people malai
ஆகஸ்ட் 7- கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணைக்கு தண்ணீர் வந்து சேரும் ஆற்று நீர் வரத்தை, தடுப்பு அணை கட்டி சேலம் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் பினாமிகள் ஆன பெத்தநாயக்கன் பாளையம் பணக்கப் பண்ணை விவசாயிகளின் பாக்குத் தோட்டத்திற்கு திருப்பூம் "கைகான் வளைவு" திட்டத்தை கைவிட்டு, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து விடு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி கல்வராயன்மலை வெள்ளி மலையில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் ஆர் சின்னசாமி அவர்கள் தலைமையில் நடந்த கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் AV. சரவணன் அவர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

கட்சியின் மாவட்டத் துணை செயலாளர்கள் தோழர் கே, ராமசாமி, தோழர் ஆர். சவுரிராஜன், நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் ஆ. வளர்மதி, கல்வராயன்மலை கட்சி ஒன்றிய செயலாளர் C. முருகன், சின்னசேலம் வட்ட செயலாளர் தோழர் R. வேல்முருகன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்ட செயலாளர் தோழர் ஆர், சடையன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவர் ARK. தமிழ்ச்செல்வன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் V. வெற்றிவேல் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் C. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டு பல்வேறு மலைவாழ் கிராமங்களிலிருந்து பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வாயிலாக கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் ஏ.வி. சரவணன் அவர்கள் நம்மிடம் கூறியது, "கள்ளக்குறிச்சி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டு உள்ளது. இம்மாவட்டத்தில் நீராதாரம் மிகவும் குறைவு இந்நிலையில் கச்சராபாளையம் உள்ளிட்ட நகரங்களுக்கு கல்வராயன் மலை மலை மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய காற்றாறை "கைகான் வளைவு" என்னும் மலை கிராமம் அருகே மலையில் பெரும் உடைப்பை ஏற்படுத்தி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் தாலுக்கா கரிய கோவில் அணைக்கு கொண்டு சென்று, அதன் மூலம் தும்பல் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களில், தமிழக முதல்வரின் பினாமியாகவும், அதிமுக அம்மா பேரவை மாவட்ட நிர்வாகியாகவும், மத்திய கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ள ஆர், இளங்கோவன் மற்றும் ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பணக்கார பண்ணை விவசாயிகள் நிலங்களுக்கு முப்போகம் விவசாயத்திற்கு கொண்டு செல்வதற்காக மலைவாழ் மக்களின் குடிநீர் விவசாயம் மற்றும் கோமுகி அணையில் நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் குடிநீர் பெரும் கிராமங்கள் பாதிக்கப்படுவதைப் பொருட்படுத்தாமல் இத்திட்டத்தை அமுலாக்க அரசு அதிகாரிகள் குறுக்கு வழியில் செயல்படுத்த முனைகின்றனர். ஆகவே இவர்களை கண்டிப்பதுடன் கைகான் வளவு திட்டத்தைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.

கைகான் வளவுத் திட்டம் குறித்த நமது விசாரணையில் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகளை உள்ளடக்கிய கல்வராயன் மலையில் கோமுகி அணைக்கு தண்ணீர் வழங்கும் முதன்மையான காற்று ஆறு அல்லது கோமுகி ஆறு அல்லது சிற்றோடை எனப்படும் நீரோடையானது கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆரம்பூண்டி மலையில் உற்பத்தியாகி சிறிது தூரம் சற்று தென்மேற்கு திசையில் பயணித்து சேலம் மாவட்டம் தெற்கு நாடு ஊராட்சியில் கைகான் வளைவு என்ற கிராமத்தில் நீர்பிடிப்பு பகுதியில் தேங்கி, கிழக்கு நோக்கி வள்ளிமலையில் செல்கிறது.

அடுத்தடுத்து அதனுடன் வேறு சில சின்னஞ்சிறு நீர் ஓடைகளும் இணைந்து கொள்ள, சுமார் 60 தடுப்பணைகள் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை ஒன்றியம் சுமார் 50 பழங்குடியினர் கிராமங்களுக்கும் 5000 குடும்பங்களில் விவசாயத்திற்கான மற்றும் வனவிலங்குகளின், கால்நடைகளின், மனிதர்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதுடன் இப்பகுதியில் விலை உயர்ந்த மரங்கள் உள்ளீட்டு மூலிகைகள் செடி என பயன்களை பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.

