காவல் நிலையங்களிலும், சமூக பஞ்சாயத்துக்களிலும் சில குறிப்பிட்ட சமூகத்தினர், அன்றாடம் கைவிரல் ரேகையைப் பதிய வேண்டும் என்ற ஒரு மனித விரோத சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் அமுலில் இருந்தது. இந்த சட்டத்தை நீக்கும் போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டத்தை எதிர்த்து  நடந்த போராட்டங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை முன்வைத்து தோழர் பெரியார் டாட்காம் இணையதளத்தில் அதி.அசுரன் வெளியிட்ட கட்டுரை இது.

மறைந்த முத்துராமலிங்க தேவர் மட்டுமே இதை எதிர்த்துப் போராடியதாகவும், பெரியார், போராட்டம் எதையும் நடத்தவில்லை எனவும், அண்மையில் சில முகாம்களில் நடக்கும் தவறான பரப்புரைக்கு உரிய விளக்கமாக இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்து கொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத்திருந்தது. தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையர் மட்டுமே குற்றப் பரம்பரைச் சட்டப்படி கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று ஒரு தவறான கருத்து அனைத்து மட்டங்களிலும் உள்ளது. உண்மையில் தமிழ்நாட்டில் 89 சாதிகள் இப்பட்டியலில் இருந்தன.
 
அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், ஒட்டர், போயர், வன்னியர், படையாச்சி, புலையர், அம்பலக்காரர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்காரர், பறையர், ஊராளிக் கவுண்டர், டொம்பர், கேப்மாரி, தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், தலையாசி, இஞ்சிக்குறவர் போன்ற ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும் ஜாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.
 
குற்றப்பரம்பரைப் பட்டியலில் உள்ள சாதிகளில் பிறந்த அனைத்து மக்களும் கைரேகை வைக்கப்படச் சொல்லி கட்டாயப்படுத்தப்படவில்லை. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் அப்போதிருந்த மக்கள் தொகை முழுதும் சுமார் 2 கோடிப் பேர் தினமும் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.
 
மேற்கண்ட சாதிகளில் குறிப்பாக கள்ளர், மறவர், அகமுடையார்களிலும் விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.
 
அதேபோல கைரேகை வைக்கும் இடம் காவல் நிலையம் அல்ல. உள்ளூரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும் அதிலேயே கைரேகை வைக்கலாம். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப் பெரியவர் குழுவில் இந்த அடையாளச் சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச் சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச் சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாக காவல்நிலையத்தில் கைரேகை வைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.
 
சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய குழுவின் பொறுப்பாளர் தமிழ்நாட்டுப் பார்ப்பானான இராமானுஜ அய்யங்கார் ஆவார்.
 
1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் தலைமையிலேயே கள்ளர்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பு கிராமங்களாக ‘கள்ளர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. இப்படி கள்ளர்களை வைத்தே கள்ளர்களை அடக்கிய நுட்பத்தை ஆங்கிலேயருக்கு அறிவுறுத்தி செயல்படுத்தியவன் அப்போது மதுரை மாவட்ட துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஏ.கே. இராஜா என்ற பார்ப்பான்.
 
ஆகவே, இச்சட்டம் தேவர்களுக்கு மட்டும் இருந்த சட்டமல்ல. தேவர்களிலும் அனைத்து மக்களுக்கும் பொருந்திய சட்டமல்ல. அனைத்து ஜாதிகளிலும் இருந்த உண்மையாகவே திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளையில் ஈடுபட்ட மக்களைக் கட்டுப்படுத்தக் கொண்டு வரப்பட்ட சட்டம். 1932 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பசும்பொன்தேவர் இப்படிப்பட்ட உண்மைக் குற்றவாளிகளை ஒடுக்குவது தவறில்லை என்றே பேசியிருக்கிறார்.
 
இச்சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுமைக்கும் பல்வேறு தலைவர்கள் போராடியிருக்கிறார்கள். எதிர்த்திருக்கிறார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். சரியாக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் பட்டியலில் கடைசியாக இடம்பெற வேண்டிய பெயர் தேவரின் பெயர் என்ற உண்மையை அறியலாம்.
 
