perugaamanallur killingsவரலாறு என்ற சொல்லுக்கு அகராதி, ‘ஆய்வின் மூலம் பெறப்பட்ட அறிவு, கடந்தகால நிகழ்வுகள், நினைவுகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள்’ என்று பொருள் கூறுகிறது. அதை நாம் ‘கடந்து வந்த பாதை’ என்று பொருள் எடுத்துக் கொள்வோம். ‘வந்த வழி தெரியாதவர்களுக்கு போகும் வழி புரியாது’ என்று சொல்வார்கள். நாம் வரலாற்றை நினைவுகூறக் காரணம் கடந்தகால தியாகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்கும் நிகழ்ந்தவற்றைச் சொல்லி பெருமை பேசுவதற்கும் மட்டுமல்ல. அந்த தியாகமும் வீரமும் அடுத்த தலைமுறைக்கு வழி காட்ட வேண்டும் என்பதற்காகவும் தான்.

1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் வெள்ளையரின் அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தை அடக்குவதற்காக ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ‘மாயக்காள்’ என்ற ஒரு பெண் உள்பட 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் வலி மிகுந்த வடுவான இந்நிகழ்வு நடந்து இந்த ஆண்டோடு 100 ஆண்டுகளாகின்றன.

எளிய மக்கள் நீதிக்காகப் போராடிய வரலாற்றுப் பதிவுகளை நாம் இலக்கியங்களில் பார்த்திருக்கிறோம். அத்தகைய மக்கள் வரலாற்றில் கடந்த நூற்றாண்டின் ஒரு முக்கிய பதிவுதான் தென்னக ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் நடந்த அந்தக் கொடூரச் சம்பவம். உரிமைக்காக 17 பேர் குண்டடிபட்டு உயிரிழந்த தியாக வரலாறு!

இந்தப் போராட்டம் உலக வரலாற்றில் இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் கொடூரமான குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்றது. ஒருவரைப் பிறப்பின் அடிப்படையில் குற்றவாளி என்றும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைக் கொடூரமானவர்கள் என்றும் அடையாளப் படுத்தி அவரது செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது ஐரோப்பிய சூழலில் இருந்து உருவாகிய கருத்தாக்கம்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு நாடோடி குடிகளைச் சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றினர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். புரட்சிக் காலத்தில் பிரான்சு கடும் பொருளாதார நெருக்கடியைக் கண்டது; விளைச்சல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உணவுப் பொருள்களின் விலை எகிறியது; இதனைக் காரணம் காட்டி தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்; அவர்கள் வேலைத்தேடி நாடெங்கும் திரிந்தனர்; கிராம மக்கள் நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்தனர்; குறிப்பாக ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

1778, 1784 ,1789 போன்ற வருடங்களில் புரட்சிக்காக நடைபெற்ற பெருவாரியான கலகங்கள் இந்த விலையேற்றத்தின் விளைவாகவே நடைபெற்றன. உணவு மற்றும் உணவுப் பொருள்களின் விலையினைக் குறைக்க வேண்டிய சூழ்நிலைகளை இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தின என்பதும் குறிப்பிடத் தக்கது. இதேநேரம் பாரிசிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தக் காலகட்டத்தில் சட்ட சீர்குலைவுடன் பொருளாதார நெருக்கடியும் பிரான்சில் உருவாகியது. வீடு இல்லாதவர்களது எண்ணிக்கை அதிகரித்தது; வேலையில்லா திண்டாட்டமும் விலை உயர்வும் பெருவாரியான மக்களை உணவுக்குக் கையேந்தும் நிலைக்கும் திருடி வாழும் நிலைக்கும் தள்ளியது.

இந்நிலைக்கெதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடியபோது, ஆளும் வர்க்கம் அவர்கள்மீது அடக்குமுறையை ஏவிவிட்டது. மக்கள் அதற்குப் பதிலடி கொடுக்க முயற்சிக்கும் போது அவர்களை வன்முறையாளர்கள் என்றும் அபாயகரமான வகுப்பினர் என்றும் முத்திரை குத்தியது. அதில் பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்கள், நாடோடிகள் போன்ற ஏற்கனவே நெருக்கடியில் இருந்தவர்களைக் கொடூரமானவர்கள் என்று அறிவித்து, அவர்களின் பெயர்களைப் பதிவு செய்தது. அவர்களின் எண்ணிக்கை மற்றும் இயல்புகளைக் கண்டறிந்து, அவர்களது செயல்பாடுகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வந்தது.

பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்த போராட்டங்களில் ஈடுபட்டிருந்த வீடு இல்லாதோர், நாடோடிகள் போன்றவர்களைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்க 1824 இல் "லாக்ரன்சி சிஸ்டம்" என்ற கொடூரச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அரசு அதிகாரத்திற்கு எதிராகவும் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து போன தனிநபர் சொத்துகளுக்கு எதிராகவும் மக்கள் கிளர்ந்தெழாமல் இருக்க அவர்களை அபாயகரமான வகுப்பினர் என வகைப்படுத்தி ஒடுக்கினர்.

மேலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் குற்றவாளிகளை, உடல் அமைப்பை வைத்து வகைப்படுத்தும் சூழலும் உருவாகத் தொடங்கின. சொல்லப்போனால் தட்டையான மூக்கு, இறுகிய தாடை, சின்ன தலை, ஒற்றைக்கண், படர்ந்த பெரிய கண்ணிமைகள், பெரிய காது இப்படியான அமைப்பை உடையவர் அனைவரும் பெரும்பாலும் உளவியல் ரீதியாக ‘குற்ற நோக்கம்’ உடையவர்களாக இருப்பர் எனக் கருதப்பட்டது. ஒருவரது உடலமைப்பு பிறப்பின் அடிப்படையில் அமைவதால், இந்த சிந்தனைகள் குற்றவாளிகளின் பிறப்பின் அடிப்படையில் உருவாகின்றன என்ற கருத்தாக்கமும் மறைமுகமாக உருவாக்கப்பட்டது.

ஒருவருடைய உடல் அமைப்பிற்கும் அவரது குற்றச் செயல்களுக்கும் எந்த தொடர்புமில்லை; அவ்வாறு கருதுவது அறிவியல் பூர்வமற்றவை; என்பது தற்கால அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற அறிவியல் பூர்வமற்ற ஐரோப்பிய கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டுதான் ‘குற்றப் பரம்பரை’ என்ற கருத்தாக்கம் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களால் இந்தியாவில் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் தற்போது இருக்கும் இந்திய ஒன்றியத்திற்குள் முதலில் நுழைந்தபோது இந்த பெரும் நிலப்பரப்பு பல்வேறு சிற்றரசுகள் மற்றும் பேரரசுகளால் ஆளப்பட்டு வந்தது. வெள்ளையர்கள் அந்த அரசுகளுடன் சண்டையிட்டும் ஏமாற்றியும் வெற்றிகொண்டு அந்த நிலப்பரப்புகளை எல்லாம் இணைத்துத்தான் தங்களது காலனி ஆதிக்கத்தை நிறுவினர். அவ்வாறு அரசுகளை வென்று, தனது ராஜ்ஜியத்தை உருவாக்கும்போது அந்த தேசங்களில் பல சுதந்திரமான இனக்குழுக்கள் இருந்துவந்தன. அவை, பெரும்பாலும் அப்போது இருந்த அரசுகளுக்குக் கட்டுப்படாமல் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொண்டு சுயாட்சி பெற்ற தன்னரசு குழுக்களாக இருந்து வந்தன.

