இருந்தது. நான் ஓடி வருவதைப் பார்த்ததும் அவன் எனக்கு ஒரு உதை கொடுத்தான். "இந்தக் குட்டிச்சாத்தான் எங்கிருந்து வருகிறான்?" மற்றொரு கொள்ளைக்காரன் அவனுக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு "அவன் அந்தக் கிழவியின் பேரன்" என்று சொன்னான்.

"விலகிப்போ!" என்னைச் சாட்டையால் அவன் அடித்தான். நான் பயப்படாமல் கால்கள் பின்ன தலையைக் கவிழ்ந்து ஒரு சுவருக்குப் பின்னால் பதுங்கினேன். கொள்ளையர் அதிகாரி விசிலை ஊதி "அணிவகுத்து நில்லுங்கள்" என்று உத்தரவிட்டான்.

எல்லாக் கொள்ளைக்காரர்களும் வீட்டின் உள்ளேயிருந்தும் வெளியே இருந்தும் வந்து பயிற்சி மைதானத்தில் நின்றனர். அதிகாரி "நீங்கள் தயாரா?" என்று கேட்டான்.

"ஆம்"

"வடிவமாய் நில்லுங்கள்!"

அந்த அதிகாரி தன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு படை வரிசையின் முன்னால் நடந்தான். அவன் ஒருவனின் முன்னால் நின்று அவனைச் செவியில் இரண்டு அறைவிட்டான். இவை உன் மடத்தனத்துக்கான பரிசு. குவிங்சாங்லிங் மலைகளில் ஏராளமான செம்படை உள்ளது. நாம் 140 மைல் தூரத்தை வேகமாய் கடக்க வேண்டும். நாம் அங்கே போனதும் அவர்களைத் தாக்குவோம். உங்கள் படைத்தளபதியைத் தேல்விக்குக் காரணமானவன் என்று குற்றம் சாட்டப்பட விரும்புகிறீர்களா? ஆகவே நன்கு தயாராகுங்கள்..."

நான் இதைச் சொல்ல வேகமாய் அப்பாவிடம் போக வேண்டும். அவர்கள் என்னைக் கவனிக்காததால் நான் பின்வாசல் வழியே நழுவினேன். சுவர்களின் ஒரு பக்கம் வைக்கோல்குவியல் இருந்தது. நான் அதில் ஏறி சுவரேறினேன். கீழே கூழாங்கற்கள் நிறைந்த ஒரு குழியில் கண்களை மூடிக்கொண்டு குதித்தேன். லேசான சிராய்ப்புடன் காயமின்றி எழுந்தேன். உயரமான புற்களுக்குப் பின்னால் ஓடி மறைந்தேன்.

சிறிது நேரம் கழித்து ஒரு கொள்ளையன் கேட்டான். "எங்கே அந்தக் குட்டிச்சாத்தான்?" சிறிது நேரம் கழித்து சத்தமே காணோம். அவர்கள் போய்விட்டார்கள்.

நான் புல் புதர் மறைவிலிருந்து வீட்டுக்குள் ஓடி சாப்பிட ஏதாவதுகிடைக்குமா என்று தேடினேன். ஒரு படுக்கை அருகே பாதி சிகரெட் பெட்டியும் சில துண்டுகள் மக்காச்சோள ரொட்டியும் கிடந்தது. நான் ரொட்டியை எடுத்துக்கொண்டு அப்பாவிடம் ஓடினேன். அவரிடம் நடந்த விசயங்கள் எல்லாவற்றையும் கூறினேன். அப்பா என்னைக் கட்டித் தழுவினார். அப்பா இதற்குமுன் ஒருபோதும் என் மீது இவ்வளவு பாசத்தைப் பொழிந்ததில்லை.

வெண்படைகள் போனாலும் அவர்கள் ஏராளமான சிறிய, பெரிய பிற்போக்கு அமைப்புகளை விட்டுச் சென்றிருந்தனர். அப்பா பகல் நேரத்தில் முகத்தைக்காட்ட முடிவதில்லை. நாங்கள் பகலில் தூங்குவதும் சூரியன் மறைந்ததும் பயணத்தைத் தொடர்வதுமாக இருந்தோம். குவிங்சாங்லிங் மலைகள் 140 மைல்கள் என்றாலும், சாலை மார்க்கமாகப் போனால் 200 மைல் தூரமாகும்.