தொடர்ந்து இந்த காற்று சுமார் 30 கிலோ மீட்டர் கல்வராயன் மலையில் பயணம் செய்து கீழே இறங்கி கோமுகி அணை வந்தடைந்து அருகாமை கிராமங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் தேவையை வழங்குகிறது, பிறகு அங்கிருந்து கோமுகி ஆறு என்ற பெயரில் பாய்ந்து ஓடி கள்ளக்குறிச்சி வழியாகச் சென்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் நல்லூர் என்ற கிராமத்தில் மணிமுத்து ஆறு கலந்துவிடுகிறது.

protest tamilnaduகோமுகி அணையில் இருந்து பாசன வசதிக்காக பொதுவாக அக்டோபர் மாதம் தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கோமுகி அணை முதல் நல்லூர் கிராமம் வரையில் செம்படை குறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு 40 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கி மன்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட பல சமவெளி கிராமங்களுக்கு சுமார் 5700 ஏக்கர் பாசனப் பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

இப்படியாக பல ஆயிரம் விவசாயிகளுக்குத் தண்ணீர் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இதுவும்கூட ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை இப்படியாக கல்வராயன் மலையில் இருக்கும் கள்ளக்குறிச்சி சேலம் மாவட்டங்களை சேர்ந்த பழங்குடிமக்கள் சமவெளியில் இருக்கும் சிறு குறு விவசாயிகள் என பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி வரும் காற்றாறை சீரழித்து எட்டு கிராமங்களைச் சேர்ந்த 50 பணக்கார பண்ணை விவசாயிகளின் சுமார் 600 ஏக்கர் நிலங்களுக்கு முப்போகம் தண்ணீர் வழங்க பல கோடி ரூபாயை அரசு செலவில் கைகான்வளவு வாய்க்கால் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து பார்த்தோமேயானால் வெள்ள உபரி நீரை திசைத் திருப்பி விவசாயத்திற்கு பயன்படுத்துகிறோம் என்ற பெயரில் சேலம் மாவட்டம் எல்லையில் உள்ள சின்ன கல்வராயன்மலை தெற்கு நாடு ஊராட்சியில் கைககான் வளவு என்ற இடத்திலிருந்து தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறை நீர்வள துறை சார்பில், கைகான் வளைவு காற்று ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு தடுப்பணை அமைத்து, அதிலிருந்து கரிய கோவில் நீர்தேக்கத்திற்கு நாளொன்றுக்கு 60 கன அடி வீதம் உபரி நீரை ஆண்டுக்கு 50 நாட்களுக்கு திருப்பி விடவும், இதற்காக தடுப்பணையில் இருந்து கரிய கோவில் நீர்தேக்கத்திற்கு 500 மீட்டர் நீளத்திற்கு 5 முதல் 10 மீட்டர் ஆழத்திற்கும் 1.8×1.8 சதுர மீட்டர் அளவுள்ள சிமெண்ட் கான்கிரீட் குழாய்கள் பூமிக்கடியில் அமைக்கப்படும். 190 மீட்டர் மண் கால்வாய், 310 மீட்டர் மூடு கால்வாய் கொண்ட வாய்க்கால் திட்டமாகும், இதன் மதிப்பு 7 கோடியே 30 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தை அமல் படுத்துவதற்காக வருவாய்த் துறையின் மூலம் மலையில் வாழும் பழங்குடி மக்களின் விவசாய நிலங்களைக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி வருகிறது என குற்றச்சாட்டு ஆரம்பித்து. ஒட்டுமொத்த மலையில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் திட்டம் என பலராலும் எதிர்க்கப்படும் நிலைக்கு இன்று உள்ளது

எந்த ஒரு செயலும் திட்டமும் ஏற்படுத்தும் விளைவுகள் யாருக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதை பொறுத்து அவை சரி தவறு என முடிவுக்கு வரமுடிகிறது.

