உயிர்ப் பன்மயத்தன்மை மறைந்து கொண்டிருக்கும் நிலையில் இயற்கை மயான அமைதியில் ஆழ்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சூழல் மண்டலங்களில் இயற்கை ஒலிகளின் செறிவு மற்றும் அவற்றின் பன்முகத் தன்மையின் இழப்பு அதன் ஆரோக்கியத்தின் அழிவைப் பிரதிபலிக்கிறது. சூழல் அழிவு உடனடியாக தடுத்து நிறுத்தப்படாவிட்டால் இந்த ஒலிகள் ஒலியியல் புதைபடிவங்களாக (acoustic fossils) மாறிவிடும் என்று ஒலி சூழலியலாளர்கள் (Sound ecologists) கூறுகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்ததால் ஒலிகள் சூழல் மண்டல ஆரோக்கியம் மற்றும் பன்முகத் தன்மையை அளவிட ஒரு முக்கிய வழியாகப் பின்பற்றப்படுகிறது. காடுகள், மண், கடல்கள் போன்ற அனைத்தும் அவற்றிற்கென்று உள்ள ஒலி முத்திரைகளை (sound signatures) வெளியிடுகின்றன. வாழிடங்கள் மற்றும் உயிரினங்களை சூழல் ஒலிகளைப் பயன்படுத்தி அளவிடும் ஆய்வாளர்கள் எல்லா இடங்களிலும் நிசப்தம் பரவி வருகிறது என்று கூறுகின்றனர்.

ஆயிரக்கணக்கான வாழிடங்களில் உயிரினங்களின் செழுமை மற்றும் வகைகள் மறைந்து கொண்டிருக்கின்றன அல்லது குறைந்து வருகின்றன. இதனால் முன்பு நாம் கேட்டு பழக்கப்பட்ட பறவைகளின் காலை அழைப்புகள் (bird calls), பாலூட்டிகளின் சலசலப்புகள், பூச்சிகளின் கோடை கால ஓசைகள் போன்ற பல உயிரினங்களின் ஒலிகள் இன்று மறைந்து விட்டன. ஒரு சூழல் மண்டலத்தில் ஒலி என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. காலத்திற்கு எதிராக நாம் ஓட்டப் பந்தயம் ஓடுகிறோம்.bernie krause and jack hines

Bernie Krause (right), who has been recording nature in Sugarloaf Ridge state park, California, for 30 years, with fellow sound ecologist Jack Hines. Photograph: Cayce Clifford/The Guardian

"இப்போதுதான் இயற்கை இத்தகைய ஒலிகளை எழுப்புகின்றன என்பதே நமக்குத் தெரியவந்தது. ஆனால் அதற்குள் இந்த ஒலிகள் மறைந்து கொண்டிருக்கின்றன” என்று ப்ரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவ் சிம்சன் (Prof Steve Simpson) கூறுகிறார்.

“ஆழமான இந்த மாற்றங்கள் எல்லா இடங்களிலும் நிகழ்கின்றன. முன்பு ஒலிப்பதிவு செய்தவற்றில் 75% சூழல் மண்டல வாழிடங்களும் இன்று இல்லை” என்று கடந்த 55 ஆண்டுகளாக பூமியில் உள்ள ஏழு கண்டங்களிலும் 5,000 மணி நேர ஒலிப்பதிவுகளை செய்த அமெரிக்க ஒலிப்பதிவாளர் பெர்னி க்ராஸ் (Bernie Krause) கூறுகிறார்.

“முன்பு பதிவு செய்து பாதுகாத்து வைத்துள்ள ஒலிகள் அனைத்தும் அன்று வாழ்ந்த உயிரின வகைகளைக் குறிக்கிறது. இன்று இந்த ஒலிகளைக் கேட்க முடியாது. பதிவு நடந்த இடங்களும் இன்று காணாமல் போய்விட்டன. அந்த உயிரினங்கள் எவை என்பது நமக்குத் தெரியாது” என்று கடந்த 40 ஆண்டுகளாக உலகின் எல்லா முக்கிய சூழல் மண்டலங்களிலும் ஒலிப்பதிவுகளை செய்துள்ள அமெரிக்க பெர்டு (Purdue) பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ப்ரயன் பிஜனோஸ்கி (Prof Bryan Pijanowski) கூறுகிறார்.

