நினைவு தெரிந்த நாள் முதல் பறவைகள் மீது ஆர்வம் கொண்ட அகமதாபாத் கட்டிடக் கலைஞர் இஷா முன்ஷி (Esha Munshi) பறவைகளின் இறகுகளுக்காக ஒரு நூலகம் நடத்தி வருகிறார். இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகிலேயே இவ்வகை நூலகம் மிக அரிது என்று கருதப்படுகிறது. இவர் பறவைகளைத் தேடி அவற்றைக் காண இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார். நாட்டில் உள்ள 1400 பறவையினங்களில் 160 இனங்களைக் கண்டுள்ளார்.

ஆனால் 2020ல் கோவிட் பொதுமுடக்கத்தின்போது அவர் ஆப்பிரிக்க வெண் கொண்டை சில்லையினப் பறவைக் குடும்பத்தின் ஒரு இந்தியச் சிற்றினமான இந்திய வெண் கொண்டை சில்லையினப் பறவை (Indian Silver bill) பால்கனியில் போடப்பட்டிருந்த வலையில் மாட்டிக் கொண்டதைப் பார்த்தார். அவரது வளர்ப்புப் பூனை அதனால் கவரப்பட்டது. அந்தப் பறவை பறந்து தப்பித்துப் போனது. என்றாலும் அதன் சில இறக்கைகள் சேதமடைந்தன. அந்த இறக்கைகளின் அமைப்பில் இருந்த அற்புத அடையாளங்கள், பாணிகளைக் கண்டு முன்ஷி வியந்தார்.esha munshi and sherwin evererttஅந்தப் பறவையை அடையாளம் காண முயற்சி செய்தார். ஆன்லைனில் எந்த அளவு குறைவான தகவல்கள் இதைப் பற்றி கிடைக்கின்றன என்பது அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. இந்தியாவில் பறவையினங்கள் பல இருந்தாலும் அவற்றின் வெவ்வேறு இனங்கள் மற்றும் அவற்றின் இறகுகள் பற்றி மிகக் குறைவான அளவு தகவல்களே கிடைக்கின்றன.

1970ம் ஆண்டிற்கு முன்பு வேட்டையாடப்பட்டு பறவைகளின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் 1972ல் வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு இறந்த பறவைகளின் உடல்களை வட்ட வடிவ தோல் மாதிரி (round skin specimen) சேகரிப்பு முறை மூலம் சேகரிப்பது தடை செய்யப்பட்டது.

இறந்த பறவை உடல்களைப் பாதுகாக்க இந்த பழமையான முறையே அதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. முன்பு சேகரிக்கப்பட்ட உயிரற்ற பறவைகளின் உடல்கள் இப்போது அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த இறக்கைகள் மடக்கப்பட்டு உலர்த்தப்பட்ட நிலையில் பராமரிக்கப்படுகின்றன. இறகுகளை இந்த நிலையில் தனியாகப் பிரித்தறிய முடியாது. நவம்பர் 2021ல் முன்ஷி அகமதாபாத்தில் உள்ள கால்நடை மருத்துவரும், பறவைகளுக்கான மருத்துவமனையின் மேற்பார்வையாளருமான ஷெர்வின் எவரெட் (Sherwin Everett) அவர்களுடன் இணைந்து பறவைகளின் இறகுகளுக்கான புதிய இணையதளத்தைத் தொடங்கினார். இந்த தளம் பல்வேறு பறவைகளின் இறகுகள் பற்றிய விவரங்கள், படங்களை சேகரிக்கிறது.