இந்திய அரசியலமைப்பு சாசனம் பிரிவு 342 இன்படி சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியாக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்ட பகுதியாகவும் இப்பகுதியில் சுமார் 74 ஆயிரத்து 255 க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதாக அறியப்பட்டு தெரியவருகிறது.

இங்கு அமல்படுத்தப்படும் எந்தத் திட்டமும் பழங்குடி மலைவாழ் மக்கள் மற்றும் இயற்கை சூழலியல் உள்ளிட்டு இவர்கள் நலனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் அல்லது இம்மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது கோட்பாடாக இருக்க முடிகிறது.

மேற்படி திட்டம் குறித்து இம்மலையில் வாழும் பழங்குடி மக்களிடத்திலும் சமூக ஆர்வலர்கள் சூழலியலாளர்கள் பத்திரிக்கையாளர்கள் விவசாயிகள் வழக்கறிஞர்கள் இடதுசாரிகள் எழுப்பும் கேள்விகள் பல.

இத்திட்டம்,

* மலை வாழும் பழங்குடி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தை சீர்குலைத்து மக்களை மலையிலிருந்து வெளியேற்றிவிடும்.
* இத்திட்டம் குறித்த அறிவிப்பும் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்பாடும் பெரும் வித்தியாசமாகவும் மோசடியாக உள்ளது.
* இந்தத் திட்டம் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளது.
* இந்தத் திட்டம் பழங்குடி மக்கள் குறித்த இந்திய அரசின் கொள்கை (1952ல் ஜவஹர்லால் நேருவின் பழங்குடி குறித்த பஞ்சசீலக் கொள்கை) இவைகளுக்கு எதிராக உள்ளது.
* இந்தத் திட்டம் தமிழக அரசு நிலை ஆணை எண் GO.NP. எம், எஸ், நம்பர் 561, நான் 14/03/1979 இதற்கு எதிராக உள்ளது.
* இந்தத் திட்டம் தமிழக அரசு நிலை ஆணை எண் 1168 நாள் :27/7/1989 இதற்கு எதிராக உள்ளது.
* இந்தத் திட்டம் வன உரிமைச்சட்டம் 2006 க்கு எதிராக உள்ளது.
* இந்தத் திட்டம் மலைவாழ் பழங்குடி மக்களின் ஜீவாதாரமான நீரை சமதளத்தில் பழங்குடி அல்லாத சில பணக்கார பண்ணை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல முறைகேடு மோசடி செய்யப்படுகிறது.
* உபரி நீர் என்ற ஒன்று இல்லாத போது உபரிநீர் இருப்பதாக கூறி மோசடியாக நீதிமன்றத் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.
* உபரி நீர் இருந்தால் ஏன் அரசின் தொடர்ந்து 10 ஆண்டுகள் அறிவிப்பான கல்வராயன் மலையில் நீர் மின்சாரத் திட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை.

இது குறித்து நம்மிடம் பகிர்ந்துக் கொண்ட கைகான் வளவு கிராமம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் பொன்துறை கூறுவது:

“ வணக்கம் சார் எங்கள் கிராமத்தில்தான் இந்த நியாயமானத் திட்டத்தை ஆரம்பிக்கிறார்கள். அதுக்காக எங்க கிராமத்தில் இருக்கிற சின்னத்தம்பி, பெரியதம்பி, பழனிச்சாமி, வெங்கடேஷ், ராஜேந்திரன், பெருமாள்சக்திவேல், உன்னாயி, சின்னப்பன், எஸ், எ,வெங்கடேசன், இவர்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களைக் கிரையம் செய்து தர கேட்டு, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், அதிமுக இளங்கோவன் உள்ளிட்ட கும்பல் மிரட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆற்றின் அகலமே 13 மீட்டர் தான், ஆனால் ஐம்பதடி ஆழத்தில் 40 மீட்டர் அகலத்தில் வாய்க்கால் வெட்ட திட்டமிடுகின்றனர். இது பெரிய ஆற்றை திசைத் திருப்பும் திட்டமே, கண்துடைப்புக்கு வெள்ள உபரி நீர் திட்டம் என்று சொல்கின்றனர். எங்களையெல்லாம் துரத்திட்டு மலையை யார்கிட்ட கொடுக்கப் போறாங்களோ என்றார்”.

