கென்னிப்பன்  வூட்டு
ஐயப்பன  மிஞ்சரதுக்கு
ஒருத்தனும்  இருந்ததில்ல  ஊருல ...

அவங்  செதுக்கித்தர
பொம்பரத்துக்கு
ஒரு கூட்டம்
எப்பயும்  அவங்கூட  சுத்தும் ...

பொம்பரத்துக்கினே
காட்டுக்குப்  போவாங் ...
பொர்சிமரம்தான்
பொம்பரத்துக்கு எத்ததுன்னுவாங் ...

சிலநேரத்துல
அவுஞ்ச,
கொடுகாலி,
துரிஞ்ச  மரங்கள தேடுவாங் ...

பொம்பரம்  செதிக்கித்தரகேட்டா
ஆணி உனதா, என்தான்னு கேப்பாங்
ஆணிய  நாங்குத்தா ஒன்னார்ருவான்னுவாங்
ஆணிய அவனே அடிச்சி செதுக்கித்தந்தா
ரெண்ருவான்னுவாங் ...

தெருமுழுக்க
அவங் செதுக்கன  பொம்பரந்தாங்  வெளையாடும் ..

அவங் வெச்சிருந்த
சட்டித்தல   பொம்பரத்த
ஒருத்தனும் ஒடச்சதில்ல தெருவுல
தரையில  வுடாமலே
கையில ஏந்தி  அழகுகாட்டுவாங் ...

இப்பயெல்லா
ஒரு பொம்பரத்தையும் தெருவுல  பாக்கமுடியல
ஐயப்பங் மட்டும்
காட்டுக்கு போறத நிறுத்தல...

இன்னமும்
அவங் கொடுவா சத்தம்
அந்த காட்டுமரங்கள்ள
கேட்டபடிதாங் கெடக்குது ...

ராவெல்லாம்
எரியும்  சாராய அடுப்புக்கு
அவங் வெட்டியார்ர  வெருவுதாங்
நின்னு எரியுதாம் .

- படைவீடு அமுல்ராஜ்

Pin It