சிகிச்சை தேடி வரும் பறவைகள்

எவரெட் பணி புரியும் மருத்துவமனை ஒரு மாதத்திற்கு இரண்டாயிரம் பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. பல பறவைகள் சாலை விபத்துகள், மோதல்கள், பட்டம் பறக்கவிடும் விழாக்களின்போது கொல்லப்படுகின்றன. பட்டத்தின் நூலில் பல பறவைகள் சிக்கிக் கொள்கின்றன. பல இதில் இருந்து மீட்கப்படுகின்றன. சில பறவைகள் நூலால் ஏற்படும் காயங்களால் உயிரிழக்கின்றன. பல பறவை மீட்பு மையங்களும், இறந்த பறவைகளின் உடல்களைத் தூக்கியெறிகின்றன அல்லது எரிக்கின்றன.

இதனால் மதிப்புமிக்க தகவல்கள் இழக்கப்படுகின்றன. இறகுகளை சேகரிப்பதன் மூலமும் அவற்றை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்துவதன் மூலமும் குறுக்கீடுகள் இல்லாத வழியில் பறவைகளைப் பற்றிய மதிப்புமிக்க விவரங்களைப் பெற முடியும். வெவ்வேறு இனப் பறவைகளின் இறகுகள், அவற்றில் காணப்படும் தனித்தன்மையுடைய அடையாளங்கள் (markings), அவை அமைந்திருக்கும் பாணிகள் (patterns) போன்றவற்றைப் பாதுகாக்க முடியும்.

வரும் நாட்களில் இப்பறவையினங்கள் அழிந்து விட்டாலும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு அவை பற்றிய பதிவுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று முன்ஷி கூறுகிறார். இறகுகளுக்கான நூலகம் (https://featherlibrary.com/) என்பதே இந்தியாவில் இந்த வகையிலான முதல் ஆன்லைன் சேகரம். பறவைகளின் உடல் எடை, உடல் நீளம், அலகின் அளவுகள், இறகுகளின் நீள அகலங்கள், அவற்றின் எண்ணிக்கை மற்றும் அந்தப் பறவை எங்கு காணப்பட்டது போன்ற பல விவரங்கள் இந்த நூலகத்தில் இருந்து கிடைக்கும்.

சவால்கள்

இறகுகளைப் பாதுகாப்பது என்பது சிக்கல் நிறைந்த வேலை. இறந்த பறவையின் நோய்க்கிருமிகளைக் கொல்ல குளிர்ப்பெட்டியில் (freezer) 48 மணி நேரம் வைக்கப்படுகிறது. பிறகு அவை சுத்தப்படுத்தப்பட்டு அளவுகள் எடுக்கப்படுகின்றன. அதன் இறகுகளும் வாலும் வெட்டப்படுகிறது. ஸ்பிரிட்டைப் பயன்படுத்தி உலர வைக்கப்படுகிறது. அவை கணக்கிடப்படுகின்றன.

இறகுகளின் வகைகள்

முதன்மையானவை, இரண்டாம் நிலையில் உள்ளவை, மூன்றாம் நிலையில் உள்ளவை மற்றும் வாலில் இருக்கும் இறகுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு இறகு மட்டும் முழுமையாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. வால் பகுதி முன்பக்கக் காட்சியாக (ventral view) வைத்து பாதுகாக்கப்படுகிறது.

அரிய பறவைகளின் இறகுகள்

110க்கும் மேற்பட்ட பல வகைப் பறவைகளின் இறகு மாதிரிகள் இந்த நூலகத்தில் உள்ளன. உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் மீன்கொத்தி (Kingfisher) முதல் சிவப்பு ஆரக்கிளி அல்லது செந்தார்ப் பைங்கிளி (Rose-ring parakeet) வரை இங்கு உள்ளன. தற்போது குஜராத்தில் இருந்து மட்டுமே இறகுகளை சேகரிக்க நூலகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாலும் கர்நாடகா, அருணாசலப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அஸ்ஸாம் போன்ற மற்ற மாநிலங்களில் இருந்தும் இறகுகளை சேகரிக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள், பறவையியலாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் இறகு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்கள் உட்பட அனைவருக்கும் பறவைகளைப் பற்றி விலைமதிப்புமிக்க தகவல் தரும் களஞ்சியமாக இந்த நூலகம் செயல்படுகிறது.

