தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம்!
தோழர் ஆம்ஸ்ட்ராங் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் கடந்த 2016 முதல் 2020 வரை பட்டியல் ஜாதியினர் 300 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆர்.டி.அய் தகவல் கூறுகிறது. (The Hindu 14.09.2021) இவர்கள் இந்து மதத்தில் தலித்துகளாகப் பிறந்தது மட்டுமே இந்தப் படுகொலைகளுக்கான அடிப்படைக் காரணம் ஆகும்.
300 தலித்துகளின் படுகொலை பற்றிய வழக்கு விசாரணைகளிலும் இந்தக் கொலைகளுக்குக் காரணம் ஜாதி தான் என்பது சட்டப்படியாகவே பதிவாகி இருக்கும். கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு மட்டும்தான் பட்டியல் ஜாதி மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்களா?
இல்லவே இல்லை. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், நீதிக்கட்சி அரசுகளுக்கு முன்பிருந்தே - தேர்தல் அரசியல் என்ற ஒரு முறை இந்தியாவில் உருவாவதற்கு முன்பிருந்தே - ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஜாதியையும், ஜாதிக்குக் காரணமான இந்து மதத்தையும் எதிர்த்த தலித்துகள் கொல்லப்படுவது தான் ஒட்டுமொத்த இந்தியாவிலும் வரலாறாக இருக்கிறது.பட்டியல் ஜாதி மக்களையும், பெண்களையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைக்க வேண்டும் என்பதை இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களான இந்துக்கள் தங்களது பண்பாடாக, வாழ்க்கை முறையாக, சிந்தனை முறையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஜாதி, ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் தான் இந்தியச் சமுதாயத்தின் ஒழுங்குமுறையாக இருக்கிறது.
இந்து மதம் உருவாக்கியுள்ள சமுதாய ஒழுங்கு என்பது தற்போதைய அரசுகளின் சட்டம் - ஒழுங்கையும் சீர்குலைத்துக் கொண்டுள்ளன. எனவே, இந்து மதத்தின் சமுதாய ஒழுங்கையும், சமுதாய அமைப்பையும் எதிர்த்துப் போராடத் தொடங்காமல், தற்போதைய சட்டம் - ஒழுங்கைச் சரி செய்ய முடியாது.
அப்படியானால் தோழர் ஆம்ஸ்ட்ராங் போன்ற தோழர்களின் படுகொலைகளுக்கு எதிரான சரியான எதிர்வினை என்ன?
தமிழ்நாட்டு அரசு கடுமையான, உறுதியான, தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொலை செய்தவர்களையும், அவர்களுக்குப் பின்னணியாக இருப்பவர்களையும் கைது செய்து சட்டப்படி உயர்ந்தபட்ச தண்டனைகளைப் பெற்றுத்தர வேண்டும். இனிமேலும் தலித் மக்கள் படுகொலை செய்யப்படவோ, தாக்கப்படவோ கூடாது என்பதை இலக்காக வைத்து தொடர்ச்சியான காவல்துறை, நீதித்துறை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.
இதைத் தான் எல்லா அமைப்புகளும் கோரிக்கையாக வைத்துள்ளன. அவற்றை அப்படியே நாமும் கோருகிறோம். இந்த அரசு ரீதியிலான, சட்டரீதியான நடவடிக்கைகள் அடுத்தடுத்த படுகொலைகளைத் தடுத்து நிறுத்துமா? என்பது தான் நமது கேள்வி.
“கடைசித் தீண்டத்தகாதவன் கொல்லப்படும்வரை நீங்கள் போராடிக் கொண்டிருக்கப் போகிறீர்களா?” என்ற தோழர் அம்பேத்கரின் கேள்வியைத் தான் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்துச் சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அது உருவாக்கி வைத்திருக்கும் ஒழுங்குகளுக்கு எதிரான போராட்டத்தை இனியாவது தொடங்க வேண்டும், இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும். வாய்ப்புள்ளவர்கள், விருப்பம் உள்ளவர்கள் நாத்திகர்களாக மாறுங்கள், அல்லது நாத்திகத்திற்கு மறுபெயரான பௌத்தத்திற்கு மாறுங்கள்.
அதேசமயம் பௌத்தத்தையும் இந்து மதத்திலிருந்து வெளியேற்றுங்கள். ஏனென்றால், படுகொலை செய்யப்பட்ட தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் புத்த மார்க்கத்தைத் தழுவியவர் தான். தமிழ்நாட்டில் பௌத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட பட்டியல் ஜாதியினரின் மதமாகவே கருதப்படுகிறது.
இந்நிலையை மாற்றி பிற்படுத்தப்பட்டவர்களையும், பட்டியல் பிரிவிலேயே இருக்கும் எல்லா ஜாதி மக்களையும் பௌத்தம் ஏற்கச் செய்யாதவரை இந்து மதத் தாக்குதல்களை நாம் தவிர்க்க இயலாது.
அதற்கெல்லாம் நேரமில்லை என்றால், தோழர் பெரியார் வழிகாட்டியதைப் போல, “இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து” என்ற அறிவுரையை ஏற்று இஸ்லாமாவதைப் பற்றி யோசியுங்கள். குறைந்தபட்சம் இவை பற்றியும் விவாதியுங்கள்.
ஜாதி ஒழிப்புக்காகக் களத்தில் நிற்கும் தோழர்கள் சட்டப்படியான தீர்வுகளை மட்டுமே முன்வைக்காதீர்கள். எவ்வளவு தான் நமக்கான அரசாக இருந்தாலும், சட்டப்படியாகச் சரியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் ஜாதிய வன்கொடுமைகளையோ, ஜாதியப் படுகொலைகளையோ நிறுத்திவிட முடியாது.. அவை முழுவிடுதலைக்கான வழியும் அல்ல.
ஜாதிய வன்கொடுமைகள் எப்போது நடந்தாலும் மத மாற்றங்களையும், இந்து மத வெளியேற்றத்தையும், இந்து மத ஒழிப்புக்கான நடவடிக்கைகளையும் முக்கிய எதிர்வினைகளாக அறிவிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் எனும் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
குடிஅரசு ஏடுகளில் பெரியாரின் அறிக்கைகளில் இந்த அணுகுமுறையைத் தான் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. குடிஅரசு நூற்றாண்டில் குடிஅரசின் அணுகுமுறைகளை மீண்டும் தொடங்குவோம்.
– அதிஅசுரன்