கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் நாள் அயோத்தியில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, பார்ப்பனர்களின் கனவுகளில் ஒன்றை பா.ஜ.க. நிறைவேறிவிட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகக் கருதப்பட்ட இராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
உ.பி.யின் முக்கிய அரசியல் கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி ஜனதாதளமும் பார்ப்பன இந்துக்களின் கடவுளான பரசுராமனைக் கையிலெடுத்தன. அகிலேஷ் அவர்கள் பரசுராமருக்கு உ.பி.யிலுள்ள 75 மாவட்டங்களிலும் சிலை வைப்போம் என்றார்.
பி.எஸ்.பி.யின் தலைவர் மாயாவதி அவர்களோ அனைத்து மாவட்டங்களிலும் பரசுராமர் பெயரில் சமுதாய மையங்கள் உருவாக்கப்படும் என்றார்.
பொருளாதாரத்தில், குறிப்பாக FMCG துறையில் வேதமும் விஞ்ஞானமும் இணைந்த பொருட்கள் புதிது புதிதாக, வேக வேகமாக விற்பனைக்கு வருகின்றன. ஈஷா யோக மய்யங்கள், பதஞ்சலி தயாரிப்புகளுக்குப் போட்டியாக மதத்தோடு இணைந்த பன்னாட்டு நிறுவனங்களின் வணிகம் வளர்ந்து வருகிறது. இதுபோல இந்து மத ஆதரவு அடையாளங்களை பல்வேறு அரசியல் கட்சியினரும், இந்திய தேசிய, பன்னாட்டு வணிகக் கொள்ளை நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன.
இவைகளைப் பார்த்த உடன் வழக்கம் போல நாமும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களைப் போட்டு சிரிக்கிறோம். நமக்குப் பிடிக்காத அரசியல்வாதிகளை விமர்சிக்க இந்த இந்து மத அடையாள வெளிப்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
மோடியா? இந்து மதமா?
இந்த நாடு இப்போது தான், 2014 இல் நரேந்திர மோடி பிரதமர் ஆனதற்குப் பிறகுதான் இந்துமதப் பாதையில் பயணிக்கிறதா? இல்லை இல்லை. பல நூற்றாண்டுகளாக இந்து மத அழிவுப்பாதையில் இந்த நாடு பயணித்ததன் விளைவாகத்தான் பா.ஜ.க. ஆட்சிக்கே வந்தது. ஆங்கிலேயர்கள் உட்பட பல ஐரோப்பியர்கள் இந்த நாட்டை ஆள வந்ததற்கும், பிறகு அவர்களே இந்த நாட்டை விட்டு வெளியேறியதற்கும் இந்து மதமே அடிப்படைக் காரணம்.
நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சரான பிறகு இஸ்லாமியர் மீது நடந்த படு பயங்கரக் கொலை வெறித் தாக்குதல்கள், உ.பி.யின் முசாபர்பூரில் பா.ஜ.க. நடத்திய கலவரம். அதன் பயனாக அவர்கள் பெற்ற ஆட்சி. அந்த ஆட்சியின் விளைவாக இன்று வரை நாம் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் அனைத்தும் இப்போது தான் நடக்கின்றனவா?
கி.பி.1 ஆம் நூற்றாண்டிலிருந்தே புஷ்யமித்ரசுங்கனின் ஆட்சிக் காலத்திலிருந்தே கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் நமது இனம் வெட்டப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருவவை தான். இந்தியாவின் உண்மை வரலாறு என்பது நமது இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருந்த வரலாறுதான்.
மதவெறியால் நாம் படுகொலைக்கு ஆளாகிறோம் என்றுகூற இயலாது. இந்தியாவில் மதம் வேறு. மதவெறி வேறு என்று பிரித்துப் பார்க்கவே இயலாது. இந்து மதமே வெறிபிடித்த காட்டு மிராண்டி மதம் தான். 1 ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை இந்து மதம் தனது உண்மை முகத்தை துளியும் மறைக்காமல் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் தான் உள்ளது.
