காலநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவின் கரையோரம் மனிதர்களைக் கொல்லக்கூடிய ஆயிரக்கணக்கான புளூ பாட்டில்கள் (Blue Bottles) கரையொதுங்குகின்றன. எண்ணற்ற இந்த உயிரினங்கள் இறந்த நிலையில் கடற்கரையோரங்களில் ஒதுங்குகின்றன. இதைத் தொடர்ந்து கடலில் இறங்குபவர்கள் இவற்றின் அருகில் செல்ல வேண்டாம், இவற்றைத் தொட வேண்டாம் என்று அதிகாரிகள் முன்னெச்சரிக்கை செய்துள்ளனர்.
தொட்டால் ஆபத்து
நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியாவின் சில பகுதிகள், தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியாவின் கிழக்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் இவை ஏராளமாகக் கரையொதுங்கியுள்ளன. கடலில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம் காரணமாக இவை இவ்வாறு கரையொதுங்குகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈரப்பதம் இருக்கும் சுற்றுப்புறத்தில் இவற்றின் நஞ்சு நிரம்பிய டெண்டாக்கிள் (tentacles) எனப்படும் வளர்நீட்சிகள் மாதக்கணக்கில் நிலைநிற்கும்.
இவை கண்ணுக்குத் தெரியாத சளி போன்ற ஒரு திரவத்தை அருகில் வரும் எந்த ஒரு பொருளின் மீதும் பாய்ச்சுவதால் மரணம்கூட சம்பவிக்கிறது. இந்த உயிரினங்கள் குறித்து மேலும் தீவிரமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜெல்லி மீன் ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் லிசாஆங் கேஷ்வன் கூறுகிறார். கடலில் நிகழும் காலநிலை மாற்றம் இந்த உயிரினங்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் அடையக் காரணமாக அமைகிறது.
உயிரற்ற புளூ பாட்டில்கள் கடித்தால் கூட ஆபத்து என்பதால் இறந்த புளூ பாட்டில்களைக் கூடத் தொட வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வினோத உயிரினங்களுக்கு இறந்த பிறகும் கூடத் தொட்டால் தோலைக் குத்தக்கூடிய ஆற்றல் உண்டு! ஜெல்லி மீன் என்று இவை பொதுவாக அழைக்கப்பட்டாலும் இந்த உயிரினங்களை விஞ்ஞானிகள் அக்குடும்பத்தில் உட்படுத்தவில்லை. போர்ச்சுகீஸ் மேன் ஆஃப் வார் (Portuguese man of war) என்ற செல்லப் பெயரும் இவற்றிற்கு உண்டு.
பாய்மரக் கப்பல் போல் ஒரு தோற்றம்
முன்காலத்தில் இதே பெயரில் உண்டாகியிருந்த போர்க்கப்பலில் இருந்துதான் இவற்றிற்கும் இப்பெயர் ஏற்பட்டது. அதன் பாயை விரித்துவிட்டால் அவை இந்த உயிரினங்களின் வடிவம் போலத் தோற்றமளிக்கும். இதில் அட்லாண்டிக் போர்ச்சுகீஸ் மேன் ஆஃப் வார் (பைசேலியா பைசாலிஸ்-Physalia physalis) மற்றும் இந்தோ பசுபிக் போர்ச்சுகீஸ் மேன் ஆஃப் வார் (பைசாலியா யுட்ரிகுலஸ்-Physalia utriculus) என்ற இரண்டு இனங்கள் உள்ளன.
முதல் வகை உயிரினங்கள் அட்லாண்டிக் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வாழ்கின்றன. ஆனால் இந்தோ பசுபிக் புளூ பாட்டில்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் மட்டும் வாழ்பவை. இந்தோ பசுபிக் உயிரினங்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படுபவை போலக் குத்திக் கொல்லும் வகையில் பயங்கரமானவை அல்ல. கடிபட்டால் முதலுதவி சிகிச்சை மூலம் உயிர் பிழைக்கலாம்.
ஆனால் கடிபட்டவருக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது இதயம் தொடர்பான நோய்கள் இருந்தால் அவருக்கு உடனடியாகச் சிகிச்சை தரப்படவில்லை என்றால் மரணம் சம்பவிக்கக்கூடும். புள்ளிவிவரங்களின்படி இந்தோ பசுபிக் போர்ச்சுகீஸ் மேன் ஆஃப் வார் வகையைச் சேர்ந்த உயிரினங்கள் கடித்ததால் உலகளவில் மரணம் அடைந்தவர்கள் மிகக் குறைவு.
கூட்டுக் குடும்பமாக வாழும் உயிரினங்கள்
புளூ பாட்டில்கள் ஒற்றை உயிரினமில்லை. தண்ணீரின் மேல் மிதக்க உதவும் காற்று நிறைந்த பலூன் போல உள்ள ஒரு அறையும், அதற்குக் கீழ் தொங்கிக்கொண்டிருக்கும் நூல் போலுள்ள டெண்டாக்கிள்களும் சேர்ந்ததே இவற்றின் உடலமைப்பு. இதனால் இவை ஒவ்வொன்றும் ஒரு ஒற்றை உயிரினமில்லை. இவை டெண்டாக்கிள் போன்ற வடிவமுடைய பாலிப்ஸ் என்று அழைக்கப்படும் ஏராளமான உயிரினங்கள்.
