இந்திய, தமிழ்நாடு பரப்பின் இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூன்று பெரும் பிரிவுகளில் நக்சல்பாரி இயக்கம் என்ற இந்திய கம்யூனிச கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) முக்கியமானது. புரட்சிக்கான பாதை எது என்பதும், இந்நாட்டின் சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தியத்தை அறிவார்ந்த முறையில் பொருத்தி புரட்சியை நடத்துவது என்பதும்தான் இந்த பிரிவுகளுக்கான அடிப்படையாகும்.

நக்சல்பாரி கட்சி இந்தியா என்பது அரை நிலப்புரத்துவ-அரை காலனி நாடு, பாராளுமன்ற பாதையை புறக்கணித்த நீண்ட மக்கள் யுத்த ஆயுத போராட்டம் என்பதை 60களில் இறுதியில் முன் வைத்தது, இன்று இதில் பல மாற்றங்கள் வந்துள்ளது.

இத்துடன், இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடம், தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக்கப்பட்ட வேண்டும், நிலமற்றவர்கள்-விவசாய கூலிகள் அதாவது தலித்துகளும்-சூத்திரர்களும் பிரதான புரட்சிகர சக்திகள் என்பதை முன்நிறுத்தியது. பல இலட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மா-லெ இயக்கத்தில் சென்று அளப்பரிய தியாகங்களை செய்தனர். இதற்கு தமிழ்நாடு விலக்கல்ல! தியாகிகளின் வாழ்க்கை குறிப்புகளை சுருக்கமாக பார்ப்போம்!

அதே நேரம்…இன்று நக்சல்பாரி அமைப்புகளில் – மா-லெ குழுக்களில் பல அரசியல், கோட்பாடு, செயல் தந்திர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.comrade tamilarasanஅண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கருத்துகள் மீது விமர்சனங்களை வைத்து கொண்டிருந்த நக்சல்பாரி அமைப்புகளில் – மா-லெ குழுக்கள் இன்று முழுமையாக மாறி விட்டன. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கருத்துகளை உள்வாங்கி மார்க்சியத்தை இந்தியாவின், தமிழ்நாட்டின் பருண்மையான சூழலுக்கு பொருத்தமானதாக மாற்றி கொண்டிருக்கின்றனர். சாதியை மேற்கட்டுமான பார்த்த வரட்டு மார்க்சிய கோட்பாடு சூழல் மாறி சாதிய சமூகத்தின் அடிக்கட்டுமானம்-மேற்கட்டுமான இணைந்ததாக 80களில் ஆரம்பித்த விவாதங்கள் செழுமையடைந்து இன்று சாதி ஒழிப்பு பற்றி தெளிவான முடிவுக்கு வந்துள்ளனர். சாதி ஒழிப்பு முன்னணி என்ற மக்கள்திரள் அமைப்புகளை கட்டாத எந்த மா-லெ குழுக்கள் இல்லை என்ற அளவிற்கு அனைத்தும் சாதி ஒழிப்பிற்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

பார்ப்பனீயம், இந்து மதம் , இந்துத்துவா, காவி பாசிசம் பற்றிய கோட்பாட்டு முடிவுகளில் மா-லெ அமைப்புகள் முன்னோடிகளாக இருந்து கோட்பாடுரீதியாகவும், களச்செயல்பாட்டிலும் செயல்படுகின்றனர்.

தமிழை ஆட்சி மொழியாக்குவது, தமிழ் தேச தன்னுரிமை, தமிழக விடுதலையை அனைத்து மா-லெ குழுக்களும் கொள்கைகளாக கொண்டு இருக்கின்றனர்.

ஈழ விடுதலைக்கு உண்மையான விடுதலை தமிழக விடுதலை-தமிழக மக்கள் விடுதலையே என்று 80 களில் மா-லெ அமைப்புகள் பிரச்சாரம் செய்தது இன்று உண்மையாகி இருக்கின்றது.

ஒருங்கிணைந்து கூறினால் ஒர் இணைக்கமான சூழ்நிலை மா-லெ குழுக்களுள் உருவாகி வருகிறது.! புதியதாக வசந்தத்தின் இடி முழக்கம் தமிழ்நாட்டில். எழுச்சியுறும் நாள் வெகு தொலைவில் இல்லை!!

தோழர் எல்.அப்பு

இ.க.க (மா-லெ) கட்சி தமிழ்நாடு மாநில குழுவின் முதல் பொதுச்செயலாளர் கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர். இளமைப்பருவத்தில் பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்வுக்கு வருகிறார். பின்பு பொதுவுடைமை இயக்க சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டு கட்சி முன்னணி ஊழியராக மாறுகிறார். தோழர் அப்பு நகராட்சி தொழிலாளர் சங்கம், மோட்டார் தொழிலாளர் சங்கம், ஓட்டல் பணியாளர் சங்கம், ஆலைத் தொழிலாளர் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்களில் ஈடுபட்டு அவற்றுக்கு முன்னணி பொறுப்பாளராக இருந்து வழிகாட்டினர். தொழிற்சங்க செயல்பாட்டின் ஒரு பகுதியாக நிலமீட்சிப் போராட்டம், பஞ்சாலைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை ஏற்று சிறை சென்றார். இதன்வழியாக அவர் மாநில அளவிலான தொழிற்சங்க செயல்பாட்டாளராக வளர்ச்சியடைந்தார்.

இந்திய சீனா போர் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேரு தலைமையிலான இந்திய அரசு தேசதுரோக குற்றச்சாட்டின்பேரில் கம்யூனிஸ்டுகளை கைது செய்யத் துவங்கியது. இதில் நாடு முழுவதும் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னணி கம்யூனிஸ்டு ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தில் 80 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் அப்புவும் ஒருவர். சுமார் ஓர் ஆண்டுகாலம்வரை சிறையில் இருந்த அப்பு, வெளிவந்த பிறகு கோவை தொழிலாளர்களிடம் நிதி திரட்டி, அவரின் முன்முயற்சியால் 'கோவைத் தொழிலாளர் வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம்' எனும் வாசகத்தோடு அப்புவை ஆசிரியராகக் கொண்டு தீக்கதிர் வார இதழ் 1963 ஆம் ஆண்டு சூன் 29 ஆம் தேதியன்று வெளிவந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கொள்கை மாறுபாட்டால் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைகிறார்.

அவரின் நினைவு கூறத்தக்க முக்கியப் போராட்டம் என்பது 1961ம் ஆண்டில் தோழர் சீனிவாசராவ் தலைமையில் நிலச் சீர்திருத்தம் கோரி, நிலமற்ற உழவர்களுக்கு நிலம் கோரி கோவையில் இருந்து சென்னைவரை நடைபெற்ற நடை பயணத்தில் அப்பு தனது 20 தோழர்களுடன் முக்கிய பொறுப்பாளராக கலந்து கொண்டார் என்பதே! இதுகுறித்து அவருடன் இருந்த பலதோழர்கள் இதுற்றி சிலாகித்து இருக்கிறா்கள்.

சொல் ஒன்றும் செயல் ஒன்றும் இல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் அப்பு இருந்தார். சாதி ஒழிப்பு சாதி மறுப்பு திருமணத்தை எளிமையாக பாட்டாளிவர்க்க பண்பாட்டுக்கு ஏற்ப நடத்தி தோழர் பிரமிளாவை வாழ்க்கை இணையராக்கி கொண்டு வாழ்ந்தார்

வசந்தத்தின் இடிமுழக்கமாய் எழுந்த நக்சபாரி எழுச்சியும் தன்னை அப்பு இணைத்து கொள்கிறார். தோழர்கள் புலவர் கலிய பெருமாள், ஏ.எம்.கே, பி.வி.எஸ், லிங்கசாமி, கோவை ஈஸ்வரன், குருசாமி அண்ணாச்சி, பெரும்பண்ணையூர் மாணிக்கம் ஆகியோர் இணைந்த தலைமை குழு தமிழ்நாடு நக்சல்பாரி இயக்கத்திற்கு வழிகாட்டியது. தோழர் அப்பு 1970 மே 14,15 தேதிகளில் கல்கத்தாவில் நடைபெற்ற வரலாற்றுச்

சிறப்புமிக்க இ.க..க.(மா.லெ)-யின் 8வது பேராயத்தில், மையக்குழு உறுப்பினராகவும், அரசியல் தலைமைக்குழு (பொலிட் பீரோ) உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். நக்சல்பாரி உழவர்திரள் எழுச்சி இந்த பேராயத்திற்கு பிறகு அழித்தொழிப்பு பாதையாக மாற்றப்படுகிறது.

1970ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை, வடஆற்காடு தோழர்களை சந்தித்துவிட்டு வேலூர் தனியார் விடுதியில் தங்கி இருக்கும்பொழுது காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். ஏங்கோ சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு யாருக்கும் தெரியாமல் செய்யப்பட்டார். இன்று வரை தமிழ்நாடு காவல்துறையில் தேடப்படுபவராக எல்.அப்பு இருக்கிறார். காணாமல் அடிக்கப்பட்ட தோழர் என்றும் நமக்கு வழிகாட்டியாக கொண்டிருப்பவராக இருக்கிறாரோ?