தமிழ்நாட்டில் செய்யூர் ஆதி திராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் போராடி அந்தந்த ஜாதிகளை பட்டியலில் இருந்து விடுவித்தன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் தஞ்சை, திருச்சி மாவட்ட கள்ளர்களை குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார். 1911-லேயே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப் பகுதி ஈச நாட்டுக் கள்ளர்களை மீட்டிருக்கிறார். இந்தப் போராட்டங்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்போது அவருக்கு வயது 3.
 
1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச் சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 கள்ளர்கள் வீரமரணம் அடைந்தனர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கியப் போராட்டம் இதுதான். இந்தப் போராட்டத்திற்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்கு அப்போது வயது 12. மதுரைக்கு அருகே பசுமலையில் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்.
 
அதன் பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கேரளாவைச் சேர்ந்தவரும் மதுரையில் குடியிருந்தவருமான ஒரு வழக்கறிஞர், வைக்கம் போராட்டத்திற்கு பெரியாரை வரவழைத்த மலையாளியான ஜார்ஜ் ஜோசப். இவர்தான் முதன்முறையாக கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களைத் திரட்டி குறிப்பாக குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கெதிராக மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்தவர். இவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பு துரை’ என்றே அழைத்தனர். அவரது நினைவாக இன்று வரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.
1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து,

.... இந்தியா மந்திரி அவர்களே குற்றப் பரம்பரையினர் எனப்படுபவரின் கொடூர நிலையை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். குற்றப் பரம்பரையினர் நாட்டு மக்களிடையே சிதறிக் கிடக்கின்றனர். பம்பாயில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து பேசுகிறேன்.
 
.... இந்த மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், நலன்களைப் பாதுகாக்கவும் அந்த சட்டத்தில் ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டம் பத்தி 108-ன் கீழ் ஆளுநர் சில ஆணைகளைப் பிறப்பித்து, நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்ற அந்த மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன?
 
.... ஒருவர் ஆதிவாசியா அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்று ஆளுநருக்குத் தெரிந்தவுடன் அவர்களது நலனுக்குச் சில சட்டங்கள் இயற்றலாம் அல்லவா? அவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தால் என்ன? மக்களிடையே வசித்தால் என்ன? கிரிமினல் இன மக்கள் சம்பந்தப்பட்ட சட்டம் அந்தக் குறிப்பிட்ட இன மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது.

என விரிவாகப் பேசி, இந்திய அரசின் சாதகமான பதிலையும் பெற்றார். இந்த விசாரணையில்தான் மிக முக்கியமாக குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்தது. அதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்.
 
இதற்கெல்லாம் பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் வருகிறார். 1933 செட்பம்பர் 25 ஆம் தேதி பசும்பொன் தேவரது சொந்த ஜாதியான அவர் பிறந்த உட்பிரிவான ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப் பழங்குடியினர் சட்டத்தில் இணைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் தான் தேவர் அச்சட்டத்தை எதிர்க்கத் தொடங்குகிறார். 1934 மே மாதம் 12 ஆம் தேதி கமுதி அருகே உள்ள அபிராமம் என்ற ஊரில் காங்கிரஸ் தலைவரும் பெரியாருடன் சேரன்மாதேவி குருகுலக் கிளர்ச்சியில் இணைந்து போராடியவருமான பி. வரதராஜூலு நாயுடு தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து ஒரு மாநாடு நடத்தப்பட்டது.

மாநாட்டுக்கு 6 மாதத்திற்கு முன்பு பெரியார் இன்றைய ஆட்சிமுறை ஒழிய வேண்டும் ஏன்? என்ற கட்டுரையை எழுதியதற்காக இராஜதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, இராஜமகேந்திரம் சிறையில் கடுங்காவல் தண்டனையில் இருந்தார். அவரை வரதராஜூலு நாயுடு நேரில் சந்தித்தார். அதன் பிறகுதான் குற்றப் பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டுக்கு வருகிறார். ஆப்ப நாட்டு மறவர்களை இப்பட்டியலில் இருந்து நீக்கக் கோரி அரசைச் சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வரதராஜூலு நாயுடு. உறுப்பினர்களாக நவநீதிக்கிருஷ்ணத் தேவர், பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சசிவர்ணத் தேவர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அப்போதைய அரசை சந்தித்து இக்குழு மனு ஒன்றை அளித்துள்ளது.
 