அடுத்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆர், சின்னசாமி அவர்கள் கூறியது, “ஏற்கனவே தமிழக அரசு அரசு சார்பில் மிகப் பெரிய பழத்தோட்டம் அமைக்கப் போகிறோம் என்ற பெயரில் மலையில் வாழுகின்ற பழங்குடி மக்களிடம் இருந்த 1600 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டார்கள்.

வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்கள், நிஜத்தில் எங்களில் ஒருத்தருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. இடத்தை இழந்த மக்கள் வாழ வழி தெரியாமல் கர்நாடகம் கேரளம் என்று சென்றவர்கள், என்ன ஆனார்களோ எப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை. இதுவரையில் மலையில் உள்ள மக்கள் 25000 பேரை காணவில்லை. இப்பொழுது மீண்டும் தமிழக அரசு கைகான் வளவுத்திட்டம் என்ற பெயரில் அவதாரம் எடுத்திருக்கிறது.

பழங்குடி மக்களின் நிலத்தைக் கொடுங்கள் என்று தொல்லை செய்கிறது, எங்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. மலையெல்லாம் கார்பெரேட் காரங்க வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். கும்பம்குறிச்சி கிராமத்தில் 500 ஏக்கர் பழங்குடி மக்கள் நிலத்தை ஒரு பெங்களூர் காரர் வாங்கி எஸ்டேட் போட்டுள்ளார். நிலத்தின் உரிமையாளர்கள் இருந்த பழங்குடி மக்கள், தற்போது அந்த எஸ்டேட்டில் கொத்தடிமைகளாக உள்ளனர். பழங்குடி மக்களின் உரிமைக்கானப் போராட்டத்தை இன்னும் வீரியத்தோடு எடுத்துக்கிட்டு போக வேண்டி இருக்கு என்றார்”.

அடுத்ததாக கைகான்வளவு, பெத்தாகுறிச்சி, நத்தம் பட்டு, கும்மங்குறிச்சி, மூக்கில்பட்டு, பகுடுபட்டு, குறுதல்பட்டு, வெங்காயாகுறிச்சி, கேலையின் வளவு, சந்தனக் காட்டு வளவு, வெள்ளி காட்டுவளவு, காட்டுவளவு, மணியார் குண்டம், கருமந்துறை, பெருச்சூர், மொலையனூர், பெரிஞ்சி நாட்டான் வளவு, வலசு வளவு, நாமம் பட்டு, காட்டுவளவு, எரும்பூர், மேல் எரும்பூர், சேர்வாப்பட்டு, மேல்வெல்லாறு, கீழ்வெள்ளாறு, வெள்ளிமலை, கரியலூர், புலவப் பாடி, மாவடி பட்டு, குறத்திக் குன்று, குந்தியா நத்தம், ஆகிய 32 மலைகிராம பழங்குடி இன மக்கள், முதல் கட்டமாக சேலம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்து, நீதிமன்றம் வரை சென்று உள்ள சிவராஜ், ராமன், பழனிசாமி, சரவணகுமார், பாளையத்தம்மா, செல்லம்மாள், சத்யராஜ், குப்புசாமி சின்னத்தம்பி, அம்பிகா, காவலன், வெங்கடேசன், தங்கம், பொன்னுசாமி உள்ளிட்டோர் கொடுத்த மனுவின் சாராம்சம் வருமாறு:

சின்ன கல்வராயன்மலை வடக்கு நாடு தெற்குநாடு ஊராட்சி, கைகான்வளவு திட்டம் அமுல் ஆனால், கோமுகி நதி வரண்டு வறட்சி ஏற்பட்டு, குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிப்பதுடன், நதிகளை ஒட்டியுள்ள கிராமங்களும் காடுகளும் வறண்டு பாலைவனம் ஆகி இம்மலையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மிக கடுமையாக பாதிக்கும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வராயன் மலையில் வடக்கு கிழக்கு நாடுகளிலிருந்து 70 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்கள் கோமுகி நதியை வாழ்வாதாரமாக கொண்டு, நதியின் இரு புறங்களிலும் தொண்மை காலம் தொட்டு வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பல ஆயிரக்கணக்கான கால்நடைகளும், வனவிலங்குகளும், பறவைகளும், அரியவகை மரங்களும், மூலிகைகளும் பயன்பெற்று வருகின்றன, இவைகளெல்லாம் நிர்மூலமாகும். ஆகவே அரசு கைக்கான் வளவுத் திட்டத்தை கைவிட வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவரையும், தமிழக முதலமைச்சரையும் பணிவோடு வேண்டிக் கேட்டுள்ளனர்.