தோழர்கள் கணேசன், சர்ச்சில், காணியப்பன்

நக்சல்பாரி அறைகூவலை ஏற்று ஏராளமான தமிழ் உழவர்களும் இளைஞர்களும் மாணவர்களும் ஆதரவாக வந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோழர் கணேசன் தலைமையில் பல மாணவர்களும், கோவைப் பொறியல் கல்லூரியில் இருந்து தோழர் தமிழரசன் தலைமையில் ஒன்பது பேர்களும் இன்னும் பல்வேறு கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் தங்கள் கல்வியை முடிக்காமலே வெளியேறி இயக்கத்தில் இணைந்தனர். தோழர் சர்ச்சில் தொழிலாளி. காணியப்பன் உழவர்-இளைஞர்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவரான இராமநாதன் செட்டியார் ஒரு மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை எதிர்த்து தோழர் கணேசன் தலைமையிலான புரட்சிகர மாணவர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். தோழர் கணேசன் மிகச்சிறந்த அறிவுஜீவி. அவர் முடிக்காமல் போன இயக்கவியலை நம் நாட்டு சூழலில் புரிந்து கொள்ள எழுதிய கட்டுரை பின்னால் புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தால் வெளியிடப்பட்டது.

பேராயத்திற்கு பிறகு அழித்தொழிப்புப் போராட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், தென்னாற்காடு மாவட்டத்தில் கட்டாய அறுவடை இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.

நிலப்பிரபுகளுக்கு உரிமையான நிலங்களில் இரவு நேரங்களில், புலவர் கலியபெருமாள், தோழர் கணேசன் ஆகியோர் தலைமையில் நிலமற்ற விவசாயிகள் களத்தில் இறங்கி அறுவடையைக் கைப்பற்றி ஏழை எளிய மக்களுக்கு விநியோகித்த இந்தக் கட்டாய அறுவடை இயக்கம் ஒரு வீச்சை ஏற்படுத்தியது. தங்களுடைய உடைமை பறிபோய் விடுமோ எனப் பதறிய நிலப்பிரபுக்கள், காவல்துறையின் உதவியோடு தாக்குதலுக்குத் தயாரானார்கள்.

1970ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி புலவருக்குச் சொந்தமான சவுந்தர சோழபுரம் நிலத்தில் தற்காப்புக்காக வெடிகுண்டுகளை தயாரிக்கும் வேலையைத் தோழர்கள் தொடங்கினர்.. வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது வெடிகுண்டுக் கலவை திடீரென வெடித்து, தோழர்கள் கணேசன், காணியப்பன், சர்ச்சில் ஆகிய தலைசிறந்த மூன்று தோழர்கள் உடல்சிதறி உயிர் இழக்கின்றனர்.

புலவர் கலியபெருமாளோ வெடிகுண்டு சிதறல்களால் உடல் முழுவரும் புண்ணாகிப் படுகாயமுற்றார். உயிர் பிரியும் பெரும் வலி மிகுந்த அந்த நேரத்திலும் அந்த தோழர்கள் “மார்க்சியம்-லெனினியம் ஓங்குக, நக்சல்பாரி வாழ்க” என்று முழக்கப்பட்டதாக புலவர் பதிவு செய்துள்ளார்.

பொன்னேரி சீராளன்

 வடஆற்காடு மாவட்டம் ஜோலார்பேட்டையை சுற்று உள்ள கிராமங்களில் உழவர் கூலிப்பிரச்சனை, நிலப்பிரத்துவ ரவுடிகள் கட்ட பஞ்சாயத்துகள், தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரம் 1974,75, 76 ஆண்டுகளில் கட்சி தலைமையில் தோழர் சீராளன் முன்நின்று நடத்தினார். சாதி நிலப்பிரபுக்களின் அடியாட்கள், போலிசாருடன் மோதல்கள் நடந்தன.

இந்த காலத்தில் சீராளம் சாதி ஒழிப்பில் முக்கியமான நகர்வை செய்தார். சூத்திரசாதி தோழர்கள் திருமணங்களை தலித் குடியிருப்புகளில் சேரி பகுதிகளில் விழாவாக நடத்தினார். தலித் வீடுகளில் சூத்திர சாதியினர் உண்பதை விழாவாக திருமண விழாக்களை மாற்றினார். சூத்திர சாதியினர் சாதி ஆதிக்க மனநிலையை தகர்க்க இது துணை புரிந்தது. பின்னர் இதை தோழர்கள் தமிழரசன், பாலன் இன்னும் விரிவாக சூத்திர சாதியினர் சாதிமனைநிலையை தகர்க்க விதமான பல நிகழ்வுகள், போராட்டங்களுடன் முன் நகர்த்தினர்.

தர்மபுரி மாவட்டம் அத்தி பள்ளம் பகுதில் கொடிய நிலப்பிரபு தலித் குத்தகை விவசாயிகளை அவர்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றுவதை எதிர்த்து தலித் மக்கள் தன்னெழுச்சியாக போராடினார்கள். நிலப்பிரபுவின் அடியாட்கள் போராடும் தலித்துகள் தாக்கினர். நக்சல்பாரி இயக்கம் இந்த நிலப்பிரவை அழித்தொழித்தது.

இந்த பின்னணியில் 1976 ஆம் ஆண்டு இறுதியில் திருப்பத்தூர் அருகே நைனா அத்தியூரில் தோழர் சீராளன் கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லப்படுகிறார். இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு தோழர் வ.கீதா நெறியாளுகையில் தோழர் பிரேமா ரேவதி அவர்கள் தனிஆள் நாடகம் இந்த போராட்டங்களை முழுமையாக கொண்டு வந்துள்ளது இங்கு குறிப்பிட வேண்டும்!

தோழர் பாலன்

தர்மபுரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மாநில கல்லூரியில் முதுகலை கணிதவியலில் முதன் மாணவராக தேர்ச்சி பெற்றவர். மக்கள் துயரங்களை கண்டு மக்களுக்காக தன் வாழ்க்கையை அற்பணிந்தவர். அவர் வாழ்க்கை போராட்டங்கள் கதை பாடலாக மக்கள் இன்றும் பாடுகின்றனர். அது..

“கண்மணியே கண்மணியே என் அருமை பாலகனே தியாகச்சுடர் பாலன் அவன் கதையை கேளடா-வீர தியாகி அவன் அவன் வழியில் நீயும் துணிந்து நில்லடா!

தர்மபுரியில் அவன் பிறந்தான் தறி ஓட்டி படித்து வந்தான் படிக்கும் போதே மக்களுக்கு - மதிப்பையும் தந்தான் பாலன் படிப்பினிலே முதல்வனாக - தேர்ச்சியும் பெற்றான்

அந்தக் காலம் இந்தக் காலம் எந்த கால ஆட்சியிலும் - ஏழை மக்கள் வாழ்வினிலே என்னாத்த கண்டோம் - என்று எழுந்தவன் போர் வழியில் புறப்பட்டு சென்றான்.

கந்து வட்டி கடன் தொல்லை மக்களுக்கு பெரும் தொல்லை - பலர் பெரியண்ண செட்டியாலே சொத்தையும் இழந்தார் - எனவே கொடுங்கோலன் அவன் கதையை பாலனும் முடித்தார். காக்கி சட்டை போலீசும் கைவிலங்கு போட்டவனை..கிருஷ்ணகிரி ஜெயிலிலேயே கொடுமையும் செய்தார். பாலன் புரட்சிக்காக அதிலிருந்து தப்பித்து சென்றான்

கருப்பூர் கேட்டினிலே சுண்ணாம்புக் கல் மேட்டினிலே-தொழிலாளி வர்க்கத்தோடு தோளோடு நின்றான்-பாலன் தொழிலாளி துயர் துடைக்க துணிந்துமே சென்றான். பச்சையப்பன் பெயர் கொண்ட அவன் கதை முடிக்க கருங்காலி காண்ட்ராக்டரும் சதியுமே செய்தான் பின்னர் ஐந்தாண்டு சிறை வாசம் வாழ்க்கையும் முடித்தார். காலம் காலம் நம்மை எல்லாம் ஏய்த்துவந்த கூட்டமதன் கொடுமையை சொல்லப் போனா நாவுமே கூசும் பின்னர் வர்க்கமும் நாளுக்கு நாள் நலிந்துமே வாழ்ந்தோம். பண்ணையாருமாடு திங்கும் புண்ணாக்க உன் அண்ணன் பசி தீர எடுத்து வந்து பதட்டமாய்த் தின்றான் அதற்கு பண்ணையாரு அவனைக் கொன்று கிணற்றிலே எறிந்தான்

உன் அண்ணன் போன பின்னே பாலனவன் வந்தானடா கொலைகாரன் கொடுமை தீர்க்க கொடி பிடித்து நின்றான் - பாலன் இன்னும் பல கொடுமை தீர்க்க மக்கள் படை அமைத்தான். வெள்ளாளபட்டியிலே நாய்க்கன் கொட்டாய் பகுதியிலேகொடுமையிலே வாடி வந்த மக்கள் பக்கம் நின்றான் -பாலன் டீ டம்ளர் போராட்டத்திலே வெற்றியும் கண்டான். பண்ணையாரு பண்ணையிலே பகல் முழுதும் வேலை செய்தோம் பாடுபட்ட உழைப்புக்கவன் ஒரு ரூபாய் தந்தான் அதனால் பாடுபட்ட பாட்டாளியோ - பட்டினி கிடந்தான் பண்ணையாரு பண்ணையிலே பகல் முழுதும் வேலை செய்தால் பண்ணை நாகம் பானையிலே பால் பொங்குது ஆனால் -அன்றாடம் நம் அடுப்பில் பூனை தூங்குது