உலகின் அரிதான மற்ற நூலகங்கள்

ஜெர்மனியில் செயல்படும் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட இறகு தளம் Featherbase என்ற தளம், அமெரிக்க மீன்வளம் மற்றும் வன உயிரி சேவைகள் (U S fish&wildlife service) அமைப்பால் நடத்தப்படும் பறவைகளின் படங்களைக் கொண்ட இறகு வரைபடம் (the Feather Atlas) என்னும் தளம் போன்ற வெகு சில மட்டுமே இப்போது உலகில் உள்ளன.

முன்ஷி மற்றும் எவரெட் ஆகிய இருவரும் நூலகத்தில் பறவைகளின் உடல் உறுப்புகள், எலும்புக்கூடு பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக சி டி ஸ்கேன், x கதிர் எடுக்கும் வசதி போன்ற புதிய வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நூலகம் இந்தியாவில் காணப்படும் பறவைகள் பற்றி காட்சி விருந்தாக அமைந்துள்ளது.

அரிய பறவை இறகுகளின் காட்சிக்கூடம்

இந்த அரிய தகவல் களஞ்சியத்தில் சோட்டி (Soti) என்ற டேர்ன் (Turn) குடும்பத்தைச் சேர்ந்த பூமத்திய ரேகை வெப்ப மண்டலப் பகுதி கடல்கள் முழுவதிலும் மட்டுமே வாழும், இணை சேர மட்டுமே நிலப்பகுதிக்கு வரும் பறவை, வெண்தொண்டை மீன்கொத்தி (White throated kingfisher), தலையில் கறுப்பு நிறத் தொப்பி போன்ற அமைப்பு, ஆரஞ்சு நிறத்தில் அலகுகள், வெள்ளை நிற உடலமைப்பு, நீண்ட இறக்கைகள் உடைய டேர்ன் பறவை போல உள்ள இந்திய ஸ்கிம்மர் (Indian Skimmer) பறவை, பார்ப்பதற்கு அழகாக, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா சஹாராவிற்கு தெற்கில் உள்ள பகுதிகளில் காணப்படும் செந்தலை வல்லூறு (Red-necked falcon), மாம்பழத்தின் மஞ்சள் நிறத்துடன், இறக்கையில் கறுப்பு நிறமும், கண்ணருகில் கறுப்புத் திட்டுகளுடன் காணப்படும் மாங்குயில் (Indian golden oriole), போன்றவற்றின் இறகுகள் இங்கு உள்ளன.

எதிர்கால இலட்சியங்கள்

யு எஸ் கோர்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் இருந்து பறவை உயிரியலில் இரண்டு ஆண்டு ஆன்லைன் பயிற்சி பெற்ற முன்ஷி, எவரெட்டுடன் இணைந்து ஆய்வகம், வருங்காலத்தில் ஒரு அருங்காட்சியகம் போன்ற இலட்சியங்களுடன் புதிய அறக்கட்டளையைத் தோற்றுவித்துள்ளார். இப்போது இவர்கள் இருவரும் இறகுகள் பற்றிய விவரங்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வருகின்றனர்.

காலநிலை மாற்றம் மற்றும் மனிதக் குறுக்கீடுகளால் இயற்கையின் அற்புதப் படைப்புகளான பறவைகள் அழிந்து வருகின்றன. நிலையில்லாத உலகில் பரிணாம சுழற்சியில் பறவைகள் என்ற மிக முக்கிய உயிரினங்கள் பற்றிய விலைமதிப்புமிக்க விவரங்களை உருவாக்கி வரும் முன்ஷி என்ற இந்தப் பெண்மணியின் பணிகள் மகத்தானவை. இறகுகளுக்கான இந்த நூலகம் எக்காலத்திற்கும் விலை மதிப்பு மிக்கது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It