நிலம் முதல் நீர் வரை ஒலிகள்

ஒலிகள் இயற்கையாக எழுப்பப்படும் பரப்புகள் (sound scapes) மாறிக் கொண்டிருப்பது பற்றி பல ஆய்வுகள் இப்போது நடந்து வருகின்றன. பல குறுக்கீடுகளால் இங்கு ஒலிகள் இடையூறு செய்யப்படுகின்றன, நிசப்தமாக்கப்படுகின்றன. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 200,0000 இடங்களில் நடந்த ஆய்வுகள் இந்த இரு கண்டங்களிலும் கடந்த 25 ஆண்டுகளில் ஒலி பன்முகத்தன்மை மற்றும் ஒலி காட்சிகள் அழிவதால் சூழல் அழிகிறது என்று நேச்சர் இதழில் 2021ல் வெளிவந்த ஆய்வு கூறுகிறது.

செழுமை மற்றும் மிக அதிக எண்ணிக்கையில் இருந்த உயிரினங்கள் அழிந்ததே இதற்குக் காரணம். இயற்கையுடன் ஒன்றிணைந்து பழகும் அடிப்படை வழிகளில் மனிதனிடம் ஏற்பட்ட மாற்றம் பல காலங்களாக இருந்து வந்த தொடர்புகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. இது மனித ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுக்குழுவினர் சுட்டிக் காட்டுகின்றனர்.

சூழல் மண்டலங்களில் சம்பவிக்கும் இந்த மாற்றம் காற்று, காடுகள், மண் மற்றும் நீருக்கடியில் நிகழ்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க கடற்படை நீருக்கடியில் இருந்து சோவியத் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிக்க பல முறைகளைப் பயன்படுத்தியது. 1990 வரை பவளப்பாறைகளுக்கு அருகில் உள்ள இடங்களில் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் பல ஒலிகளை எழுப்பின. இதனால் படையினர் கண்காணிப்பை மேற்கொள்ள சிரமப்பட்டனர்.

மக்கள் விஞ்ஞானிகள் (civilian scientists) அது வரை இந்த ஓசைகளின் வகைப்படுத்தப்பட்ட தரவுகளைக் கேட்டனர். “ஆரோக்கியமான ஒரு பவளப்பாறைக்கு அருகில் செல்லும்போது எங்கள் மனது அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எழுப்பிய ஓசைகளை கேட்டு மகிழ்ச்சியடைந்தது. ஆரோக்கியமான ஒரு பவளப்பாறை திட்டில் இருந்து வரும் ஓசைகள் ஒரு ஒலித் திருவிழா. பவளப்பாறைகளுக்கு அருகில் மோட்டார் படகுகள் ஏற்படுத்தும் ஓசை இயற்கை ஒலிகளைக் கேட்பதில் பெரும் இடையூறு ஏற்படுத்தின. 2015-2016ல் பெருமளவில் நிறமிழந்ததால் 80% பவளப்பாறைகளும் அழிந்தன. 1950 முதல் பூமியில் பாதிக்கும் மேல் பவளப்பாறைகள் இல்லாமல் போய்விட்டன. புவி வெப்ப உயர்வு 2 டிகிரியை எட்டும்போது 99 சதவிகிதத்திற்கும் மேலான பவளப்பாறைகள் அழிய ஆரம்பிக்கும். இதன் விளைவு கடலில் உருவாகப் போகும் மயான அமைதி” என்று கடந்த 20 ஆண்டுகளாக ஹைடிரோ போன்களைப் பயன்படுத்தி பவளப்பாறை ஒலிகளை ஆராய்ந்து வரும் சிம்சன் கூறுகிறார்.

பிரதிபலிக்கும் கண்ணாடி

“இந்த ஒலிகளும் அமைதியும் ஒரு கண்ணாடியின் பிரதிபலிப்பு போல நம்மிடம் பேசுகின்றன. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் வன உயிரினங்களின் எண்ணிக்கை சராசரியாக 70% குறைந்து விட்டது. இயற்கையின் எந்த ஒலியையும் நாம் மீண்டும் கேட்கத் தொடங்க வேண்டும். முன்பு இத்தகைய ஓசைகளை கேட்டுப் பழகியவர்களுக்கு இப்போது இவற்றைக் கேட்காமல் இருப்பது வேதனை தரும் ஒன்று. இன்று நாம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனையை இது எடுத்துக்காட்டுகிறது.