பாலனவன் தலைமையிலே பாட்டாளிகள் போரிடவே பார்த்திருந்த பண்ணையார்கள் பயந்துமே வாழ்ந்தார் - அதனால் பண்ணையார்கள் ஒன்று கூடி சதியுமே செய்தார். சீரியம்பட்டி கிராமத்திலே கூலி விவசாய கூட்டத்திலே பாலனை பணக்காரனைப் பாதுகாக்கும் போலீசும் பிடித்தான் - பின்னர் பாலக்கோடு ஸ்டேசனிலே காலையும் முறித்தான். கலவரத்தில் ஈடுபட்டு கால் முறிந்ததென்று சொல்லி - போலீஸ் கயவர்களும் திட்டமிட்டே கொலையுமே செய்தான் பின்னர் ஐந்தாறு நாட்களுக்குப் பின் சாம்பலையும் தந்தான்

பாலனவன் இறந்துவிட்டான்.. அவன் கொள்கை என்றும் இறக்காது! இன்று அவன் வழியில் ஆயிரமாயிரம் பாலனும் உதித்தார் – அவன் போல் இன்னும் பலர் தியாகம் செய்ய துணிந்துமே நின்றார்..”appu balanஅழித்தொழிப்பு ஒன்றே பாதை என்பதை கைவிட்டு நக்சல்பாரி இயக்கங்கள் எழுச்சிமிக்க மக்கள்திரள் பாதையில் எப்படி செயல்படுவது என்பதற்கு எடுத்துக்காட்டு பாலன் வாழ்க்கை. குறிப்பாக தலித்துகள் மீதான சாதி கொடுமைகள், தீண்டாமை, தனி டீ டம்பளர் எதிரான போராட்டங்களை சூத்திர சாதியில் இருந்து வெளியேறிய தோழர்கள் அதுவும் வன்னிய சாதியிலிருந்த வந்த தோழர்களை இப்போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைத்து முன் உதாரணமான சாதி ஒழிப்பு போராட்டங்களை களம் காண்பித்து சென்றவர் தோழர் பாலன்!

தோழர் தமிழரசன்

தோழர் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி கடலூர் மாவட்டம், மலர்தலை மாணிக்கம் என்னும் சிற்றூரில் துரைசாமி-பாதுசாம்பாள் தம்பதியின் மூத்த மகனாக பிறந்தார். தான் பிறந்த சிற்றூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்பரப்பியில் தொடக்கக்கல்வியையும், அதன் பின் கோவை அரசு கல்லூரியில் வேதியியல் பொறியியல் கல்வியும் பயின்றவர். வசந்தத்தின் இடிமுழக்கத்தின் அறைகூவலை, தோழர் சாரு மஜீம்தாரின் மாணவர்கள் கிராமங்களுக்கு செல்வோம் ஆணையையும் ஏற்று தமிழரசன் தன் சக மாணவர்கள் 9 பேருடன் மா-லெ கட்சியில் இணைந்தார்.

அழித்தொழிப்பு ஒன்றே புரட்சி பாதையை முதலில் தமிழரசன் ஏற்று நடைமுறைப்படுத்தினார், ஆனால் சில ஆண்டுகளில் அதில் அவருக்கு மாறுபட்ட கண்ணோட்டம் உருவானது. அதற்கு தென் ஆற்காடு மாவட்டம் சொரப்பூர், வீராணம், சிறுமதுரை பகுதிகளில் கூலி விவசாயிகளின் பொருளாதார கோரிக்கைகளுக்காக தோழர் செந்தாரகை உட்பட சிலருடன் இணைந்து மக்களை திரட்டிப் போராடி வெற்றி பெற்றார். அதிலிருந்த பெற்ற அனுபவங்கள் அடிப்படையில் அழித்தொழிப்பு பாதையுன், மக்கள்திரள் பாதையையும் இணைத்து கூட்ட குழு போராட்ட வழிமுறையை தமிழரசன் வகுத்தார். கூட்ட குழு பாதைக்கு தமிழரசன் கண்ணோட்டம் என்றால் மிகை அல்ல! இதிலிருந்துதான் அழித்தொழிப்பு ஒன்றே புரட்சி பாதை(வடக்கு தமிழக குழு), கூட்டகுழு பாதை(தென் தமிழ்நாடு குழு), மக்கள்திரள் பாதை(மேற்கு தமிழ்நாடு குழு) என்ற மா-லெ அமைப்பில் மூன்று வழிகள் மெல்ல மெல்ல உருவாகியது. இந்த கூட்ட குழு பாதை மா-லெ பிரிவுக்கு தோழர் தமிழரசன் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் சில காலத்திற்குள்ளேயே தோழர் 1977 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்படுகிறார்.

ஈழ பிரச்சனை எழுந்த காலம் அது! சிறையில் இருந்த தமிழரசன், புலவர் கலியபெருமாளுடன் இணைந்து தேசிய இனப்பிரச்சனை அரசியலை விவாதிக்கின்றனர். முற்போக்கு இளைஞர் அணி சார்பால் தேசிய இனப்பிரச்சனை குறிந்து நாடு தழுவிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. தோழர் தமிழரசன் விடுதலையான பின்பு கட்சிக்குள் மாறுபட்ட அரசியலை முன் வைக்கிறார். உட்கட்சி போராட்டத்தை கடைபிடிக்காமல் 1984யில் தோழர்கள் கலியபெருமாள், தமிழரசன் வெளியேற்றப்படுகின்றனர். தொடர்ந்து மே மாதம் 5.6 தேதிகளில் பெண்ணாடத்தில் தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு, இந்தியாவில் தேசிய இனங்களில் மாநாடு என்ற தலைப்பில் முற்போக்கு இளைஞர் அணி சார்பில் இருநாள் தேசிய இன கருத்தரங்கம் நடைபெற்றது.

முந்திரி காட்டு பிரச்சனையிலும், தலித் மக்கள் உரிமை போராட்டத்திலும், தனிக் குவளை எதிர்த்து டீக்கடைகள் முன்பு நடத்திய போராட்டம். அன்னக்கிளி என்ற சகோதரி கொல்லப்பட்ட சமயத்தில் அவர் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் மிக முக்கியமானவை.

“இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்காது. இந்திய அரசு போராளிகளுக்கு உதவுவது என்பது இலங்கை முழுவதையும் தனது ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வருவதற்கே. பங்களாதேசில் தனது நோக்கம் நிறைவேறியதும், எப்படி தான் பயிற்சி கொடுத்த போராளிகளை அழித்ததோ அதேபோன்று இலங்கையிலும் தனது நோக்கம் நிறைவேறியதும் ஈழப் போராளிகளை இந்திய அரசு அழிக்கும் ” என்று தமிழரசன் பதிவு செய்தார்.

1985ஆம் ஆண்டு மே மாதத்தில் அரியலூர் மாவட்டத்தில் மீன் சுருட்டி என்னும் ஊரில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் சாதி ஒழிப்பு குறித்த தோழர் தமிழரசனின் அறிக்கை வெளியிடப்பட்டது.தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் படைப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படை தோழர் தமிழரசனால் உருவாக்கப் பட்டது. கோட்பாட்டு ரீதியாக தமிழரசன் முன் வைத்த பெண்ணாடம் தேசிய இன விடுதலை அறிக்கையும், மீன் சுருட்டி சாதி ஒழிப்பு அறிக்கையும் முக்கியமானது.

1987 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி பொன்பரப்பியில் தமிழரசன் காவிரி பிரச்சனைக்காக வங்கியில் பணப்பறிப்பு நடைவடிக்கையில் தோழர்களுடன் ஈடுப்பட்ட பொழுது காட்டி கொடுக்கப்பட்டு காவல்துறையால் சதித்தனமாக அடித்தே கொல்லப்பட்டார். ஆனாலும் இன்று சாதி ஒழிப்பு, தமிழ்நாடு விடுதலை பற்றிய தமிழரசன் கோட்பாடு இன்றும் தமிழ்நாட்டிற்கு வழிகாட்டும் ஆவணங்களாக இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்!

தோழர்கள் சந்திரகுமார் – சந்திர சேகர்

கீழத் தஞ்சையில், நீண்ட நெடிய போராட்ட இயக்கத்தின் காரணமாக, அறுவடை தவிர்த்த பிற விவசாய வேலைகளுக்கான சட்டக் கூலி 80களில் ரூ.10 அமலாக்கப்பட்டு வந்தது. ஆனால், மேலத் தஞ்சையில் ரூ.5 மட்டுமே வழங்கப்பட்டது. மா-லெ அமைப்பின் மக்கள் திரள் அமைப்புகள், ஏழை விவசாயிகள் சங்கம் கூலிப்பிரச்சினையை எடுத்தது. பல்வேறு கிராமங்களில் கூலிப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்களை கட்டமைத்தது. அறுவடைக்கான கூலி 3 மரக்கால் என்பதிலிருந்து 5 மரக்காலாக உயர்ந்தது. ஆனால்..விவசாய வேலைகளுக்கான தினக்கூலி ரூ.5 என்பதாகவே நீடித்தது.

