செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை
சென்றளந்து அறிந்தார் தொகுப்பது
என்றும் உள்ள பருப்பொருள் ஞானமே
அரிதாம் புவியின் உயிரின ஞானம்
பரிணாம வளர்ச்சியென் றழைக்கப் படுமே
மனிதன் தோன்றிய பின்னர் புவியில்
நனிபொருள் யாவும் உழைப்பின் விளைவே
வளர்ச்சியும் உறவும் ஒருங்கே மாறின
உறவின் மாறுதல் அளந்து அறியும்
அறிவியல் மார்க்சியம் எனப்படு கின்றதே
 
(கதிரவன் செல்லும் பாதையையும், அதன் இயக்கத்தையும், அவ்வியக்கத்தில் சூழப்படும் வான மண்டலத்தையும், காற்று செல்லும் திசையையும், ஆதாரமின்றி நிற்கும் வானத்தையும் பற்றி (அறிவியல் வழியில்) அறிந்து தொகுக்கப்படும் ஞானம் பருப் பொருளைப் பற்றிய அறிவியல் ஆகும். (மற்ற கோள்களைக் காட்டிலும்) அரிதாக உள்ள பூமியின் உயிரினங்களின் வளர்ச்சி பற்றிய ஞானம் பரிணாம வளர்ச்சி எனப்படுகிறது. இவ்வுலகில் மனித இனம் தோன்றிய பின்னர் (மனிதனுடைய) உழைப்பின் விளைவால் பல பொருட்கள் உற்பத்தி ஆகி உள்ளன. (இதன் போக்கில்) வளர்ச்சியும் (மனிதர்களுக்கு இடையிலான) உறவும் ஒருங்கே மாறின. (இவ்வாறு) மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் மாறுவது பற்றி ஆராய்ந்து அறியும் ஞானம் மார்க்சியம் எனப்படுகிறது)
 
- இராமியா

Pin It