இதுவரை தொற்று ஏற்படாத அண்டார்டிகாவிலும் பறவைக் காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இதற்கு முன் இந்த நோயால் பாதிக்கப்படாத, தொலைதூரங்களில் தனித்தனிக் கூட்டங்களாக வாழும் பெங்குயின்கள், சீல்கள் போன்ற உயிரினங்களை இது எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியாத நிலையில் ஆய்வாளர்களிடையில் கவலை ஏற்பட்டுள்ளது.
இந்த வைரசின் முழுத்தாக்கம் பற்றி இன்னும் அறியப்படவில்லை. என்றாலும் இது மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய இனப்பெருக்கப் பாதிப்பை பலவீனமான சூழலில் வாழும் தனித்துவம் வாய்ந்த வன உயிரினங்களிடையில் ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
அண்டார்டிகாவில் தெற்கு ஜார்ஜியா (Georgia) மற்றும் தெற்கு சாண்ட்விச் (Sandwich) தீவுகளுக்கு இடையில் பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றாக அமைந்துள்ள பறவை தீவில் (Bird Island) கழிவுகளை உண்டு சூழலை சுத்தப்படுத்தும் இயல்புடைய பழுப்பு ஸ்கூவா (Brown skua) என்ற பறவையில் இந்த வைரஸ் முதல்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பறவைகள் ஃப்ளூ வைரஸ் தொற்றை தென்னமெரிக்காவில் இருந்து கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தென்னமெரிக்காவில் இந்த காய்ச்சல் மிகப்பரவலாக உள்ளது. இதனால் சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளில் மட்டும் இதுவரை 500,000 கடற்பறவைகள் மற்றும் 20,000 கடற்சிங்கங்களை கொன்றுள்ளது. 2021ல் பரவ ஆரம்பித்த மிகத் தீவிரமாகத் தொற்றும் இயல்புடைய ஹெச்5என்1 (H5N1) என்ற வகை வைரஸ் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான வனங்களில் வாழும் பறவைகளின் இறப்பிற்கு காரணமாகியுள்ளது.
இந்த பனிக்கண்டத்தில் வாழும் உரோமமுடைய சீல்கள் (fur seals), ஜெண்டு பெங்குயின்கள் (gentoo penguin) போன்ற பல உயிரினங்கள் உலகில் வேறெங்கும் காணப்படுவதில்லை. பறவைக் காய்ச்சல் இதற்கு முன்பு இப்பகுதியில் ஏற்படவில்லை. அதனால் இங்குள்ள உயிரினங்களை இந்த வைரஸ் எவ்வாறு பாதித்து அவற்றில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று இதுவரை அறியப்படவில்லை.
திடீரென்று இங்குள்ள பறவைகள் புதிரானவகையில் மரணமடைந்ததால் பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு (British Antarctica Survey BAS) அமைப்பை சேர்ந்த ஆய்வாளர்கள் இறந்த பறவை உடல் மாதிரிகளை பரிசோதனைக்காக யு கேவிற்கு அனுப்பினர். “பறவைக் காய்ச்சல் அண்டார்டிகாவையும் பாதித்திருக்கிறது என்பதை அறிவிக்க வருத்தமாக உள்ளது. விஞ்ஞான ஆய்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவிதத்தில் நாங்கள் இயன்றவரை பறவைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். என்றாலும் இதன் தாக்கம் பற்றி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை” என்று பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வமைப்பின் பறவை தீவிற்கான அறிவியல் மேலாளர் ஆஷ்லி பெனிசன் (Ashley Bennison) கூறுகிறார். பறவை தீவு உலகில் அதிக வன உயிரினச் செழுமையுள்ள பகுதிகளில் ஒன்று. இங்கு பல அரிய பறவையினங்கள், 50,000 இணை இனப்பெருக்கத் திறனுடைய பெங்குயின்கள் மற்றும் 65,000 இணை உரோமம் உள்ள சீல்கள் வாழ்கின்றன.
இந்த தீவு தெற்கு ஜியார்ஜியாவின் வடமேற்கு முனையில் ஃபால்க்லாந்து தீவுகளில் இருந்து (Falkland Islands) தென்கிழக்கில் 600 மைல் தொலைவில் அமைந்துள்ளது. வைரஸ் தொற்று இந்த கண்டத்தில் பரவியுள்ளதால் உருவாகியுள்ள தாக்கங்கள் பற்றி அண்டார்டிகா ஆய்வமைப்பின் அறிவியல் ஆய்வுக்கமிட்டி (The Scientific Committee) வெளியிட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கை உரோமம் உள்ள சீல்கள், கடற்சிங்கங்கள், ஸ்கூவாக்கள் (skuas), கடற்காகங்கள் (gulls), ஷீட்பில்கள் (sheathbills) மற்றும் பெரிய பெட்ரல்கள் (giant petrels) போன்ற உயிரினங்கள் நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என்று கூறுகிறது.
“இந்த தொற்றால் இப்பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு இடையில் இயல்பாக நடைபெறும் இனப்பெருக்கச்செயல்கள் பெருமளவில் பாதிக்கப்படும். அவ்வாறு நிகழ்ந்தால் அது இங்கு வாழும் பல உயிரினங்களை அழித்துவிடும்” என்று அண்டார்டிகா வன உயிரி சுகாதார கட்டமைப்பின் தலைவரும் ஆய்வுக்குழுவின் முன்னணி ஆசிரியருமான டாக்டர் மீகன் டுவார் (Dr Meagan Dewar) கூறுகிறார்.
புதிய மாறுபாடடைந்த வைரஸ்கள் பற்றி தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பறவைகளின் வலசை செல்லும் முக்கியப் பாதை இது என்பதால் தென்னமெரிக்காவில் இருந்து மூன்று மாத இடைவெளிக்குள் சுமார் 4,000 மைல் பயணம் செய்து இந்த வைரஸ் அண்டார்டிகாவிற்கு வந்துள்ளது. தென்னமெரிக்காவில் இந்த வைரஸின் தாக்கம் ஏற்கனவே உள்ளதால் இது தெற்கு ஜியார்ஜியா உட்பட அண்டார்டிகாவின் மற்ற பகுதிகளுக்கும் விரைவில் பரவலாம் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
பறவை தீவில் பறவைகளுக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பல கள ஆய்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூய ஆடைகள், பாதுகாப்பான கள உபகரணங்களை பயன்படுத்துமாறு ஆய்வில் ஈடுபடுவோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தொற்று முதலில் பரவிய யு கேயில் சில கடற்பறவைகள் நோய்க்கு எதிரான திறனைப் பெற்றுள்ளன என்று சமீபத்தில் வெளிவந்த மற்றொரு ஆய்வு கூறுகிறது.
மனிதக்குறுக்கீடுகள் மற்றும் சூழல் சீர்கேடுகளால் வன உயிரினங்கள் அழிந்துவரும் நிலையில் அண்டார்டிகாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள செய்தி ஆய்வாளர்களிடையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் ஒருபக்கம் உருகும் சூழலில் அண்டார்டிகா வாழ் பறவைகள் நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வருமா? வாழ இயலுமா?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்