" மேலத் தஞ்சையில் விவசாய வேலைகளுக்கான சட்டக்கூலி ரூ.10 யை அமல்படுத்து !" என்ற முழக்கத்தின் அடிப்படையில், ஆடுதுறை வட்டாரத்தில் இருந்த மணலூர், கஞ்சனூர்,சூரியனார்கோவில்,கோட்டூர், துகிலி, திருக்கோடி கோவில்,பருத்தி குடி, திருமங்கல குடி ஆகிய கிராமங்களில் போராட்டம் பரவியது. மாலெ இயக்கத்தின்வெகுமக்கள் அமைப்புகள் மூலமாக இயக்கம் கட்டமைக்கப்பட்டது. கீழ்வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு அழித்தொழிக்கப்பட்ட பிறகு,இகக-மாலெ கட்சி செயல்பாடுகள் மீது புதியவகை நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், நெல் உற்பத்தியாளர்கள் பீதியில் இருந்தனர். பணப்பயிர் போல் அல்லாமல், நெல் உற்பத்தியானது பிரதானமாக ஆற்றுநீர் பாசனத்தையும், பெரும் மனித உழைப்பையும் கொண்ட விவசாய நடவடிக்கையாகும். எனவே கூலிப்பிரச்சினை முக்கிய இடத்தை பிடித்திருந்தது. தலைமறைவு கட்சி ஊழியர்களை ஒழித்துக் கட்ட ஆங்காங்கே அடியாள் படைகளையும் நிலப்பிரபுக்கள் உருவாக்கி வைத்திருந்தனர். பிற்பட்ட சாதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை சாதியரீதியாக தங்கள் பக்கம் அணிதிரட்டிக் கொண்டனர்.

உள்ளூரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய தோழர்.சந்திர குமார் மணலூர் வர்க்கப்போராட்டத்தின் கருவாக திகழ்ந்தார். மயிலாடுதுறையில் இருந்து வந்த ஆனதாண்டவபுரம் AGR என்கிற ரெங்கநாதன், மன்னார்குடி அருகில் உள்ள சோழபாண்டியை சார்ந்த சந்திரசேகர் போன்றோர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினர். மணலூர் வர்க்கப்போராட்டத்தின் களமானது. நிலப்பிரபுத்துவ ராமைய்யன் தலைமையிலான சக்திகள் தொடர்ந்த தாக்குதல்களை நடத்தி வந்தனர். உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் முதல் கட்சி ஊழியர்கள் வரை தாக்கப்பட்டனர்.

வெட்டுக் கூத்துக்கள், மோதல்கள் வெடித்தன. பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. மொத்த எம்.எல் இயக்கத்தையும் சிதறடிக்க மணலூர் இயக்கத்தை ஒழித்துக் கட்ட பல்வேறு சக்திகளும் கரம்கோர்த்தன. மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து சென்ற நிலையில், 1984 செப்டம்பர் 1 ஆம் தேதியன்று, தோழர்களும், மக்களும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் & காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் SP யை சந்தித்தனர். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக SP உத்திரவாதம் வழங்கினார்; திருப்பனந்தாள் காவல்நிலையத்திற்கு அறிவித்துவிட்டு மணலூருக்கு செல்லும்படி கோரினார். நயவஞ்சகமாக காவல்துறை ஏமாற்றியது; நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும் தகவல் வழங்கியது. கோ.சீ.மணியும் கூட அவர்களுடன் கரம்கோர்த்தார்.

செப்டம்பர் 2 அதிகாலை. சர்ச் மணியடித்து நிலப்பிரபுத்துவ சாதியாதிக்க சக்திகள் தங்களுடைய ஆயுதபாணியான பட்டாளத்தை திரட்டிக் கொண்டனர். ஆயுதங்கள் இன்றி திரும்பிய மக்கள், தலைவர்கள் 67 பேர்களையும் ஆபத்தான ஆயுதங்கள் கொண்டு தாக்கினர். முன்வரிசையில் அணிவகுத்த தலைவர்கள் சந்திர குமார், சந்திர சேகர் கொல்லப்பட்டார்கள். AGR, கண்ணையன், லூர்துசாமி, தங்கசாமி, பாலு,நாகராஜ், இரண்டு குருசாமிகள், நாகைய்யா, சின்னதுரை மற்றும் சில தோழர்கள் படுகாயமுற்றனர். ராசேந்திரன் கம்பத்தில் கட்டிப் போடப்பட்டு தாக்கப்பட்டார். மணலூர் இரத்த வெள்ளத்தில் மூழ்கியது. தலித்துகள், வன்னியர், கள்ளர் என அனைவரின் ரத்தமும் புரட்சிகர கம்யூனிஸ்ட்களின் தியாகத்தின் சாட்சியமாக கலந்தோடியது.

தாமதமாக வந்து, காவல்துறையும், அரசு அதிகாரிகளும் சேதங்களை மதிப்பீடு செய்தனர். உயிருக்கு அஞ்சிய நூற்றுக்கணக்கான தலித் ஏழைகள் மணலூரை விட்டு வெளியேறினர்; அஞ்சாதவர்கள் சில இளைஞர்கள் மட்டுமே! கட்சி தரப்பில் இருந்த தவறுகள் பற்றிய சுயபரிசீலனை செய்யப்பட்டது. அங்கிருந்த கட்சி ஊழியர்கள் மாற்றப்பட்டனர். புதிய ஊழியர்கள் பொறுப்பு ஏற்றனர்.

1984-85 செப்டம்பர் வரையிலான ஓராண்டு வலி நிறைந்த பயணம். பல்வேறு கிராமங்களுக்கு சிதறிப்போன மக்களை சந்தித்து, நம்பிக்கை ஏற்படுத்தி மீள்குடியேற்றம் நிகழ்த்திட கட்சி தோழர்கள் சங்கர் & சகாதேவன் மேற்கொண்ட பலநூறு கி.மீ பயணம் மறக்க முடியாததாகும். மறைந்த தோழர். நாராயணன் (கக்கரைக் கோட்டை) கடும் உழைப்பு மறைக்க முடியாததாகும். பட்டியல் இட்டால் நீளும் பல தோழர்களின் பணிகளை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

மணலூர் மக்கள், இளைஞர்கள் வீரம் செறிந்தவர்கள். திரும்பி வந்தனர். 1986, செப்.2 தியாகிகள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. மணலூரில் இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களின் மீள் குடியேற்றம் நிகழ்ந்தது. மா-லெ இயக்கத்தின் வரைபடத்தில் மணலூர் நீடிக்கிறது தியாகிகள் சந்திர குமார், சந்திர சேகர் நினைவாக!

தோழர் மாடக்கோட்டை சுப்பு

சாதிவெறிக் கொடுமைகள் தலைவிரித்தாடிய முந்தைய இராமநாதபுரம் மாவட்டத்தில், பண்ணை அடிமை முறையும் - சாதிய அடக்குமுறையும் ஒருங்கே நிலவிய அன்றைய சூழலில், சமூகக் கொடுமைகளைக் கலைந்தெறிய எழுச்சியோடு கிளர்த்தெழுந்தவர்தான் தோழர் மாடக்கோட்டை சுப்பு. 

 தனியொரு நபராய் போராடிய தோழர்.சுப்பு, மேலும் வீரீயத்துடன் களப்போராட்டத்தை முன்னெடுக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார். சமூக உரிமைப் போராட்டம், விவசாயிகளின் வர்க்கப் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் அயராது பங்காற்றியுள்ளார். அவரது சமூக உரிமைப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவருடைய நலனுக்கானதாக அமைந்திருந்தது.

 ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவத்தை மறுக்கும் இரட்டை குவளை முறையை எதிர்த்து தானே தேனீர் கடையை நடத்தி ‘டீக்கடை பெஞ்சை’ கம்யூனிச பரப்புரைக் களமாக மாற்றியவர் தோழர்.சுப்பு. 1978-இல் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்லிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து போராடிய தோழர்.சுப்பு உழைக்கும் விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்லிஸ்ட்-லெனினிஸ்ட்) மாவட்டத் தலைமைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்று துடிப்போடு போராடினார்.

 1992-இல் தேவகோட்டைப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புடன் விளங்கிய சிறுவாச்சி ஆலய நுழைவுப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். இவரது போராட்டத்தைக் கண்ட ஆதிக்க சாதி வெறியர்கள் அஞ்சி நடுங்கினர். தோழர்.சுப்புவின் போராட்டத்தை மட்டுப்படுத்த நினைத்த ஆதிக்க சாதி வெறியர்கள், தங்கள் விசுவாச அரசபடையான காவல்துறையைக் கொண்டு, தேவகோட்டையில் நடத்த ஒரு கொலையில் ஈடுபட்டதாக தோழர் சுப்பு மீது வழக்குப் போடச் செய்தனர்.

 அந்த பொய் வழக்கு தொடர்பாக திருநெல்வேலி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு திரும்பிய போது கூலிப்படை காலி, கொடியவன் இசக்கி என்பவரால் தோழர் சுப்பு கொலை செய்யப்பட்டார். தோழர் சுப்பு மாவீரன் சுப்புவாய் பரிணமித்தார். மாவீரன் சுப்புவைக் கொலை செய்த ஆதிக்க சாதி வெறியர்கள், வரலாற்றில் மாறாக இரத்தக் கறையுடன் தவிர்க்க முடியாமல் இடம் பெற்றார்கள் கோழைகளாய்..