மிக முக்கியமாக தினகரன் என்ற பத்திரிகையின் ஆசிரியரும், முதுகுளத்தூர் கலவரம் என்ற மிக முக்கிய வரலாற்றுப் பதிவை வெளியிட்ட தேவர் ஜாதியைச் சேர்ந்த தினகரனும் இக்கொடுஞ் சட்டத்தை எதிர்த்துப் போராடியுள்ளார்.
 
1934 இல் அபிராமத்தில் நடைபெற்ற மாநாட்டைத் தவிர குற்றப் பழங்குடி சட்டத்திற்கு எதிராக குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தப் போராட்டத்தையும் பசும்பொன் தேவர் நடத்தவில்லை. பல கூட்டங்களில் அது பற்றி பேசியுள்ளார். இரண்டாம் உலகப் போர் நடந்த காலங்களில் 1945 வரை தேவர் ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இருந்தார். 1945 செப்டம்பர் 5 ஆம் நாள் விடுதலை ஆனார். 1947 ஜூன் 5 ஆம் நாள் வெள்ளைக்காரன் இருக்கும் போதே குற்றப் பரம்பரைச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப் பட்டது. அச்சட்டம் நீக்கப்படுவதற்கு முன்பு சுமார் 10 ஆண்டுகளாக முத்துராமலிங்கத் தேவர் உட்பட யாரும் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களையோ குறிப்பிடத்தகுந்த போராட்டங்களையோ நடத்தவில்லை. தேவர் காங்கிரசோடு அனுசரித்து, இச்சட்டம் பற்றி கவலைப்படாத போதும் பெரியார் உறுதியாக அச்சட்டத்தை கடைசி வரை எதிர்த்திருக்கிறார்.
 
திராவிடர் இயக்கத்தின் சாதனைகள்
 
1919 இல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையின் இந்திய அரசின் செயலரான எட்வின் சாமுவேல் மாண்டேகு மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் பிரடிரிக் ஜான் நேப்பியரின் பேரனான செம்ஸ்போர்ட் ஆகியோர் இந்தியர்களுக்குப் படிப்படியாக அதிகாரங்களை வழங்க, அது தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்தனர். அப்போது நீதிக்கட்சி, திராவிட சங்கம் ஆகியவற்றின் சார்பாக டி.எம்.நாயர், கே.வி. ரெட்டி, சர்.ஏ. இராமசாமி முதலியார் ஆகியோர் கருத்துருக்களை முன் வைத்தனர். அச்சமயத்தில் மறவர் மகாஜனசபை என்ற அமைப்பை உருவாக்கச் சொல்லி, அதன் சார்பிலும் கருத்துருக்களை வைக்கச் செய்தவர் டி.எம். நாயர். இலண்டனில் மாண்டேகு - செம்ஸ்போர்டு குழுவை நேரில் சந்தித்து இறுதி வடிவான கருத்துருக்களை சமர்பிக்கச் சென்றபோது இலண்டனில் மருத்துவமனையில் மறைந்தார் டி.எம்.நாயர். அதையடுத்து கே.வி. ரெட்டி அந்த கருத்துருக்களைச் சமர்பித்து, அதன் அடிப்படையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கடலூர் சுப்பராயலு ரெட்டியார் முதல் முதலமைச்சராகக் கொண்டு நீதிக்கட்சி ஆட்சி தொடங்கியது. அதன் பிறகு பனகல் அரசர் 1921 முதல் 1926 வரை முதல்வராக பணியாற்றினார்.
 
பெருங்காமநல்லூர் போராட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசுதான் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து கள்ளர்களில் பெரும்பான்மையான மக்களை அச்சட்டத்தின் கோரப்பிடியிலிருந்து விடுவித்தது.
 
