உயிரியல் அடிப்படையில் நாய்களைத் தவிர பிற விலங்குகள்கூட குரைக்கின்றன என்கிறார் கேத்ரைன் லார்ட். இவர் மசாசூசட்ஸ் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர். இதற்கான காரணங்களை ஆராய்வதற்கு நாம் 10,000 ஆண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டியுள்ளது. அண்மையில் இவர் Behavioural Processes என்னும் இதழுக்கு அளித்துள்ள கட்டுரையில் ‘மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய் அதிகமாகக் குரைக்கிறது’ என்பது மட்டும்தான் வேறுபாடு என்கிறார். மேலும், நாய் குரைத்தலில் அடங்கிய ஒலிநுட்பக் கூறுகளையும் இந்தக் கட்டுரை விளக்கியுள்ளது.
‘குரைத்தல் என்பது நாய்க்கும் மனிதர்களுக்கும் இடையேயான ஒரு தகவல் பரிமாற்றம் அல்ல: நாயின் மனப்போராட்டத்தின் வெளிப்பாடுதான் குரைத்தல் என்பது’ என்கிறார் இந்த ஆய்வாளர். அதாவது குரைத்தல் என்பது “எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்” “நான் விளையாடப் போக வேண்டும்” என்று கூறுவதைப்போல் அல்ல என்பதுதான் இந்த ஆய்வின் சாரம். குரைத்தல் ஒரு கும்பலின் குரல் வெளிப்பாடு. அதை ஒரு கும்பல் நடத்தையாகக் கருதலாம். ஒரு கும்பல் அதனுடைய நடத்தையை குரல் மூலம் வெளிப்படுத்துகிறது என்பதுடன் குரைப்பதை ஒரு கூட்டுறவின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஒரு அந்நியன் அத்துமீறி எதிர்ப்படும்போது ‘அங்கேயே நின்று தன்னுடைய குட்டிகளைக் காப்பாற்றுவதா’ அல்லது ‘தப்பித்து ஓடுவதா’ என்ற இரண்டு மனப்போராட்டங்களின் வெளிப்பாடு அது. தன்னுடைய இனத்தவர்கள் தனக்குத்துணையாக சேர்ந்துகொள்ளும்போது குரைத்தல் கும்பல் நடத்தையாகிப்போகிறது. இந்த ஓசை அத்துமீறி வருபவரை திரும்பி ஓட வைக்கிறது.
நாய்கள் மனிதர்களை அண்டிவாழும் பழக்கம் 8,000 முதல் 10,000 ஆண்டுகள் பழமையானது. மனிதர்கள் ஒதுக்கித்தள்ளும் உணவுப்பொருட்களுக்காகவே இவை ஆரம்பகாலத்தில் மனிதனை அண்டி வாழத்தொடங்கின. அக்காலத்தில் எதிரி எதிர்ப்படும் ஒவ்வொரு முறையும் ஒரு மைல்தூரம் தூரம் ஓடி ஒளிந்து கொள்ளும் இயல்புடன் நாய்கள் இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் எதிராளியை எதிர்த்து நிற்கும் நாய்களுக்கு வெகுமதியாக மனிதர்களிடமிருந்து உணவு கிடைக்கத் தொடங்கியது. அந்த உணவை மற்ற நாய்களுடன் முந்திக்கொண்டு பெற்றுக்கொள்ளும் முயற்சியில் மனிதர்களை நாய்கள் அண்டி வாழத்தொடங்கின. அச்சத்தினால் ஒதுங்கிய நாய்கள் காலப்போக்கில் அழிந்தொழிந்தன. அச்சம் தவிர்த்த நாய்கள் மனிதர்களை அண்டி, உண்டு வாழ்கின்றன. வேலிக்கு மறுபுறம் நிற்கும் ஒரு மனிதனைப் பார்த்தவுடன், நாயின் மனதில் ஒரு வியப்பும், அச்சமும் ஏற்படுகிறது. மனிதனை நெருங்கவோ, மனிதனைவிட்டு விலகி ஓடவோ முடியாத மனவெழுச்சி தோன்றும்போது அது குரைத்தலாக வெளிப்படுகிறது.
இவரது கட்டுரையில் குரைத்தலை வகைப்படுத்தும் பல்வேறு அளவீட்டுக்கூறுகளை ஆராய்ந்துள்ளார். ஸ்தாயி (tonality) எனப்படும் குரல் தரவரிசை, இரைச்சல்(noise), சுருதி (pitch), ஒலியின் கேட்கும் அளவு (volume), வீச்சு (amplitude) எதிர்பாராஒலி (abrupt onset), ஒலித்துடிப்பின் கால அளவு (pulse duration) ஆகிய ஒலியின் அளவீட்டுக்கூறுகளை இவரது கட்டுரை ஆராய்ந்துள்ளது.
குரைத்தல் என்பது செய்திகளின் பரிமாற்றச்செயல் அல்ல. குறைந்த கால அளவிற்கு உரத்த குரலில் எழுப்பப்படும் ஒலி என்பதுதான் குரைத்தலின் இலக்கணமாகும். இது இரைச்சல், தொனி என்னும் இரண்டு கூறுகளை உள்ளடக்கியது. விலங்குகள் எழுப்பும் பிற ஓசைகளில் இருந்து குரைத்தல் தனித்துவம் வாய்ந்தது. இந்த இலக்கணத்தை விரிவுபடுத்துபோது நாய் இனம் மட்டுமன்றி பறவைகள், பாலூட்டிகள் இனத்தைச் சேர்ந்த குரங்குகள், எலிகள், மான்கள் இவையும் குரைப்பதாக கொள்ளலாம். சிக்கலான மனவெழுச்சிகளில் பிற விலங்குகளும் குரைக்கின்றன என்பதுதான் ஆய்வர்களின் முடிவு. ஆனால் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்களுடைய செல்லப்பிராணிகள் உணவு கேட்டு குரைப்பதாக நம்மிடம் சொல்லுவார்கள். நாய்கள் அறிவுத்திறன் மிக்கவை. தூண்டல்-துலங்கல், காரண-காரிய விளைவுகளை அவைகள் நன்றாக கற்றுக் கொள்கின்றன. தன்னை வளர்ப்பவர் சரியான நேரத்திற்கு உணவு கொடுப்பார் என்று தெரிந்து கொண்டால் அவை குரைப்பதில்லை.
தகவல்: மு.குருமூர்த்தி
இன்னும் படிக்க:http://www.sciencedaily.com/releases/2009/07/090714210137.htm