இரவுப் பயணத்தைப்பற்றி படுத்துக்கொண்டே யோசித்தார். புரண்டு புரண்டு படுத்தவர் பின்பு அயர்ந்து தூங்கிவிட்டார். நான் கண்ணை அகலத்திறந்து படுத்தவாறு விரைவில் செம்படையைப் பார்ப்பது, அம்மாவை மீட்பது பற்றிச் சிந்தனையிலிருந்தேன்... குறைந்த ரேம் தூங்குவது, நிறையநேரம் சிந்திப்பதுமாக இருந்தேன். நான் வைக்கோலைவிட்டு எழுந்து செம்படைக்கு வழங்க சில வகை மலர்களைத் தேடினேன்.

எனக்கேற்பட்ட உற்சாகத்தில் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் அலைந்து திரிந்தேன். ஒரு அணிலைப்பிடித்துவிட்டேன். ஒரு முயலைப்பார்த்தேன். அதன் ரோமத்தைப்பிடித்தேன். ஆனால் அது நழுவி ஓடியேபோய்விட்டது. நான் நீண்ட நேரம் ஓடியும் ஒன்றும் பலனளிக்கவில்லை. திரும்பும்போது எனக்கு இரண்டு பொருட்கள் கிடைத்தன. ஒரு சிவப்புக்கல்லும், இயற்கையாக வளைந்த திராட்சைக் கைத்தடியும் கிடைத்தன.

எங்கள் இரவுப் பயணத்தின் துவக்கத்திலிருந்து விடியும்வரை அப்பாவைப் பின்தொடர்ந்தேன். ஆனால் நான் அசதியாகிவிட்டேன். பகலில் ஒரு குகையில் மறைந்து இருந்துவிட்டு இரவில் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். இம்முறை மிகவும் மோசமாக இருந்தது. பகலில் நன்கு தூங்கினாலும் ஒன்றுமே சாப்பிடாததால் பாதங்கள் நடுக்கமெடுத்தன. பின்பு பனிதாங்க முடியாமல் ஓடினோம். மழை வேறு எங்கள் மீது ஊற்றியது. மலைகள், வயல்கள், மரங்கள், சாலைகள் எங்கு பார்த்தாலும் மழை கொட்டியது.

சில அடிதூரம் நடப்பதும், பின்பு நின்று முகத்திலுள்ள மழைநீரைத் துடைப்பதுமாய் சென்றோம். குளிராலும் பசியாலும் நாங்கள் நடுங்கினோம். கடைசியாக நாங்கள் சாப்பிட்டது நேற்றைக்கு முன்தினம்தான். அதுவும் விரலளவு இருந்த ஒரு காட்டுக்கிழங்குதான். எங்கள் கால்கள் மண்ணில் புதைந்துவிட்டன.

மிகுந்த கஷ்டங்களோடு நாங்கள் தொடர்ந்து நடந்தும்கூட முப்பது மைல்களே தாண்டியிருந்தோம். பிறகு ஒரு சிறிய நதியைக் கடந்து வந்தோம். ஆற்றில் மழையால் நீரோட்டம் கடுமையாக இருந்தது. பக்கத்தில் வருபவர் பேசுவதைக்கூட கேட்க முடியாதபடி இரைச்சலாக இருந்தது. "நதி ஒன்றும் ஆழமில்லை. அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு வா" என்றார்.

நான் அப்பாவைப் பிடித்துக் கொண்டே மெதுவாக நடந்தேன். என் காதுகள் இரைந்தன. ஆற்றின் நடுவே சென்றபோது தண்ணீர் இழுவை அதிகமாகி அப்பாவைத் தூக்கியடித்தது.நாங்கள் இருவரும் நீரில் உருண்டோம். நல்லவேளை, அப்பா அதிர்ஷ்டவசமாக எனது காலைப்பிடித்து இழுத்துக் கரை சேர்த்தார்.