இந்த இந்து மதமும், அது உருவாக்கியுள்ள சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் ஆகியவை தான் இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இன மக்களும் அழிந்ததற்கும், அழிவதற்கும் அடிப்படைக் காரணம் என்பதை எந்த தேசிய இனமும் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
தோழர் பெரியார் இந்த உண்மைக் காரணத்தைக் கண்டறிந்தார். இந்து மதத்தையும் அது உருவாக்கிய அனைத்தையும் அழிக்க தன்னை ஒரு அழிவு வேலைக்காரனாகப் பிரகடனப்படுத்திக் களமிறங்கினார். மக்களது மனம் புண்படுமே, வெகு மக்கள் நம்மைப் புறக்கணித்து விடுவார்களே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க வில்லை. கடவுள் இல்லை. கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லையெனப் புயலாகப் புறப்பட்டார்.
மக்களிடம் இருக்கும் கடவுள், மத பக்தியைப் பார்ப்பனர்கள் கருவியாகக் கொண்டிருந்தார்கள். இன்று வரை கடவுளையும், மதத்தையும் தான் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு எதிராக நாத்திகத்தைக் கருவியாக ஏந்தினார் பெரியார். இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு பல துறைகளிலும் முன்னணியில் உயர்ந்து நிற்பதன் காரணம் பெரியாரின் நாத்திகம். பெரியாரிய நாத்திகம்.
ஆம். வெறும் நாத்திகத்திற்கும் பெரியாரிய நாத்திகத்திற்கு அடிப்படையிலேயே பெரும் வேறுபாடு உள்ளது. சவார்க்கரும், ஜவஹர்லால் நேருவும்கூட கடவுள் மறுப்பாளர்கள் தான். பெரியாரின் நாத்திகம் இவர்களிடமிருந்து வேறுபட்டது. அறிவியல் பூர்வமான நாத்திகத்திற்கும், சமுதாய விடுதலையை அடிப்படையாகக் கொண்ட பெரியாரிய நாத்திகத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பெரியாரின் எழுத்துக்களிலிருந்தே பார்ப்போம்.
“மற்ற நாட்டில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ளது போன்ற பிறவி, உயர்வு, தாழ்வு பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.
அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள்.
ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல், அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே ஆகும். முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதற்படியாகும்.
...ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே, பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும், அதை நாத்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது”.
– தோழர் பெரியார். குடிஅரசு - 18.6.1949
இதுதான் சமுதாய விடுதலையை அடிப்படையாகக் கொண்ட பெரியாரிய நாத்திகம்.
பார்ப்பன ஆதிக்கத்தின் விளைவே மக்கள் விரோதத் திட்டங்கள்
அண்மைக் காலமாக இந்திய மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான பல சிக்கலான நடவடிக்கைகளை அரசுகள் நடத்தி வருகின்றன. மத்தியில் ஆண்ட அரசுகள், ஆளும் அரசுகள் எவையாக இருந்தாலும் ஏதோ ஒரு மக்கள் விரோதத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்துள்ளன - இருக்கின்றன. அந்த மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு முற்போக்கு அமைப்புகளும் களமிறங்கு கின்றன.
கூடன்குளம், மீத்தேன், விவசாய நிலங்களில் எண்ணெய்க் குழாய்கள், சுற்றுச் சூழலுக்கு எதிரான கட்டுமானங்கள், சுற்றுச்சூழல் விதிகளுக்கே எதிரான திட்டங்கள், பெரும்பான்மை மக்களின் கல்வி, வேலைவாய்புக்கு எதிரான திட்டங்கள், மண்ணின் மைந்தர்களான சிறுபான்மையினரின் குடியுரிமைக்கு எதிரான சட்டங்கள் என எவையாக இருந்தாலும், அவற்றுக்கு எதிரான போராட்டங்களில் முதன்மை எதிர்ப்புச் சக்தியாக, முதன்மை ஆதிக்கவாதிகளாக, பார்ப்பனர்கள் அடையாளப் படுத்தப்படுவதில்லை. பார்ப்பனர்களுக்கு இவ்வளவு அதிகாரங்களை வழங்கிய வெகு மக்களின் கடவுள் பக்தி, இந்து மதம், அதன் சாஸ்திரங்கள், பண்பாடுகள் போன்றவை முதன்மை எதிர்க் காரணிகளாக வெளிப்படுத்தப் படுவதில்லை.
பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, நாத்திகம் என்பவை வேறுபட்ட தளம். மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்ப்பது என்பது வேறுபட்ட தளம் என்று இரண்டையும் பிரித்துப் பார்த்து அணுகும் போக்கு நிலவுகிறது. உண்மையில் இரண்டும் வெவ்வேறு தளங்கள் அல்ல.
இந்து மதமும், அதன் சாஸ்திரங்களும், கடவுள் பக்தியும் இந்தியப் பகுதி மக்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன. அதன் காரணமாகத்தான் பல நூற்றாண்டுகளாகப் பார்ப்பனர்கள் சமுதாய அதிகாரத்தைப் பெற்றுள்ளார்கள். அந்த சமுதாய அதிகாரம் தான் இன்று வரை அவர்களுக்கு அரசியல், பொருளாதாரம், அறிவியல், விளையாட்டு, கலை, பண்பாடு போன்ற அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கத்தை வாரி வழங்கி வருகிறது.
இந்து மதத்தால் பார்ப்பனர்களுக்குக் கிடைத்த சமுதாய ஆதிக்கம் தான் இந்தியப் பகுதியில் அனைத்துவகைச் சுரண்டல்களுக்கும், அனைத்து நாட்டுச் சுரண்டல் காரர்களுக்கும் அனுமதி வழங்குகிறது. அனைத்துச் சுரண்டல்களையும் பாதுகாக்கிறது. அண்மையில் நடந்த ஒருசிலவற்றை மட்டும் சான்றாகப் பார்க்கலாம்.
இராமாயணத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறு
1984 வெறும் 2 எம்.பி.க்களை மட்டும் வைத்திருந்த பா.ஜ.க, இன்று 300 க்கும் மேற்பட்ட எம்.பி.க் களைக் கையில் வைத்துள்ளது. இவ்வளவு பெரும்பான்மையைப் பிடிப்பதற்கு இவர்கள் இந்த நாட்டு மக்களுக்காக எந்த வகையில் பாடுபட்டார்கள்? பா.ஜ.க.வின் ஏதாவது ஒரு கொள்கை இந்த நாட்டுப் பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக இருக்கிறதா? எதுவுமே இல்லாமல் எப்படி ஆட்சிக்கு வந்தது? அடுத்தடுத்த பாராளுமன்றத் தேர்தல்களை மனதில் வைத்து, உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.க. நடத்திய நாடகங்களைப் பார்ப்போம்.
முசாஹர், நிஷாத், பங்கி போன்ற சில பட்டியலின ஜாதி மக்களைத் தம் வசம் ஈர்ப்பதற்காக, இராமாயணக் கதையைப் பயன்படுத்தினர். சபரி, குகன், சுக்ரீவன், அனுமன் ஆகிய இராமாயணப் பாத்திரங்களுக்கும் மேற்கண்ட ஜாதிகளுக்கும் இராமாயணக் கதையிலேயே இருக்கும் ஒற்றுமைகளைப் பரப்புரை செய்தார்கள். வால்மீகிக்குத் தலித் ஜாதி கடவுள் என்று பட்டங்களை சூட்டத் தொடங்கினார்கள்.
மக்களிடம் ஏற்கனவே ஆழமாகப் பதிந்திருக்கும் இராமாயணச் சிந்தனைகளையே கருவியாக்கி அந்த மக்களையே அடிமைப்படுத்தத் திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ், அதற்கென தனது அதிகாரப்பூர்வ ஏடான ‘பாஞ்சஜன்யா’ வில் ‘சாமாஜிக் நியாய்’ எனும் சிறப்பிதழையே வெளியிட்டது.
இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்கிறோம் எனப் புறப்பட்ட ஆரியசமாஜம் அமைப்பினரும், மேலும் சில பார்ப்பன, உயர்ஜாதிச் சீர்திருத்தவாதிகளும் கி.பி.1898 லிருந்து கி.பி.1983 வரை ஏராளமான பக்தி நூல்களை எழுதி வெளியிட்டனர். பட்டியலின மக்களுக்கு, இந்து மதம் மிகப்பெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என்பது போன்ற தோற்றத்தை இந்த நூல்கள் விளக்கியிருந்தன. அந்த வகையான நூல்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்திற்குப் பயன்பட்டன.