கள்ளர் சீரமைப்புக்கு என தனியாக ஒரு ஐ.சி.எஸ். அலுவலரை நியமித்தது. லேபர்கமிஷனர் என அப்பதவி இருந்தது. அந்த லேபர் கமிஷனர் அளித்த சிபாரிசுகளின்படி நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை கள்ளர் சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் முழு வீச்சில் செயல்படுத்தியது.
 
கள்ளர்கள் விவசாயம் செய்ய இலவச நிலங்களை வழங்கியது.
 
கள்ளர்கள் தனியாக நிரந்தரத் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி அளித்தது.
 
கள்ளர்களுக்கென்று இலவசக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, அவற்றை நிர்வகிக்கவும் செய்தது.
இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சி அளித்து அவர்களை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தியது.
 
மதுரை, திண்டுக்கல், உசிலம்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, திருமங்கலம், தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளை உருவாக்கியது.
 
தஞ்சை மாவட்டத்தில் கள்ளர் மகாஜன சங்கத்தாலேயே கைவிடப்பட்ட கள்ளர் பள்ளிகளை அரசு ஏற்று நடத்தியது.
 
பெரியாறு அணைப் பாசனத் திட்டத்தில் கள்ளர் நாட்டுப் பகுதிகளையும் இணைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தது.
 
1922 இல் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் கள்ளர்கள், விவசாயத்திற்காக வாங்கிய கடனை கட்ட இயலாத நிலையில் அந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி அளித்திருந்த சென்ட்ரல் வங்கி சங்கங்களை கடுமையாக நெருக்கத் தொடங்கியது. அப்போது திக்கற்று இருந்த 34 கள்ளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மாகாண அரசே நிதி கொடுத்து சங்கங்களின் கடனை அடைத்து, அடுத்த கட்ட விவசாயத்திற்கும் கடனை அளித்தது.
 
இப்படி கள்ளர்கள் வாழ்வில் ஒரு புரட்சியை உருவாக்கியது நீதிக்கட்சி அரசுதானே ஒழிய முத்துராமலிங்கத் தேவர் அல்ல. இந்த மாற்றங்கள் நடக்கும்போது தேவர் பொது வாழ்வுக்கே வரவில்லை.
 
அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு ஆப்ப நாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப்பழங்குடி சட்டப் பட்டியலிலிருந்து மீட்டதும் நீதிக்கட்சி அரசுதான். வரதராஜூலு நாயுடு தலைமையில் முத்துராமலிங்கத் தேவரும் இடம் பெற்றிருந்த குழு இந்த நீதிக்கட்சி அரசிடம்தான் மனு அளித்தது. வெறும் மனு அளித்த உடனேயே அப்பிரிவு மக்களை அப்பட்டியலில் இருந்து நீக்கியது. பெரியாரின் நண்பரான பெரியாரின் ஆதரவு பெற்ற ஆட்சியின் தலைவரான பொப்பிலி அரசர் என்ற இராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையிலான நீதிக்கட்சி அரசுதான்.
 
இறுதியாக 1947 இல் ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த பெரியாரின் தொண்டரும், சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி. சுப்பராயன் தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்ட முன் வடிவை ஆளுநரிடம் சமர்பித்து அவரது ஒப்புதலுக்குப் பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இச்சட்டத்தை ஒழித்தார்.
 
ஆக குற்றப் பழங்குடியினர் சட்டத்தை ஒழிப்பதற்கும் அச்சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட கள்ளர்கள் உட்பட அனைத்து ஜாதி மக்களும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை உழைத்தது பெரியாரின் தொண்டர்கள் தான். காங்கிரஸ் அரசானாலும், நீதிக்கட்சி அரசானாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் அரசுப் பதவியில் இருந்தாலும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து சரியான செயல்களைச் செய்தவர்கள் பெரியார் ஆதரவாளர்களே! பெரியார் தொண்டர்களே! திராவிடர் இயக்கத்தவர்களே!