தோழர் அஜீதா

70களில் இருந்து தொடர்ந்து இறக்கும் வரை மா-லெ இயக்கத்தின் உறுப்பினரும், தொழிற்சங்க தலைவரும், இரயில்வே துறை விபத்து பிரிவு உயர் அதிகாரியாக இருந்த தோழர் பரந்தாமன் மகள் இவர். வழக்கறிஞராக பணி புரிந்தவர். தமிழ்நாடு பெண்ணுரிமை கழகத்தின் தலைமை பொறுப்பில் இருந்து பல பெண்கள் பிரச்சனைகள் போராட்டங்களுக்கு வழிகாட்டியவர். தளி கல்பனா சுமதி போலிஸ் வல்லுறவு கொடூரம், சென்னை அண்ணாசாலை ஆபாச புத்தகங்கள் எரிப்பு, மதுரை திரையரங்கில் நீல பிட் பட சுருள்கள் எரிப்பு என்ற பல போராட்டங்களின் முன்னணி போராளி.. பெண்ணுரிமை இதழில் ஆசிரியர்.. கேராளாவில் நடந்த போலி மோதலில் 24 நவம்பர் 2016 கொல்லப்பட்டார்.

தோழர் இரவீந்திரன்

தொலைபேசி துறையில் கட்டிட பொறியாளராக உயர் பதவி வகுத்தவர். அத்துறையில் தலித் இடஒதுக்கீடு, உயர்பதவிகளில் தலித்துக்கள் இடஒதுக்கீடு மறுப்பீடு எதிர்த்து போராடியவர். 80களிலிலேயே பெரியார் படிப்பகம் அரசு துறையில் ஆரம்பித்தவர். அண்ணல் அம்பேத்கர் சிலையை அரசு ஊழியர்களிடம் நிதி திரட்டி எழுப்பூர் தொலைபேசி துறை அலுவலகத்தில் நிறுவியவர். பணம் புரளும் பதவியை விட்டு கிராமப்புறங்களில் போராட்டங்களில் கட்டி அமைக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். தர்மபுரி 1 சனவரி 2000 மோதல் என்ற பெயரில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்படவர்.

தியாகியான தோழர்கள் சிலரின் பெயர்கள்

செல்வன் : 6 ஆகஸ்ட் 1980

ராசப்பா : 6 ஆகஸ்ட் 1980

பெருமாள் : 6 ஆகஸ்ட் 1980

சுப்பிரமணியம் : 11 செப்டம்பர் 1980

சண்முகம் : 11 செப்டம்பர் 1980

குருவிக்கார கனகராசு : 18 செப்டம்பர் 1980

சின்னதுரை : 13 அக்டோபர் 1980

நொண்டி பெருமாள் : 13 அக்டோபர் 1980

செயபால் : 15 அக்டோபர் 1980

மனோகரன் : 19 டிசம்பர் 1980

கண்ணாமணி : 28 டிசம்பர் 1980

தனபால் : 23 ஆகஸ்ட் 1981

அன்பு : 23 ஆகஸ்ட் 1981

சரவணன் : 23 ஆகஸ்ட் 1981

சின்னத்தம்பி : காவலில் கொலை

தர்மன் : 8 சூன் 1981

நடராசன் : காவலில் கொலை

மச்சக்காளை : 26 சூன் 1981, காவலில் கொலை

இருட்டுப் பிச்சை: போலீசாரால் கொலை

சிவா (எ) பார்த்திபன் : 24 நவம்பர் 2002 போலீசாருடன் மோதலில் களப்பலி

நவீன் பிரசாத் 2008 ஆம் ஆண்டு ஏப். 11

குப்புராஜ், 24 நவம்பர் 2016

மணிவாசகம்

வேல்முருகன்

நக்சல்பாரி இயக்க முழுநேர ஊழியர்கள் தலைவர்கள்

தோழர் ஏ.எம்.கோதண்டராமன் (ஏ.எம்.கே)

வேலூர் அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர். பள்ளி பருவத்திலே பெரியார் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு களத்திற்கு வந்தவர். சட்டக்கல்லூரியில் படிக்கும் பொழுது மதராஸ் மாணவர் சங்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டலில் தலைமை தாக்கியவர். 1965 இந்தி ஆதிக்கப் போராட்டத்தில் ஒருமொழிக் கொள்கையை - தமிழ் ஆட்சி மொழிக்காகப் போராடியவர். வழக்கறிஞராக பணிபுரியும் பொழுது குசேலர், மேயர் கிருஷ்ணமூர்த்தி, பி.வி.சீனிவாசன், ஆகியோரிடம் இணைந்து சென்னையில் வலுவான தொழிற்சங்க இயக்கத்தை கட்டியவர். காண்ட்ராக் முறை, நிரந்தர வேலையின்மை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, தொழிலாளர் நலன் புறக்கணிப்புக்கு எதிராக வீரமிக்க எழுச்சியான பெருந்திரள் தொழிலாளர் போராட்டங்களை கட்டி அமைத்து வெற்றி கண்டவர். மா-லெ இயக்கத்தின் குறுக்குழு போக்கால் இந்தொழிற்சங்கங்கள் தொடர்ச்சி மறைந்து போனது பெரும் இழப்பாகும்.

70களில் மா-லெ கட்சியின் தமிழ்மாநில குழுவிலும், அனைத்திந்திய தலைமை குழுவின் செயற்குழுவிலும் அங்கம் வகுத்து நக்சல்பாரி போராட்டங்களுக்கு வழிகாட்டியவர். மக்கள் யுத்த மா-லெ கட்சி தமிழ்நாடு செயலாளராக இருந்து வழிகாட்டியவர். வாழ்நாள் முழுவது கட்சி முழு நேர ஊழியராக இருந்த தோழர் 2018, நவம்பர், 25 அன்று 84 வயதில் காலமானார்.

தோழர் பி.வி.சீனிவாசன்

50 களில், வறுமையின் காரணமாக பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு குடியேறி, தாசப் பிரகாஸில் ஒரு ஓட்டல் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கி, சென்னைத் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். CPIM கட்சியில் குறுகிய காலம் செயல்பட்டார். அக்காலகட்டத்தில் தொழிலாளர் போராட்டங்களை நடத்தியதிலும் கம்யூனிஸ்ட் தலைவர்களாக உருவானதிலும் முக்கியமானவர்களான தோழர்கள் அரிபட், பிஜிகே, மேயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி இன்னும் பலர் தோழர் பிவிஎஸ்ஸின் சமகாலத் தலைவர்கள்.நெருக்கடிமிக்க 1965 காலகட்டத்தில் CPIM கட்சியை கட்டி அமைக்க தலைமறைவாக பணியாற்றினார். சிறந்தப் பேச்சாளர். தமிழ் மொழிப்பற்று மிக்கவர்.

இந்தி எதிர்ப்பு போராட்ட காலகட்டத்தில், இந்தி திணிப்புக்கு எதிராக பிரசுரம் வெளியிட்டு பிரச்சாரம் செய்ததார். புரட்சி தொடர்பான விவாதங்கள், வேறுபாடுகளால் சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தோழர்கள் அப்பு, கோவை ஈஸ்வரன், ஏஎம்கே, குசேலர், புலவர் கலியபெருமாள் மற்றும் வேறு சிலத் தோழர்களும் இணைந்து தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தை கட்டியபொழுது முக்கியமான பங்கு வகித்தவர்.

விவசாயப் புரட்சி என்ற இலட்சியத்தை மனதிலே ஏந்தி, 1970-1990 இடையே சுமார் இருபதாண்டு காலம், தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் புரட்சிகரமான நடவடிக்கைகள் மற்றும் கட்சியைக் கட்டும் பணிகளில் ஈடுபட்டார். தென் மாவட்டங்களில், தஞ்சை பிராந்தியத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் தங்கியிருந்து வேலை செய்தார். பழனி அருகில் நடைபெற்ற அழித்தொழிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.

44 தலித் விவசாயத் தொழிலாளர்களை உயிரோடு எரித்துக் கொன்ற கீழவெண்மணி படுகொலைக்கு காரணமான கொடூரமான நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடுவை நீதிமன்றம் 'குற்றம் அற்றவர்' என விடுதலை செய்த போது, 80 களில், மக்கள் மன்றத்தில் அவனை தண்டிப்பதற்கு திட்டம் தீட்டி வழிநடத்தியவர்.

தென் மாவட்டங்களில், தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான உறுதியானச் செயல்பாடுகளுக்கு கட்சியை ஈடுபடுத்தினார்.

விடுதலை மா-லெ கட்சியின் மாநில செயலாளராகவும், மத்திய கமிட்டி அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். 80 களின் துவக்கத்தில் அக்கட்சி நான்காவது காங்கிரஸில் தேசிய செயலாளராகவும் கூட தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமறைவு காலம் துவங்கி, மக்கள் இயக்கமாக நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கும் காலம் வரை, தமிழக மா.லெ இயக்கத்தின் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்தார்.

எமர்ஜென்சி காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு, 19 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

.விடுதலை ஆன பிறகு, சுமார் 25 ஆண்டு காலம், டில்லியில் கட்சித் தலைமையகத்தில் இருந்து செயல்பட்டார். கட்சியின் வெளிவிவகாரத் துறை பொறுப்பு, தத்துவ பணிகளில் பங்கேற்பு எனப் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டார். 5ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தொழிலாளியாக மாறி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராளியாக மாறி, தலைவராக வளர்ந்து ஆங்கிலம் நன்கு கற்றுத் தேர்ந்து அறிவாளியாகவும் உயர்ந்து நின்றார். 2016. டிசம்பர் 6 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

தோழர்கள் கிருஷ்ணசாமி-பஞ்சலிங்கம்

அறுபதுகளின் நக்சல்பாரி எழுச்சியின் பொழுது மாணவர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் கிளர்ந்தெழுந்து போராடினர்.. அவர்களில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் அண்ணன் தம்பிகள் பஞ்சலிங்கம் கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர்கள். பஞ்சலிங்கம் அவர்கள் அப்பொழுது SSLC தேர்வில் தமிழகத்திலேயே முதல் மாணவராக வந்தவர்.. நிலப்பிரபுவை அழித்தொழிப்பு பாதையால் தூக்கு தண்டனை பெற்றனர். மனித உரிமை அமைப்புகள் போராட்டங்கள் பின்பு ஆயுள் சிறை தண்டனையாக மாற்றம் பெற்றவர்கள். சிறையில் இருக்கும்போதே இருவரும் இளநில பட்டப்படிப்புகளை முடித்தனர் தோழர் சங்கரசுப்பு இருவரையும் 15 ஆண்டுகள் சிறைக்கு பிறகு நீதிமன்றத்தில் விடுதலை பெற்று தந்தார்..