இராமாயணத்தில் வரும் ‘குகன்’ என்ற பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மேடை நாடகங்கள் வடிவமைக்கப்பட்டு கிராமத் திருவிழாக்களில் விடிய விடிய நடத்தப்பட்டன. இந்த ‘குகன்’ என்பவர் கதைப்படி நிஷாத் எனும் பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர். அவரை கதாநாயகராக, கடவுளாக மாற்றியது ஆர்.எஸ்.எஸ்.
அடுத்த சில வருடங்களில் இந்த நடவடிக்கைகளுக்கு மிகநல்ல பலனைப் பெற்றார்கள். கி.பி.1990 ஆம் ஆண்டு அத்வானி அயோத்தியை நோக்கி இராம ரத யாத்திரையை நடத்தினார். உ.பி.யில் முலாயம்சிங் யாதவ் ஆட்சி யாத்திரைக்குத் தடை விதித்தது. சாலைவழிப் பயணம் தடைபட்டது. உடனடியாக காக்ரா நதி வழியாகப் படகுகளில் ஆற்றைக் கடந்து செல்லத் திட்டமிடப்பட்டது.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவிக் கும்பல் காக்ரா நதியைக் கடந்து கோரக்பூர், அசாம்கார், பைசாபாத் போன்ற நகரங்கள் வழியாக அயோத்தியை அடைந்தார்கள். அவர்கள் நதியைக் கடக்க உதவியவர்கள் நிஷாத் ஜாதியினர் ஆவார்கள். நதியைக் கடக்க மட்டும் பயன்படவில்லை. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிஷாத் இன மக்கள் மசூதி இடிப்பிலும் நேடியாகப் பங்கேற்றனர்.
நிஷாத் ஜாதி பட்டியலின மக்களை மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களையும் இதே வழியில் வீழ்த்தினார்கள். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தலைவன், ஒரு கதாநாயகன், ஒரு கடவுள், ஒரு கோவில் எனத் தனித்தனியாகப் பிரித்து, ஏற்கனவே அழுகிப்போயிருந்த ஜாதிச் சமூகத்தை மேலும் மேலும் மட்கிப்போக வைத்தனர்.
தொடர்ச்சியாக இராமாயணம், மகாபாரதம், சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கூறி, ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கதாநாயகரை உருவாக்கி, அவருக்குச் சிலை வைத்து, விழா நடத்தி, அவரைக் கடவுளாக்கி, அணிதிரட்டி 2014 இல் ஒட்டு மொத்த ஆட்சி அதிகாரத்தையும் பார்ப்பன மயமாக்கிக்கொண்டார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிஷாத் இனத்தைக் கைப்பற்ற குகனை முன்னிறுத்தி அவரைக் கடவுளாக்கியது போலவே, சாஜ்வாதி ஜனதா கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அதே நிஷாத் இனத்தைச் சேர்ந்தவர் என இதே புராணங்களால் கூறப்படும் ‘ஏகலைவனை’க் கையிலெடுத்தன. முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் போட்டி போட்டுக்கொண்டு ‘ஏகலைவன்சிலை’களை நிறுவினார்கள். ஏகலைவன் விழாக்களை நடத்தினார்கள்.
ஆனால் ஏகலைவனே, குகனோ யாாராக இருந்தாலும் இந்து மதப் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட கதை மாந்தர்கள் தானே? அவர்கள் அனைவரையுமே பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கவிவ்லை. ஆம், சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் உயர்த்திப் பிடித்த ஏகலைவனை பா.ஜ.க.வும் உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியது. இறுதியில் பா.ஜ.க.பார்ப்பனர்களே வென்றார்கள்.