அடுத்து சின்ன கல்ராயன் ஜாகிர்தார் குடும்பத்தைச் சேர்ந்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சேலம் மாவட்டம் கருமந்துறையில் வசித்து வரும் திரு பொன்துரை அவர்கள் வருத்தப்பட்டு கூறுவது, “மலையில் இருக்க தண்ணீர் மலைவாழ் மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதுல புளித்தண்ணீர் விவசாயத்திற்கு எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. தும்பல் கிராமம் கோவில் அணையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் பழங்குடிமக்கள் அல்லாத சில பணக்கார பண்ணை விவசாயிகளின் இடத்துக்குத்தான் கைக்கான் வளவுத்திட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

உள்ளபடியே கரிய கோவில் அனைத்து சுற்றியுள்ள மலை குன்றுகளில் இருந்து 7 நீரோடைகள் வாயிலாக இயற்கையாகத் தண்ணீர் வரத்து இருந்து கொண்டிருக்கிறது. மலைவாழ் மக்களை துன்புறுத்துவது நியாயமற்றது” என்கிறார்.

இப்பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உதவியாக இருந்த "தமிழ்நாடு மலையாளி பேரவையின்" மாநில பொதுச் செயலாளர் திரு T. வரதராஜன் கூறியதாவது, ‘மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கு எண் டபிள்யூ, பி, நம்பர், 3344ஆப் 2018 (தீர்ப்பு வழங்கப்பட்ட தேதி 22 1 2019) மலை மக்களுக்கு விரோதமாக செயல்படும் தனது அரசாங்கத்திற்கு எதிராக, "தமிழ்நாடு ஷெட்யூல் ட்ரைப் மலையாளி பேரவையால்" தொடுக்கப்பட்ட வழக்கின் சாரம்சம், கல்வராயன் மலை சேலம் மாவட்ட தெற்கு நாடு ஊராட்சி கைகான் வளவு கிராமத்தில் ஓடும் நீரோடையை திசைத் திருப்பி கரியகோவில் அணைக்கு கொண்டுச் செல்லும் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்பதாகும்.

அதற்கான காரணமாக வாதிடப்பட்டது யாதெனில் 4,000 ஏக்கர் பழங்குடியின விவசாயம், 20,000 பழங்குடி மக்கள் வாழ்வாதாரம், கல்வராயன் மலை இயற்கைச் சுற்றுச் சூழலியல் நாசமாகும் என்பதாகும்.

அரசு தரப்பில் வாதிடப்பட்டது என்னவெனில் கரிய கோவில் அணைக்கு நீரோடை திருப்பப்பட்டால் அங்குள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்றும் - ( இதில் அரசு மறைத்துச் சொல்வது என்னவென்றால்) பழங்குடி அல்லாத பினாமிகளாக சுமார் 600 ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்து வைத்துள்ள பணக்கார பண்ணை விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்ற உண்மையை அடுத்து அரசு கூறுவது, கடலில் சென்று உபரியாக கலக்கும் நீரை திசை திருப்புகிறோம் என்று, இதில் நமது அடிப்படையான கேள்வி என்னவென்றால் கடலுக்குச் சென்று கலக்காத ஒரு நீரோடையில் உற்பத்தியாகும் இடத்திலேயே அவரின் இருப்பதாக முடிவு செய்தது அறிவியலுக்குப் புறம்பான ஒன்று.

ஏன் இதை சீர்தூக்கிப் பார்க்கவில்லை அதற்கடுத்ததாக அரசு கூறுவது நீர்நிலைகளை மீட்டெடுப்பதும் சுற்றுச் சூழலியலை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும் அதற்காகத்தான் இந்த திட்டம் ஆகவே இதை எதிர்க்கும் பழங்குடியினர் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதாகும்.