"என் மகனே, நாம் போய்க் கொண்டேயிருப்போம்" அப்பா சொன்னார்.

நான் எழுந்து நின்றேன். சில அடிகள் எடுத்து வைத்ததும் அப்படியே களி மண்ணில் உட்கார்ந்துவிட்டேன்.

"குவிங்சாங்லிங் மலைகள் இன்னும் எழுபது மைல்தூரம் உள்ளது" என்றார் அப்பா. மேலும் "இங்கே சில குடும்பங்கள் மட்டுமே வசிக்கிறார்கள். இங்கே இப்போது நாம் நின்றால் ஒன்று கைது செய்யப்படுவோம். அல்லது கொல்லப்படுவோம். ஆகவே நாம் உடனே போயாக வேண்டும்" என்றார்.

"அப்பா நான் தயார்" என்று சொல்ல நினைத்தேன். ஆனால் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை. எனது நடுங்கும் உதடுகளைப் பார்த்துவிட்டு நான் அழப்போகிறேன் என்று நினைத்து அப்பா "அழாதே, தைரியமான பையனாயிரு"என்றார். பேசிக்கொண்டே என் பாதங்களைத் தூக்கினார். ஆனால் என் கால்கள் அசையவில்லை. என்னைப் பிடித்து முன்னால் இழுத்தார். நான் பின்நோக்கி விழுந்தேன். என் இரண்டு கால்களும் கட்டிப்போட்டது போல் நகர மறுத்தன. இதைப்பார்த்து அப்பா கண்ணீர் வடித்தார். பின்பு அப்பா என்னை தனது முதுகில் சுமந்து சென்றார். ஒரு மைல்தூரம் சென்றதும் அப்பாவுக்கு மூச்சு வாங்கியது. "அப்பா எனக்குக்கால்கள் சரியாகிவிட்டன" என்று கூறினேன்.

அப்பா என்னை முதுகிலிருந்து மெதுவாகக் கீழே இறக்கிவிட்டார். ஓரிடத்தில் நாங்கள் அங்குலம் அங்குலமாகத் தவழ்ந்து போக வேண்டியதாகிவிட்டது. "தொடர்ந்து வா, குவிங்சாங்லிங் மலைகளை அடைந்தபின் உன்னை இளம் ராணுவ வீரனாகச் சேர்த்து விடுகிறேன். நமது பகைவரை எதிர்த்து நீ போரிடலாம்" என்று அப்பா சொன்னார்.

"எனக்கு துப்பாக்கிக் கொடுப்பார்களா?"

"நிச்சயமாய், உனக்கு ஒரு சிறிய துப்பாக்கிக் கிடைக்கும்"

நாங்கள் மற்றொரு குன்றின் அடிவாரத்திற்கு வந்தோம். சமதரையில் நான் அப்பாவின் உதவியோடு நடக்க முடிந்தது. ஆனால் ஏற்றத்தில் ஏறுவதற்கு என் கால்கள் கனத்துக் கஷ்டமாக இருந்தது. நாங்கள் இருவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு ஏறினோம். ஏறும்போது இரண்டு அடி எடுத்து வைத்ததும் சறுக்கி விழுகிறேன். கைகளில் முள்செடிகள் குத்திப்புண்ணாகிவிட்டதால் என்னால் எதையும் இறுகப்பிடிக்க முடியவில்லை. அப்பாவுக்குவேறு வழி தெரியவில்லை. மீண்டும் என்னைத் தனது முதுகில் ஏற்றிக்கொண்டார். மலையைக் கடந்து இறங்கியதும் அப்பா "இறங்கு மகனே" என்று மெதுவாக முனகினார். நான் இறங்குமுன்பே அவர் மயங்கி விழுந்தார். நானும் கீழே உருண்டு மணலில் விழுந்து மயக்கமானேன்.