பிரிட்டிஷாரால் இந்த சுதந்திரமான இனக்குழுக்களை முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர இயலவில்லை. அவர்களைக் கட்டுப்படுத்த முயலும்போது, பிரிட்டிஷாருடன் மிகவும் மூர்க்கத்தனமாக மோதினர். ஆங்கிலேயர் ராணுவ பலத்தால் அவர்களை அடக்கி விட்ட போதிலும், அவர்களை நிரந்தரமாக தங்களின் நிர்வாகச் சட்டங்களின்கீழ் கொண்டுவர இயலவில்லை. அவ்வாறு கொண்டு வருவதற்கு சில கடுமையான சட்டங்கள் தேவைப்படுவதாகக் கருதினர். அதனுடைய உச்சக்கட்ட வடிவமே குற்றப் பரம்பரைச் சட்டம். இதன்கீழ் நாடோடி இனக்குழுக்களும், சில மலைவாழ் இனக்குழுக்களும், சில சமவெளி குடிநிலை சாதிகளும் கொண்டுவரப்பட்டன.

பல மாறுபட்ட தேசிய மொழிகளின் கூட்டுக் கலவையாக இந்தியா திகழ்ந்ததால், அவர்களுக்குக் கண்காணிப்புகூட குழப்பமாகத்தான் இருந்தது. பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்தின் நவீன பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் கடுமையாகச் சுரண்டிய காரணத்தால் நாடோடி மக்களும், 17 ஆம் நூற்றாண்டு முதல் பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகிக் காட்டுப்பகுதியில் வாழத்துவங்கினர். இவர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை சராசரி மக்களிடமிருந்து வேறுபட்டு இருந்தன. அந்த இனங்களைச் சேர்ந்த சிலர் வறுமையின் காரணத்தினால் திருட்டுத் தொழிலிலும் ஈடுபட்டார்கள். பிரிட்டிஷ் அரசு திருட்டை ஒழிப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த இனத்தையே குற்றவாளிகளாக அறிவித்துத் துன்புறுத்தத் தொடங்கியது.

முதலில் வங்காளம் பகுதியைச் சுற்றியிருந்த தக்கி இன மக்கள்தான் ஒரு குறிப்பிட்ட இனத்தையே குற்றவாளிகளாக அறிவித்துத் துன்புறுத்தும் கொடூரச் சட்டத்தால் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ‘தக்கி’ இனத்தவர்களைத் தூக்கிலிட்டும் நாடு கடத்தியும் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்தும் வேட்டையாடினர். குறிப்பாக 1835 முதல் 1850 ஆம் ஆண்டு வரை இந்த வேட்டை நடந்தது. இதனை அரசுக்கு எதிரான போராட்டங்களையும் ஒடுக்கப் பயன்படுத்தலாம் என்று நினைத்த பிரிட்டிஷ் அரசு, இந்த வேட்டையை நாடு முழுவதும் நடத்துவது என முடிவு செய்தது.

ஆங்கில அரசு 1861 ஆம் ஆண்டு இந்தியக் காவல் சட்டத்தை உருவாக்கியது. அதன்படி ஐரோப்பியப் பாணியிலான காவல் அமைப்பு பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டது. அது ஏற்கனவே இருந்து வந்த பாரம்பரிய காவல் அமைப்பைச் சட்டவிரோதம் ஆக்கியது. அந்த வகையில்தான், தென்தமிழகத்தில் பாரம்பரிய அமைப்பின்படி திசை காவலாளிகள் ஆகவும், ஸ்தலக் காவலாளிகள் ஆகவும் இருந்து வந்த கள்ளர், மறவர், வலையர் போன்ற சாதியினர் தங்கள் தொழில்களை இழக்க நேரிட்டது. அவர்களுக்குக் காவல் மானியமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதோடு, அதுவரை அவர்கள் பெற்றுவந்த காவல் கூலியும் சட்ட விரோதமாக்கப்பட்டது. இதனால் அவர்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டனர். அதனை ஒட்டி போராட்டங்கள் வெடித்தது. அதனையே காரணம் காட்டி அவர்களையும் குற்றப் பரம்பரையாக பிரிட்டிஷார் அடையாளப்படுத்தினர்.

பிரிட்டிஷ் காலனிய அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகள் மற்றும் நவீன பொருளாதாரம் இந்தியச் சமூகத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாகப் பல பழமையான சமூகங்களின் பாரம்பரிய தொழில்கள் ஒழித்துக்கட்டப்பட்டன. இதனால் ஊர்சுற்றி வணிகம் செய்யும் சில நாடோடி இனக்குழுக்கள் தங்கள் அன்றாட வருமானத்தை இழக்கத் தொடங்கினர். மேலும், இவர்கள் பிரிட்டிஷாரின் நவீன சந்தைப்படுத்தல் கொள்கைக்கு எதிரிகளாக இருந்தனர். அவர்கள் ஊர் ஊராக மக்களது வாழ்விடங்களுக்குச் சென்று நேரடியாகப் பொருள்களைப் பண்டமாற்று முறையில் விற்றனர். இது ஒரு இடத்தில் கூடி பொருள்களை விற்கின்ற நவீன சந்தை முறைக்கு எதிராக இருந்தது. எனவே, இந்த நாடோடி வணிகர்களைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலையாக வைக்க வேண்டிய அவசியம் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்டது. இதனால் நாடோடி வணிகர்களும் சந்தை வணிகர்களும் பல இடங்களில் மோதிக் கொண்டனர்.

தங்களது பாரம்பரிய தொழில் நசிந்துபோவதை எண்ணி ஆத்திரமடைந்த நாடோடி வணிகர்கள், சந்தை வணிகர்களின் அங்காடிகளையும் கிழங்குகளையும் பொருள்களையும் கைப்பற்றும் நடவடிக்கைகளில் இறங்கினர். அதனாலேயே அவர்கள் கொள்ளையிடும் சமூகமாக அடையாளப் படுத்தப்பட்டனர். இதில் குறிப்பாக பஞ்சாரக்காரர்கள், லம்பாடிகள், குறவர்கள் போன்ற இனக்குழுக்கள் பாரம்பரியமாக உப்பு வணிகமும் அவற்றோடு சேர்த்து சில தானிய வகைகளையும் கால்நடைகள் மூலம் ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்து வந்தனர். ஆங்கிலேய அரசு 1880-களில் உப்பு உற்பத்தியைத் தன் வசப்படுத்தியது. மேலும், உற்பத்தி முழுக்க தானே மேற்கொள்ள முடிவு செய்தது. இதனால் ஊர் சுற்றும் வணிகர்கள் உப்பினை அரசிடமிருந்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தாங்கள் நெடுங்காலமாகக் கால்நடைகளைக் கொண்டு எடுத்துச்சென்ற பொருள்களை, அரசாங்கம் ரயில் மூலம் எடுத்துச் செல்வதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவர்கள், எதிர் நடவடிக்கைகளில் இறங்கினர். இதனைக் காரணம் காட்டி இவர்கள் ரயில் கொள்ளையர்களாக அடையாளப் படுத்தப்பட்டனர்.