சூழல் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் சூழல் மண்டலங்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க இன்று ஒலி தரவுகளுடன் காட்சித்தரவுகளும் பயன்படுத்தப்படுகின்றன. விலை குறைந்த உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலிப்பதிவு கருவிகள், சூழல் அழிவு பற்றிய அதிகரித்து வரும் கவலைகள் சூழல் ஒலிப்பதிவு துறையை பிரபலமடையச் செய்து வருகிறது” என்று உலக ஒலிக்காட்சிகள் திட்டத்தின் (World Soundscape Project) கீழ் 1973 முதல் மறைந்துவரும் சூழல் மண்டல ஒலிகளை ஆவணப்படுத்தும் ஒலி ஆய்வாளர் ஹில்டிகார் வெஸ்டகேம்ப் (Hildegard Westerkamp) கூறுகிறார்.

மைக்ரோ போன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் விஞ்ஞானிகள் முன்பு கேட்க இயலாத இயற்கை ஒலிகளை கேட்க இத்தொழில்நுட்பத்தை இப்போது அதிகம் பயன்படுத்துகின்றனர். “அழுத்தத்திற்கு உள்ளான துடிப்புகள் போன்றவை மரங்களின் தண்டில் உள்ள அடுக்குகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகள் (cavity) வழியாக வெளிவருகின்றன” என்று மரத் தண்டுகளில் மைக்ரோ போன்களைப் பொருத்தி உயிருள்ள திசுக்கள் வெளியிடும் ஒலிகளைக் கேட்டு ஆராய்ந்து வரும் சுவிட்சர்லாந்து ஒலிச்சூழலியலாளரும் ஒலிப்பதிவாளருமான மார்க்கஸ் மீட்டர் (Marcus Maeder) கூறுகிறார்.

அவர் ஒரு மலைப்புல் தாவரம் வளர்ந்திருந்த மண்ணில் மைக்ரோ போனைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது அதன் உயிர்த்துடிப்பை அவரால் கேட்க முடிந்தது. இயற்கையின் ஓசையுடன் ஓர் ஒலி உலகம் வாசல் திறந்தது. பூச்சிக்கொல்லிகள் அதிக அளவில் போடப்பட்டு தீவிர மேலாண்மை செய்யப்படும் விவசாய நிலங்கள் வெளியிடும் ஓசைகள் மிக வித்தியாசமானவை. அத்தகைய மண் நிசப்தமானது” என்று மார்க்கஸ் கூறுகிறார்.

“மறைந்து வரும் ஒலிக்காட்சிகள் பல விஞ்ஞானிகளுக்கு சோகம் தருபவை. ஆராயத் தூண்டுபவை. என்றாலும் இயற்கையின் அழகை எடுத்துச்சொல்ல இந்த ஆய்வுகள் உதவுகின்றன. பன்முகத்தன்மை என்றால் என்ன என்பதை ஒரு விஞ்ஞானியாக இருந்து விளக்குவது கடினம். ஆனால் ஓர் ஒலிப்பதிவை ஒலிக்கச் செய்தால் நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்பது எளிதில் புரியும். இவற்றை நாம் பாதுகாக்க முயன்றாலும் இல்லாவிட்டாலும் இவை இந்த இடத்தின் குரல்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். மனிதர்களுக்கு ஒலி உணர்வைத் தூண்டும் ஒரு முக்கிய சக்தி. ஒலியியல் காட்சிகள் வலிமையானவை. ஓர் ஆய்வாளராக இருந்து இதைப் பற்றி நினைப்பது சுவாரசியமானது. ஆனால் உணர்வுப்பூர்வமாக வேதனை தருவது” என்று பிஜனோஸ்கி கூறுகிறார்.

மீளமுடியாத நித்திரையில் ஆழ்ந்து கொண்டிருக்கும் இயற்கையின் ஒலிகளை இதற்கு மேலும் அழியாமல் பாதுகாப்பது மனித குலத்தின் இன்றைய அவசரத் தேவை என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2024/apr/16/world-faces-deathly-silence-of-nature-as-wildlife-disappears-warn-experts-aoe?

சிதம்பரம் இரவிச்சந்திரன்