- அதிஅசுரன்

(நன்றி: பெரியார் முழக்கம்)

Comments

12 comments

12
Siva Arumugam
why you always targeting Mr Muthuramalinga thevar. He did whatever best in that time. You know he spend lot of his life in Jail, because of his anxious speech. He is the one who capable of gathering the whole people in southern tamilnadu. So mind your words when you ae writing. I think the people in Keetru who wrote this history sibjects are Dalits. So they always targeting Thevar and their community people. so don't publish the wrong history of tamilnadu.
Karthik
Mr.Sivamurugan - Why you are insisting that the article is been written by a Dalit. Anyone who knows the history of tamilnadu will not regret the above note from Keetru.
Mr. Muthuramalingam united the people of southern Tamilnadu????this can be rated as the best comedy of this year.Have you heard of Muthukulathur riots?? it happened when he was alive, and to the extent of my knowledge he didn't take any steps to bring down the tension prevailed in the southern parts of tamilnadu. Guys like you read history always with a eye closed.
He spent most of his life in jail because of his uncontrolled speech.
If you get a chance to read the newspapers during his time better read his comments about Mr.Kamraj(the best CM of Tamilnadu).
And atlast, i presume you have to read the history properly...You need not direct the Columnists of Keetru to learn it.We know they are very better at it than you.Never just blabber your emotions without any concrete evidence.If you have found something wrong in that article then post it with supporting evidence to oppose it.
Has keetru written the above article on a Generic note???Didn they disclose the exact names and timeline for their claim??
Bring us something like this to prove Mr.Muthuramalingam united the entire population of Southern Tamilnadu.. then we'll listen to you...
r.raman
1920 பெருன்காமனல்லுர் படுகொலை நடந்த போது பெரியார் என்ன செய்தார். 40 வயதை தான்டிய பெரியார் எங்க. 12 வயது சிருவன் தேவர் எங்கே.
muthukumar
அருமை .
பசும்பொன் தமிழன்
டெஸ்ட் டியுப் பேபியை கண்டுப்பிடித்தும் பெரியார்தான். எல்லாமே பெரியார் தான். சர்வம் பெரியார் மயம். பெரியார் நமக.
அகமுடையார் சி.டி ஆக்டில் சேர்க்கப்படவில்லை என்பது கூட தெரியாமல் பேச வந்து விட்டார் அசடன்... ஸாரி அசுர்ன்.
natavarasan
பெருங்காமனல்லுர். படுகொலை நடந்தபிரகு. பெரியார். என்ந. செய்தார் ? சரியான கேல்வி. கு.ப. சட்டம் பற்றி. அம்பபேத்கர்