மேற்கூறியச் சூழ்நிலைகளை மையமாகக் கொண்டுதான் இந்தியாவில் குற்றப் பரம்பரைச் சட்டம் இயற்றப்பட்டது. இறுதியில் வட இந்தியாவில் கள்ள நாணயம் தயாரிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்த கூட்டத்தாரைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிதான் குற்றப் பரம்பரைச் சட்டம் என வடிவத்தைப் பெற்றது. முதலில் கைது ஆணை இல்லாமல் கைது செய்யவும், ஜாமீனில் வெளியே வர முடியாதபடிக்கும் சில சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இறுதியில் இவற்றையெல்லாம் தொகுத்துக் குற்றத்தொழில் செய்பவர் எனக் கருதப்படுகின்ற இனக்குழுக்களை வகைப்படுத்தி, அவர்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களை ஒரு இடத்திற்குள் கட்டுப்படுத்தி வைக்கின்ற வகையில் 1871 ஆம் ஆண்டு குற்றப் பரம்பரைச் சட்டம் இயற்றப்பட்டது.

1871 ஆம் ஆண்டு குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) வங்காளம், ஐக்கிய மாகாணங்கள், வடமேற்கு எல்லைப் பகுதிகள் மற்றும் பஞ்சாப் ஆகிய வட இந்தியப் பகுதிகளில் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை மற்ற பகுதிகளுக்கும் அமுல் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருந்தது. எனவே, 1896-ல் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. 1896-ல் செய்யப்பட்ட திருத்தங்கள் மேலும் கூர்மையாக்கப்பட்டு 1911 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

இதற்கிடையில், ஆங்கிலேய காலனி அரசு 1880-ல் புதிய வனப் பாதுகாப்பு சட்டத்தினை இயற்றியது. அதுவரை அந்தக் காடுகளையே தங்களது சொந்தமாகக் கருதி வாழ்ந்து வந்த மலைவாழ் மக்களின் வேட்டையாடும் தொழில் முற்றிலும் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் வாழ்வியல் தேவைக்காகத் தொடர்ந்து வேட்டையாடியும் வனங்களில் கிடைக்கின்ற அபூர்வ பொருள்களை எடுத்துச் சென்று வணிகம் செய்தும் வந்தனர். அதனையே காரணம் காட்டி அவர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று கூறி அவர்களும் குற்ற மரபினராக அறிவிக்கப்பட்டனர். அந்த வரிசையில் ‘ஏனாதி’கள் உள்பட மலைவாழ் குடிகள் குற்றப் பரம்பரையாகக் கருதப்பட்டனர்.

குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) திருத்தங்களுக்குப் பிறகு 1911-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, அதில் மேலும் சில சாதிகளையும் பழங்குடிகளையும் குற்ற மரபினராக அறிவித்து, அவற்றைப் பதிவுசெய்யத் துவங்கினர். அதன்படி, சென்னை மாகாணம் முழுவதும் மொத்தம் 14 லட்சம் மக்கள் இச்சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

குறிப்பாகச் சொல்லப்போனால், ஆங்கில அரசு யாரைக்கண்டு எல்லாம் அச்சப்பட்டதோ, யார் தங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்களோ, அவர்கள் எல்லோருக்கும் எதிராக இச்சட்டத்தைப் பயன்படுத்தியது. இந்தச் சட்டம் படிப்படியாக இந்தியா முழுவதிலும் விரிவாக்கப்பட்டது. சுமார் 213 சாதிகளைக் குற்றப் பரம்பரையினர் பட்டியலில் ஆங்கிலேய அரசு இணைத்தது. 1911-ல் இயற்றப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டம் சென்னை மாகாணத்திற்கு விரிவுபடுத்தப்பட்ட போதிலும், அச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதி வரையறைகள் 1913 மே மாதத்தில் தான் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் 89 சாதிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றன.

மாநிலங்கள் மற்றும் மாவட்டவாரியாகக் குற்றப் பரம்பரைகளாக அறிவிக்கப்பட்டவர்களின் பட்டியல்:

முதலில் சென்னை இராஜதானியில் இருந்த தெலுங்கு மாவட்டங்களில் குற்றப் பரம்பரைகளாக அறிவிக்கப்பட்டவர்களைப் பார்க்கலாம்.

கன்ஜம் மாவட்டத்தில் 1917-ல் தெலுசு, பாமுலாஸ் பழங்குடிகளும்,1923-ல் யுன்தாஸிஸ் என்ற பழங்குடியும் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டன.

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 1914-ல் கொண்ட பாட்டூஸ் என்ற சாதியும், 1915-ல் ரோஸிஸ் என்ற பழங்குடியும், 1916-ல் கிண்டாலி என்ற பழங்குடியும், 1921-ல் சாலுங்காஸ் என்ற பழங்குடியும் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டன.

கோதாவரி மாவட்டத்தில் 1913-ல் டெங்க தாசாரிகளும், 1915-ல் நக்கலார்களும், 1925-ல் அணிப்பால் மாலாக்களும், எஜென்ஜி மாவட்டத்தில் 1926-ல் ஒரிய டொம்பர்களும் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டன.

கிருஷ்ணா மாவட்டத்தில் 1913-ல் டொங்க எரக்குலக்களும், டொங்க ஒட்டர்களும் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

குண்டூர் மாவட்டத்தில் 1923-ல் ஜாகிர் பள்ளி மாதியாக்களும், நெல்லூர் மாவட்டத்தில் 1913-ல் டொமராக்களும், கர்னூல் மாவட்டத்தில் 1918-ல் போயர்களும், 1923-ல் சுகாலிகளும் இச்சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

பெல்லாரி மாவட்டத்தில் 1913-ல் டொங்க எறக்குலர்களும், 1923-ல் டொங்க தாசாரிகளும் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

அனந்தப்பூர் மாவட்டத்தில் 1923-ல் டொங்கஊர் குறவர்கள் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

கடப்பா மாவட்டத்தில் 1923-ல் தோகை மலைக் குறவர்களும், கேப்மாரிகளும் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

சித்தூர் மாவட்டத்தில் 1924-ல் ஏனாதிகளும், இருளர்களும் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

இனி, தமிழ்நாட்டில் எந்தெந்த இனக்குழுக்கள்/ சாதிகள் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டன என்பதைப் பார்ப்போம்.

வட ஆற்காடு மாவட்டத்தில் 1913-ல் தோகைமலை குறவர்களும், சேலம் மேல்நாடு குறவர்களும், 1914-ல் வாகனூர் பறையர்களும், ஜோகிகளும், 1916-ல் சக்கரப்பள்ளிக் குறவர்களும், 1922-ல் தொட்டிய நாயக்கர்களும் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1913-ல் வேப்பூர் பறையர்களும், 1914-ல் ஜோகிகளும், 1923-ல் கல்ஒட்டர்களும் குற்றப் பரம்பரைகளாக அறிவிக்கப்பட்டனர்.