இவை அனைத்தும் பலூனிற்குக் கீழ் ஒன்றுசேர்ந்து ஒரு காலனியாக உயிர் வாழ்கின்றன. இதனால் இவற்றை விஞ்ஞானிகள் ஜெல்லி மீன்கள் என்று அழைப்பதில்லை. ஜெல்லி மீன் என்பது ஒரு ஒற்றை உயிரினம். பல உயிரினங்கள் ஒன்றுசேர்ந்து வாழ்க்கை நடத்தினாலும் இவை ஒரு அலகாகவே இணைந்து இரை தேடுகின்றன. உடற்செல்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருப்பதால் இவை ஒன்றுசேர்ந்தே இரை தேடுகின்றன.
இவை சொந்தமாக நகரும் திறனற்றவை. இதனால் உட்கடலில் வாழும் இயல்புடைய இவை வலுவான காற்று, கடல் சீற்றம் போன்றவை ஏற்படும்போது பலூன் அமைப்புகளின் உதவியுடன் கடல்நீரில் மிதந்து கரையொதுங்குகின்றன. பருவமழைக் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக நடக்கிறது. இதனால் இந்நேரங்களில் இவை அதிக அளவில் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன.
அட்லாண்டிக்கில் காணப்படுபவற்றில் உள்ள காற்றறையின் அளவு 12 அங்குலம். இந்தோ பசுபிக்கில் வாழ்பவற்றின் காற்றறையின் அளவு 6 அங்குலம் மட்டுமே. இரண்டு வகை புளூ பாட்டில்களும் கூட்டமாகவே கடலில் பயணிக்கின்றன. இவற்றின் பலூன் போன்ற அமைப்பில் பாலிப்புகள் என்று அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன.
காஸ்ட்ரோ சூயிடுகள், கோனோ சூயிடுகள், டேக்டிலோ சூயிடுகள் ஆகிய பாலிப் வகைகள் பலூனிற்குக் கீழே காணப்படுகின்றன. நீரில் இரைகளைக் கண்டுபிடித்து அவற்றைத்தாக்கும் வேலையை டேக்டிலோ சூயிடுகள் செய்கின்றன. இவற்றின் முனையில் நஞ்சு நிறைந்த நீண்ட பகுதி உள்ளது. இப்பகுதி நிடோசைட்ஸ் (Cnidocytes) எனப்படுகிறது. இது இரையைக் குத்திக் கொல்ல உதவுகிறது.
பிறகு இப்பகுதி இரையைக் காஸ்ட்ரோ சூயிடு பகுதிக்குக் கொண்டு சேர்க்கிறது. இப்பகுதியே இந்த உயிரினங்களின் செரிமானத்திற்கு உதவும் பகுதிகள். முட்டையிட, விந்தணுக்களை வெளித்தள்ள கோனோ சூயிடுகள் உதவுகின்றன. காற்று, கடற்சீற்றத்தால் பெரும் கூட்டத்திலிருந்து தனித்து விடப்படும் புளூ பாட்டில்களே கரையொதுங்குகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
யுட்ரிகுலஸ்கள் ஆஸ்திரேலியக் கடற்கரையில் நேரிடும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்று. இங்கு இவற்றின் நஞ்சு நிறைந்த டெண்டாக்கிள்கள் ஒரு சில சென்டிமீட்டர் முதல் மீட்டர்கள் வரை நீளத்தில் காணப்படுகின்றன. அட்லாண்டிக் போல அந்த அளவு ஆபத்தானவை இல்லை என்றாலும் இவை கடித்தால் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக வலி இருக்கும். இவற்றின் நஞ்சு கைகால்களில் உள்ள நிணநீர் (லிம்ப்) சுரப்பிகளையே பாதிக்கிறது.
கடிபட்ட இடத்தில் உடனே தாங்கக்கூடிய அளவில் சூடான நீரைக் கொண்டு காயத்தைக் கழுவ வேண்டும். வினிகர் கொண்டு தொடர்ச்சியாகக் கடிபட்ட இடத்தைத் துடைக்க வேண்டும். வினிகரைத் தெளிக்கவும் செய்யலாம். ஐஸ்கட்டிகளைக் கடிபட்ட இடத்தில் வைத்தால் வலி குறைய அது உதவியாக இருக்கும். நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
ஆஸ்திரேலியக் கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இந்த உயிரினங்கள் தாக்கினால் அதற்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மனிதன் ஏற்படுத்தும் காலநிலை மாற்றச் சீரழிவுகள் இவ்வாறு எத்தனை விதங்களில் விசுவரூபம் எடுத்து வந்து அவனையே திருப்பித் தாக்குகின்றன!
(Image courtesy: Australian Geographic)
- சிதம்பரம் இரவிச்சந்திரன்