இப்படி மோசடியாக அறிவியலுக்கு விரோதமாகவும் பொய்யானத் தகவல்களை நீதிமன்றத்தில் கூறி, தீர்ப்பை அவர்களுக்கு சாதகமாக பெற்றுள்ளதுடன் அதிலும் குறிப்பிட்டபடி இல்லாமல் ஒரு ஆற்றை திசைத் திருப்பி புதிய ஆற்றை உருவாக்க செயல்படுகின்றனர். இதனால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் மேற்கொண்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், வழக்கை நடத்தவும் பணம்மில்லாத நிலையில் உள்ளது என்றார்.

அடுத்து நம் முன் உரையாடிய இயற்கை சுற்றுச் சூழலியல் செயல்பாட்டாளர் திரு சந்திரமோகன் அவர்கள் கூறுவது:

“தமிழ்நாட்டில் பழமையான கிழக்கு தொடர்ச்சி மலையின் அரிய பொக்கிஷமான கல்வராயன்மலை பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையாக கீழிறங்கி பாயும் ஆற்றில் நீர் ஓடையின் குறுக்கே ஒரு செயற்கையான வாய்க்கால் அமைத்து நீரோடையை திசைத் திருப்புவது என்பது சூழலியலை, தாவரங்களை பல உயிரினங்களைச் சேதப்படுத்தும், கல்வராயன் மலை நிலவரம் எப்படி இருக்க பழங்குடியினர் அச்சம் தெரிவிப்பது குதர்க்கமான கற்பனையானது” என்று அரசு கூறி, இயற்கைக்கு விரோதமானத் திட்டத்திற்கு ஆதரவாக தீர்ப்பை பெற்றிருப்பது தமிழக அரசு நிர்வாகம்.

இதற்கு இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கடமைகளில் ஒரு பிரிவான 51-A(g) சொல்கிற வாசகங்களையே சொல்லி இயற்கை விரோத திட்டத்திற்கு அனுமதி வாங்கி உள்ளனர்.வழக்கின் உண்மைத்தன்மையும் கள நிலவரமும் சரியாக தெரியாததாலும், பழங்குடியினரை விட ஐஏஎஸ் படித்த மாவட்ட ஆட்சியர் வழங்கிய கருத்துக்களை உண்மையான கருதினாலும், நீதிமன்றமும் கூட வழக்கில் முழுமையான தன்மையை மனதில் நிறுத்தவில்லை என அறிய முடிகிறது.

மேம்போக்காக கடலில் கலக்கும் நீரை பயன்படுத்தினால் என்ன தப்பு என்ற வகையில் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இதில் தமிழக அரசு பறிப்பில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல உள்ளோம் என்ற வாக்குறுதியை தந்துவிட்டு, 50 அடி ஆழத்தில் நாற்பது அடி அகலத்தில் வாய்க்கால் வெட்ட திட்டமிட்டி திட்டமிட்டு இருக்கின்றார்கள். இது பெரிய ஆற்றை மொத்தமாகவும் திசைத் திருப்பும் திட்டமே அன்றி, வெள்ளை உபரிநீர் திட்டம் அல்ல, இது மிகப்பெரிய மோசடி என்றார்.

அடுத்துப் நம்மிடம் பேசிய போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினருமான தோழர் இரா. கஜேந்திரன் அவர்கள் கூறுவது ‘அரசு கொண்டு வந்திருக்கும் இத்திட்டத்தால் பாதிக்கப்படுவது மலையில் உள்ள மக்கள் மட்டுமல்ல சமதளத்தில் உள்ள மக்களும் தான், உபரி நீர் என்று பிரச்சனை செல்கிறது.

இங்கு உற்று கவனித்தமேயானால் கோமுகி அணைக்கு அரை கிலோ மீட்டர் பக்கத்தில் பரிகம் என்ற கிராமம் உள்ளது இக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்காமல் சுகாதாரமற்ற குடிநீரை உட்கொண்டதால் சுமார் 78 நபர்களுக்கு கிட்னி பிரச்சனை ஆகிவிட்டது. இந்த வகையில் பெரியவர் முதல் சிறியவர் வரை 23 நபர்கள் இறந்துவிட்டார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மருத்துவ பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக கோமுகி அணையை நம்பி சமதளத்தில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இருக்கின்றது, இந்த நிலங்களை முழுவதுமாக பயிர் செய்வதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் பெரும்பான்மையான நிலங்கள் புல் முளைத்துக் கிடக்கின்றன.