தென்னாற்காடு மாவட்டத்தில் 1913-ல் ஆத்தூர் கீழ்நாடு குறவர்களும், 1914-ல் வெள்ளிக்குப்பம் படையாட்சிகளும் இச்சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் 1923-ல் உப்புக்குறவர்களும், 1924-ல் சக்கரப்பள்ளிக் குறவர்களும், மொண்டக் குறவர்களும், 1934-ல் சுரமறை ஒட்டர்களும் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1918-ல் வலையர்களும், 1922-ல் தொட்டிய நாயக்கர்களும் இச்சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

சென்னை நகரத்திற்குள் வாழ்கின்ற குறவர்கள் 1924-ல் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

திருச்சி - தஞ்சை மாவட்டங்களில் 1913-ல் கந்தர்வகோட்டைக் குறவர்களும், 1915-ல் கூத்தாப்பல் கள்ளர்களும், 1917-ல் ஊராளிக் கவுண்டர்களும், 1923-ல் பெரிய சூரியூர் கள்ளர்களும், 1924-ல் வேட்டுவக் கவுண்டர்களும் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் 1918-ல் பிறமலை கள்ளர்களும், 1915-ல் செட்டிநாட்டு வலையர்களும், 1923-ல் மற்ற வலையர்களும், 1922-ல் தொட்டிய நாயக்கர்களும் இச்சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 1915-ல் உப்புக்குறவர்களும், 1916-ல் வடுவார்பட்டிக் குறவர்களும், கரும்பவரர்களும், 1923-ல் செம்பநாட்டு மறவர்களும், 1932-ல் காலாடி என்ற பள்ளர் பிரிவினரும், 1933-ல் ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர்களும், 1934-ல் கல்ஒட்டர்களும் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1919-ல் பூலம் மறவர்களும், 1932-ல் கோயில்பட்டி உப்புக்குறவர்களும் இதன்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

இந்தச் சட்டத்தின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் எந்த ஒரு சாதியையும் குற்றப் பரம்பரையாக அறிவிக்கலாம்; அதை நீதிமன்றம் கேள்விகேட்க முடியாது; குற்றவாளி-நிரபராதி என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது; ஒரு சாதியில் பிறந்த அனைவரும் பிறவி குற்றவாளிகள்தான் என்றது அந்தச் சட்டம். பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாதியைச் சேர்ந்த 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர் மற்றும் புதிதாகத் திருமணமானவர்கள்கூட விதிவிலக்கு கிடையாது.

சூரியன் தோன்றி மறையும் வரை அவர்கள் வீட்டிலிருந்து வேறு எங்காவது ஊர்களுக்குப் போய்விட்டு வர வேண்டுமென்றால் கூட ராதாரிச் சீட்டு (கிராம தலைவர்களால் வழங்கப்படும் அனுமதிச் சீட்டு) வாங்க வேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால் தலையாரிகூட அவரைக் கைது செய்யலாம். சந்தேகம் வரும்படி ஒருவர் நடந்துகொண்டால்கூட அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உண்டு. இந்தச் சட்டத்தின்கீழ் ஒரு தீப்பெட்டியும் கத்தரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர்மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்படி ஏராளமான அடக்குமுறைப் பிரிவுகள் அந்த சட்டத்தில் இருந்தன.

இச்சட்டத்தினால் காவல்துறையின் அடக்குமுறை அத்துமீறி இருந்தது. ராதாரிச் சீட்டு வாங்க அதிகாரிகளுக்கு இரண்டு இடங்களில் லஞ்சம் தரவேண்டி இருந்தது. இந்த லஞ்சப்பணத்திற்காக அம்மக்கள் ஒரு கோழியை விற்று தான் சமாளிக்க வேண்டியிருந்தது எனில் அடக்குமுறையைப் புரிந்து கொள்ளலாம். இந்த அடக்குமுறையால் விவசாய வேலை கெட்டுப் போனது, வறுமை வளர்ந்தது, பொய் வழக்குகளால் நீதிமன்றங்களுக்கு அலைந்து சொற்ப நிலங்களையும் அம்மக்கள் இழந்தனர்.

தமிழகத்தில் கைரேகைச் சட்டத்தில் யாரையெல்லாம் சேர்க்க வேண்டும் என்ற பட்டியலைத் தயாரித்து அனுப்ப மாவட்ட போலீசாருக்கு 1914-ல் மதராஸ் போலீஸ் தலைமை உத்தரவிட்டது. 4.5.1914 -ல் மதுரை கீழக்குயில்குடி பகுதியில்தான் தமிழ்நாட்டில் முதன்முதலில் இச்சட்டத்தை ஆங்கிலேயர் காவல் துறை அறிமுகப்படுத்தியது.

மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி அந்த பட்டியலில் கள்ளர்கள் பதிவு செய்யப்படுவதை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக இந்த சட்டத்தின்கீழ் 320 ஆண்களில் 70 பேர் தண்டிக்கப்பட்டார்கள். நீதிபதியுடைய பரிந்துரையினை ஏற்றுக் கொண்டு குற்றப் பரம்பரையாகப் பிரகடனம் செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்கள். அதன் காரணமாக 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொண்டவர்கள் தங்கள் இருப்பிடம் மற்றும் வெளியூர் செல்லுதல் குறித்த தகவல்களைக் குற்றப் பரம்பரையினர் சட்டப்பிரிவு 10-ன்படி அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கைரேகைச் சட்டத்தின்படி பதிவு செய்யும் வேலை மதுரை திருமங்கலம் தாலுகாவில் தொடங்கியது. காளப்பட்டி, போத்தம்பட்டி, பெருங்காமநல்லூர், தும்மக்குண்டு, குமரன் பட்டி ஆகிய ஊர்கள் முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டன. பதிவுசெய்தல் வேகமாக நடந்து வந்தது என்றாலும், அது அவ்வளவு எளிதானதாக இல்லை.

பதிவு செய்து முடிப்பதற்கு, மாவட்ட உரிமையியல் நீதிபதியாக இருந்த ரெய்லி 1920 ஜனவரி முதல் தேதிவரை காலக்கெடு விதித்திருந்தார். ஆனால், தேர்வு செய்யப்பட்டிருந்த 158 கிராமங்களில் 11 கிராமங்களில் மட்டுமே பதிவு செய்யும் பணி முடிக்கப்பட்டு இருந்தது.

கள்ளர் மக்கள் தொகை சுமார் 60,000 ஆக இருந்தபோதும் 3000 பேர் மட்டுமே பதிவு செய்தனர். மேலும், ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்வதற்கு வந்துள்ளனர் என்ற தகவல் அறிந்து அதிகாரிகள் கோபம் கொண்டனர். அதிக எண்ணிக்கையில் கள்ளர்களைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமானது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்து கூறிவந்தார். அதுமட்டுமல்லாமல் குற்றப் பரம்பரையாகப் பதிவு செய்த ஒவ்வொருவரும் தன் இருப்பிடத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பகல் 11 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அரசின் குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு அப்பாவி மக்களிடம்கூட எதிர்ப்பு கிளம்பியது. நாடெங்கிலும் இச்சமூக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். அதேநேரத்தில் அந்த சமுதாயத்தில் செல்வாக்குடனும் வசதியுடனும் இருக்கும் நபர்கள்மீது போலீசாரால் குற்றம்சாட்ட முடியவில்லை. மதுரை மாவட்டம் பிறமலை கள்ளர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிகாரிகள் இந்தச் சட்டத்தை வேகமாக அமல்படுத்தி வருகையில், இறுதிக்கட்டமாக பெருங்காமநல்லூர் கிராமத்திற்கு வந்தனர். அந்தச் சட்டத்திற்கு அடிபணிய அந்தக் கிராம மக்கள் மறுத்தனர். சத்தியத்துக்கும் நீதிக்கும் உகந்த சட்டங்களுக்குத்தான் நாங்கள் கட்டுப்படுவோம் என்றும் சமூகநீதிக்கு எதிரான சட்டத்திற்கு தாங்கள் கட்டுப்பட முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். சட்டத்தை அங்கே அமல்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் மதுரை மாவட்ட ஆட்சியர் தீவிரமாக இருந்தார்.

அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் என்று எண்ணிய ஆங்கிலேய அரசு, அங்கே குதிரைப்படை மற்றும் ஆயுதப் படையோடு வந்து அம்மக்களை அச்சுறுத்தியது. குற்றவாளி - அப்பாவி எனப் பேதமில்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றவாளி எனச் சட்டம் போட்டது தவறு என்று அந்த மக்கள் எடுத்துரைத்த போதிலும், அதை வெள்ளையரசு கேட்க மறுத்தது. பல முறை இந்த வாக்குவாதத்தை அதிகாரிகளிடம் அம்மக்கள் நடத்தினர்.

நாள்களும் நகர்ந்து கொண்டிருந்தன. அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். 2 மார்ச் 1920 அன்று கிராமங்களின் அருகில் ரேகைப்பதிவு அதிகாரிகளுடன் போலீசார் முகாமிடத் தொடங்கினர். கிராமங்களுக்குச் செல்வதற்குமுன் கிராமத்துப் பெரிய ஆள்களும் செல்வாக்கான நபர்களும் போலீசாரை அணுகி, ‘இது பெரிய அநியாயம்; கள்ளர்கள் விவசாயிகள்; காட்டுமிராண்டிகள் அல்ல. எனவே, நீங்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து ரேகை எடுத்தால் அதை ஏற்க மாட்டோம்’ என எதிர்ப்புக்குரல் எழுப்பினர். அத்தோடு, ‘நாங்கள் மதுரைக்குச் சென்று கலெக்டரைப் பார்த்துப் பேசிக்கொள்கிறோம்’ என்றனர். அதையடுத்து அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையினைத் தள்ளிவைத்தனர். பின்னர் அங்கிருக்கும் பெரியவர்கள் மதுரை சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இதனிடையே பெருங்காமநல்லூரில் வசிக்கின்ற ஏழு வயதுக்கு மேற்பட்ட கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள் 1920 ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதி காலை 11 மணிக்குப் பதிவு செய்வதற்காக தனித்துணை ஆட்சியர் முன் ஆஜராக வேண்டும் என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி 29 மார்ச் 1920 அன்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், 1 ஏப்ரல் 1920 அன்று பெருங்காமநல்லூர் மற்றும் பிற கிராமங்களைச் சேர்ந்த அம்மக்கள் கோயிலில் கூடினர். ‘ஆயுதங்களைக் கொண்டு நம்மை அடிபணிய வைக்க ஆங்கில அரசு நினைக்கிறது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து, காவல் நிலையத்தில் கைரேகைப் பதியச் சொல்வது நமக்குப் பெரிய அவமானம். உயிரினும் மானம் பெரிது. இதற்கு அடிபணியாமல் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துப் போராடுவோம்’ என்று முடிவு செய்தனர்.

பெருங்காமநல்லூர் கிராமத்தின் அருகில் காவல்துறையினர் முகாமிட்டனர். போலீஸ் படையினர் வருவதைக்கண்டு மக்கள் உரிமைக்காகக் குரலெழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கிராமத்தினுள் போலீசை நுழைய விடமாட்டோம்; வெளியேறுங்கள்!’ என்று முழக்கமிட்டனர். அந்த நேரத்தில் தலைவர்களுக்கும் போலீசாருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அது பயனற்றுப்போகவே மக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். போலீசார் போராட்டத்திற்குச் செவிசாய்க்காமல் மக்களை நோக்கி முன்நகர்ந்தனர். மக்களுடைய போர்க்குரலை அடக்கத் துணை கலெக்டர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடுமாறு உரிமையியல் நீதிபதிக்கு ஆலோசனைக் கூறினார். அவரது ஆலோசனைப்படி ஆணை கொடுக்கப்பட்டது. துப்பாக்கிச் சப்தத்தைக் கேட்ட இளைஞர்கள் சிலர் விரைந்து பிரிட்டிஷ் போலீஸ் படையை எதிர்கொண்டனர். 

பிரிட்டிஷாரின் துப்பாக்கி 17 பேரின் உயிரைக் காவு வாங்கியது. வீரமரணம் அடைந்த 17 பேரின் உடல்களையும் கட்டை வண்டியில் ஏற்றி, உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டின் போது போராடிய மக்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து உதவியதற்காக ‘மாயாக்காள்’ என்ற வீரப்பெண்மணியை காவலர்கள் தாக்கி, துப்பாக்கியின் கத்தியினால் குத்திக் கொலை செய்தனர். இவ்வாறான காட்டுமிராண்டி துப்பாக்கிச் சூட்டில் நிலைகுலைந்து சிதறியோடிய மக்களில் சுமார் 200 பேரைப் பிடித்து, கையை ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு ஆடு மாடுகளைப் போல் நடைப்பயணமாக சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமங்கலத்திலிருக்கும் நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்தனர் அதிகாரிகள்.

பெருங்காமல்நல்லூர் படுகொலைக்கு எதிரான போராட்டம் 

இவ்வாறு சிறைப்பட்ட மக்களுக்காக வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் ரிமாண்ட் நீதிமன்றத்தில் வழக்காடினார். இவரது பங்களிப்பினால் இந்தப் போராளிகளுக்கு விடுதலை கிடைத்தது. தனது வழக்காடுதலுக்காக எவ்வித பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல் இப்போராளிகளுக்காகத் தொண்டாற்றினார்.

வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் ஒரு மலையாளி. மதுரையில் தங்கி வக்கீல் தொழில் செய்துவந்தார். இவர்தான் முதல்முறையாகக் கைரேகைச் சட்டத்தினை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதற்கு அம்மக்களுக்கு உதவி செய்து வந்தவர். அவரது இத்தகைய முயற்சி 1915-ல் இருந்து தொடங்கியது.

பெருங்காமநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 200-கும் மேற்பட்ட கிராம மக்களை ஒருங்கிணைத்து மதுரையில் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முதலில் நடத்தினார். பெருங்காமநல்லூர் படுகொலையை போலீசார் விசாரிக்கக்கூடாது என்றும் ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும் என்றும் போராட்டம் நடத்தினார். வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப்பின் மீது இம்மக்கள் கொண்ட அன்பின் காரணமாக அப்பகுதி கள்ளர் மக்கள் அவரை ’ரோசாப்பூ துரை’ என்றே அழைத்தனர். அவரது நினைவாக இன்றுவரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டும் வழக்கம் இருக்கிறது. 

பெருங்காமநல்லூர் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது ஏற்க இயலாதது என்றும் அந்தப் பகுதி மக்களின் கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியது. கள்ளர் சமுதாய சீரமைப்புக்காகத் தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேற்ற இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்தது. 

குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் 

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் தஞ்சை திருச்சி மாவட்ட கள்ளர்களைக் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து நீக்க 1911 லியே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசிக் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சை பகுதி ஈச நாட்டுக் கள்ளர்களை மீட்டிருக்கிறார்.

அதேபோல, செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் போராடி அந்தந்த ஜாதிகளைப் பட்டியலில் இருந்து விடுவித்தன.

வழக்கறிஞர் ஜோசப்பிற்கு பிறகு இடதுசாரி தோழர்கள் இச்சட்டத்திற்கு எதிரான பிரச்சாரங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டத்தின் அடிப்படையில் இக்கொடுமைக்கு முடிவு கட்டப் போராடினர்.

இத்தனை எதிர்ப்பிற்குப் பின்பும் தொடர்ந்து நடந்து வந்த இந்தக் கொடுமையை எதிர்த்து வெகுமக்கள் திரள் போராட்டத்தின் தேவையைப் பற்றி திரு. முத்துராமலிங்கத் தேவர், மதுரையில் தோழர். ஜீவானந்தத்திடம் பேசி பிரச்சாரத்திற்கு ஒருங்கிணைத்தார். பின்னர் தோழர். ஜீவா கம்யூனிஸ்ட் கட்சியின் பிற தோழர்களான தோழர் ராமமூர்த்தி, தோழர். சானகி அம்மாள் ஆகியோருடன் சேர்ந்து முத்துராமலிங்கத் தேவரும் மக்களைத் திரட்டி, குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிரான தொடர் பிரச்சாரங்களை, போராட்டங்களை நடத்தினார்கள். உசிலம்பட்டிக்கு அருகே இருந்த கிராமங்களில் இவர்கள் மூவரும் பிரச்சாரம் மேற்கொண்டதாகத் தோழர். ஜீவா தன்னிடம் தெரிவித்திருந்ததை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர். தா. பாண்டியன் தனது, ‘ஜீவாவும் நானும்’ புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். இப்பிரச்சாரங்களால் அம்மக்கள் திரண்டெழுந்தார்கள். இவர்கள் திரள அரசின் கடுமையான ஒடுக்குமுறையும், அதனால் ஏற்பட்ட மோசமான வறுமையும் காரணம்.

‘குற்றப் பரம்பரைச் சட்டம் குறிப்பாக செக்கானூரணி முதல் கூடலூர் வரையிலான பிறமலை கள்ளர் சமூக மக்களைத் திரட்டுவதற்கானப் பிரச்சாரங்களை ஊர் ஊராகச் சென்று திரு. முத்துராமலிங்க தேவர் தோழர். ஜீவா மற்றும் தோழர். ராமமூர்த்தி ஆகிய மூவரும் மேற்கொண்டனர். அந்த காலத்தில் கார் பயணம் என்பது அபூர்வமானது என்பதால் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் சாலையே இல்லாத வரப்புகளில் நடந்து சென்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு இருக்கின்றனர்.

பிரச்சாரம் செய்யச் சென்ற அவர்களுக்கு ஏழ்மையின் பிடியில் இருந்த மக்கள், கயிற்றுக் கட்டிலில் அமர வைத்து மோர் - கூழ் மற்றும் கடித்துக்கொள்ள வெங்காயம் - கருவாடு ஆகியவற்றைக் கொடுத்து அன்பினை வெளிப்படுத்தினார்கள்’ என்று அப்புத்தகத்தில் பதிவு செய்கிறார். குற்றப் பரம்பரை நிகழ்வைப் பற்றிய பதிவில், "குற்றச்சாட்டப்பட்ட கள்ளர் மக்களிடத்தில் அதிகாரம் செய்ய பிறசாதி நபர்களையே வெள்ளையர் அரசு பயன்படுத்தியது. இது பிறமலை கள்ளர்கள் – பிற சாதியினர் முரண்பாடு வளரக் காரணமாயிருந்தது. சில சமயங்களில், தவறுகளைத் தண்டிக்கிறோம் என்கிற பெயரில் ஊரின் முக்கியமான நபரின் முதுகில் தாழ்த்தப்பட்ட இளைஞனை ஏற்றிச் சுமக்க வைப்பார்கள். ஏற மறுத்தால் தாழ்த்தப்பட்ட இளைஞனை அடிப்பார்கள். ஏறினால் அடுத்த நாள் என்னவாகும் என்று சொல்ல இயலாது…"

இவ்வாறு சமூகங்களிடையே முரண்பாட்டை வெள்ளையருக்கு ஏவல் புரிந்த காவல் துறை விதைத்துக் கூர்மைப்படுத்தியது. இந்த சச்சரவு இன்றளவும் தொடர்கதையாவதற்கு காவல்துறை இந்த சூழ்ச்சிகளை இன்றும் பின்பற்றுவதே காரணம் எனத் தோழர். தா.பாண்டியன் தனது குறிப்பில் தெரிவிக்கிறார்.

pasumpon muthuramalingam and varadharajuluதோழர். ஜீவா இச்சட்டத்தின் பாதிப்பு குறித்து மிக முக்கியத் தகவலைப் பதிகிறார். "..இந்தச் சட்டத்திற்கு எதிராகப் பாதிரியார்களையும் திரட்ட முடிந்தது. மேலும் மதுரை, பாளையங்கோட்டை, கோவை சிறைகளில் ’குற்றப் பரம்பரைச் சட்டத்தினால்’ தண்டிக்கப்பட்டவர்கள் சாதிப்பட்டியலைத் திரட்டினோம். சிறையில் சகலசாதியினரும் இச்சட்டத்தினால் தண்டிக்கப்பட்டதைக் கண்டறிந்தோம். (அந்த எண்ணிக்கையில்) இந்தக் கள்ளர் சாதியினர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பெரும்பாலும், ஆடு-கோழி திருடிய வழக்காகத்தான் இருந்தது" என்கிறார்.

இந்தத் தகவலைக் கூர்ந்து நோக்கும் போது, வெள்ளையரசு மதுரை - திருச்சி - தஞ்சை - கோவை பகுதிக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் நடந்த பாளையக்காரர்கள் எழுச்சிக்குப் பின்புலமாக இருந்த பெரும்பாலான குடியான மக்களை ஒடுக்குவதும், இவர்களைப் பிரித்தாள்வதற்கும் இச்சட்டங்களைப் பயன்படுத்தி இருப்பதை நாம் உணரமுடியும்.