பேசினது சரி.பெரியார் பேசியது என்ன?தென் தமிழகமக்கலய். திரட்டமுடியாத. சாதாரன தலைவர்(?) தேர்தலில். நின்றபோதெல்லாம்.
வெற்றிபெற்றது. எப்படி? அதுவும். ஓட்டு கேட்க போஅகாமலேயே?
அகமுடையார் ஒற்றுமை
அகமுடையார் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் எந்த ஊரிலும் இல்லை(ஆதாரமில்லாத குற்றச்சாட்டு,ஆதாரம் இருப்பின் காட்டவும்)அகமுடையார் இனத்தில் பிறந்ததற்காகவோ,குறிப்பிட்ட பகுதியில் உள்ள அகமுடையார் குற்றப்பரம்பரையினர் என்றோ தண்டிக்கப்பட்டதில்லை.கட்டுரையில் தவறான தகவல் வரலாறு போன்று பதிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட பகுதி இக்கட்டுரையில் இருந்து நீக்கப்பட வேண்டும்!
Peppy
மருத நிலங்களைத் தோற்றுவிது ஊருக்குச் சோறு போட்ட வேளாண்குடி மரபினரான மள்ளர்கள் நசுக்கப்பட்டு வேதனையில் கிடந்த போது அவர்களைச் சீந்தாத நீதிக்கட்சி அரசுக்கு கள்ளர்கள் மேல் மட்டும் என்ன தனி அக்கறை?இதே வளர்ச்சியை மள்ளர்களுக்கு ஏன் செய்யவில்லை?ஏன்னா கள்ளன் தானே தெலுங்கின் அடிமை.அவர்களுக்கு எப்பொழுதும் போல் எலும்புத் துண்டு போட்டு நிரந்தரக் கூலியாக வைத்திருக்க வேண்டும் அல்லவா?அதான்.
Arunkumar
வலையர், அம்பலக்காரர் சமூகங்கள் இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
சமூக நீதி பேசும் திராவிட இயக்கத்தினர்
பேச மறுப்பதேனோ...???
அ.பெருமாள் தேவன்
முன்பெல்லாம் தேவரை ஒரு சாதிவெறியன் என்று சொல்லி முட்டாள்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்ட தலித்திய திராவிடப் போர்வையில் உள்ள தெலுங்கர்கள் தற்போது சாதிப் புள்ளிவிவரக் கணக்கு கொடுத்து தேவரை குற்றம் சாட்ட முனைந்துள்ளனர் என்பதையே இந்தக் கட்டுரை காட்டுகிறது. தமிழ்த்தேசிய எழுச்சி, இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை போட்டு உடைத்து பெரியார் என்ற தெலுங்கர் ராமசாமி நாயக்கரின் பிம்பத்தை காணாமல் போகச் செய்து விட்டது. தமிழினத்தின் கூறுகள் குலங்களாக உள்ள சாதிகள்தான் என்ற உண்மையை இன்று தமிழ் இளைஞர்கள் உணர்ந்து வருகிறார்கள். அதனால்தான், கட்டுரையாளர் ராமசாமி நாயக்கருக்காக தேவர்கள் என்றழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையாரின் ஆதரவு புள்ளி விவரங்களை துணைக்கு அழைக்கிறார். இந்த தெலுங்கர்களின் முயற்சி, இன்றைக்கும் தெலுங்கர் கட்சியான நீதிக் கட்சியை தூக்கிப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இனி தெலுங்கர் எத்தனை வேடம் போட்டாலும் தமிழர் ஏமாற மாட்டார்கள். அவர்களின் முன்னே, திராவிடம், தலித்தியம், ஏன் இந்தியமும் தோற்றுப் போகும்.

வரிவரியாக இந்தக் கட்டுரையை பிரித்து மேய முடியும். ஆனால், இது தெலுங்கரின் தளம் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.
ராஜா சேதுபதி
பெரியாருக்கும் குற்றப்பரமபரை சட்டதிற்கும் என்ன சம்மந்தம்? இட்டுக்கட்டிய பொய்...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1934 ஆம் ஆண்டு மே 12 மற்றும் 13 ம் தேதிகளில் கமுதி அருகில் உள்ள அபிராமத்தில், 03/10/1936 ல் வளநாட்டில், 27/10/1936 ல் பேரையூரில், 28/10/1936 ல் கமுதியில், 29/10/1936 ல் மண்டலமாணிக்கத்தில், 30/10/1936 ல் முதுகுளத்தூரில், 01/11/1936 ல் சிக்கலில், 04/11/1936 ல் பெருநாழியில், 27/07/1938 ல் அருப்புக்கோட்டையில், பிரமலைக் கள்ளர்களுக்காக 15/2/1939 ல் மதுரை திருப்பரங்குன்றத்திலும், 18/6/1939 ல் உசிலம்பட்டியிலும் மாநாடுகள் கூட்டப்பட்டு குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தார்,

“சிறைக்குச் செல் அல்லது கட்டைவிரலை வெட்டிக் கொள்! என்ற தோழர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழக்கம் மக்களின் முழக்கமாக மாற்றம் கண்டது.
neelakadan
குற்றபரம்பரை பத்தி விளக்கம் பக்க தன இந்த பேஜ் கு வந்தேன் ஆனால் இது குற்றபரம்பரை பற்றி பேசவில்லை. முழுவதும் முதுரமளிங்கதேவருக்கு எதிர்வினை மட்டுமே உள்ளது.. பெரியாரை போற்ற நினைக்கும் எண்ணம் நல்ல விஷயம் அதற்க்கு மற்றவரை குறை கூற தேவ இல்லை. ப்ளாக் எழுத தகுதி இல்லாத ஒரு ஆள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.