1996ஆம் ஆண்டு பிரிவில் முழுநேர மாணவர்களாக இருவரும் சட்ட பட்டப்படிப்பை முடித்தனர். வயது முதிர்ந்த காலத்தில் வழக்கறிஞர்களாக தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.. கடைசிவரையில் மார்க்சியக் கோட்பாட்டில் உறுதியாக இருந்தவர்கள்..ஆரம்பத்தில் 1970யின் ஒன்றுபட்ட இகக மாலெ கட்சியில் இருந்தனர். பின்பு மாஸ் லைன் என்று அழைக்கப்பட்ட மேற்கு பிராந்திய குழுவில் இருந்தனர்... கடைசியாக தோழர் கோவைஈஸ்வரன் தலைமையிலான இகக(மா-லெ) கட்சியின் இணைந்து செயல்பட்டனர்.தோழர் பஞ்சலிங்கம் உயிர் மாரடைப்பால் 24 -11-2021 பிரிந்தது. சில மாதத்தில் தோழர் கிருஷ்ணசாமியும் காலமானார். 

தோழர் நீண்ட பயணம் சுந்தரம்

அநாதையாக தமிழ்நாட்டிற்கு அடைக்கலமான தோழர் சுந்தரம் ஓட்டல் தொழிலாளியாய் வாழ்வை சென்னையில் தொங்கியவர் 50 களிலேயே ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தவர் இறக்கும் வரை கட்சி அமைப்பில் இருந்தவர். ஓட்டல் தொழிலாளர் சங்கத்தில் பொது வாழ்வை தொடங்கி காதர்மீரான் என்ற தோழரின் தோழமை உறவால் தன் துணைவியரை (பர்மா அகதிகள் ) தேர்வு செய்து மண வாழ்க்கையை தொடங்கினார். காதர்மீரா னோடு சேர்ந்து கலைஞர் கருணாநிதி நகர் விரிவாக்க வேலைகளில் சாலைகள் அமைக்கும் பணியில் ஓப்பந்தத தாரராக செயல்பட்டார். மார்க்சிய லெனினிய அமைப்பில் தன்னை இணைத்து கொண்டார் நீண்ட பயணம் என்ற ஏட்டை வறுமை என்னும் அரக்கனுடன் போராடியபடியே நடத்தி வந்தார். கட்டுரைகளை, சிறுகதைகள், நாவல்களை எழுதினார். புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் மாநிலக்குழுவிலும், செந்தாரகை இதழ் ஆசிரியர் குழுவிலும் பொறுப்பேற்று வழிகாட்டியவர். பு.ப.இ தெருமுனை நாடகங்களில் (கோல்டன் பஸ் கட்டணம் , என்கவுண்டர் என்றவீதி நாடகங்களில் சிறப்பாக நடித்து மக்கள் பாராட்டை பெற்றவர்.

புரட்சிப் பண்பாட்டு அமைப்பு தொய்வடைந்த போதும் தளராது CPIM L செங்கொடி என்ற கட்சிக்கு தமிழக தலைமையை ஏற்று நீண்ட பயணம் இதழுக்கு மீண்டும் புத்துயிர் தந்தார். கலைஞர் கருணாநிதி நகரில் காமராஜர் சாலையில் முருகன் ஸ்டோர் அருகில் வாழ்ந்த காலங்களில் அப்பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தாரர்களின் உரிமைகளுக்கான மக்கள் போராட்டங்களை தலைமை ஏற்று பெற்று தந்தவர். . வட பழனி முருகன் கோவில் நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து ஊர்வலம் பொதுக் கூட்டம் போன்ற போராட்ட வடிவங்கள் புரட்சி பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் நடத்த தூண்டுகோலாய் இருந்தவர் . 28.2. 2019 அன்று 90 வயதில் காலமானார். அவர் விட்டு சென்ற படைப்புகள் வழியாக நம்முடன் வாழ்கிறார்.

தோழர் முகம்மதுகனி (நல்ல சிவம்)

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவர் 1950 களின் தொடக்கத்திலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணி ஆற்றியவர். 1960களின் பிற்பகுதியில் இ.பொ.க. (மா-லெ) வில் தன்னை இணைத்துக் கொண்டு அப்போதைய மாநிலக் குழுவில் உறுப்பினராகவும் சிறிது காலம் மாநிலக் குழுவின் செயலராகவும் செயல்பட்டவர். அமைப்பு பிளவுபட்ட பிறகு மாநில அமைப்புக் குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டவர். அதன் பிறகு உருவான தமிழ் நாடு அமைப்புக் குழு வில் உறுப்பினராகச் செயல்பட்டவர். இறுதி வரை யிலும் சோசலிச இலட்சியத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர். தனது இறுதிக் காலத்திலும் சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துடன் இணைந்து செயலாற்றியவர்..

அவரது தொழிற்சங்க அனுபவமும், மக்கள்திரள் போராட்டங்களின் அனுபவமும் அமைப்பாக்க அனுபவமும் த.நா.அ.க.வின் வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகித்தது என்றால் அது மிகையாகாது. கட்சியின் கருக்குழுக்களை அமைப்பதிலும், பெண்களை அமைப்பாக்குவதிலும், இயக்கத்தின் போராட்ட வடிவங்களை உருவாக்குவதிலும், அமைப்பின் இளம் தலைமுறையின் மார்க்சியக் கல்வியை ஊக்குவிப்பதிலும் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது, பண்பாட்டு இதழ்களான மனஓசை மற்றும் கேடயம் இதழ்களும் அதன் கலைக்குழுவும் வளர்த்தெடுத்தல் தோழர் என்.எஸ்.-இன் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

1980 களின் மத்தியில் த.நா.அ.க-விலிருந்து வெளியேறிய தோழர் என்.எஸ். மீது ஏற்கெனவே இருந்த வழக்குகளோடு புதிய பொய்வழக்குகளும் புனையப்பட்டு, சிறை வைக்கப்பட்டார். பின்னர் நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வழக்கிலிருந்து விடுதலை பெற்றார். இந்நிலையில், அவர் பல விவாதங்களுக்கு பின், இந்தியப் புரட்சியின் கட்டம் சோசலிசப் புரட்சியே என்ற சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். வயது முயற்சியால் உடல்நலம் குன்றிப் 11.10.2019 யில் காலமானார்.

தோழர் கே டி ஆர் 

சேலம் மாநகரின் குறிப்பிடத்தக்க இடதுசாரி தீவிர தொழிற்சங்க செயல்பாட்டாள'ர் 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் நகரத்தை நோக்கி வேலை தேடி வந்த எத்தனையோ இளைஞர்களில் கே டி ஆர் என தோழர்களால் அழைக்கப்படும் கே டி ராஜ் அவர்களும் ஒருவர்

தொடக்கத்தில் ஓட்டல் தொழிலாளியாகவும் அதை ஒட்டி தொழிற்சங்க நடவடிக்கைகள் என தொடங்கி சிஐடியு - இல் தன்னை நெருக்கமாக இணைத்துக் கொண்டார். தொடர்ந்து ஆட்டோ தொழிலாளியாக தனது வேலையை மாற்றிக் கொண்டார். கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ தொழிற்சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர். இன்று சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் பின்னால் இருக்கும் கட்டமைப்பில் ஏதோ ஒரு வகையில் கே டிவி ராஜ் அவர்களின் பங்களிப்பு இருக்கும். எப்பொழுதும் தொழிலாளர் தோழர்களோடு கும்பலாக வலம் வருபவர். தொழிலாளி ஒரு பிரச்சனை என்று தகவல் சொன்ன உடனே அங்கேயே இருங்கள் நான் வருகிறேன் என்று ஆறுதலான வார்த்தை மட்டும் பேசாமல் அடுத்த கணம் அங்கே சென்று விடுவார்.

தோழர்.நீண்ட காலம் சிபிஎம் கட்சியிலும் ஆட்டோ தொழிற்சங்கம் சிஐடியு மாவட்ட நிர்வாக பொறுப்பில் செயல்பட்டவர். அமைப்பு நிர்வாக சிக்கல்கள் சில அரசியல் முரண்பாடுகள் காரணமாக அதிலிருந்து விலகினார். அதன்பிறகு கங்காதரன் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிலும் எடுத்துக்கொண்ட பொறுப்புகளுக்கு சிறப்பாக செயல்பட்டவர்.

 அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் red-Star அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார் அதன் மாநிலக்குழு உறுப்பினராகவும் மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டார்.