இச்சட்டங்களை 1937-ல் தேர்தலில் ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வாக்குறுதி கொடுத்தது. காங்கிரஸின் இந்த வாக்குறுதியை நம்பிய முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸிற்கு ஆதரவாகப் பிரச்சாரமும் செய்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின் பல மாதங்கள் ஆகியும் இராசாசி இச்சட்டத்தை ரத்து செய்ய முன்வரவில்லை. எனவே இதை எதிர்த்து அவர் போராடி கைதானார். காங்கிரஸின் ஆட்சியில் கைதான முதல் காங்கிரஸ் தலைவராக திரு. முத்துராமலிங்கத்தேவர் ஆனார். இவரை விடுதலைச் செய்யச் சொல்லி தோழர். ஜீவாவும், தோழர். ராமமூர்த்தியும் தொடர்ந்து போராடினார்கள். ஒருபுறம் ‘இந்தியை’ திணித்து தமிழர்கள் உரிமையை மறுத்து ஆட்சி நடத்திய பார்ப்பன ஆட்சி மறுபுறத்தில் ஆங்கிலேய அரசின் அடக்குமுறைச் சட்டங்களை நீக்க மறுத்தது. இந்தியை எதிர்த்த தமிழ் அறிஞர்களைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்த பார்ப்பன அரசு குடியானவர்கள் வாழ்வைச் சிதைக்கும் சட்டத்தினைத் தொடர்ந்து அமல்படுத்தி வந்தது. பார்ப்பனர்களின் இந்த துரோகத்தின் பின்பு குற்றப் பரம்பரை எதிர்ப்புப் போராட்டத் தலைமைகள் காங்கிரஸில் நம்பிக்கை இழந்து வெளியேறுகிறார்கள். 

குற்றப் பரம்பரைச் சட்டமும் இந்திய அளவிலான எதிர்ப்பும் 

ஒருபுறத்தில் மக்கள் திரள் போராட்டம் களத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது போல, மறுபுறத்தில் தேசிய அளவில் இதற்கான எதிர்ப்பும் முனைப்பு பெற ஆரம்பித்தது. 1933-ல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக்குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் இந்த சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து டாக்டர் அம்பேத்கர் பேசினார். ”குற்றப் பரம்பரையினர் எனப்படுவோரின் மோசமான நிலையை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். குற்றப் பரம்பரையினர் நாட்டு மக்களிடையே சிதறிக்கிடக்கின்றனர். பம்பாயில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறேன். இந்த மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நலன்களைப் பாதுகாக்கவும் அந்தச் சட்டத்தில் ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சட்டத்தில் பத்தி 108-ன் கீழ் ஆளுநர் சில ஆணைகளைப் பிறப்பிக்கலாம். அதன் மூலம் நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்ற அந்த மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன? ஒருவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று ஆளுநருக்குத் தெரிந்தவுடன் அவர்களது நலனுக்கு சில சட்டங்கள் இயற்றலாம் அல்லவா? அவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தால் என்ன? மக்களிடையே வசித்தால் என்ன? பிரிட்டிஷார் இயற்றிய இந்தச் சட்டம் அந்த குறிப்பிட்ட இன மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது” என்று பேசினார்.

அந்த விசாரணையில்தான் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கவும் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்யக் காரணமானார், டாக்டர் அம்பேத்கர்.

இச்சட்டத்திற்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இச்சட்டத்தால் பாதிக்கப்படாத மக்களையும் இப்போராட்டத்திற்காக ஒன்றிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மறவர்களோடு சேர்த்து வடுகப்பட்டி உழவர்களையும் குற்றப் பரம்பரை எதிர்ப்பு அணியின்கீழ் திரட்டினார்கள். அப்போது இச்சட்டத்தை எதிர்த்து ஆப்பநாடு மறவர் சமூக மக்கள் திரு. முத்துராமலிங்க தேவர் தலைமையில் திரண்டனர். ’ரேகைச்சட்டம் எதிர்ப்பு கமிட்டி’ அப்போதுதான் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கமிட்டி பிரபல காங்கிரஸ் தலைவர் திரு. வரதராஜலு நாயுடு தலைமையிலான மாநாட்டை 1934 இல் மே மாதம் 12 ஆம் தேதி கமுதி அருகே உள்ள அபிராமம் என்ற ஊரில் கூட்டியது. இவர்தான் பெரியாருடன் சேரன்மாதேவி குருகுல கிளர்ச்சியில் இணைந்து போராடியவர்.

மாநாட்டுக்கு 6 மாதத்திற்கு முன்புதான் தந்தை பெரியார் இன்றைய ஆட்சிமுறை ஒழிய வேண்டும் ஏன்? என்ற கட்டுரையை எழுதியதற்காக ராஜ துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜா மகேந்திரம் சிறையில் கடுங்காவல் தண்டனையில் இருந்தார். அவரை திரு. வரதராஜலு நாயுடு நேரில் சந்தித்தார். அதற்குப் பிறகுதான் குற்றப் பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டுக்கு வருகிறார்.

அதில்தான் குற்றப் பரம்பரைச் சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாட்டில், பல்வேறு சாதியப் பிரிவுகளைச் சேர்ந்த, இச்சட்டத்தால் நேரடியாக பாதிப்பிற்கு உள்ளாகாத மக்களும்கூட திரண்டனர். இம்மாநாட்டிற்குப் பிறகு, பிறமலை கள்ளர் மக்களும் போராட்டத்தில் பங்குபெற்றனர்.

அச்சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சோஷியலிஸ்ட் சிந்தனையாளர்கள் எல்லாம் ஒன்றுகூடி காங்கிரஸ் சோஷியலிஸ்ட் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினர். குற்றப் பரம்பரைச் சட்டம் ஒழிப்பு என்பது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் அஜெண்டாக்களில் ஒன்றாக இணைக்கப்பட்டது. குற்றப் பரம்பரைச் சட்ட ஒழிப்புக்கு எதிராக இத்தலைமைகளின் கீழ் பெரும்பட்டாளம் திரண்டது. அதில், திரு. முத்துராமலிங்க தேவர், தோழர்கள் ஜீவானந்தம், இராமமூர்த்தி, ஜானகி அம்மாள், சசிவர்ணத்தேவர், ஆர். வி சுவாமிநாதன், தினகர் சாமி தேவர் ஆகியோரும் அக்கால பிரபல நாடக நடிகர் விஸ்வநாததாஸ் போன்றோரும் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். ஜானகி அம்மாள் பாட்டுப்பாடி கூட்டம் கூடிய பின்னர் பிற தலைவர்கள் தங்களது உரையைத் துவக்கி மக்களை எழுச்சி கொள்ளச் செய்தனர்.

குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்படுதல்

1919-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய ஒன்றியத்தில் வாழும் மக்களுக்கு படிப்படியாக அதிகாரங்களை வழங்க மக்களின் கருத்துகளை அறிய அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்தனர். அப்போது நீதிக்கட்சி, திராவிட சங்கம் ஆகியவற்றின் சார்பாக டி. எம் நாயர், கே. வி ரெட்டி, சர். ஏ. ராமசாமி முதலியார் ஆகியோர் கருத்துக்களை முன் வைத்தனர் அச்சமயத்தில் மறவர் மகாஜன சபை என்ற அமைப்பை உருவாக்கச் சொல்லி அம்மக்கள் பிரச்சனைகளை அதன் சார்பிலும் கருத்துகளை வைக்கச் செய்தவர் டி எம் நாயர்.

பெருங்காமநல்லூர் போராட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசு, குற்றப் பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, கள்ளர்களில் பெரும்பான்மையான மக்களை அந்த சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்தது. கள்ளர் சீரமைப்புக்கு என்று தனியாக ஒரு ஐ.சி.எஸ் அலுவலரை ‘லேபர் கமிஷனர்’ என்ற பெயரில் நியமித்தது. அவரளித்த சிபாரிசுகளினடிப்படையில், நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை ‘கள்ளர் சீரமைப்புத் திட்டம்’ என்ற பெயரில் முழுவீச்சில் செயல்படுத்தியது.