இதுபோன்ற பல வரலாற்று உண்மைகளை “வலைவிரிக்கும் இந்துத்துவா” எனும் நூல் விரிவாக விளக்கியுள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் கடந்த 30 வருடங்களுக்குள் நடந்தவை தான். அதற்கு முன்பும் பல நூற்றாண்டுகளாக இதே பக்தியையும், மதத்தையும், புராணங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் பார்ப்பனர்கள் தொடர்ச்சியாக ஆதிக்கத்தைத் தக்கவைத்து வருகிறார்கள்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தோழர் அம்பேத்கர் “இந்து மதத்தின் புதிர்கள்”, “இராமனும், கிருஷ்ணனும் ஒரு புதிர்”, “ ஜாதியை ஒழிக்கும் வழி” என்பது போன்ற பல ஆழமான நூல்களை எழுதியுள்ளார். 1927 இல் மனுசாஸ்திரத்தைக் கொளுத்தினார். அம்பேத்கரின் கருத்துக்களை வடநாடுகளில் உள்ள ஏதாவது ஒரு இயக்கம் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தால் உ.பி.யின் பட்டியலின மக்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் வலைக்குள் வீழ்ந்திருக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் பெரியாரும், திராவிடர் கழகத்தினரும் இதைச் சரியாகச் செய்தனர். தோழர் பெரியார், 1922 இல் காங்கிரஸ் தலைவராக இருந்த போது, காங்கிரஸ் மாநாட்டிலேயே “இராமாயணத்தையும், மனுசாஸ்திரத்தையும் கொளுத்த வேண்டும்” என்றார்.
தனது இறுதிநாள் வரை இராமரையும், விநாயகரையும், இராமாயணத்தையும், இந்து மதக் கடவுளர்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்தார். சில கடவுளர்களை பொதுவெளியில் போட்டு உடைத்தார். பல கடவுளர்களை உடைப்பேன் என நாள் குறித்தார். கிராமம் கிராமமாகப் பயணித்து, அடித்தட்டு மக்களை நாத்திகர்களாக்கினார். கடவுள், மதம் குறித்த பயத்தைப் போக்கினார். அனைத்து வாழ்வாதாரச் சிக்கல்களிலும் பார்ப்பனர்களை முதன்மை எதிரிகளாக அம்பலப்படுத்தினார்.
அதன் விளைவாகத்தான் இன்று தமிழ்நாடு பொருளாதாரம், கல்வி, மருத்துவம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போன்ற பல துறைகளிலும் முன்னணி மாநிலமாக வளர்ந்து வருகிறது. பெரியாரிய நாத்திகமே இந்த வளர்ச்சிக்கான அடிப்படைக் காரணம்.
மாறி மாறி வரும் மத்திய அரசுகள் கொண்டு வரும் ஒவ்வொரு மக்கள் விரோதத் திட்டத்தையும் எதிர்க்கும் போது, அந்தத் திட்டங்களின் தீமைகளைப் பற்றி மட்டும் விளக்கிக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்டுவதற்கு உரிய அதிகாரங்களைப் பார்ப்பனர்களுக்கு வழங்கிய மதத்தையும், கடவுளர்களையும், அது தொடர்பான சிந்தனைகளையும் அழிக்காமல் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் நம்மால் கொண்டு வர இயலாது.
அண்மைக்காலமாக தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில்கூட, பெண்ணிய விடுதலைப் போராட்டங்களில்கூட இந்து மதத்தையும், பார்ப்பனர்களையும் உரசாமல், அவர்களது மனம் கோணாமல் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
பார்ப்பனர்களுக்குச் சமுதாய ஆதிக்கத்தை வழங்கும் இந்து மதத்தை அழிக்காமல், குறைந்தபட்சம் அந்த மதம் தான், அந்த இந்து வாழ்வியல்தான் நமக்கு முதன்மை எதிரி என்பதை அடையாளப்படுத்துவது கூட இல்லாமல் நடக்கும் எதிர்வினைகளால் எந்தப் பயனும் இல்லை.
“கடவுளை மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக்கில்லாமல் கடவுளுக்கும், மோட்சத்திற்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்யமுடியாது என்பதுறுதி.
ஏனெனில் அரசியல், சமுக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக்கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளையாலும், மோட்ச சாதனங்களாலும், சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவைகளாகும். ஆகையால்தான் அவ்விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்கிறேன்”.
– தோழ பெரியார் 'குடிஅரசு' - 21.05.1949
நாத்திகம் என்றால் அது ஏதோ அறிவியல் விளக்கங்கள், அவை பற்றி பிறகு பார்க்கலாம். முதலில் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்க்கலாம் என்ற ரீதியில் எதிர்வினையாற்றுபவர்கள் மேற்கண்ட பெரியாரின் வரிகளைப் படித்து அவைபற்றி விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
- அதி அசுரன்