நான் கண் விழித்தபோது இரவாகிவிட்டது. மழைநின்றுவிட்டது. ஆனால் கடும் பனி மூட்டம் இருந்தது. ஐந்தடி தூரத்திற்கு அப்பால் எதையும் இருளில் பார்க்க முடியவில்லை. "அப்பா, எங்கே இருக்கீங்க?" நான் அழைத்தேன்.

என் கால்கள் வீங்கி மிகவும் வலியெடுத்ததால் அசைய முடியவில்லை. என் தொண்டை வறளும் வரை அப்பா அப்பா என்று கத்தினேன். திடீரென மயங்கிய சத்தம் "சியாகு" என்று கேட்டது. அப்பா என்னை அழைக்கிறாரா அல்லது என் காதில் கேட்டது பிரமையா தெரியவில்லை.

அது அப்பாதான். பலம் வாய்ந்த மனிதராக இருந்தவர். இப்போது மெலிந்து, வளைந்து நீண்ட முடி நெற்றியில் விழ, முகமெல்லாம் கரிபூசிய மாதிரி இருந்தார்.

நான் அவரைக் கட்டித்தழுவி அழுதேன். "அப்பா நீங்க மட்டும் போங்க! போய் செம்படையைக் கண்டுபிடிங்க வேகமா!"

"எழுந்திரு மகனே! அப்பாவோடு சேர்ந்து போய் உனக்கு செம்படையையும் அம்மாவையும் கண்டுபிடிக்க வேண்டாமா?"

"ஆமா, அப்பா, வருவேன்" என்றேன்.

"பிறகென்ன! தைரியமாப் புறப்படு!"

"என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது"

"ஓ"

"அப்பா நீங்க மட்டும் போங்க. நீங்க செம்படையைப் பார்த்ததும் என்னைவந்து எடுத்துப்போங்க!"

"இது..."

"என்னைத் தூக்கிச் சுமக்க உங்களுக்குப் பலமில்லை. இந்த மலையில்தான் சாவு என்றால் நான் மட்டும் தனியே சாகிறேன்" அப்பா தலையை ஆட்டினார். "உன்னைப்போன்ற சின்னப்பையன் ஏன் சாவு போன்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறாய்? புரட்சியை நடத்துவதற்காக நாம் வாழ்ந்தாக வேண்டும்!"

அப்பா என்னை மீண்டும் நடக்க வைக்க முயற்சித்தார். கடைசியில் அதைக் கைவிட்டு என்னை ஒரு குகையில் தங்க வைத்து" மகனே, அப்பா செம்படையை உறுதியாய்க் கண்டுபிடிப்பேன். நான் திரும்பி வரும்வரை குகையைவிட்டு மட்டும் எங்கும்போய்விடாதே!" என்றார்.

அப்பா கிளம்பிவிட்டார். குகைக்கு வெளியே அடிமேல் அடி எடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பனிமூட்டத்தில் மறைவது தெரிந்தது. நான் குகைக்குள் என்னை அறியாமல் "அப்பா" என்று கத்திவிட்டு மயங்கி விழுந்தேன்.

***

ஒருநாள் கழிந்தது. நான் கண்ணை மூடியபோது எனது உடல் காற்றில் மிதப்பது போல் இருந்தது.

நான் அம்மாவின் தோளில் அமரப் பறந்துசென்றேன். "அம்மா உன்னை அதிக காலம் பிரிந்து விட்டேன்" - நான் சொன்னேன். "ஓ, தயவு செய்து சொல்லாதே! நல்ல மகனாயிரு, நீ வளர்ந்ததும் புரட்சிப்பணியாற்று."

"ஆனால் அம்மா, என்னால் உதவ முடியுமா?"

திடீரெனப் பேய்கள் வந்து அம்மாவைத் தூக்கிச்சென்றுவிட்டன. அம்மாவை அவை தடியால் அடித்து உதைத்தன. அவள் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது. நான் ஓடிப்போய் எனது சிறிய துப்பாக்கியால் பேய்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தினேன். பின்பு நான் நமது தலைவரிடம் பறந்து போய் "தலைவரே! ஏன் இந்தப்பேய்கள் அம்மாவைக் கொல்ல முயற்சிக்கின்றன?" என்று கேட்டேன்.