கடந்த ஒரு சில ஆண்டுகளில் ஆட்டோ தொழிலாளர்களை ஒப்பீட்டளவில் அதிகமாக அணி திரட்டிய தலைவர்களில் கே டி ராஜ் அவர்கள் மிக முக்கியமானவர். சேலம் வா உசி மார்க்கெட் பகுதி மாற்றப்பட்ட போது நடைபாதை வியாபாரிகளுக்கும் காய்கறி வியாபாரிகளுக்கு ஆதரவாக கடுமையாக போராடியவர். இதன் மூலம் பெரிய சங்கத்தை கட்டி அமைத்தார் அதுபோல் சேலம் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பேருந்து நிலையம் அமைத்து மாநகராட்சி காம்ப்ளக்ஸ் கட்டுவதற்கு வேலைகள் நடந்து வருகிறது. இந்த புதிய காம்ளக்கில் பழைய கடைக்காரர்களும் விவசாயிகளுக்கும் இந்த மார்க்கெட்டில் பங்கு வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர்.

எடப்பாடி பழனிச்சாமியின் பினாமியாக சேலம் மாநகராட்சியில் கொள்ளை அடித்த நபர்களுக்கு எதிராக கடுமையாக போராடி விவசாயிகளுக்கும் சிறு வியாபாரிகளுக்கு ஆதரவாக நின்றவர் தோழர் கே டி ராஜ் . 22- 5.- 2021 அன்று கொரோனா தாக்கத்தினால் தோழர் காலமானார்.

தோழர் நமசு

தோழர் நமசு (எ) நமச்சிவாயம் தேவகோட்டை அருகேயுள்ள அறநூற்றிவயல் ஊரில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பொதுவுடைமைக் கருத்தியலில் ஈடுபாடு கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) கட்சிகளில் இயங்கியவர். பின்னர் சாதி ஒழிப்புக்கு முன்னுரிமைக் கொடுத்துச் செயல்பட வேண்டுமென தியாகி இமானுவேல் பேரவையில் இணைந்துச் செயல்பட்டவர்.. முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் சாதியம் இறுகி அடக்குமுறை நிறைந்தப் பகுதியில் துணிவுடன் களமாடிய தோழர். தோழர் தமிழரசன் 1985ல் மீன்சுருட்டியில் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையை நூலாக வெளியிட்டவர். 11-06-2018யில் காலமானார்.

தோழர் எஸ். என். நாகராஜன்

1927-இல் கோவை, சத்தியமங்கலம் என்ற ஊரில் இவர் பிறந்தார். வேளாண்மையில் முனைவர் பட்டம்பெற்றார். இந்திய வேளாண்மை ஆய்வுக்கழகத்தில் முதுநிலை அறிவியலாளராக பணியாற்றினார். பசுமைப் புரட்சியை எதிர்த்து ஆய்வகத்தில் இருந்து வெளியேறினார். தன்னை முழுமையாகவே ஒரு மார்க்சிய களப்பணியாளராக ஆக்கிக்கொண்டார்.. மார்க்சிஸ் கட்சியிலும், பின்னர் இ.க.க (மா-லெ) கட்சியிலும் இணைத்து கொண்டு சிறிது காலம் பணி செய்தார். தமிழ்நாடுக்கு தனி கட்சி கட்ட வேண்டும், இந்திய துணை கண்டத்தில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனி கட்சி கட்ட வேண்டும் என்பதை கோட்பாடாக முதலில் இவர்தான் கட்சிக்குள் வைத்தார்.

எஸ்.என்.நாகராஜன் ‘புதிய தலைமுறை’ என்ற சிற்றிதழை முன்னின்று நடத்தினார். மார்க்சிய ஆய்வில் ஒரு மாணவர் வரிசையை அவரால் உருவாக்க முடிந்தது. ஞானி அவரது நண்பரும் மாணவருமாக இருந்தார்.எஸ்.என்.நாகராஜன் கீழைமார்க்சியம் என்ற கருதுகோளை முன்வைத்தார். மார்க்சியம் அடிப்படையில் ஒரு ஐரோப்பிய சிந்தனையாகவே புரிந்துகொள்ளப்பட்டது என்றார். அதை ஓர் மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாக அணுகக்கூடாது அதை மெய்யியல் நோக்கில் அணுகவேண்டும் என்றார். இயற்கை வேளாண்மையின் முன்னோடி என்று இவரை குறிப்பிடமுடியும். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், தோழர் எஸ்.என் அவர்கள் தான் என்னுடைய வழிகாட்டி என்று குறிப்பிட்டுள்ளார் 24 மே 2021 ஆம் தேதி மறைந்தார்.

தோழர் ஆத்தூர் முத்துசாமி

1980 களில் நேரு யுவ கேந்திர என்னும் தொண்டு நிறுவனத்தில் துவங்கிய தனது அரசியல் பயணத்தை ஒருசில ஆண்டுகளில் புரட்சிகர பாதையை நோக்கி திருப்பியவர்.. ஒரு மணிநேரத்தில் ஒரு அரசியல் கருவை நாடகமாக கொடுக்க கூடியவர்.. தோழர் முத்துசாமியின் நாடக பயிற்சி பட்டறையில் பங்குபெற்ற எவறொருவரையும் சிறந்த வீதிநாடக கலைஞனாக மாற்றி விடுவார்..

 மக்கள் பண்பாட்டு பேரவையின் மாநில செயற்குழு உறுப்பினர். போக்குவரத்து தொழிலாளியாக போக்குவரத்து தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று தலைமை தாங்கி நடத்தியவர். சாதி மறுப்பு திருமணம் செய்தவர். அதனால் அவர் குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் அவர் இணையர் மேரி தமிழ்நாடு பெண்ணூரிமை கழகத்தில் இணைந்து செயல்பட்டவர். இருவரும் இணைந்து புரட்சிகர செயல்பாடுகளின் முனைப்புடன் செயல்பட்டவர்கள். பல சாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று நடத்தினர்.

செந்தாரப்பட்டி ஆசியாவில் உள்ள பெரிய கிராமங்களில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான கூலி விவசாயிகள் உள்ளனர். விவசாய கூலிகளுக்கு ரூ11 ஒரு நாள் கூலி! மாலெ இயக்கத்தின் மக்கள்திரள் அமைப்பு தொடர்ந்து போராடியதன் விளைவாக ௫33ஆக உயர்ந்தது. அரசு பள்ளிகளில் கட்டாய நன்கொடை எதிர்த்த போராட்டங்கள் தொடர்ந்து சில ஆண்டுகள் நடைபெற்றன.இதன் விளைவு ஆத்தூர்,தருமபுரி பகுதிகளில் இன்று நூற்றுக்கணக்கில் கல்வியில் பலன் பெற்றவர்கள் உள்ளனர்.கீரிப்பட்டியில் தலித்களுக்கு ஒதுக்கபட்ட காலனி வீடுகளுக்கான நிலத்தை ஆதிக்கசாதி பஞ்சாயத்து தலைவன் ஆக்ரமித்தான். இதை எதிர்த்துபல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. பலமுறை சாலைமறியல்,அரசு அலுவலகத்திற்கு பூட்டு,தாசில்தார் அலுவலகத்தில் சமைப்பது,இறுதியாக நிலத்தில் கொடிநடுவது போன்ற போராட்டங்களினால் இறுதியில் வெற்றி கிட்டியது.மேற்கண்டவை சில எடுத்துகாட்டுகள் மட்டுமே. இந்த போராட்டங்கள் அனைத்திலும் முத்துசாமியின் பங்கு முக்கியமானது! முழு நேர ஊழியரை போல் செயல்பட்டவர்.

கல்பகனூர் சாதி கலவரம் ( 1990), மங்களபுரம் ஜாதி கலவரம் போன்றவைகளில் தலித்துகள் பாதிக்கப்பட்டபொழுது அதை முன்னணி செயல்வீராக தோழர் போராடி தீர்வு கண்டார். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் மறுவாழ்வு சங்கம் அமைத்து அதற்கு தன் இணையர் மேரியை தலைமை ஏற்க வைத்தார். இந்திய கலப்புத்திருமண தம்பதியர்கள் சங்கத்தில் இணைந்து சாதி மறுப்பு திருமணம் செய்துவரும் குடும்பங்களுக்கு பாதுகாப்பும் உதவியும், வழிகாட்டுதலும் செய்துவந்தார்….. பல சாதி மறுப்பு திருமணங்களை தன்னுடைய இணையரின் தலைமையில் நடத்திவைத்தார். தோழர் 2019 மார்ச் 22 யில் மாரடைப்பினால் 60 வயதில் காலமானார். 

தோழர் கோவை ஈஸ்வரன்

1960-65 இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம், தமிழ் தேச விடுதலை, மார்க்சிஸ்ட் கட்சி, நக்சல்பாரி பேரியக்கம், தியாகு போன்ற தோழர்களை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க போராடிய மனித உரிமை போராளி, மனிதன் - செந்தாரகை இதழ்கள் ஆசிரியர்,தீக்கதிர் ஆசிரியர் குழு, அறிவார்ந்த எழுச்சி பேருரை பேச்சாளர்.. மிக சிறந்த மொழி பெயர்ப்பாளர்.. இப்படி ஆலமரமாய் பரந்த விரிந்த தோழர் கோவை ஈஸ்வரன் வார இதழுக்கு அளித்த தன் வரலாறு பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

''கோபிசெட்டிபாளையம்தான் என் சொந்த ஊர். 'பிராமணர்கள், கடல் கடந்து போகக் கூடாது; சிறை செல்லக் கூடாது’ போன்ற கடும் கோட்பாடுகளைக் கொண்ட பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன் நான். அப்பா ஜி.வி.வெங்கட்நாராயணன், சுதந்திரப் போராட்ட வீரர். 1921-ம் ஆண்டிலேயே ஒரு வருடம் சிறைக்குச் சென்று வந்ததால், எங்கள் குடும்பத்தை சாதிப் புறக்கணிப்பு (சாதிப் பிரஷ்டம்) செய்தனர். சாதி மீது இருந்த பற்றைவிட, நாட்டின் விடுதலை மீது இருந்த பற்று அதிகம். சுதந்திரப் போராட்டங்கள் பலவற்றில் பங்குபெற்றார். நாடு விடுதலை அடைந்த அடுத்த வருஷமே, உடல் சுகவீனமடைந்து இறந்துட்டார்.

