பாலை நிலத்தின்
வறண்ட தேகங்களில்
மீதப்பட்ட குருதியை
உறிஞ்சி முளைக்கிறது
கருவேல மரங்கள்.

தனக்கான ஆயுளை
நீட்டித்துக் கொள்ள
எத்தனிக்கும் ஒவ்வொரு
கணங்களிலும் உடுத்திக்
கொள்கிறது முள்கவசத்தை.

பிசின்களை தேகம்
முழுதும் துக்கநீர்களாக
ஓடவிட்டு ஒப்பாரியில்
உரைக்கிறது அதன்
மீதான பலவந்தத்
தாக்குதல்களை.

யாருமே சுவிக்காத‌
மஞ்சள் பூக்களை
உடுத்திக் கொண்டு
முதிர்கன்னியாய்
காத்து நிற்கிறது
அதன் கன்னித்தன்மையை.

- சோமா

Pin It