"ஏனென்றால் உன் அம்மா புரட்சி நடத்த விரும்புகிறார்"

"எதிர்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும் தலைவரே?"

"மகனே! செம்படைதான் உன் தாய். அது உனக்குப் படிப்பும் பயிற்சியும் அளித்து செம்படையின் நல்ல மகனாய் வளர்க்கும். செம்படை எதிர்ப்புரட்சி வெண் படைகளை அடியோடு துடைத்தெறியும். அப்போது சீனா விடுதலைபெறும். விடுதலைக்குப்பின் மக்கள் மகிழ்ச்சியோடு வாழுவார்கள்"

"தலைவரே, நீங்கள் உபதேசித்தப்படி நான் நடப்பேன். அவர் என் தோள்களின் மீது கை வைத்து "வந்து உன் அப்பாவைப் பார். அவர் இப்போது செம்படையின் ஒரு கேப்டன்.

"'தலைவரே நான் வருங்கால உலகைப் பார்க்க முடியுமா?"

"நிச்சயமாய். ஆனால் ஒரு மகிழ்ச்சியான உலகம் போராடாமல் நமக்கு வராது. போராட்டம்! புரிகிறதா?" - தலைவர் கூறினார்.

"ஆம், உள்ளூர் கொடுங்கோலர்களும் தீய சக்திகளும் அழித்தொழிக்கப்படவேண்டும். நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்தியக் காதகர்கள் ஒழிக! பிற்போக்காளர்கள் ஒழிக!"- நான் கூறினேன்.

நாங்கள் விண்வெளியில் இவ்வாறு உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மெல்லிய குரலில் யாரோ "என் மகனே, எழுந்திரு" என்று கூறுவது கேட்டது.

நான் என் கண்களைத் திறந்து பார்த்தபோது ஒரு செம்படை வீரர் என் மீது குனிந்து, தோளில் துப்பாக்கியுடன், முகத்தை மறைக்கும் புதர்த்தாடியுடன் அன்பு ததும்பப் பார்த்துச் சிரித்தார். நான் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தேன்.

"தலைவர்!"நான் சொன்னேன். இவர்தான் நமது தலைவராக இருக்க வேண்டும். இவர்தான் என்னோடு கனவில் பறந்து வந்தார். ஆனால் இப்போது ஏன் பறக்கவில்லை?

அப்பா ஒரு கூட்டத்தோடு என்னிடம் வந்தார்- "நல்லது, இப்போது நீ, நீயாகிவிட்டாய். மகனே நாம் செம்படையைக் கண்டுவிட்டோம்" -அவர் நடுங்கும் குரலில் கூறினார்.

என்ன நடந்தது, இப்போது எங்கே இருக்கிறேன் என்று நான் புரிந்து கொண்டேன். தலைவர் வாங் என் தோள் மீது கை வைத்து, "நீ நமது செம்படையின் அருமையான மைந்தன்" என்று பாராட்டினார்.

அறையில் இருந்த செம்படை வீரர்கள் சிரித்துவிட்டு ஒரு பாடலைப்பாட ஆரம்பித்தனர்.

"ஆகஸ்டில் கேசியாமொட்டுகள்

எல்லா இடங்களிலும் மலர்கின்றன

செங்கொடிகளும் செம்பதாகைகளும்

வானுயரப் பறக்கின்றன..."

நானும் அப்பாவோடும் அவர்களோடும் சேர்ந்து பாட ஆரம்பித்தேன். பின்பு தலைவர் வாங் அவர்களின் காதில் "தலைவரே, நான் இப்போது செம்படையின் அருமையான மைந்தன்" என்று கிசுகிசுத்தேன்.

அப்போதிருந்து நான் இளம் செம்படை வீரனாகவும், பின்பு உண்மையான செம்படை வீரனாகவும் ஆனேன்.

--சீன மூலம் : லு யான்ஸோ

- ஆங்கிலம் வழி தமிழில் : எஸ்.ஏ.பி.

Pin It