எதார்த்த நிலைமை இப்படி இருக்க எங்கே இருக்கிறது உபரிநீர்? எங்க போய் கடலில் கலக்கிறது? இத்திட்டம் சட்டத்தையும் அரசையும் பயன்படுத்தி ஒட்டுமொத்த காற்று ஆற்றையும் கொள்ளையடிக்கும் திட்டமாகும். இச்செயல் பல ஆயிரம் மக்களுக்கு மரண தண்டனை தருவதற்கு ஒப்பாகும்.

ஆகவேதான் இத் திட்டத்தை கைவிடக்கோரி முதற்கட்டமாக வெள்ளி மலையில் ஆர்ப்பாட்டத்தையும், இரண்டாவது கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தையும், மூன்றாவது கட்டமாக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். கைகான் வளவுத்திட்டம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தோழர் R. சடையன் நம்மிடம்,
“என்னங்க தோழர் அநியாயமாக இருக்கிறது. 52 கிராமத்துல இந்த ஆத்து தண்ணி இல்லன்னா விவசாயம் கிடையாது வேலை வெட்டியும் கிடையாது. ஏற்கனவே வேலைதேடிக் கேரளா கர்நாடகா தோட்ட வேலைகளுக்கு போனவங்க என்ன ஆனார்கள் என தெரியல. அடுத்ததா பசிக்கொடுமை தாங்காமல் ஆந்திராவுல இருக்கிற திருப்பதி மலையில் செம்மரம் வெட்ட போய் உசுர பறிகொடுத்தவர்கள் பலபேர்.

ஏதோ கிடைக்கிற தண்ணி வச்சு விவசாயம் செய்தது, மரவள்ளி போட்டு விக்கிறதுக்கு எடுத்துகினு போனா பாரஸ்ட் காரங்க செக்போஸ்ட்ல மடக்கி ‘மூட்டைக்கு நூறு ரூபா குடு’ ‘வண்டிக்கு 500 ரூபா கொடு’ என லஞ்சம் கேட்டு கொடுமை செய்றாங்க. எப்படிங்க எங்க ஜனம் வாழறது” என்றார்.

நமக்கு பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்தான் காதில் ஒலிக்கிறது.

குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடி தான் சொந்தம்... என பாடல் சொல்கிறது.

நாம் துவக்கத்திலேயே கேள்வி எழுப்பியது போல், கல்வராயன் மலைப் பகுதியில் மலை வாழ் பழங்குடியின மக்கள் உரிமை பிடுங்கப்பட்டு ஈரல் குலை நடுங்கும் அளவுக்கு வன்கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்ன செய்கிறது? தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையம்.

மலைவாழ் பழங்குடி மக்களான இந்திய நாட்டின் குடிமக்களை காணவில்லை எனவும், உயிர்கள் ஜிவிப்பதற்கான நீர் ஆதாரம் அறுத்தெறிய படுகிறது என கதறும் மானுட உயிர்களுக்கு என்ன செய்யப்போகிறது? மனித உரிமை ஆணையம்.

வனத்தில் சூழலியலையே சீர் குளைக்கின்றனர். என்ன நீதி வழங்கப் போகிறது பசுமை தீர்ப்பாயம்.

மனித உரிமையை பிரகடனப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் காதில் கேட்க வைப்பது யார்?.

கல்வராயன் மலையில் அரசே ஆக்கிரமிப்பாளர் ஆகவும், அத்து மீறுபவர்களின் பாதுகாவலனாக இருப்பது, 'அரசு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக் கருவி' என்ற மேதை லெனின் அவர்களின் சிந்தனையைத் தான் வாழ்விழந்து நிற்கும் அம்மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வழிகாட்டுகிறது.

- ஏ.ஆர்.கே. தமிழ்ச்செல்வன்

Pin It