  • கள்ளர்கள் தனியாக நிரந்தரத் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி அளித்தது.
  • கள்ளர்களுக்கு என்று இலவசக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து அவற்றை நிர்வகிக்கவும் செய்தது.
  • இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி அளித்து அவர்களை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தியது.
  • மதுரை, திண்டுக்கல், உசிலம்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, திருமங்கலம், தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளை உருவாக்கியது.
  • தஞ்சை மாவட்டத்தில் கள்ளர் மகாஜன சங்கத்தினால் கைவிடப்பட்ட கள்ளர் பள்ளிகளை நீதிக்கட்சி அரசு ஏற்று நடத்தியது.
  • கள்ளர்கள் விவசாயம் செய்ய இலவச நிலங்களை வழங்கியது.
  • பெரியாறு அணைப் பாசனத் திட்டத்தில் கள்ளர் நாட்டுப் பகுதிகளையும் இணைத்து தேனி திண்டுக்கல் மதுரை இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தது.
  • 1922-ல் வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் கள்ளர்கள் விவசாயத்திற்காக வாங்கிய கடனை கட்ட இயலாத நிலையில் அந்தக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதி அளித்திருந்த சென்ட்ரல் வங்கி சங்கங்களைக் கடுமையாக நெருக்கத் தொடங்கியது அப்போது திக்கற்று இருந்த 34 கள்ளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மாகாண அரசே நிதி கொடுத்து சங்கங்களின் கடனை அடைத்து அடுத்த கட்ட விவசாயத்திற்கும் கடனை அளித்தது.

இப்படியாகப் பல நலத்திட்ட உதவிகளை அம்மக்களுக்கு நீதிக்கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

ஆங்கிலேய அரசின் கருப்புச் சட்டத்தைத் திருத்தும் வாய்ப்பிருந்தும் கூட பார்ப்பனிய மேலாதிக்கம் பெற்ற இராசாசியின் ஆட்சியில் இதற்குரிய முன்னெடுப்பு நடைபெறவில்லை. மாறாகத் தமிழ்நாடு முழுவதும் ஒடுக்குமுறைகள் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதைக் கண்டோம். வெள்ளையர்களின் மனம் நோகாவண்ணம் இந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து எவ்வித முயற்சியையும் இராசாசி அரசு செய்ய முனையவில்லை. காங்கிரஸின் பார்ப்பனியத் தலைமையும் இந்திய அளவில் இதற்கான எதிர்ப்பை முன்னெடுக்கவில்லை.

சாமானிய மக்கள் மீது ஆங்கில ஏகாதிபத்தியம் விதித்த கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகச் சாமானிய மக்களின் பிரதிநிதிகளாக விளங்கியவர்களே களத்திலும், சட்டப் போராட்டத்திலும், மக்கள் மன்றமான சட்டமன்றத்திலும் திரண்டெழுந்தனர். உயர்சாதிக் கூட்டம் குற்றப் பரம்பரைச் சட்டத்தினால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எவ்வகையிலும் அக்கறை காட்டாது ஏகாதிபத்தியத்தோடு கைகோர்த்துக் கொண்டதை இப்போராட்டங்கள் நமக்கு விளங்கப்படுத்தும்.

திரு. முத்துராமலிங்கத் தேவரும், அவரோடு இணைந்து களப்பணியாற்றிய தோழர்களின் முன்முயற்சியில் தீவிரம் பெற்ற இச்சட்ட எதிர்ப்பு இயக்கம் இந்தியாவில் 1947-ல் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பின்னர் தீர்வினை தருவதாக அமைகிறது. இறுதியாக, இந்தியாவின் சுதந்திரம் எனும் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் 17 ஏப்ரல் 1947-ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் குற்றப் பரம்பரைச் சட்டத்தை முற்றிலும் நீக்குவதற்கான சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டது. அதனைச் சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் பி. சுப்புராயன் முன்மொழிந்து பேசினார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாகனேரி ஆர்.வி. சுவாமிநாதன் ரேகைச் சட்டம் எவ்வளவு கொடியது என்றும் அது ஏன் நீக்கப்பட வேண்டும் என்றும் விரிவாகப் பேசினார்.

வெகுசிலரே குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஆதரித்துப் பேசினர். சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்களுக்குப் பின் குற்றப் பரம்பரைச் சட்டத்தை முற்றிலும் ரத்து செய்கின்ற தீர்மானம் பெரும்பான்மை பலத்துடன் இறுதியில் நிறைவேறியது. பிறகு, ஆளுநர் ஒப்புதலுக்கு 1947 மே 30 ஆம் தேதி அனுப்பப்பட்டது. ஜூன் 5 ஆம் தேதி குற்றப் பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டது.

பெருங்காமநல்லூரில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தக் கொடூர சம்பவம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சிமுறைக்கு எதிரானது. அதுமட்டுமல்லாமல், தமிழ் இனத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும் தமிழின உரிமைசார் போராட்டமாகவுமே அதனை நாம் பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியம் என்பது ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையான போரட்டத்தைச் சார்ந்திருக்கிறது. தவிர, அவர்களுக்கு இடையேயான மோதலைச் சார்ந்திருக்கவில்லை. அந்த வகையில் தமிழ்த் தேசியத்திற்கான அடையாளமாகவே பெருங்காமநல்லூரும் வரலாற்றில் நிற்கின்றது. கீழ்வெண்மனி மற்றும் பெருங்காமநல்லூர் ஆகிய இவ்விரண்டு மாபெரும் தியாகங்களிலும் போராட்டங்களிலும் நீதிக்கான பயணத்திலும் ஒரு சாதியைச் சார்ந்த மக்கள் மட்டும் போராடாமல் ஒட்டுமொத்த தமிழினமும் எழுந்து நிற்பதே அதற்குச் சாட்சி.

இப்போராட்டங்கள் தொடர்பான வரலாறுகளை அடுத்த தலைமுறைகளுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் கற்பியுங்கள். குற்றப் பரம்பரைச் சட்டத்தினை எதிர்த்தும், குடியான மக்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்தும் பேசாத, எழுதாத, போராடாத காங்கிரஸின் பார்ப்பனிய - இந்துத்துவ தலைவர்களுக்கு மூவாயிரம் கோடிக்குச் சிலை வைப்பதைவிட வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி மாண்ட தமிழர்களுக்கு மணிமண்டபங்கள் எழுப்புவதையும், பாதிக்கப்பட்ட சமூகத்தின் அடுத்த தலைமுறைகளுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதையும் அரசு செய்ய வேண்டும். இன்று அதே மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழின விரோத தேவாரத்தில் நியூட்ரினோ, வடபழஞ்சியில் அணுக்கழிவுக்கூடம் போன்ற பேரழிவுத் திட்டங்கள், ஏகாதிபத்தியத்திற்கு ஏவல் செய்யும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இப்படியான சூழலில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் துணிந்து நின்ற பெருங்காமநல்லூர் மக்களின் வீர வரலாற்றினை நினைவுகூர்வது மிகப்பொருத்தமாகும். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீரஞ்செறிந்த அம்மக்களுக்கு நம் வீரவணக்கத்தை உரித்தாக்குவோம்.

- மே 17 இயக்கக் குரல்

Pin It