அப்புறம் நான் சொந்த ஊரைவிட்டு வெளியேறி, சென்னை மேற்கு மாம்பலத்தில் மாமா வீட்டில் தங்கிப் படிச்சேன். பள்ளி மாணவனா இருந்தப்போ, ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகத்தில் இணைந்தேன். 1956-ம் ஆண்டில் நடந்த தேவிகுளம், பீர்மேட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டம் தொடங்கி, மொழிக்காக நடந்த எல்லா போராட்டங்களிலும் இணைந்தேன். அப்புறம் மார்க்சியத்தில் ஈடுபாடு வந்து, அரசியல்ரீதியாகச் செயல்பட ஆரம்பிச்சோம். போராட்டம், சிறைவாசம் எல்லாம் சேர்ந்து படிப்பை என்னிடம் இருந்து பறிக்க, முழு அரசியல் வாழ்க்கைக்கு வந்தேன். அப்போ கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்த ஜீவா, பாலதண்டாயுதம் போன்றோருடைய தொடர்பு இருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தோம். அதன் பிறகு மார்க்சிஸ்ட்டுகளுடன் முரண்பட்டு, நக்சல்பாரி இயக்கம் உருவானபோது அதன் தமிழக கிளையில் நான், அப்பு, பாலன்... போன்றோர் உறுப்பினர்கள் ஆனோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கட்சி தொடங்கப்பட்ட புதிதில் நகரம் - கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல், வெகுசன மக்களைத் திரட்டி நாங்கள் பணி செய்தோம். முதலில் 'ஒருங்கிணைப்புக் குழு’ என்றுதான் செயல்பட்டோம். 1969-ம் ஆண்டில் முறைப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற பெயருடன் செயல்பட்டோம். எங்களுக்கு விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பிலும் செல்வாக்கு கிடைத்தது. ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் குசேலர், கோதண்டராமன் போன்றோர் தலைமையில் கட்சி பலமாக இருந்தது. பெண்ணாடத்தில் புலவர் கலியபெருமாள் தலைமையிலான தோழர்கள் பிரமிக்கத்தக்க வகையில் கட்சியை வளர்த்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது.

1969-ம் ஆண்டுக்கு பிறகு, சாரு மஜூம்தார் 'வர்க்க எதிரிகளை அழித்தொழிப்போம்’ என அறிவித்தார். மக்களுடன் நாங்கள்கொண்டிருந்த உறவை அப்படியே கைவிட்டுவிட்டு, தலைமறைவு இயக்கம் ஆனோம். 'கொடுமை செய்யும் நிலப்பிரபுகள், கந்துவட்டிக்காரர்கள், ஏழை மக்களை அடிமைகளாகத் துன்புறுத்துவோரைக் கொல்வதன் மூலம் வர்க்க விடுதலையை அடையலாம்’ என்பது அழித்தொழிப்பு அரசியல். 'நீரை ஆதாரமாகக்கொண்ட மீனைப் போல, மக்களை ஆதாரமாகக்கொண்டு புரட்சியாளர்கள் இருக்க வேண்டும்’ என்றார் மாவோ. ஆனால், நாங்கள் மக்களிடம் இருந்து அந்நியமாகி விட்டோம். அன்றைக்கு இந்த அழித்தொழிப்புக் கொள்கையை என் போன்றோர் ஏற்கவில்லை. ஆனால் அழித்தொழிப்பு வழிமுறை தவறு என்றால், அதற்கு மாற்றாக இன்னொரு வழிமுறையைச் தோழர்களுக்குச் சொல்ல வேண்டும். அந்தப் பக்குவம் அன்று எங்களிடையே இல்லை. எனவே, விரும்பியோ விரும்பாமலோ அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் தோழர்கள் ஈடுபட்டார்கள்.

தமிழகம் முழுக்க முன்னணித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். பலர் தலைமறைவு ஆனார்கள். அப்போது அகில இந்திய அளவில் கட்சி 'அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற புதிய கிளர்ச்சியை அறிவித்தது. நிலச்சுவான்தார்களின் விளைந்து கிடக்கும் நிலங்களில் புகுந்து, நெல்லை அறுத்து ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதுதான் 'அறுவடையைக் கைப்பற்றுவோம்’ கிளர்ச்சி. தமிழகம் முழுக்க நடைபெற்ற அழித்தொழிப்பு நடவடிக்கையில், 20-ல் இருந்து 25 நிலபிரபுகள் வரை கொல்லப்பட்டனர்.

ஒரு இடத்தில் வர்க்க எதிரி அழிக்கப்படும்போது, மக்கள் அதைத் தற்காலிகமாகக் கொண்டாடுவார்கள். அதன் பின்னர் போலீஸ் வந்து மக்களைத் துன்புறுத்த ஆரம்பிக்கும். நக்ஸல்பாரி தோழர்களுக்குத் தண்ணீர் கொடுத்தவர்கள், சாப்பாடு போட்டவர்கள் என அத்தனை பேரையும் சித்ரவதை செய்தது போலீஸ். இதனால் நாங்கள் மீண்டும் அந்த மக்களிடம் செல்ல முடியவில்லை. போலீஸுக்குப் பயந்து மக்களும் எங்களிடம் இருந்து அந்நியப்பட ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் போலீஸின் கண்காணிப்பும் நெருக்குதலும் அதிகரித்தன.... அன்று 'துப்பாக்கிக் குழாயில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்ற மாவோவின் கோட்பாட்டை முன்வைத்தோம். இன்று 'மக்கள் திரள் போராட்டங்கள் மூலமே புரட்சியைச் சாதிக்க முடியும்’ என நம்புகிறோம். 70-களில் நாம் பார்த்த கிராமங்களுக்கும் இன்றைய கிராமங்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பெரிய நில உடைமையாளர்களே சுயமாக விவசாயம் செய்ய முடியவில்லை. நிலம், மக்களிடம் இருந்து அந்நியமாகி விட்டது. முன்னர் விதர்பாவில் மட்டுமே நடந்த விவசாயிகள் தற்கொலை, இப்போது நாடு முழுக்க விரிவடைந்திருக்கிறது. 'தற்கொலைக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டாம்’ என்பது போன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர விரும்புவதின் நோக்கமும் இதுதான்.

தமிழகத்துக்கே உணவு அளித்த தஞ்சையில்கூட, வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இன்னொரு பக்கம், கிராமப்புற மக்களை கூலி அடிமைகளைப்போல நடத்துகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். பன்னாட்டு மூலதனக் குவிப்பாலும், அதன் தொழில்முறைகளாலும் புதிய மத்திய தரவர்க்கம் ஒன்று உருவாகியிருக்கும் அதே வேளையில், ஏழ்மையும் வேலை இழப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 'இந்த மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடுகிறவர்கள் யார்?’ என்பதே இப்போதுள்ள கேள்வி. இந்தக் கேள்விகளில் இருந்துதான் அதற்கான பதிலும் கிடைக்கிறது. அந்தப் பதிலில் நாங்கள் ஒரு சிறு துளியாக இருப்போம்!'' என்று செல்கிறது. நக்சல்பாரியை இந்த சிறு அறிமுகத்தில் கோவை ஈஸ்வரனும் உட்பொதித்துள்ளார். தோழர் 2017, ஜீலை 1 ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவர் கம்பீரமான குரல் இன்னும் காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது! 

புலவர் கலிய பெருமாள்

மக்கள் விடுதலை அண்ணாதுரை

சீனிவாசன் (ம க இ க)

மக்கள் கவி இன்குலாப்

மக்கள் கவி செந்தாரகை

பேராசிரியர் கோ.கேசவன்

தோழர் ரத்னா

ஆசிரியர் திருமலை

இல.கோவிந்தசாமி

…. முழுமையடையாத பட்டியல் இவை

 தொடரும்

(நண்பர்களுக்கு, வாசகர்களுக்கு.. நக்சல்பாரி இயக்கம் உருவாகி இந்தியாவில் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. தமிழ்நாடு நக்சல்பாரி இயக்க வரலாறு இன்னும் யாராலும் தொகுக்கப்பட்ட வில்லை. தியாகிகள் வரலாறுகளும், முழுநேர ஊழியர்கள், களப்போராளிகள் வரலாறுகளும் எழுதப்படவில்லை… இந்த நிலையில் சில வெளியீடுகள், இணைய தகவல்களில் இருந்து திரட்டப்பட்டு எழுதப்பட்டவை இக்கட்டுரை… விடுபடல்கள் மிக அதிகம்.. பிழைகளும் பல இருக்க வாய்ப்பு அதிகம்.. மன்னிக்கவும் காலத்தில் சரி செய்யப்படும். காலம் சரி செய்யும் என்று நம்புகிறேன்!)

(பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் மதுரை செங்கொடி பேரணி சிறப்பு மலருக்காக தொகுக்கப்பட்ட கட்டுரை)

தொகுப்பு: கி.நடராசன்

Pin It